ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - முன்னுரை...


த்துப் பைசாவுக்கு மேல் பார்த்தறியாத பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் பிச்சை கிடைத்தது போல, பஞ்சம் பிழைக்க பரதேசியாய்ப் போன எனக்குச் சொந்த ஊருக்குச் செல்லும் பாக்கியம் சென்ற விடுமுறையில் கிட்டியது. சொந்த ஊருக்குச் செல்வது சுற்றுலா போவது போலத்தான் போலும். சுற்றுவட்டாரத்தில் உள்ள சொந்த பந்தங்களைப் பார்த்து முடிப்பதற்குள் விடுமுறை முடிந்து விட்டது.

ஒதுக்குப் புறமாக இருந்த இடத்திலெல்லாம் வீடுகள் முளைத்து வீங்கிப் போய்க் கிடந்தது கிராமம். வீதிகளெல்லாம் சிமெண்ட் பூசிக்கொண்டு தடித்துப் போய்க் கிடந்தன. தெருவிற்குத் தெரு, வீட்டிற்கு வீடு தண்ணீர்க் குழாய் இணைப்பு தாராளமாய்க் காணப்பட்டது. நிறைய புதிய மனிதர்கள் காணக்கிடைத்தார்கள். ஏதோ, வேற்று ஊருக்குள் நுழைந்ததைப் போல் உணர்ந்தேன்.

தொளதொள பெல் பாட்டம், உடலோடு ஒட்டி உறவாடும் கழுதைக் காது காலர், தடிமனான மூக்குக்கண்ணாடி, சுருள் முடி கிராப் சகிதம் பாக்கியராஜ் ஸ்டைலில், நான் சிறு வயதில் பார்த்த எங்கள் ஆறாம் வகுப்பு ஆசிரியர், முதுமை எய்தி ஓடிசலான தேகத்தோடு, ஆற்றோர தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

“ஆமா காள, ஊருக்குள்ள இருந்து அவிங்களோட ஓரியாட முடியலை. எந்த வம்புக்கும் போவாம இப்புடி தனியா இருக்குறது தான் நல்லா இருக்கு...” என்றார்.

புதிதாக வேயப் பட்டிருக்கும் கீற்றுக் கொட்டகையைத் தவிர, கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. நாங்கள் படிக்கும்போது தொங்கிக் கொண்டிருந்த தண்டவாள மணி இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் தந்த சீருடைகளில் ஆரவாரமாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் பிள்ளைகள்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் உறவுக்கார ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. ஓய்வை எதிர்நோக்கி இருப்பவர், சமச்சீர் கல்வி முறையின் தாக்கத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

மாணவர்களின் செயல்பாடுகளை குறிப்பேடுகளில் எழுதி வைத்த நிலை மாறி,  அவற்றையெல்லாம் கணினியில் தரவேற்றி,  தகவல் வட்டுகளில் பதிவு செய்து வைக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறதாம். அதற்காகத் தனியாகக் கணினிப் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

மவுசுன்னா என்னா? அத எப்புடி பயன்படுத்துறதுன்னு புரிஞ்சுக்கிறது ரொம்பச் செரமமா இருக்கு...” என்றவர், தன்னை விட ஆறாவது படிக்கும் தனது பேரப் பிள்ளைகள் கணினியைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்று கூறினார்.

பட்டிணத்துப் பள்ளிகளுக்கும் பட்டிக்காட்டுப் பள்ளிக்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பற்றிப் பேசியவர், பேச்சினிடையே, ஒரு ஆங்கில வார்த்தையைக் கூறி, “இதுக்கு என்னா அர்த்தம்னு எனக்கு இவ்வளவு நாளாத் தெரியாது. பேரப் புள்ளைங்களுக்கிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்...”  என்று கூறினார். சற்று வியப்பாகத்தான் இருந்தது.

அவருடைய இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப் பட்டதுதான் "கேட்டானே ஒரு கேள்வி". இதில் நீங்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டியது, ஆசிரியப் பணியைப் பற்றியோ, ஆசிரியர்களைப் பற்றியோ குறைவாக மதிப்பிட்டு இதை உருவாக்கவில்லை. அது நமது நோக்கமல்ல. உண்மை அனுபவம் மற்றும் எதார்த்தம் இவற்றின் அடிப்படையிலேயே இதை அமைத்திருக்கின்றேன். குறிப்பாக, பட்டிணத்துக் கல்விக்கும் கிராமத்துக் கல்விக்கும் இடையேயுள்ள, மலைக்கும் மடுவுக்குமான, வித்தியாசத்தைப் பிரதிபலிப்பதே இதன் நோக்கம்.

இந்நோக்கத்தை உணர்ந்து இப்புனைவை உள்வாங்கிக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல...

இனி... கேட்டானே ஒரு கேள்வி...
விரைவில்...சனி, 18 ஜனவரி, 2014

கி(ழ)ளவர் நைனா...

“அம்புட்டுத்தான்... இதுக்கு மேல சோறுன்னு ஒன்னு ஒலகத்துல கெடைக்காது....” ன்னா நீங்க என்னா பண்ணுவீங்க...? அதேதான்... அதத்தான் நானும் பண்ணினேன்... வழக்கமா மூக்கு முட்ட சாப்புடுறவன்... அன்னைக்கி மூளை முட்ட சாப்புட்டேன்.

