ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஜில்லா வீரன்


ரண்டாம் மைசூர் போரில் திண்டுக்கல் கோட்டை கும்பெனியாரின் கைகளில் வீழ்ந்து, திப்பு சுல்தானும் “சரிதான் போய்த் தொலைங்கடா...” என்று கோட்டையைக் கும்பெனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், கும்பெனிப் படைகள் பீரங்கிகளை நிறுவி, திண்டுக்கல் கோட்டையைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஜெனரல் ஸ்டேட்டன் துரை கும்பெனிப் படைக்குத் தலைமை தாங்கி திண்டுக்கல் கோட்டையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தார்.

ஜெனரல் ஸ்டேட்டன் துரையாகப்பட்டவர், சிறந்த விளையாட்டுப் பிரியராக இருந்தார். ஜில்லாவில் உள்ள அனைத்து மற்போர் வீரர்களையும் போட்டிக்கு அழைத்து, அவர்களை வீழ்த்தி, வெற்றிக் கொடி நாட்டி, “ஜில்லா வீரன்” மற்றும் “ஜில்லா துரை” போன்ற பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் ஆகியிருந்தார். இருந்தும், மக்கள் அவரைச் “சாத்தான் துரை” என்றே அன்புடன் அழைத்து வந்தார்கள்.

ஜில்லா துரைக்கு வலது கையாக இருந்து சகல காரியங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார் துபாசி டப்பாக்காதனார். அவருக்கு காது கொஞ்சம் மந்தமே ஒழிய, மற்றபடி எல்லா வேலைகளிலும் கெட்டிக்காரராய் இருந்ததனால், துரையவர்களுக்கு துபாசியை மிகவும் பிடித்துப் போனது. எனவே, எங்கு சென்றாலும் நிழல் போல் துரையைத் தொடரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது.

அன்றொரு நாள், காலை உணவை முடித்துக் கொண்ட துரை, யானைத் தெப்பத்தில் கை கழுவிவிட்டு, மதிய உணவிற்கு மதுரைக்குச் சென்றுவிடும் நோக்கில், குதிரைமீதேறி மதுரை மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். அந்தக்கால கட்டத்தில், மதுரை ஜில்லா இன்னும் கும்பெனியார்களின் கைகளுக்கு எட்டாமேலே இருந்தது. “அதை எப்படியும் வளைத்துப் பிடித்துவிடவேண்டும்...” என்ற நோக்கில், துரை அடிக்கடி மதுரை மார்க்கமாக அரசாங்க விருந்தாளியாகக் கிளம்பிச் செல்வது வழக்கம்.

அங்ஙனம் அன்று சென்றுகொண்டிருக்கையில், வழிநெடுகிலும், பெரிய பெரிய துணிப் பாதாகைகள் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த துரை, “வாட் மேன் டப்பாசு (துரை, துபாசி டப்பாக்காதனாரை இவ்வாறுதான் அழைப்பது வழக்கம்), எங் பாத்தாலும், பேனர் வச்சுர்க்குது? வாட் இஸ் தி மேட்டர்?” என்று வினவினார்.

குதிரையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த துபாசியும் இந்தக் காட்சிகளைக் கவனிக்கத் தவறவில்லை. “எப்படியும் துரையிடமிருந்து இது பற்றிய கேள்வி ஒன்று நிச்சயம் வரும்...” என்று எதிர்பார்த்திருந்தவர், துரையின் கேள்வி தனக்குப் பாதி புரியாவிட்டாலும், அவர் அங்க அசைவுகளை வைத்து, இதைத்தான் கேட்கிறார் என்று யூகித்துக் கொண்டவராய், “மை லார்ட், பொங்கல் திருநாள் ஆதாலால், பொங்கல் விழா சம்பந்தமாக பதாகைகள் வைத்திருக்கிறார்கள்...” என்று பதிலுரைத்தார்.

“ஐ சீ...” என்று உள்வாங்கிக் கொண்ட துரை, ஒரு பாதகையைச் சுட்டிக் காட்டி, “ஹூ ஆர் தே டப்பாசு...? என்று வினவ, “பிரபோ... அவர்கள்தான், மதுரை சொக்கனும் அவர் பிள்ளையும்... மதுரை ஜில்லாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்கள்... பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அழைக்கும் விதமாக அந்தப் பதாகைகளை அமைத்துள்ளனர்...” என்று விளக்கினார்.

“ஹோ... ஐ சீ...” என்ற துரை, காளை மாட்டிற்கு ஒருவன் வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு பதாகையைக் காட்டி “ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்று வினவினார்.

