திங்கள், 25 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 5


முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...

முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

பொழுது சாய்ந்த நேரத்தில், புதர் மறைவில் அவர்கள் கண்ட அந்தக் காட்சியானது ஈரக்குலையை நடுங்க வைப்பதாக இருந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரத்தவெள்ளத்தில் ஒரு ஆணின் பிணம் அங்கே கோரமாகக் கிடந்தது.


கரூர் மார்க்கமாகச் செல்லும் திண்டுக்கல் – கரூர் இருப்புப் பாதை என்.ஜி.ஓ காலனியின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. இருப்புப் பாதையின் இரு மருங்கிலும் கற்றாழை மற்றும் முட் புதர்கள் நிறைந்திருந்தன. அங்ஙனம் உள்ள ஒரு புதரின் மறைவில்தான் மேற்படி சடலத்தை அவர்கள் கண்டார்கள். யாரோ ஒரு புண்ணியவான் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்துகொண்டான் போலும்.

தலையில்லா முண்டத்தை எதிர்பார்த்து வந்த ஏட்டையா, இப்படி ஒரு முண்டம் கிடக்குமென்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. எதற்கும் அஞ்சாத ஏட்டையாவே அக்காட்சியைக் கண்டு ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தன்னை அசுவாசப் படுத்திக்கொள்ள அவருக்கு சிறிதுநேரம் பிடித்தது. அதன்பின், மளமளவெனக் காரியங்களைக் கவனிக்கலானார். மேலதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க ஒரு ஆளை அனுப்பிவிட்டு, காவலர் கந்தசாமியின் துணை கொண்டு, அங்கு சேர்ந்துவிட்ட கூட்டத்தை ஒழுங்குபடுத்தலானார். தன்னுடைய அனுபவத்தில் இது போன்று எத்தனையோ சம்பவங்களைப் பார்த்த அவருக்கு, அன்று கிடைத்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது என்றால் அது மிகையில்லை.

நன்றாக இருட்டிய சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி நாலைந்து காவலர்கள் புடைசூழ அங்கே வந்தார். ஏட்டையாவிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தறிந்த பின், 

“ஏய்யா ஏட்டு, ஓ ஏரியால மட்டும் எப்புடியா இதெல்லாம் நடக்குது. அது சரி... முண்டம் இங்க கெடக்குது... இதோட தலை எங்கேன்னு தேடிப் பாத்தியாய்யா...?” என்று வினவினார்.

“அது வந்துங்கைய்யா... ஐயா வந்த பின்னாடி... எல்லாம் பாத்துக்கலாம்னு...” என்று ஒரு இழுவையைப் போட்டார் ஏட்டு.

“ஆமாய்யா... ஒனக்கு எல்லாம் நா வந்துதான் சொல்லித்தரணும்... போய்யா... போயி மொதல்ல அதப் பாரு...” என்று விரட்டினார்.

“ஆவட்டுங்கையா...” என்றவர், கைவிளக்குகள் சகிதம், இரு காவலர்களைத் தண்டவாளத்தினூடே திண்டுக்கல் மார்க்கமாகத் தேடப் பணித்துவிட்டு, காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு கரூர் மார்க்கமாகத் தேடப் போந்தார்.

அது அம்மாவாசைக்கு முந்தின இரவு. இருட்டில் எருமையைத் தேடுவது போல்,  துண்டிக்கப் பட்ட தலையைத் தேடி அவர்கள் அலைந்ததுதான் மிச்சம். அரை பர்லாங் தேடியும் அது அகப்படவே இல்லை. தோல்வியுடன் திரும்பிய அவர்களுக்கு, அதே தோல்விச் செய்தியைத்தான் சொன்னார்கள் எதிர் திசையில் தேடச் சென்றவர்கள். அதைவிடப் பெரிய இடியை, ஏட்டு தலையில் இறக்கினார் சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி.