பொறவு...? பொறவென்ன... பொட்டப் புள்ளைக பொசுக்குன்னு சட்டையில முத்தங்குடுத்து... படக்குன்னு மேல மாட்டி வுட்டாக...
!!!? என்னா பாக்குறீக...? எனக்கு இல்ல மக்கா... அந்தக் கருவாப்பய சிவ கார்த்திகேயப் பொடியனுக்குத்தான்...! என்னைய மாறியே தொல்லைக்காட்சியில அதப் பாத்துக்கிட்டு இருந்தவிங்களுக்கு, சகல துவாரங்கள் வழியாவும் புகை வந்துச்சு பாருங்க, அதுமாறிலாம் எனக்கு வர்லன்னு சொன்னா, நீங்க நம்பவா போறீங்க...? சரி... அத விடுங்க...

அப்பத்தான் திடீர்னு அந்த போனு வந்துச்சு... ஒடனே “போனு எப்புடி ஒன்னத் தேடி வந்துச்சு”ன்னு நீங்க கேக்கப்புடாது... “ஊர் உறங்கியது...” ன்னு சொன்னா “ஊர் தூங்குச்சு”ன்னு அர்த்தமில்ல... “ஊருல இருக்க மக்கள் தான் தூங்குனாங்க...”ன்னு அர்த்தம்... அதுமாறித்தான் இதுவும். போனு வந்துச்சுன்னா “தொல்லைபேசி மணி அடிச்சுச்சு”
ன்னு அர்த்தம்.

படக்குன்னு எடுத்து “அலோ...” ன்னு நான் தமிழ்ல தாங்க பேசுனேன்... ஆனா பாருங்க, அந்தப் பக்கம் பேசுன பிக்காலிப்பய, “கோன் பனேகா கொரோர் பதி..”ன்னு கிந்தில பேச ஆரம்பிச்சுட்டான். எனக்கு வந்த ஆத்
திரத்துல “அப்புடியே அவன அலேக்காத் தூக்கி மல்லாக்கப் போட்டு ஒரு மிதி மிதிச்சா என்ன...?” ன்னு தோன... நல்ல வேளை, நான் நெனச்சது அவனுக்குக் கேட்டுருச்சு போல... ஒழுக்கமா தமிழ்லயே பேச ஆரம்பிச்சுட்டான்...
 

“நாங்க டெல்லில இருந்து பேசுறோம்... மேலிடத்துல இருந்து நைனா கிட்ட பேசுங்கன்னு தகவல் வந்துச்சு...” ன்னான்.

“இங்க பார்ரா... டெல்லில இருந்து யாரோ நம்மகிட்ட பேசச் சொல்லிருக்காய்ங்க...” ன்னு நெனச்சுக்கிட்டு, “ஓஹோ... அப்புடியா... நைனாதான் பேசுறேன்... சொல்லுங்க...”ன்னு சொன்னேன்.


“இங்கிட்டு மழை இல்ல... அங்கிட்டு...?” ன்னு சம்பந்தம் இல்லாம ஒரு கேள்வியக் கேட்டாம் பாருங்க...


“சரி... குசலம் விசாரிக்கிறாய்ங்க போல...
ன்னு நெனச்சுக்கிட்டு, “இங்கயும் மழை இல்ல... ன்னு சொல்லி வச்சேன்.

“நல்லது... நாங்க ஐந்நூறு ‘சி’க்கு ஒத்துக்குறோம்... நீங்க திரும்பவும் நம்ப கூடத்தான் கூட்டணின்னு அறிவிக்கணும்... கோர்ட்டு கேசெல்லாம் பத்தி இப்ப பேச வேணாம்... அதெல்லாம் பின்னால  பாத்துக்கலாம்... என்ன...? ஒங்களுக்கு ஒகே தான...?”ன்னு ரொம்பக் கராறாச் சொ
ன்னான் அந்தாளு.

எனக்குக் கொஞ்சம் கடியாத்தான் போச்சு...


“யோவ்... யாருய்யா நீங்கள்லாம்...? நீங்க பாட்டுக்கு கூட்டணிங்கிறிங்க... ‘சி’கிறிங்க... கோர்ட்டு கேசுன்னு சொல்லறீங்க... ஒங்களுக்கு என்ன வேணும்...?”ன்னு ஒரு மெரட்டு மெரட்டவும்... நெசமாவே அவிங்க பயந்து தான் போய்ட்டாய்ங்க போல...


“ஐயா... நீங்க தான நைனா...?” ன்னு கொஞ்சம் பவ்யமா கேட்டான் அந்தாளு...


“அதான பாத்தேன்... நமக்குப் பயப்புடுலன்னா எப்புடி...” ன்னு நெனச்சிக்கிட்டு, “ஆமா நாந்தான் நைனா... ஒங்களுக்கு என்ன வேணும்...” ன்னு கொஞ்சம் கடுமையாவே கேட்டேன்.


“இல்ல ஐயா... கோடு வேர்ட் லாம் கரெக்ட்டா சொல்லிட்டீங்க... ஆனா... மெயின் மேட்டர் பேசுறப்பத்தான் புரியாதது மாறியே பேசுறீங்க... அதான்... ஒரே கொழப்பமா இருக்கு...” ன்னு திருப்பியும் வெளக்கெண்ணை மாறி கொழ கொழன்னே பேசுனான் மேற்படி ஆளு.


