திங்கள், 25 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 5


முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...

முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

பொழுது சாய்ந்த நேரத்தில், புதர் மறைவில் அவர்கள் கண்ட அந்தக் காட்சியானது ஈரக்குலையை நடுங்க வைப்பதாக இருந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் ஒரு ஆணின் பிணம் அங்கே கோரமாகக் கிடந்தது.


கரூர் மார்க்கமாகச் செல்லும் திண்டுக்கல் – கரூர் இருப்புப் பாதை என்.ஜி.ஓ காலனியின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. இருப்புப் பாதையின் இரு மருங்கிலும் கற்றாழை மற்றும் முட் புதர்கள் நிறைந்திருந்தன. அங்ஙனம் உள்ள ஒரு புதரின் மறைவில்தான் மேற்படி சடலத்தை அவர்கள் கண்டார்கள். யாரோ ஒரு புண்ணியவான் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்துகொண்டான் போலும்.

தலையில்லா முண்டத்தை எதிர்பார்த்து வந்த ஏட்டையா, இப்படி ஒரு முண்டம் கிடக்குமென்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. எதற்கும் அஞ்சாத ஏட்டையாவே அக்காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தன்னை அசுவாசப் படுத்திக்கொள்ள அவருக்கு சிறிதுநேரம் பிடித்தது. அதன்பின், மளமளவெனக் காரியங்களைக் கவனிக்கலானார். மேலதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க ஒரு ஆளை அனுப்பிவிட்டு, காவலர் கந்தசாமியின் துணை கொண்டு, அங்கு சேர்ந்துவிட்ட கூட்டத்தை ஒழுங்குபடுத்தலானார். தன்னுடைய அனுபவத்தில் இது போன்று எத்தனையோ சம்பவங்களைப் பார்த்த அவருக்கு, அன்று கிடைத்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது என்றால் அது மிகையில்லை.

நன்றாக இருட்டிய சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி நாலைந்து காவலர்கள் புடைசூழ அங்கே வந்தார். ஏட்டையாவிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தறிந்த பின், 

“ஏய்யா ஏட்டு, ஓ ஏரியால மட்டும் எப்புடியா இதெல்லாம் நடக்குது. அது சரி... முண்டம் இங்க கெடக்குது... இதோட தலை எங்கேன்னு தேடிப் பாத்தியாய்யா...?” என்று வினவினார்.

“அது வந்துங்கைய்யா... ஐயா வந்த பின்னாடி... எல்லாம் பாத்துக்கலாம்னு...” என்று ஒரு இழுவையைப் போட்டார் ஏட்டு.

“ஆமாய்யா... ஒனக்கு எல்லாம் நா வந்துதான் சொல்லித்தரணும்... போய்யா... போயி மொதல்ல அதப் பாரு...” என்று விரட்டினார்.

“ஆவட்டுங்கையா...” என்றவர், கைவிளக்குகள் சகிதம், இரு காவலர்களைத் தண்டவாளத்தினூடே திண்டுக்கல் மார்க்கமாகத் தேடப் பணித்துவிட்டு, காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு கரூர் மார்க்கமாகத் தேடப் போந்தார்.

அது அம்மாவாசைக்கு முந்தின இரவு. இருட்டில் எருமையைத் தேடுவது போல்,  துண்டிக்கப் பட்ட தலையைத் தேடி அவர்கள் அலைந்ததுதான் மிச்சம். அரை பர்லாங் தேடியும் அது அகப்படவே இல்லை. தோல்வியுடன் திரும்பிய அவர்களுக்கு, அதே தோல்விச் செய்தியைத்தான் சொன்னார்கள் எதிர் திசையில் தேடச் சென்றவர்கள். அதைவிடப் பெரிய இடியை, ஏட்டு தலையில் இறக்கினார் சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி.