“என்னைய்யா இது எழவாப் போச்சு... யோவ் ஏட்டு, ஆம்புலன்ஸ் ரிப்பேராம்யா... நாளைக்குத் தான் ரெடி ஆவுமாம்... அதுனால நீ என்னா பண்ற... நைட்டு டெட்பாடிக்கு பலமான காவல் போடுய்யா... என்ன புரியுதா... நா... காலைல வந்து பாக்குறேன்...” என்று அதி வேகமாக உத்திரவைப் போட்டுவிட்டு அதே வேகத்தில் அங்கிருந்து மறைந்து போனார் அவர்.

வேறு வழியின்றி, கடமையின் பொருட்டு, பிணத்திற்குக் காவலாக, அன்றிரவு ஏட்டையா அங்கேயே கழிக்க வேண்டியதாயிற்று. தலையில் கட்டிய மப்ளரோடு, லத்தியைக் கீழே ஊன்றி அதன்மேல் இரு கைகளையும் வைத்து, தாடையில் முட்டுக் கொடுத்தபடி, தவக்கோலத்தில்  இருக்கும் சடாமுடிதரித்த முனி போல் குத்துக்கல்லில் அமர்ந்திருந்தார் அவர்.

தலையில்லா முண்டத்தைப்  பிடிக்கத் தாம் எடுத்துக் கொண்ட முயற்சிகளெல்லாம் இப்படிப் பாழாய்ப் போகுமென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஒன்று மாற்றி ஒன்று சோதனையாக வந்து கொண்டிருந்தது. மிகவும் மனம் நொந்து போனார் அவர். இதை விடப் பெருத்த சோதனை அடுத்த நாள் அவருக்காகக் காத்திருப்பதை அறியாமல், சோகமே உருவாக அங்கே அமர்ந்திருந்த ஏட்டையாவை, பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன வானத்திலிருந்த நட்சத்திரங்கள்.

லையில்லா முண்டத்திற்குப் பயந்து தலைகாட்டத் துணிவில்லாமல் நிலவு பதுங்கிக் கொள்ள,  கணத்த கரும் போர்வையைப் போர்த்திக் கொண்டு கவிழ்ந்து கிடந்தது அமாவாசை இரவு. இந்த நாளுக்காவே இதுகாறும் காத்துக்கிடந்த கரடிமணி, தனது கைவரிசையைக் காட்டும் பொருட்டு என்.ஜி.ஓ காலனிக்குள் எச்சரிக்கையாக நுழைந்தான்.

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை, சிறு மலையை ஒட்டிய பட்டி தொட்டிகளிலேயே கழித்து விட்டபடியால், நகர்ப்புற வாசம் அவனுக்கு மிகவும் அந்நியமாக இருந்தது. நகர்ப்புறத்தைப் பொறுத்த மட்டில், இது அவனுக்குக் கன்னித் திருட்டு. தொழில் நிமித்தம் அவன் நகரின் வாசல்படியை மிதித்ததில்லை. இரண்டொரு தடவை, சினிமாப் பார்க்கவும்,  திருடி மாட்டிக் கொண்ட சமயங்களில் காவல் நிலையம், நீதி மன்றம் என்று அலையவும் நகருக்கு வந்திருக்கின்றான் அவ்வளவுதான்.

பட்டிக் காட்டுப் பகுதியில், எது எது எந்தப் பக்கம் இருக்கும், எங்கு முதலில் நுழைவது, எப்படி வெளியேறுவது என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. ஆனால், இங்கு நிலைமையோ வேறு மாதிரி இருந்தது. புது இடமாகையால், எங்கு ஆரம்ப்பிப்பது, எப்படி நுழைவது என்பது அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

நடு நிசி. குத்துமதிப்பாக ஒரு பெரிய மாளிகையின் வேலிச்சுவரைத்  தாண்டி, இருட்டான இடத்தில் இறங்கினான் கரடிமணி. அவன் இறங்கிய இடம் அம்மாளிகையின் பின் பகுதி போலிருந்தது.
 