நல்ல வேளை, ஏதோ நாங்கொஞ்சம் உசாரான ஆளா இருக்கப் போயி தப்பிச்சுக்கிட்டேன்... இல்லாங்காட்டி, எங்கதி...? “கூட்டணி... சி... அறிவிப்பு...” ன்னு போறப்பவே ஏதோ இது அரசியல் மற்றும் அரசியல் வியாதிகள் சம்பந்தப் பட்ட விசயமுன்னு புரிஞ்சுபோச்சு...


“அடடே... விசயம் அப்புடிப் போகுதா... ஐயா... நீங்க நெனைக்கிற நைனா நா இல்ல... நா முட்டா நைனா... நீங்க சொல்றவர்... கி(ழ)
வர் நைனா... ன்னு தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடையா சொன்னேன்.

நாஞ்சொன்னது அவனுக்குப் புரிஞ்சு போச்சோ என்னமோ... “சாரிங்க... ராங் நம்பர்...” ன்னு சொல்லிட்டு படக்குன்னு போன வச்சுப்புட்டான்...


“ஏதேது... நம்ப பேரு அரசியல் அரங்கு வரைக்கும் போயிருச்சா...” ன்னு நெனச்சுக்கிட்டே, சைடு வாங்கி சாஞ்சு ஒக்காந்தேன் பாருங்க... அப்பத்தான்... அந்த சத்தம் கேட்டுச்சு... என்னடான்னு பாத்தாக்க... சர்ர்ர்... சர்ர்ருன்னு... நாலஞ்சு ஆட்டோக்கள் வந்து என் வீட்டு முன்னாடி நிக்கிது... “போச்சுடா... போன வக்கிறதுக்குள்ள... எவனோ போட்டுக் குடுத்துட்டான் போல... அதான் ஆட்டோ அனுப்பி... ஆளத் தூக்க வந்துட்டாய்ங்க...” ன்னு பாத்தாக்க...


வங்கிலருந்து வேல முடிஞ்சு, வீட்டுக்குப் போற அதிகாரிங்க மாறி நாலஞ்சு பேரு திமுதிமுன்னு வீட்டுக்குள்ள வந்தாய்ங்க பாருங்க... நான் அப்புடியே ஆடிப்போய்ட்டேன்...


“ஹலோ... நாந்தான் இன்னாரு... அதென்ன சார் ஒங்க பேரு... சொல்றப்பவே ஒரு மாதிரி இருக்கு...? எழுதிப் பாத்தா... வாந்தி வாந்தியா வருது...” ன்னாரு மேனஜரு மாறி இருந்த ஒருத்தர்...


ஒன்னும் புரியாம நான் ங்ங்ஞே...ன்னு முழிக்கவும்...

பாக்குறதுக்கு டாக்குட்டரு மாறி இருந்தவரு... “யோவ்... ஒன்னால என்னாச்சு தெரியுமா...? ஒலகத்துல இருக்க எல்லா நைனாவும் முட்டாப்பயகதான்னு சொல்றான்யா என் பையன்...” ன்னு எகுற...


கைல பெரம்போட வாத்தியாரு மாறி நின்ன ஒருத்தர் “யோவ் நைனா... ஒன்னப் பாத்தா அப்புடி ஒன்னும் லூசு மாறி தெரியலையேய்யா... அப்புறம் ஏன்யா முட்டா நைனான்னு பேரு வச்சுருக்க... இதுல எதுனா உள்குத்து இருக்கா...” ன்னு கேக்கவும்தான்... 


எனக்கு ஒரு மாதிரியா புரிய ஆரம்பிச்சுச்சு... “சர்தான்... நம்ப பேரப் பத்தித்தான் இவுக எல்லாரும் பேசிக்கிறாக...” ன்னு.

“என்ன மக்கா... நாஞ்சொல்லவர்றத புரிஞ்சுக்கிட்டீங்களா...?” அதேதான்... அதேதான்...


“நான் ஏன் ‘முட்டா நைனா’ன்னு பேர் வச்சுக்கிட்டேன்...?” ன்னு அவுங்ககிட்ட எப்புடி வெளக்குனேனோ... அதைத்தான் ஒங்ககிட்ட புளி போட்டு வெளக்கப் போறேன்... கவனமாக் கேட்டுக்கங்க மக்கா...


அதுக்கு முன்னாடி நீங்க ஒரு தபா அல்லாருக்கும் வணக்கம்பா... ங்கிற என்னோட மொதல் பதிவப் படிச்சிட்டு வந்துருங்க... அப்பத்தான் சுளுவா இருக்கும்...


சின்ன வயசுல “மரக்கா மண்டையன்...”
, “வெடச்ச மூக்கன்...” ங்கிறது மாறி நெறையப் பட்டப் பேரு எனக்கு இருந்தாலும், கல்லூரிக்கு வந்ததுக்கு அப்புறம், எனக்குத் தெரிஞ்சு, எனக்கே எனக்குன்னு ஒரு பட்டப் பேரு வாய்க்கல. ஒரு வேளை, எனக்குத் தெரியாம எதுனா வச்சிருந்தாய்ங்களான்னும் எனக்குத் தெரியலை...

யாகூ மெஸ்சஞ்சர் பிரபலமா இருந்த நேரத்துல... “என்னப்பா... வாப்பா... போப்பா...” ன்னு தங்லீஸ்ல தட்டச்சு பண்ணிக்கிட்டு இருந்தது... நாளடைவில... “என்னபா... வாபா... போபா...” ன்னு மருவி... கடைசில “வா நைனா... போ நைனா...” ன்னு சென்னை செந்தமிழுக்கு மாறிருச்சு...