“என்னைய்யா இது எழவாப் போச்சு... யோவ் ஏட்டு, ஆம்புலன்ஸ் ரிப்பேராம்யா... நாளைக்குத் தான் ரெடி ஆவுமாம்... அதுனால நீ என்னா பண்ற... நைட்டு டெட்பாடிக்கு பலமான காவல் போடுய்யா... என்ன புரியுதா... நா... காலைல வந்து பாக்குறேன்...” என்று அதி வேகமாக உத்திரவைப் போட்டுவிட்டு அதே வேகத்தில் அங்கிருந்து மறைந்து போனார் அவர்.

வேறு வழியின்றி, கடமையின் பொருட்டு, பிணத்திற்குக் காவலாக, அன்றிரவு ஏட்டையா அங்கேயே கழிக்க வேண்டியதாயிற்று. தலையில் கட்டிய மப்ளரோடு, லத்தியைக் கீழே ஊன்றி அதன்மேல் இரு கைகளையும் வைத்து, தாடையில் முட்டுக் கொடுத்தபடி, தவக்கோலத்தில்  இருக்கும் சடாமுடிதரித்த முனி போல் குத்துக்கல்லில் அமர்ந்திருந்தார் அவர்.

தலையில்லா முண்டத்தைப்  பிடிக்கத் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் இப்படிப் பாழாய்ப் போகுமென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஒன்று மாற்றி ஒன்று சோதனையாக வந்து கொண்டிருந்தது. மிகவும் மனம் நொந்து போனார் அவர். இதை விடப் பெருத்த சோதனை அடுத்த நாள் அவருக்காகக் காத்திருப்பதை அறியாமல், சோகமே உருவாக அங்கே அமர்ந்திருந்த ஏட்டையாவை, பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன வானத்திலிருந்த நட்சத்திரங்கள்.

லையில்லா முண்டத்திற்குப் பயந்து தலைகாட்டத் துணிவில்லாமல் நிலவு பதுங்கிக் கொள்ள,  கணத்த கரும் போர்வையைப் போர்த்திக் கொண்டு கவிழ்ந்து கிடந்தது அமாவாசை இரவு. இந்த நாளுக்காவே இதுகாறும் காத்துக்கிடந்த கரடிமணி, தனது கைவரிசையைக் காட்டும் பொருட்டு என்.ஜி.ஓ காலனிக்குள் எச்சரிக்கையாக நுழைந்தான்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, சிறு மலையை ஒட்டிய பட்டி தொட்டிகளிலேயே கழித்து விட்டபடியால், நகர்ப்புற வாசம் அவனுக்கு மிகவும் அந்நியமாக இருந்தது. நகர்ப்புறத்தைப் பொறுத்த மட்டில், இது அவனுக்குக் கன்னித் திருட்டு. தொழில் நிமித்தம் அவன் நகரின் வாசல்படியை மிதித்ததில்லை. இரண்டொரு தடவை, சினிமாப் பார்க்கவும்,  திருடி மாட்டிக் கொண்ட சமயங்களில் காவல் நிலையம், நீதி மன்றம் என்று அலையவும் நகருக்கு வந்திருக்கின்றான் அவ்வளவுதான்.

பட்டிக் காட்டுப் பகுதியில், எது எது எந்தப் பக்கம் இருக்கும், எங்கு முதலில் நுழைவது, எப்படி வெளியேறுவது என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஆனால், இங்கு நிலைமையோ வேறு மாதிரி இருந்தது. புது இடமாகையால், எங்கு ஆரம்ப்பிப்பது, எப்படி நுழைவது என்பது அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

நடு நிசி. குத்துமதிப்பாக ஒரு பெரிய மாளிகையின் வேலிச்சுவரைத்  தாண்டி, இருட்டான இடத்தில் இறங்கினான் கரடிமணி. அவன் இறங்கிய இடம் அம்மாளிகையின் பின் பகுதி போலிருந்தது.
 
மாளிகைக்கும், மாளிகையைச் சுற்றியுள்ள வேலிச் சுவருக்கும் இடையில் ஒரு மாட்டு வண்டி போகும் அளவிற்கு இடமிருந்தது. அந்த இடைவெளியில், ஆங்காங்கே அலங்காரச் செடிப் புதர்கள் குட்டிப் பிசாசுகள் போல் அமர்ந்திருந்தன. வேலிச் சுவரை ஒட்டினாற்போல் தென்னை மரங்களும் வேறு சில மரங்களும் கருப்புக் கருப்பாக நின்றிருந்தன. அங்ஙனமிருந்த அலங்காரச் செடிகள் மறைவில் பதுங்கிப் பதுங்கி முன்னேறினான் கரடிமணி.