மாளிகைக்கும், மாளிகையைச் சுற்றியுள்ள வேலிச் சுவருக்கும் இடையில் ஒரு மாட்டு வண்டி போகும் அளவிற்கு இடமிருந்தது. அந்த இடைவெளியில், ஆங்காங்கே அலங்காரச் செடிப் புதர்கள் குட்டிப் பிசாசுகள் போல் அமர்ந்திருந்தன. வேலிச் சுவரை ஒட்டினாற்போல் தென்னை மரங்களும் வேறு சில மரங்களும் கருப்புக் கருப்பாக நின்றிருந்தன. அங்ஙனமிருந்த அலங்காரச் செடிகள் மறைவில் பதுங்கிப் பதுங்கி முன்னேறினான் கரடிமணி.

எவ்வளவோ திருட்டுக்களைப் போகிற போக்கில் நிகழ்த்தியவனுக்கு அன்றைக்கு மிகவும் நடுக்கமாகவே இருந்தது. குத்துமதிப்பாக, வீட்டின் முன்புறம் இருக்கும், வாகனம் நிறுத்தி வைக்கும் பகுதிக்கு வந்துவிட்டான் அவன். நல்ல வேளையாக, அங்கும் இருட்டாகத்தான் இருந்தது. அநாவசியமாக அங்கே ஒரு விளக்கு எதற்கு என்று வீட்டுக்காரர் வைக்கவில்லையோ, அல்லது, அப்படி ஒரு விளக்கு அங்கு இருந்தும், செலவை  மிச்சப்படுத்த அதை எரியவிடவில்லையோ, அல்லது, பழுதாகித்தான் போய்விட்டதோ என்னவோ தெரியவில்லை. எது எப்படியோ, கரடிமணிக்கு அது சாதகமாகவே இருந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தீவிரமான யோசனையில், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, ஊர்ந்த நிலையில், மேலும் ஒரு அடி அவன் முன்னே வைத்ததுதான் தாமதம்... திடீரென்று... அடித்தொண்டையில் அலறும் ஆகாய விமானம் போல் கர்ண கொடூரமான ஓசை ஒன்று அவனுக்கு மிக மிக அருகில் கேட்டது. இதுவரை அப்படி ஒரு ஓசையை அவன் வாழ்நாளில் கேட்டதில்லை. தலை முதல் கால் வரை ஒரு முறை நடுங்கினான் அவன். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு ஓசை வந்த திசையில் நோக்கினால்... அங்கே... கரிய பெரிய உருவம் ஒன்று அசைவது போல் தோன்றியது. அடுத்த நொடி... அவ்வுருவம்... கண்ணிமைக்கும் நேரத்தில் அவன்மேல் பாய்ந்தது.

எதற்கும் அஞ்சாத கரடிமணி அந்தக் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்து போனான், உடம்பில் ஆங்காங்கே  வலி மின்னல்கள் தெறித்தோடின. இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. 

“இதுவரை, தலையில்லா முண்டத்தின் பெயரில், தான் அனைவரையும் கதி கலங்கடித்துக் கொண்டிருக்க, இப்போது தன்னைப் போல் ஒருவன் இங்கே வந்து தனக்கே தண்ணி காட்டுகிறான் போலும்...” என்று எண்ணினான் அவன். 

“யாராக இருந்தாலும் சரி... ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்...” என்ற உறுதியுடன், தன் பலம் முழுவதையும் திரட்டி, அவ்வுருவம் தன் மேல் பாய்ந்து வந்த திசையை நோக்கிக் குத்து மதிப்பாகத் தாக்கத் துவங்கினான் அவன்.