அதுக்கப்புறமா, நான் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறப்பவோ இல்ல சாட் செய்றப்பவோ... “இன்னா நைனா... எப்புடி கீற....” ன்னு நைனா மொழிய அதிகமா பிரயோகப்படுத்த ஆரம்பிச்சேன்... அப்புடிப் பேசிக்கிறப்ப, லூசு மாறி, அடிக்கடி அவிங்கள்ட்ட எதுனா கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பேன்... அப்படி ஒரு நாள் நான் ஒரு கேள்வி கேக்கப்போய்... “யூ... முட்டா நைனா... அது அப்புடி இல்ல... இப்புடி...” ன்னு வெளக்கிச் சொன்னான் ஒரு நண்பன்... இப்புடித்தான், இந்த “முட்டா நைனா...” ங்கிற சொல் பிரயோகம் மொத மொத இந்த ஒலகத்துக்கு அறிமுகமாச்சு...


அதுக்கப்புறம், என்னோட கல்லூரி நண்பர்களோட யாகூ குழுமத்துல கொஞ்ச நாள், எங்களோட கல்லூரி நாட்களைப் பத்துன தொடர் ஒன்னை எழுதிக்கிட்டிருந்தேன்... அந்த சமயத்துல தான் இந்த “முட்டா நைனா” ங்கிற பதத்தை என்னோடைய அடையாளமா உபயோகப் படுத்த ஆரம்பிச்சேன்.


கல்லூரியில யார் யாருக்கு என்ன பட்டப் பேர் வச்சுக் கூப்புட்டோம்ன்னு  வெலாவாரியா ஒரு பதிவு போடவேண்டி இருந்துச்சு... அந்த சமயத்துலதான் மேல சொன்னாப்புடி, அப்புடியாக்கொந்த பட்டப்பேர் ஏதும் எனக்கு வைக்கலேன்னு தெரிஞ்சது. பேசாம “முட்டா நைனா”ங்கிற பேரையே எனக்கு வச்சுக்கலாம்னு எல்லாரும் பேசி முடிவு பண்ணினாய்ங்க.


கடைசில... மேற்படி, வலைப்பதிவு ஆரம்பிக்கிறப்பத்தான், திருப்பியும் இந்தப் பேச்சு வந்துச்சு. என்னோட கல்லூரித் தரப்பு நண்பேங்கள்லாம்,
நீ பேசாம முட்டா நைனாங்கிற  பேர்லேயே எழுதலாம்...” ன்னு பச்சைக் கொடியைக் காட்டுனாய்ங்க. ஆனா, இன்னோரு தரப்போ, முதல் கோணல் முற்றிலும் கோணலாகி போயிரும்... அதுனால, மொத தடவ இப்புடி ஒரு முயற்சி செய்றப்ப, தொலை நோக்காகச் சிந்திச்சு, ஒன்னோட பலம் எதுவோ அதுக்குத் தகுந்தாப்புடி, ரொம்ப நாளைக்கி நின்னு நெலைக்கிற ஒரு பேரை வச்சுக்க...” ன்னு  சொன்னாய்ங்க.
 
அவிங்க சொல்லறதையும் தள்ளிட முடியல.... முக்கியமா, “நாளைக்கி சாகித்திய அக்காடமி, ஆஸ்காரு, புலிட்சர், நோபல் மற்றும் இன்னபிற விருதுகளை வாங்கப் போறப்பவும் சரி, வெளி ஒலகத்துல நாம அடையாளப் படுத்தப்படுறப்பவும் சரி, அது நல்லவெதமா இருக்கணும்ல...? குறிப்பா, நாளைக்கி, நாம சொல்ற ஒண்ணாங்கிளாஸ் கருத்தாகப்பட்டது, நாம வச்சிருக்க பேரால, எடுபடாமப் போயிறக்கூடாதுல...?” ன்னு பலமா யோசிக்க ஆரம்பிச்சேன்.


“சரி... இப்ப என்ன முடிவெடுக்குறது...?” ன்னு ஒரு குழப்பத்துல இருக்கப்பத்தான்... “மொதல்ல நீ என்ன விதமா எழுதப் போற...? ஒன்னோட பலம் என்ன...? எந்தத் தளத்துல நீ இயங்க அல்லது பயணம் செய்யப் போற...?” ன்னுல்லாம் யோசிச்சுப் பாத்ததன் விளைவா, “ஒரு சோதனை முயற்சியா, பொழுதுபோக்கா மொதல்ல எழுதிப் பாக்கலாம்” ன்னு முடிவு பண்ணுனேன்.


இதுல ரெண்டு வகையான பலனை நான் எதிர்பாத்தேன். ஒன்னு, “எந்தவகையான எழுத்து நமக்கு வசப்படுது...?” ன்னு பரிட்சை பண்ணிப் பாக்குறது... ரெண்டாவது,
நம்ம முயற்சிக்கு எந்தமாறியான வரவேற்பு இருக்கும்...?” ன்னு தெரிஞ்சுக்கறது. (மேலும், பொழுதுபோக்கா எழுதுறப்ப, குற்றம் குறை எதுனா இருந்துச்சுன்னா, “அது மொக்கை” ன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்... என்ன நாஞ்சொல்றது...?)

ஆக, இப்புடி ஒரு சோதனை முயற்சியா உண்டானதுதான்  இந்த “முட்டா நைனா” ங்கிற வலைப்பதிவு.