துரை சுட்டிக்காட்டிய பதாகையைக் கண்டதும் துபாசியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது... “பிரபோ... அதுதான் நம்ப விநாயகம்.. இந்த ஜில்லாவிலேயே யாருக்கும் அடங்காத வீரன்...” என்றார்.

“இதுவரை, தன்னை மிஞ்சிய மல்லன் இந்த ஜில்லாவிலேயே இல்லை...” என்று இறுமாந்திருந்த துரைக்கு, இது பெரிய ஏமாற்றமாகப் பட்டது. “உடனே இவனுடன் மோதி... இவனை வீழ்த்தினால் ஒழிய நமக்கு நிம்மதியில்லை...” என்ற முடிவிற்கு வந்தவர், “அது யாரடா அவன்... அவன் என்ன அவ்வளவு பெரிய வீரனா...? எப்படி இவன் நம் கண்ணில் இதுவரை அகப்படாமல் போனான்...?” என்றெண்ணி, “ஏய் மேன் டப்பாசு... இவன் கூட நான் பைட் பண்ணி... ஐ மஸ்ட் நாக் கிம் அவுட் மேன்... அரேஞ் தி பைட் இம்மீடியட்லி...” என்று ஒரு திடீர் உத்திரவைப் பிறப்பித்தார்.

துரையின் பரபரப்பைக் கண்ட துபாசி, “பிரபோ... அது ஒன்றும் பிரமாதமில்லை... அவர்களின் இந்தப்  பொங்கல் விழாவிலேயே, ஏற்கனவே அவ்விதமான போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது... எனவே, கவலை வேண்டாம் மகா பிரபு... தாங்கள் அந்தப் போட்டியிலேயே கலந்து கொண்டால் போகிறது...” என்று மகிழ்ச்சியாகப் பதிலுரைத்தார்.

“நோ மேன்... ஐ வான்ட் டு பி த பர்ஸ்ட் பெர்சன் டு பைட் வித் கிம் இன் தி மேட்ச்... அண்டர்ஸ்டான்ட்...?” என்று கறாராகச் சொல்லிவிட்டார் துரை.

அதற்குமேல் சொல்லவா வேண்டும், உடனே மதுரை சொக்கன் வகையறாவைத் தொடர்பு கொண்ட துபாசி, மேற்படி, துரையின் ஆக்ஞையைக் கூறி, அதற்குத் தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துவிட்டார்.

ற்காலத்தில் “ரவுண்ட் ரோடு”  என்றழைக்கப்படும் இடம், அந்தக் காலத்தில் கும்பெனிப் படையினரின் குதிரையேற்றப் பயிற்சியிடமாக இருந்தது. தற்காலத்தில், பதிவுத்துறை அலுவலகம், மற்றும், பழைய மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலமாகச் செயல்பட்ட இடங்களே, மேற்படி ஜில்லா துரை மற்றும் அவருடைய பரிவாரங்கள் தங்கியிருந்த மாளிகைகளாக இருந்தன.

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன், ஜில்லா துரை, மேற்படி “ரேஸ் கோர்ஸ்” மைதானத்தில், அதி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். குதிரையேற்றம், உடற்பயிற்சிகளுக்கு மத்தியில், மல்யுத்தப் பயிற்சியையும் விடாமல் வெறித்தனமாகச் செய்து கொண்டிருந்தார். இதற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கும் பயிற்சி மல்லர்களையும், சுடுமணலில் வைத்துப் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தார் அவர். துரையின் இந்த ஆவேச மல்யுத்தப் பயிற்சியைக் கண்ட துபாசி சற்றே மிரண்டுதான் போய்விட்டார். “இந்தச் சாதாரணப் போட்டிக்கு துரை ஏன் இந்தளவிற்கு மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்...?” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. “ஜில்லா துரையும் போட்டியில் கலந்து கொள்கிறார்...” என்று கேள்விப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக, மக்கள் கூட்டம் மைதானத்தைக் கடல்போல் சூழ்ந்திருந்தது. மதுரை சொக்கனும், அவன் வாரிசும் உயர்ந்த மேடையில் அமர்ந்திருக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், துரையின் வருகைக்காக, மைதானத்தில் காத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில், தனது பரிவாரங்களுடன் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார் ஜில்லா துரை. துரையுடன் சேர்ந்து மோதப் போவதை நினைத்து, நடுங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் மத்தியில், பதாகையில் காணப்பட்ட மேற்படி வீரன் மட்டும், மிகவும் தெனாவெட்டாக நின்றுகொண்டிருந்தான். அங்ஙனம் நின்றுகொண்டிருந்தவனை இறுமாப்பாகப் பார்த்த துரை, “மவனே... இவ்வளவு தெனாவெட்டா உனக்கு...? பொறு... பொறு... இன்றைக்கு சுடு மணலில் வைத்து உன்னை பிரை பண்ணிவிடுகிறேன் பார்...” என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தார்.