பலம் பொருந்திய அந்தத் தாக்குதலில் எப்பேர்ப்பட்ட பலசாலியும் அந்நேரம் வீழ்ந்து விட்டிருப்பான். ஆனால், அங்ஙனம் அவன் குத்திய குத்துக்கள் ஏதோ கரும் புகையைக் குத்துவது போல் இருந்தன. எவ்வளவு முயன்றும் அவனால் அந்த உருவத்தைத் தாக்கவோ, வளைத்துப் பிடிக்கவோ இயலவில்லை. ஏதோ மாய வித்தை தெரிந்த மாயாவியிடம் அகப்பட்டுக் கொண்டதைப் போல உணர்ந்தான் அவன். எனவே, எதிரி யாரென்றே தெரியாத நிலையில் மேலும் எதிர்த்துத் தாக்கும் எண்ணம் அவனுக்கு எழவில்லை.

அதுவரை, இது ஏதோ, தன்னைப் போல ஒரு ஆசாமியின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்று எண்ணியிருந்தவன், அங்ஙனம், மாயாவிபோல், தன்னைத் துரத்துவது உண்மையிலேயே தலையில்லா முண்டமாகத்தான் இருக்கவேண்டும் என்று முடிவு கட்டினான். எனவே, உயிருக்குப் பயந்து ஓடுவதுதான் ஒரேவழி என்று பின்வாங்கி ஓட எத்தனிக்க... முன்னைவிட அதிபயங்கர ஓசையுடன் அந்த உருவம் அவனைத் துரத்தியது. பின்னங்கால் பிடரியில் அடிக்கத் தெறித்து ஓடியவன்... ஒரே தாவலில் வேலிச் சுவரைத் தாண்டிக் குதித்தான்.


வேட்டை தொடரும்...சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்


மூக்கைப் பிடித்துக் கொண்டே கூவி அன்றைய விடியலை அறிவித்தது சேவல். கூவம் நதிக்கரை நாகரிகத்தில், சென்னை "நரக"வாசிகள் தூக்கம் கலைந்து அன்றைய விடியலைச் சுவாசித்தார்கள்.

முகத்தில் வெயிலடிக்கும் வரை தூங்கிய கொமாரு, அவசர அவசரமாக எழுந்து, ஜாபர்கான் பேட்டை நோக்கிக் கிளம்பினான். அங்கே, அவனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த துலுக்காணம், “இன்னா கொமாரு... இம்மாநேரம் கயிச்சு வந்துகின...?” என்று லேசாகக் கோவித்துக் கொண்டான்.

“கோச்சுக்காதபா... நைட்லாம் கொசுக்கடி பேஜாருபா... தூக்கம் கம்மிப்பா...”

“அப்புடிக்கா சொல்றியா... சர்தாம்பா...வுடு...”

பேசிக்கொண்டே வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடைப் பக்கம் நடையைக் கட்டினார்கள்.

காலை நேரப் பரபரப்பு எங்கும் தொற்றிக்கிடந்தது. பளபளவென்று புதுப்பட போஸ்டர்கள் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அழுக்குத் துணி மனிதர்கள் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். நேராகக் கடைக்குச் சென்றவர்கள், வழக்கம் போலத் தேநீர் பருகினார்கள்.

“இன்னா கொமாரு அல்லாப் பக்கமும் புச்சா போஸ்டர் ஒட்டிக்கிறான்.... எதுனா நியு மூவியாபா...?”

“இக்கும்பா... நேத்தி கூட நம்ப சேவரு சொல்லிகினாம்பா... அத்தாம்பா... ரெண்டாம் ஒயகமோ... இன்னாமோ...”

“சர்தாம்பா... அப்பக் கெயம்பிக்லாமா...?’

“ஆவட்டும்பா...”