எதிர்பாத்தபடி,
எனக்கு என்ன வகையான எழுத்து வசப்படுதுன்னு இப்பத்தான் ஓரளவுக்குப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்கேன். மேற்கொண்டு, இந்தப் பரிசோதனைத் தொடரலாம்ன்னும் இருக்கேன்.

ஒருவேள, நான் எதிர்பார்த்த மாறி, எனக்குத் திருப்தி வர்ற பட்சத்துல, பட்டப் பேரில்லாம, புனைப் பேர்லையோ இல்ல சொந்தப் பேர்லையோ சமகால எழுத்துல எறங்கலாம். அப்புடி எதும் ஒத்துவரலைன்னா, இதையே தொடர்ந்து செய்யலாம்.


எப்புடின்னாலுஞ் சரி மக்கா... “இதுவர நீங்க எனக்குக் குடுத்து வர்ற ஊக்கத்தையும் ஆக்கத்தையும், தொடர்ந்து  குடுத்து, எனக்கு ஒரு வழியக் காட்டணும்...” ன்னு இந்தச் சமயத்துல ஒங்களக் கேட்டுக்கிறேம்ப்பா.


பின் குறிப்பு: “நைனா...” ங்கிறது சென்னைச் செந்தமிழைப் பொருத்தவரை, இசுலாமிய அன்பர்கள் தங்களுக்குள்ளே “வாங்க பாய்... போங்க பாய்...” ன்னு பாசமா சொல்லிக்கிறா மாறி, சாதாரண மக்களை விளிக்கிற சொல்லாவே கையாளப்படுது. அதுனால, “இந்த
நைனா வாகப் பட்டது, தந்தை... அப்பா... ங்கிற பதத்துல பயன்படுத்தப்படுறதக் காட்டிலும், சாதாரண மக்களை விளிப்பதற்குத்தான் பயன்படுது” ங்கிறது  அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம். ஒருவேள என்னோட அபிப்பிராயம் தப்பாக் கூட இருக்கலாம். ஆனா “முட்டா நைனா...” ங்கிற பதம் “முட்டாள் தந்தை/அப்பா” ங்கிற அர்த்தத்துல உபயோகப் படுத்தப் படலை. அது நம்ம நோக்கமும் இல்ல. அதுக்குப் பதிலா, “ஒரு சாதாரண முட்டாள்” ங்கிற அர்த்தத்துலயே பயன்படுத்தப் படணும்னு எதிர்பாக்குறேன். அதுனால, “தந்தையரை இழிவு செய்யுற நோக்குல இப்பதம் கையாளப்படலை...” ங்கிறத நான் இந்தச் சமயத்துல ஒங்களுக்குச் சொல்லிக்கிறக் கடமைப்பட்டுருக்கேன்.

“எனது இந்தக் கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்...? முட்டா நைனா என்ற பதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா...? இல்லையென்றால், வேறு பெயரில் நான் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்களா...?” ங்கிறதப் பின்னூட்டம் வாயிலாத் தெரியப்படுத்துனா ரொம்ப ஒதவியா இருக்கும்.


அப்பால ஒரு பின் குறிப்பு: என்னோட பதிவுகள மூஞ்சியக் காட்டாம படிச்சுவரும்
மௌன வாசகக் கண்மணிகளுக்கு மொதல்ல என்னோட நன்றியத் தெரிவிச்சுக்கிட்டு, ஒங்கள்ட்ட ஒரு வேண்டுகோள வக்கிறேன்... என்னோட இந்த முயற்சி பத்தி ஒங்களுக்குத் தோனும் விமரிசனங்கள தயை கூர்ந்து, பின்னூட்டம் வாயிலா (பெயரிலியா இருந்தாலும் பரவால்ல...) தெரியப்படுத்தனும்னு அன்போட வேண்டிக் கேட்டுக்கிறேன். நிச்சயம் அதெல்லாம் எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். 

நன்றி...!


ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஜில்லா வீரன்


ரண்டாம் மைசூர் போரில் திண்டுக்கல் கோட்டை கும்பெனியாரின் கைகளில் வீழ்ந்து, திப்பு சுல்தானும் “சரிதான் போய்த் தொலைங்கடா...” என்று கோட்டையைக் கும்பெனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், கும்பெனிப் படைகள் பீரங்கிகளை நிறுவி, திண்டுக்கல் கோட்டையைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஜெனரல் ஸ்டேட்டன் துரை கும்பெனிப் படைக்குத் தலைமை தாங்கி திண்டுக்கல் கோட்டையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தார்.

ஜெனரல் ஸ்டேட்டன் துரையாகப்பட்டவர், சிறந்த விளையாட்டுப் பிரியராக இருந்தார். ஜில்லாவில் உள்ள அனைத்து மற்போர் வீரர்களையும் போட்டிக்கு அழைத்து, அவர்களை வீழ்த்தி, வெற்றிக் கொடி நாட்டி, “ஜில்லா வீரன்” மற்றும் “ஜில்லா துரை” போன்ற பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் ஆகியிருந்தார். இருந்தும், மக்கள் அவரைச் “சாத்தான் துரை” என்றே அன்புடன் அழைத்து வந்தார்கள்.