எவ்வளவோ திருட்டுக்களைப் போகிற போக்கில் நிகழ்த்தியவனுக்கு அன்றைக்கு மிகவும் நடுக்கமாகவே இருந்தது. குத்துமதிப்பாக, வீட்டின் முன்புறம் இருக்கும், வாகனம் நிறுத்தி வைக்கும் பகுதிக்கு வந்துவிட்டான் அவன். நல்ல வேளையாக, அங்கும் இருட்டாகத்தான் இருந்தது. அநாவசியமாக அங்கே ஒரு விளக்கு எதற்கு என்று வீட்டுக்காரர் வைக்கவில்லையோ, அல்லது, அப்படி ஒரு விளக்கு அங்கு இருந்தும், செலவை  மிச்சப்படுத்த அதை எரியவிடவில்லையோ, அல்லது, பழுதாகித்தான் போய்விட்டதோ என்னவோ தெரியவில்லை. எது எப்படியோ, கரடிமணிக்கு அது சாதகமாகவே இருந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தீவிரமான யோசனையில், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, ஊர்ந்த நிலையில், மேலும் ஒரு அடி அவன் முன்னே வைத்ததுதான் தாமதம்... திடீரென்று... அடித்தொண்டையில் அலறும் ஆகாய விமானம் போல் கர்ண கொடூரமான ஓசை ஒன்று அவனுக்கு மிக மிக அருகில் கேட்டது. இதுவரை அப்படி ஒரு ஓசையை அவன் வாழ்நாளில் கேட்டதில்லை. தலை முதல் கால் வரை ஒரு முறை நடுங்கினான் அவன். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓசை வந்த திசையில் நோக்கினால்... அங்கே... கரிய பெரிய உருவம் ஒன்று அசைவது போல் தோன்றியது. அடுத்த நொடி... அவ்வுருவம்... கண்ணிமைக்கும் நேரத்தில் அவன்மேல் பாய்ந்தது.

எதற்கும் அஞ்சாத கரடிமணி அந்தக் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போனான், உடம்பில் ஆங்காங்கே  வலி மின்னல்கள் தெறித்தோடின. இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. 

“இதுவரை, தலையில்லா முண்டத்தின் பெயரில், தான் அனைவரையும் கதி கலங்கடித்துக் கொண்டிருக்க, இப்போது தன்னைப் போல் ஒருவன் இங்கே வந்து தனக்கே தண்ணி காட்டுகிறான் போலும்...” என்று எண்ணினான் அவன். 

“யாராக இருந்தாலும் சரி... ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்...” என்ற உறுதியுடன், தன் பலம் முழுவதையும் திரட்டி, அவ்வுருவம் தன் மேல் பாய்ந்து வந்த திசையை நோக்கிக் குத்து மதிப்பாகத் தாக்கத் துவங்கினான் அவன்.

பலம் பொருந்திய அந்தத் தாக்குதலில் எப்பேர்ப்பட்ட பலசாலியும் அந்நேரம் வீழ்ந்து விட்டிருப்பான். ஆனால், அங்ஙனம் அவன் குத்திய குத்துக்கள் ஏதோ கரும் புகையைக் குத்துவது போல் இருந்தன. எவ்வளவு முயன்றும் அவனால் அந்த உருவத்தைத் தாக்கவோ, வளைத்துப் பிடிக்கவோ இயலவில்லை. ஏதோ மாய வித்தை தெரிந்த மாயாவியிடம் அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தான் அவன். எனவே, எதிரி யாரென்றே தெரியாத நிலையில் மேலும் எதிர்த்துத் தாக்கும் எண்ணம் அவனுக்கு எழவில்லை.