காசைக் கல்லாவில் கட்டிவிட்டு காசித் தியேட்டர் நோக்கி நடையைக் கட்டினார்கள். நூறடிச் சாலை நாறிக்கொண்டிருந்தது. தியேட்டர் வாசலில் ஏகப் பரபரப்பு. டிக்கெட் வாங்கக் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல, சனக் கும்பலில் ஊடுருவி, சிறிய வாசல் வழியே இருட்டில் நுழைந்தார்கள். அங்கே, அவர்களை ஆரவாரமாக வரவேற்றது இரண்டாம் உலகம். பலவிதமான ஒலிகளுக்கிடையே அவசர நடமாட்டங்கள் தென்பட்டன. ஹாலிவுட் கிராபிக்ஸை விஞ்சியிருந்தது அதன் காட்சியமைப்பு.

“நம்ப ஆரிச்சாமி கீறானே... அவன் இஸ்டோரி பெரிய பேஜாராப் பூடிச்சிபா...”

“அப்புடியா... இன்னாபா ஆச்சி...”

“அத்தாம்ம்பா... நம்ப அர்க்காணிய டாவட்ச்சிகினு இர்ந்தானே... அந்த்த மேட்ட்ருபா... கடிசில புட்டுக்கிச்சிபா...”

“ஏம்பா... சோக்காத்தானே போய்க்கினு இர்ந்திச்சி...”

“ஆமாம்பா... அந்த்த அர்க்காணி திடும்னு காணாப் பூடிச்சிபா... அல்லா எடத்திலேயும் தேடிக்கினு... கடிசில எத்தோ வேற ஊராண்ட கண்டுக்கினானாம்பா...”

“ஓஹோ... அப்புடியாபா...”

“இக்கும்பா... கதையைக் கேளு... அங்கன போய் பாத்தாக்க... அந்த அர்க்காணி வேற மாறி கீதாம்பா... நம்பாள கண்டுக்கவே இல்லியாம்பா...”

“அய்யே...!”

“ஆமாம்பா... அப்பால... அந்தூரு பெர்சு கம்மினாட்டி ஒன்னு நம்ப ஆரிச்சாமி லைன்ல கிராஸ் ஆயிக்கினானாம்பா...”

“அய்யே... அப்பால...?”

“அப்பால இன்னா... படா பேஜாராப் பூடிச்சாம்பா...” என்றவனை இடைமறித்த துலுக்காணம்... வழக்கத்துக்கு மாறாக அதிக துர்நாற்றம் வீசுவதை அறிந்து,

“அய்யே... இன்னா கொமாரு... இன்னிக்கி இம்மாங் கலீஜா கீது...?”

“இக்கும்பா... இன்னான்னு தெர்லபா...”

விச வாயுவின் நெடி தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டே இருவரும் முன்னேறினார்கள். அங்கே... தொகுதியில் காணாமல் போன அரசியல் வியாதிகளெல்லாம் கூட்டம் கூட்டமாக அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்திய மழையின் காரணமாகப் பாதாள சாக்கடை படு மோசமான நிலையை அடைந்திருந்தது. வழக்கம் போல, அதைச் சுத்தம் செய்யும் பணியில், உயிரைப் பணயம் வைத்து உழைக்க ஆரம்பித்தார்கள் அவர்கள்.

அவர்கள் தலைக்கு மேலே, இவர்களைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, சென்னை "நகர"வாசிகள் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.


செவ்வாய், 19 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 4

முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...
முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ங்ஙனம், கம்பளியை விலக்கி, குப்புறக் கிடந்த உருவத்தைப் பார்த்த ஏட்டையா அதிர்ச்சியடையக் காரணம், இவ்வளவு தூரம், தான் துவந்த யுத்தம் புரிந்து கீழே வீழ்த்திய உருவம், ஒரு பெண்  உருவமாக இருக்கக் கண்டதுதான்!


அவர் கண்களை அவராலேயே நம்ப இயலவில்லை. “ஆக... இவ்வளவு தூரம்... ஊரைக் கலக்கிக் கொண்டிருந்த தலையில்லா முண்டம்... ஒரு பெண்ணா...?” என்று நினைக்கையில் அதிர்ச்சியோடு ஆச்சரியமாகவும் இருந்தது அவருக்கு.