ஜில்லா துரைக்கு வலது கையாக இருந்து சகல காரியங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார் துபாசி டப்பாக்காதனார். அவருக்கு காது கொஞ்சம் மந்தமே ஒழிய, மற்றபடி எல்லா வேலைகளிலும் கெட்டிக்காரராய் இருந்ததனால், துரையவர்களுக்கு துபாசியை மிகவும் பிடித்துப் போனது. எனவே, எங்கு சென்றாலும் நிழல் போல் துரையைத் தொடரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது.

அன்றொரு நாள், காலை உணவை முடித்துக் கொண்ட துரை, யானைத் தெப்பத்தில் கை கழுவிவிட்டு, மதிய உணவிற்கு மதுரைக்குச் சென்றுவிடும் நோக்கில், குதிரைமீதேறி மதுரை மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். அந்தக்கால கட்டத்தில், மதுரை ஜில்லா இன்னும் கும்பெனியார்களின் கைகளுக்கு எட்டாமேலே இருந்தது. “அதை எப்படியும் வளைத்துப் பிடித்துவிடவேண்டும்...” என்ற நோக்கில், துரை அடிக்கடி மதுரை மார்க்கமாக அரசாங்க விருந்தாளியாகக் கிளம்பிச் செல்வது வழக்கம்.

அங்ஙனம் அன்று சென்றுகொண்டிருக்கையில், வழிநெடுகிலும், பெரிய பெரிய துணிப் பாதாகைகள் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த துரை, “வாட் மேன் டப்பாசு (துரை, துபாசி டப்பாக்காதனாரை இவ்வாறுதான் அழைப்பது வழக்கம்), எங் பாத்தாலும், பேனர் வச்சுர்க்குது? வாட் இஸ் தி மேட்டர்?” என்று வினவினார்.

குதிரையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த துபாசியும் இந்தக் காட்சிகளைக் கவனிக்கத் தவறவில்லை. “எப்படியும் துரையிடமிருந்து இது பற்றிய கேள்வி ஒன்று நிச்சயம் வரும்...” என்று எதிர்பார்த்திருந்தவர், துரையின் கேள்வி தனக்குப் பாதி புரியாவிட்டாலும், அவர் அங்க அசைவுகளை வைத்து, இதைத்தான் கேட்கிறார் என்று யூகித்துக் கொண்டவராய், “மை லார்ட், பொங்கல் திருநாள் ஆதாலால், பொங்கல் விழா சம்பந்தமாக பதாகைகள் வைத்திருக்கிறார்கள்...” என்று பதிலுரைத்தார்.

“ஐ சீ...” என்று உள்வாங்கிக் கொண்ட துரை, ஒரு பாதகையைச் சுட்டிக் காட்டி, “ஹூ ஆர் தே டப்பாசு...? என்று வினவ, “பிரபோ... அவர்கள்தான், மதுரை சொக்கனும் அவர் பிள்ளையும்... மதுரை ஜில்லாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்கள்... பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அழைக்கும் விதமாக அந்தப் பதாகைகளை அமைத்துள்ளனர்...” என்று விளக்கினார்.

“ஹோ... ஐ சீ...” என்ற துரை, காளை மாட்டிற்கு ஒருவன் வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு பதாகையைக் காட்டி “ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்று வினவினார்.

துரை சுட்டிக்காட்டிய பதாகையைக் கண்டதும் துபாசியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது... “பிரபோ... அதுதான் நம்ப விநாயகம்.. இந்த ஜில்லாவிலேயே யாருக்கும் அடங்காத வீரன்...” என்றார்.

“இதுவரை, தன்னை மிஞ்சிய மல்லன் இந்த ஜில்லாவிலேயே இல்லை...” என்று இறுமாந்திருந்த துரைக்கு, இது பெரிய ஏமாற்றமாகப் பட்டது. “உடனே இவனுடன் மோதி... இவனை வீழ்த்தினால் ஒழிய நமக்கு நிம்மதியில்லை...” என்ற முடிவிற்கு வந்தவர், “அது யாரடா அவன்... அவன் என்ன அவ்வளவு பெரிய வீரனா...? எப்படி இவன் நம் கண்ணில் இதுவரை அகப்படாமல் போனான்...?” என்றெண்ணி, “ஏய் மேன் டப்பாசு... இவன் கூட நான் பைட் பண்ணி... ஐ மஸ்ட் நாக் கிம் அவுட் மேன்... அரேஞ் தி பைட் இம்மீடியட்லி...” என்று ஒரு திடீர் உத்திரவைப் பிறப்பித்தார்.

துரையின் பரபரப்பைக் கண்ட துபாசி, “பிரபோ... அது ஒன்றும் பிரமாதமில்லை... அவர்களின் இந்தப்  பொங்கல் விழாவிலேயே, ஏற்கனவே அவ்விதமான போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது... எனவே, கவலை வேண்டாம் மகா பிரபு... தாங்கள் அந்தப் போட்டியிலேயே கலந்து கொண்டால் போகிறது...” என்று மகிழ்ச்சியாகப் பதிலுரைத்தார்.

“நோ மேன்... ஐ வான்ட் டு பி த பர்ஸ்ட் பெர்சன் டு பைட் வித் கிம் இன் தி மேட்ச்... அண்டர்ஸ்டான்ட்...?” என்று கறாராகச் சொல்லிவிட்டார் துரை.

அதற்குமேல் சொல்லவா வேண்டும், உடனே மதுரை சொக்கன் வகையறாவைத் தொடர்பு கொண்ட துபாசி, மேற்படி, துரையின் ஆக்ஞையைக் கூறி, அதற்குத் தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துவிட்டார்.