அதுவரை, இது ஏதோ, தன்னைப் போல ஒரு ஆசாமியின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்று எண்ணியிருந்தவன், அங்ஙனம், மாயாவிபோல், தன்னைத் துரத்துவது உண்மையிலேயே தலையில்லா முண்டமாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டினான். எனவே, உயிருக்குப் பயந்து ஓடுவதுதான் ஒரேவழி என்று பின்வாங்கி ஓட எத்தனிக்க... முன்னைவிட அதிபயங்கர ஓசையுடன் அந்த உருவம் அவனைத் துரத்தியது. பின்னங்கால் பிடரியில் அடிக்கத் தெறித்து ஓடியவன்... ஒரே தாவலில் வேலிச் சுவரைத் தாண்டிக் குதித்தான்.


வேட்டை தொடரும்...



20 கருத்துகள்:

  1. வணக்கம்

    கதை அருமையாக உள்ளது தொடருங்கள் வேட்டை.. எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன் அவர்களே...!

      நீக்கு
  2. என்.ஜி.ஓ காலனி இன்னும் அப்படித்தான் உள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன் அவர்களே...!

      ஆம்... என்.ஜி.ஓ காலனி இன்றும் அப்படித்தான் உள்ளது... வித்தியாசமென்றால், அதிகமான வீடுகளும், உழவர் சந்தையும் புதிதாக உள்ளன. மேலும், முன்பு மீட்டர் கேஜ்ஜாக இருந்த திண்டுக்கல் - கரூர் இருப்புப் பாதை, தற்போது பிராட் கேஜ்ஜாக மாறியிருக்கிறது... அவ்வளவுதான் என்று எண்ணுகிறேன்...

      சொல்வது சரிதானே...?

      நீக்கு
  3. தலையில்லா முண்டத்தைப் பிடிக்கணும்னு போன ஏட்டையா, வேறொரு முண்டத்துக்கு இராக்காவல் இருக்கும் நிலை ஏற்பட்டது நல்ல நகைமுரண்! கவுண்டமணி... ஸாரி.... கரடிமணியைத் தாக்கிய அந்த மர்ம உருவம் என்னங்கற ஆர்வம் இப்ப என்னைத் துரத்திக்கிட்டிருக்குது நைனா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ் அவர்களே...!

      நீக்கு
  4. செம்ம டெர்ரர்ரா இருக்குப்பா.. (ஒரு படத்துல வடிவேலுவும் அர்ஜுனும் வந்து இப்படி காவலுக்கு உக்காருவாங்களே )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...
      (இக்கும்பா... அத்தே மாறிதாம்பா... ஆனா... நம்ப ஏட்டையா டொன்ட்டி பை இயர்ஸ் பேக்கே இப்புடிக்கா குந்திகினார்பா...:-) )
      அப்பாலிக்கா... மொய்யி நோட்ல ஒம்பேரு கீது... ஆனா மொய்யி துட்டக் காணுமேபா... இன்னா மேட்டரு...?!

      நீக்கு
  5. தொடர்கதையா...பிறகு வந்து படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவட்டும்பா... அப்பாலிக்கா வந்து பட்சி பாத்து கர்த்து சொல்லுபா...

      நீக்கு
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனபாலன்...! தங்களின் அறிவிப்பு இல்லையென்றால் மிகவும் தாமதமாகத்தான் இதைத் தெரிந்து கொண்டிருப்பேன்... தங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்...!

      நீக்கு
  7. நட்ட நாடு நிசியில இந்தக் கதைய படிக்கறேன். பிடி சாமி கதைய படிச்ச மாதிரி இருக்கு. முதல் முறை உங்க தளத்துக்கு வரும்போதே பயமுறுத்தலா? ஹஹஹா இருந்தாலும இனி வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டி.என்.முரளிதரன் அவர்களே...! தொடர்ந்து வருகை புரிந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன்...
      மிக்க நன்றி...

      நீக்கு
  8. பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா... அல்லாம் நம்ப கைலேயே போட்டதுபா...

      நீக்கு
  9. இன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்புகளைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நேரமிருப்பின் சென்று பார்வையிடவும்.

    http://www.blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...