“எது எப்படியோ... கடைசியில்... தன்னந்தனியாகப் போராடி அதை வீழ்த்திவிட்டோம்... பதவி உயர்வு நமக்கு நிச்சயம் உண்டு... இவ்வளவு நாள் நாம் பட்ட சிரமத்திற்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டது...” என்று அகமகிழ்ந்தார் ஏட்டு.

ஆனால்... அம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.  காரணம், கம்பளியை முழுவதுமாக நீக்கி, குப்புறக் கிடந்த உருவத்தை புரட்டிப் பார்த்த ஏட்டு, முகமெல்லாம் இரத்த விளாராக, அங்ஙனம் அடிபட்டுக் கிடந்தது, அடிக்கடி தன் கண்ணில் படும், பேருந்து நிலையைக் குண்டுப் பிச்சைக்காரியாக இருக்கக் கண்டு, அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். “இவள் எப்படி இங்கு வந்தாள்...?” என்று மண்டை காய்ந்து போனார் ஏட்டையா.

அதே நேரம், நடந்த களேபரத்தில், உள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏட்டையாவின் மனைவியும் மக்களும் விழித்துக் கொண்டு அலற, அந்த ஓசை கேட்ட அண்டை அயலார்கள், அவசர அவசரமாக அங்கே ஓடி வந்தார்கள். வந்தவர்கள், ஏட்டையா வீட்டுத் தாழ்வாரத்தில் யாரோ இரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடப்பதையும், பக்கத்திலேயே ஏட்டையா பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். ஏட்டையாவின் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் ஏட்டையாவை முறைத்த முறையில், “ரோந்து போறேன் ரோந்து போறேன்னு சொல்லிக்கிட்டு, யாரோ ஒருத்திகூட கூத்தடிச்சுக்கிட்டு இருக்கியா நீ...?” என்ற கேள்வி தொக்கி நின்றது.

அதன் பிறகு காரியங்கள் வெகு விரைவாக நடந்தேறின. ஒரு சிலர், மயங்கிக் கிடந்தவளுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ய, மற்றும் சிலர் விரைவாக ஒரு வாகனத்தைக் கொணர, அவளையும் ஏட்டையாவையும் அள்ளிப் போட்டுக் கொண்ட அந்த வாகனம் அரசு பொது மருத்துவமனை நோக்கி அதிவேகமாகப் பயணித்தது.

பேருந்து நிலையக் குண்டுப் பிச்சைக்காரி அந்த நேரம், அங்கே எப்படி வந்து சேர்ந்தாள் என்பதை அறிய, நாம் கதையைச் சற்று பின்னோக்கி நகர்த்தியாக வேண்டும்.

சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி, ஏட்டையாவை வறுத்தெடுத்த சிலதினங்கள் கழித்து, ஏட்டையாவின் நடவடிக்கைகள் குறித்து அறியும்பொருட்டு, அவரை விளித்து விசாரிக்கலானார். அங்ஙனம் நடத்திய விசாரணையில், தலையில்லா முண்டத்தைப் பிடிக்கும் முயற்சியில், அதுவரை எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாததைக் கண்டு வெகுண்டெழுந்தார். 

“யோவ் ஏட்டு... நீ ஒன்னுக்கும் லாயக்கு இல்லைய்யா... நடவடிக்கை எடுக்கச் சொல்லி மூனு நாளாவுது... ஒரு முன்னேற்றத்தையும் காணாமே...? என்னத்தையா பண்ணிக் கிழிச்சுக்கிட்டு இருக்க நீ...?” என்று சகட்டுமேனிக்கு விளாசினார்.

“அது... வந்துங்கையா... முயற்சி பண்ணிக்கிட்டுதான்... இருக்கேங்கையா...” என்று மென்று விழுங்கினார் ஏட்டு.