ற்காலத்தில் “ரவுண்ட் ரோடு”  என்றழைக்கப்படும் இடம், அந்தக் காலத்தில் கும்பெனிப் படையினரின் குதிரையேற்றப் பயிற்சியிடமாக இருந்தது. தற்காலத்தில், பதிவுத்துறை அலுவலகம், மற்றும், பழைய மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலமாகச் செயல்பட்ட இடங்களே, மேற்படி ஜில்லா துரை மற்றும் அவருடைய பரிவாரங்கள் தங்கியிருந்த மாளிகைகளாக இருந்தன.

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன், ஜில்லா துரை, மேற்படி “ரேஸ் கோர்ஸ்” மைதானத்தில், அதி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். குதிரையேற்றம், உடற்பயிற்சிகளுக்கு மத்தியில், மல்யுத்தப் பயிற்சியையும் விடாமல் வெறித்தனமாகச் செய்து கொண்டிருந்தார். இதற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கும் பயிற்சி மல்லர்களையும், சுடுமணலில் வைத்துப் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தார் அவர். துரையின் இந்த ஆவேச மல்யுத்தப் பயிற்சியைக் கண்ட துபாசி சற்றே மிரண்டுதான் போய்விட்டார். “இந்தச் சாதாரணப் போட்டிக்கு துரை ஏன் இந்தளவிற்கு மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்...?” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. “ஜில்லா துரையும் போட்டியில் கலந்து கொள்கிறார்...” என்று கேள்விப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக, மக்கள் கூட்டம் மைதானத்தைக் கடல்போல் சூழ்ந்திருந்தது. மதுரை சொக்கனும், அவன் வாரிசும் உயர்ந்த மேடையில் அமர்ந்திருக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், துரையின் வருகைக்காக, மைதானத்தில் காத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில், தனது பரிவாரங்களுடன் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார் ஜில்லா துரை. துரையுடன் சேர்ந்து மோதப் போவதை நினைத்து, நடுங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் மத்தியில், பதாகையில் காணப்பட்ட மேற்படி வீரன் மட்டும், மிகவும் தெனாவெட்டாக நின்றுகொண்டிருந்தான். அங்ஙனம் நின்றுகொண்டிருந்தவனை இறுமாப்பாகப் பார்த்த துரை, “மவனே... இவ்வளவு தெனாவெட்டா உனக்கு...? பொறு... பொறு... இன்றைக்கு சுடு மணலில் வைத்து உன்னை பிரை பண்ணிவிடுகிறேன் பார்...” என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தார்.

போட்டியை ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக, மதுரை சொக்கன், துண்டை எடுத்து விசிறிக் காட்ட, கட்டியம் கூறுவோன் “பெரியோர்களே... தாய்மார்களே... ஜில்லாவிலுள்ள மல்லர்களையெல்லாம் மண்ணைக் கவ்வ வைத்து, ஜில்லா வீரன் என்ற பட்டம் வென்ற நமது ஜில்லா துரை, இப்போது, இந்த ஜில்லாவிலேயே, யாருக்கும் அடங்காத நமது கட்டிளங் காளை விநாயகத்தை, அடக்கியாளப்போகிறார் பராக்... பராக்...” என்று இடிமுழக்கக் குரலில் முழங்கினான்.

கிடைக்கப் போகும் வெற்றியை நினைத்துக் கொண்டு, குரோதம் கொப்பளிக்கும் பார்வையால், மேற்படி வீரனை ஜில்லா துரை நோக்க, அவனோ, துரையைக் கவனிக்காமல், பக்கத்திலிருந்த சந்தை, ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட துரைக்கு “என்னடா இது...? நம்மிடம் மோதப் போவதை நினைத்து சற்றும் பயமில்லாமல், வேறெங்கோ நோக்கிக் கொண்டிருக்கிறானே...?” என்று ஒரே வியப்பாகப் போய்விட்டது.

இங்ஙனம் துரை வியந்துகொண்டிருந்த அதே வேளை, அவர் எதிர்பாரா அந்தச் சம்பவம் நடந்தேறியது. மேற்படி சந்திலிருந்து, துரையைக் குறிவைத்து சீறிப் பாய்ந்து வந்தது ஒரு காளை. இதைச் சற்றும் எதிர்பார்க்காத துரை, மிகவும் மிரண்டு போனார். மின்னலென தன் முன்னே வந்த அந்தக் காளையை, எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது அவருக்கு. நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு செயலிழந்து போனார் துரை. இவ்வகையான தாக்குதலை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் துரை மருகி நின்ற அதே வேளை, புயலெனச் சீறி வந்த அந்தக் காளை, ஒரே குத்தாக அவரைக் குத்திவிடும் நோக்கில், தலையைக் குனிந்து வர, “இனி ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் தமதில்லை...” என்று உணர்ந்த துரை, புறமுதுகிட்டு ஓட எத்தனிக்க, அதற்குச் சற்றும் அவகாசம் கொடுக்காத அந்தக் காளை, துரையின் “பின்” பக்கம் ஒரே குத்தாகக் குத்தி அவரைத் தூக்கியெறிந்தது. “என்ன நடக்கிறது...?” என்றே தெரியாமல் ஆகாயத்தில் பறந்த ஜில்லா துரை, அப்படியே மூர்ச்சையாகிப் போனார்.