போட்டியை ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக, மதுரை சொக்கன், துண்டை எடுத்து விசிறிக் காட்ட, கட்டியம் கூறுவோன் “பெரியோர்களே... தாய்மார்களே... ஜில்லாவிலுள்ள மல்லர்களையெல்லாம் மண்ணைக் கவ்வ வைத்து, ஜில்லா வீரன் என்ற பட்டம் வென்ற நமது ஜில்லா துரை, இப்போது, இந்த ஜில்லாவிலேயே, யாருக்கும் அடங்காத நமது கட்டிளங் காளை விநாயகத்தை, அடக்கியாளப்போகிறார் பராக்... பராக்...” என்று இடிமுழக்கக் குரலில் முழங்கினான்.

கிடைக்கப் போகும் வெற்றியை நினைத்துக் கொண்டு, குரோதம் கொப்பளிக்கும் பார்வையால், மேற்படி வீரனை ஜில்லா துரை நோக்க, அவனோ, துரையைக் கவனிக்காமல், பக்கத்திலிருந்த சந்தை, ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட துரைக்கு “என்னடா இது...? நம்மிடம் மோதப் போவதை நினைத்து சற்றும் பயமில்லாமல், வேறெங்கோ நோக்கிக் கொண்டிருக்கிறானே...?” என்று ஒரே வியப்பாகப் போய்விட்டது.

இங்ஙனம் துரை வியந்துகொண்டிருந்த அதே வேளை, அவர் எதிர்பாரா அந்தச் சம்பவம் நடந்தேறியது. மேற்படி சந்திலிருந்து, துரையைக் குறிவைத்து சீறிப் பாய்ந்து வந்தது ஒரு காளை. இதைச் சற்றும் எதிர்பார்க்காத துரை, மிகவும் மிரண்டு போனார். மின்னலென தன் முன்னே வந்த அந்தக் காளையை, எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது அவருக்கு. நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு செயலிழந்து போனார் துரை. இவ்வகையான தாக்குதலை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் துரை மருகி நின்ற அதே வேளை, புயலெனச் சீறி வந்த அந்தக் காளை, ஒரே குத்தாக அவரைக் குத்திவிடும் நோக்கில், தலையைக் குனிந்து வர, “இனி ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் தமதில்லை...” என்று உணர்ந்த துரை, புறமுதுகிட்டு ஓட எத்தனிக்க, அதற்குச் சற்றும் அவகாசம் கொடுக்காத அந்தக் காளை, துரையின் “பின்” பக்கம் ஒரே குத்தாகக் குத்தி அவரைத் தூக்கியெறிந்தது. “என்ன நடக்கிறது...?” என்றே தெரியாமல் ஆகாயத்தில் பறந்த ஜில்லா துரை, அப்படியே மூர்ச்சையாகிப் போனார்.

நடந்து போன விபரீதத்தை சற்றும் எதிர்பார்க்காத மதுரை சொக்கன் வகையறாக்கள் மிகவும் அதிர்ந்து போனார்கள். உடனடியாக, ஒரு வைத்தியரை வரவழைத்து, காயம்பட்ட துரையைக் குப்புறப் படுக்கப்போட்டு,  பச்சிலை வைத்துக் கட்டி, கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய் துரையின் மாளிகையில்  சேர்த்தார்கள். “நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போட்டிக்குப் போன துரை, இப்படி, குப்புறக் கவிழ்ந்து வருவார்...” என துரைசாணி அம்மாள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மனம் நொந்து போன அவர், மேலதிகாரிகளுக்குத் தகவல் தர, உடனே ஆங்கில மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆங்கில வைத்தியரின் அறுவைச் சிகிச்சை முடிந்தும், அபாயக் கட்டத்தைத் தாண்டாமல், குப்புறக் கிடந்த துரையை, உடனே இங்கிலாந்திற்கு அப்புறப்படுத்த உத்தரவிட்டது கும்பெனி நிர்வாகம். தீவிர சிகிச்சை முடிந்து, ஜில்லா துரை திண்டுக்கல்லுக்குத் திரும்பிவர, ஒன்றரை ஆண்டு காலம் பிடித்தது. அதுவரை, மிகுந்த குழப்பத்திலிருந்த துரையவர்கள், துபாசி டப்பாக்காதனாரைத் தலைகீழாகக் தொங்கவிட்டு விசாரித்ததில், பின்வரும் வரலாறைத் தெரிந்துகொண்டார்.

“ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்ற துரையின் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாத துபாசி, “பெல்லோ என்பது “புல்” என்ற காளை மாட்டைத்தான் குறிக்கின்றதென்று கருதி, மேற்படி, விநாயகம் என்ற பிரசித்தி பெற்ற ஜல்லிக் கட்டுக் காளையைத்தான் துரையவர்கள் அடக்க விரும்புகிறார்...” என்றெண்ணி, மேற்படி மதுரை சொக்கன் வகையறா ஏற்பாடு செய்திருந்த, பொங்கல் விழா ஜல்லிக் கட்டில் கொண்டுபோய் ஜில்லா துரையை வகையாகச் சிக்கவைத்துவிட்டார். இந்த விபரம் தெரியாத ஜில்லா துரை, மேற்படி பதாகையில், “காளை மாட்டிற்குப் புல்லுப் போட்டுக் கொண்டிருந்த பொடியனைத்தான், மற்போர் செய்து வீழ்த்தப் போகிறோம்...” என்று கருதிப் பொருதப் போய், பெருத்த “பின்” விளைவைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

நடந்து போன இந்த சம்பவங்களினால், “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது... போல, டப்பாக்காதனாருக்கு உயிர் போகாமல் துபாசி வேலை மட்டும் போயிற்று. பாவம், ஜில்லா துரை வாழ்வில்தான் பெருத்த சோகம் நிகழ்ந்துவிட்டது. “பின்னுக்கு வந்தது பின்னாலே தொடர்ந்து வந்தது...  போல, இங்கிலாந்திலுள்ள அவரது வாரிசுகளுக்கு, மேற்படி “பின்” விளைவால் ஏற்பட்ட தழும்போடுதான், இன்றளவும், குழந்தைகள் பிறந்துகொண்டிருக்கின்றன!அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!15 கருத்துகள்:

 1. அல்லாத்துக்கும் பொங்கல் நல்வாய்த்துக்கள் சொல்லிக்கிறான்பா இந்த முட்டா நைனா...!

  பதிலளிநீக்கு
 2. +1
  உங்கள் படத்திற்கு !
  முழவதும் படித்து பிறகு என் கருத்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப டேங்க்ஸ்பா...
   சர்தாம்பா... அப்பால வந்து கர்த்து சொல்லிக்கினு போப்பா...

   நீக்கு
 3. பொங்கலுக்கு முன்னாடியே டப்பா டான்ஸ் ஆடிடுச்சு போல!
  பொங்கல் வாய்த்துன்னு சொல்லனுமா இல்லாட்டி தமில் வர்ஷ பொறப்பு வாய்த்துன்னு சொல்லனுமாபா? ஒரே கன்ஃபூஸனா கீதுபா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்ப டேங்க்ஸ்பா...
   இன்னாபா இப்புடிக்கா கேட்டுக்கின...? நோ மோர் கன்பூசன்... அல்லாம் "தைத் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..." ன்னு சொல்லுபா...

   நீக்கு
 4. ஏதேனும் விமர்சனமே என்று நினைத்தேன்... நல்லவேளை - வித்தியாசம்...!

  தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனபாலன்... அனைவரும்தான் விமர்சனம் எழுதுகிறார்கள்... பிறகு நாமும் ஏன் அதையே செய்யவேண்டும்... அதற்குத்தான் கொஞ்சம் வித்தியாசமான முயற்சி...

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

   நீக்கு
 5. வணக்கம்
  தங்களின் பார்வையில் கற்பனை ஒரு வித்தியாசம்..
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

   நீக்கு
 6. ஜில்லா வீரம் னு போட்டு உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு வித்தியாசமான ஒரு பதிவு!! நல்ல கற்பனை வளம்!!! வாழ்த்துக்கள்!!

  த.ம.+

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

   நீக்கு
 7. வணக்கம் சகோதரர்
  அழகான கற்பனை. மிகவும் ரசிக்கும்படி இருந்தது. எனது அன்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
  ----------
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாண்டியன்...!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

   நீக்கு
 8. இது வேறு ஜில்லாவா ... இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணிமாறன்...!
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...