“என்னாத்த முயற்சி பண்ணியோ... என்னமோ... போ... எல்லாத்தையும் நானேதான் சொல்லிக் குடுக்கணும் போல...” என்று சலித்துக் கொண்டவர், “இந்தா பாருய்யா... பொது இடங்கள்ள... சந்தேகப் படும்படியா யாரப் பாத்தாலும்... ஒடனே புடிச்சு உள்ள போடுய்யா... என்ன புரியுதா...?” என்று கடுப்புடன் ஒரு ஆலோசனையையும் சொன்னார்.

“ஐயா... எனக்கு அந்த யோசனை முன்னமே தோனிச்சுய்யா... ஆனா... ஐயா உத்தரவு இல்லாம... நா... எப்புடி...” என்றவரை இடைமறித்த சீனிச்சாமி, “அதான்... உத்தரவு குடுத்தாச்சுல்ல... போ... போயி... ஒழுங்கா வேலையைப் பாரு... இன்னும் நாலு  நாள்ல நல்ல சேதி கொண்டாரணும்... என்ன... புரியுதா...?” என்று கறாரான உத்திரவைப் போட்டார்.

“ஆவட்டுங்கையா...” என்று விறைப்பாக அவருக்கு ஒரு சல்யூட்டைப் போட்ட ஏட்டு, அதே வேகத்தில், தன் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு மேற்படி உத்தரவையும் போட்டார்.

அதுமுதல், நகரில் ஆங்காங்கே சந்தேகப்படும்படி உலவும் ஆட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்கள். முக்கியமாகப் பிச்சைக்காரர்கள் தான் அதிகக் கெடுபிடிக்கு உள்ளானார்கள். நகரக் காவல் நிலையத்திற்கு எதிரே, இக் காலத்தில் அண்ணா பூ அங்காடியாக இருக்குமிடம், அந்தக் காலத்தில் பேருந்து நிலையமாக இருந்தது. அங்ஙனம், பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த பிச்சைக்கார்கள் தான் இதற்கு முதல் இலக்கானார்கள்.

சம்பவம் நடந்த அன்றைக்கு, ஏட்டையாவின் தலைமையில், பிச்சைக்காரர்களை விரட்டிக் கொண்டிருந்த காவலர்கள், அவர்களை விரட்டியடித்ததோடல்லாமல், அவர்களிடமிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டார்கள்.  அங்ஙனம், தனது பணத்தைப் பறிகொடுத்தவர்களில் குண்டுப் பிச்சைக்காரியும் ஒருத்தி. ஒரு காலத்தில் திருடியாக இருந்து, சில காலம் சிறைத் தண்டனையும் பெற்றிருக்கும் அவள், வயது மூப்பின் காரணமாகத் திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, வயிற்றுப் பிழைப்பிற்காகப்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். பணத்தைப் பறிகொடுத்தவர்கள், காவலர்களுக்குப் பயந்து ஓடி விட்ட நிலையில், இவள் மட்டும், தான் பறிகொடுத்த பணத்தைத் திரும்பத் தரக் கோரி, தைரியமாகக் காவலர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், அவளைக் கண்டுகொள்ளாத காவலர்கள் அவளை அடித்து விரட்டினார்கள். அங்ஙனம் விரட்டப்பட்டவள், காவலர்கள் கண்ணில் படாமல் பேருந்து நிலையத் தூண் மறைவில் நின்றுகொண்டு அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அனைத்துப் பிச்சைக்காரர்களையும் விரட்டிய பிறகு, அன்றைய வசூலைக் காவலர்கள்  எண்ணிக் கொண்டிருந்தபோது, கையும் பணமுமாக ஏட்டையாவிடம் மாட்டிக்கொண்டார்கள். விளைவு, காவலர்கள் கைகளிலிருந்த அந்தப் பணம் முழுவதும், ஏட்டையாவின் சட்டைப் பைகளில் பத்திரமாகத் தஞ்சம் புகுந்தது. “பிச்சை எடுக்குமாம் பெருமாளு,,, அதைப் புடுங்குமாம் அனுமாரு... இந்தாளு... தானும் திங்கமாட்டான்... தள்ளியும் படுக்க மாட்டான்...” என்று முனுமுனுத்துக் கொண்டே கலைந்துபோனார்கள் காவலர்கள்.