நடந்து போன விபரீதத்தை சற்றும் எதிர்பார்க்காத மதுரை சொக்கன் வகையறாக்கள் மிகவும் அதிர்ந்து போனார்கள். உடனடியாக, ஒரு வைத்தியரை வரவழைத்து, காயம்பட்ட துரையைக் குப்புறப் படுக்கப்போட்டு,  பச்சிலை வைத்துக் கட்டி, கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய் துரையின் மாளிகையில்  சேர்த்தார்கள். “நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போட்டிக்குப் போன துரை, இப்படி, குப்புறக் கவிழ்ந்து வருவார்...” என துரைசாணி அம்மாள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மனம் நொந்து போன அவர், மேலதிகாரிகளுக்குத் தகவல் தர, உடனே ஆங்கில மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆங்கில வைத்தியரின் அறுவைச் சிகிச்சை முடிந்தும், அபாயக் கட்டத்தைத் தாண்டாமல், குப்புறக் கிடந்த துரையை, உடனே இங்கிலாந்திற்கு அப்புறப்படுத்த உத்தரவிட்டது கும்பெனி நிர்வாகம். தீவிர சிகிச்சை முடிந்து, ஜில்லா துரை திண்டுக்கல்லுக்குத் திரும்பிவர, ஒன்றரை ஆண்டு காலம் பிடித்தது. அதுவரை, மிகுந்த குழப்பத்திலிருந்த துரையவர்கள், துபாசி டப்பாக்காதனாரைத் தலைகீழாகக் தொங்கவிட்டு விசாரித்ததில், பின்வரும் வரலாறைத் தெரிந்துகொண்டார்.

“ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்ற துரையின் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாத துபாசி, “பெல்லோ என்பது “புல்” என்ற காளை மாட்டைத்தான் குறிக்கின்றதென்று கருதி, மேற்படி, விநாயகம் என்ற பிரசித்தி பெற்ற ஜல்லிக் கட்டுக் காளையைத்தான் துரையவர்கள் அடக்க விரும்புகிறார்...” என்றெண்ணி, மேற்படி மதுரை சொக்கன் வகையறா ஏற்பாடு செய்திருந்த, பொங்கல் விழா ஜல்லிக் கட்டில் கொண்டுபோய் ஜில்லா துரையை வகையாகச் சிக்கவைத்துவிட்டார். இந்த விபரம் தெரியாத ஜில்லா துரை, மேற்படி பதாகையில், “காளை மாட்டிற்குப் புல்லுப் போட்டுக் கொண்டிருந்த பொடியனைத்தான், மற்போர் செய்து வீழ்த்தப் போகிறோம்...” என்று கருதிப் பொருதப் போய், பெருத்த “பின்” விளைவைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

நடந்து போன இந்த சம்பவங்களினால், “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது... போல, டப்பாக்காதனாருக்கு உயிர் போகாமல் துபாசி வேலை மட்டும் போயிற்று. பாவம், ஜில்லா துரை வாழ்வில்தான் பெருத்த சோகம் நிகழ்ந்துவிட்டது. “பின்னுக்கு வந்தது பின்னாலே தொடர்ந்து வந்தது...  போல, இங்கிலாந்திலுள்ள அவரது வாரிசுகளுக்கு, மேற்படி “பின்” விளைவால் ஏற்பட்ட தழும்போடுதான், இன்றளவும், குழந்தைகள் பிறந்துகொண்டிருக்கின்றன!அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!சனி, 4 ஜனவரி, 2014

"கசா"யம்


உழவன் உணவகம் ஊனமுற்றோர்க்கு ஊன்றுகோலென
ஊருக்குதவும் உபகாரம் பெற்ற பிள்ளை...!
உயர்ந்த அதிகாரம் உன்னிடம் உள்ளதா?
உடனே உயர்த்து ஏழையின் வாழ்வை...!

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
கிஞ்சித்துமதை  மதியாதவன் கோணலை நிமிர்த்து...!
கோலாக்காரன் என்ன பெரிய கொக்கா?
கோளாறென்றால் போட்டு விடு பூட்டு...!

அடுத்தவர்க்கு விலையில்லாமல் அளிப்பதல்ல யோசனை
கொடுப்பதற்கு முன் எடுத்துக்காட்டினாய் நீ...!
ஆங்கிலக் கல்வியின் அடிமைகள் மத்தியில்
அரசுப் பள்ளியில் ஆன்றோநின் பிள்ளைகள்...!

வேதனையின் விளிம்பிற்கே உன்னைத் தள்ளினாலும்
"சோதனை"யின் கொம்பை முறித்துச் "சாதனை"யாக்குகிறாய்...!
பசப்பு விருந்து படைக்கும் பாவிகளுக்கு
கசப்பு மருந்தை பரிசாய்க் கொடுக்கிறாய்...!

தன்னிகரில்லா உன் தாய்நாட்டுச் சேவைக்கு
தண்ணியிலாக் காடே நாய்கள்தரும் பரிசு...!
இருபதிற்கும் மேலாக உன் இடமாற்றம்
இருந்தாலும் உன்னிட மில்லை தடுமாற்றம்...!

ஐயோ பாவம்...

சதிகாரச் சண்டாளர்தம் மதிதன்னில் உறைக்கவில்லை
"சகா"யத்தை மாற்றினால் "கசா"யம்தான் கிடைக்குமென்று...!Related Posts Plugin for WordPress, Blogger...