கடமையில் எப்போதும் நேர்மையாக இருக்கும் ஏட்டையாவிற்கு, இதெல்லாம் பிடிக்காது. அவரின் பணி அனுபவத்தில், எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் அவர் கையேந்தியதில்லை. அப்படி அவர் இலவசமாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொண்டாரென்றால், அது, காவல் நிலையத்திற்கு எதிரே, பேருந்து நிலையத்தில் இருக்கும் அலிபாய் “டீ” கடையின், வடைகளும் “டீ”களும் தான். அதுவும், அவர், அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெற்றுக்கொண்டவனவைகள் அல்ல. மாறாக, கடைக்காரர், ஏட்டையாவின் மீது வைத்திருக்கும் மரியாதை நிமித்தம், அவருக்காக வற்புறுத்தித் தரப்படுபவைகளே ஆகும். ஆரம்பத்தில் அதை மறுத்துப் பார்த்த ஏட்டையா, கடைக்காரர் தன்மேல்  வைத்திருக்கும் அபிமானத்தின் பொருட்டு அவைகளை ஏற்றுக் கொண்டார்.

எனவே, அங்ஙனம் கைப்பற்றிய பணத்தை, “மீண்டும் அந்தப் பிச்சைக்காரர்களிடமே பகிர்ந்தளித்து விடலாம் அல்லது அதைத் தன் மேலதிகாரியிடம் ஒப்படைத்து விடலாம்” என்று எண்ணியே அவற்றைத் தன் சட்டைப்பைகளில் வைத்துக் கொண்டார் ஏட்டையா. இவை அனைத்தையும் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருத்த அந்தக் குண்டுப் பிச்சைக்காரி, இதுகாறும் தான் சேமித்து வைத்திருந்த தனது பணத்தைப் பறிகொடுக்க மனமில்லாமல், எப்படியும் அதைக் கைப்பற்றி விடவேண்டுமென்று முடிவு கட்டினாள்.

அன்றைக்கு பணி முடிந்து, அலிபாய் கடையின் வடை “டீ” யைச் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்குப் போகாமல், காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு நேராக ரோந்திற்குக் கிளம்பிவிட்டார் ஏட்டையா. அங்ஙனம் கிளம்பிய ஏட்டையாவை, அந்தக் குண்டுப் பிச்சைக்காரி, தனது நைந்துபோன கம்பளியைப் போர்த்திக் கொண்டு, அவர் அறியா வண்ணம் பின் தொடரலானாள். ரோந்தின் நடுவில், தன்னை யாரோ பின்தொடர்வதாக ஏட்டு உணர்ந்தாலும், எவ்வளவு முயன்றும் அவரால் அதை உறுதிப்படுத்த இயலவில்லை.

ரோந்து முடிந்து வீட்டிற்குச் சென்ற ஏட்டையா, வெளித்தாழ்வாரத்தில் படுத்த சிறிது நேரத்தில், அங்கு சென்ற பிச்சைக்காரி, அவர் தூங்கும் வரை காத்திருந்தாள். சற்று நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஏட்டு கண்ணயர்ந்ததற்கு அறிகுறியாக, கட்டிலில் எவ்வித அசைவும் ஏற்படாததை உணர்ந்த அவள், மெதுவாக, வேலிக் கதவைத் திறந்து கொண்டு, பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தாள். அங்ஙனம் நுழைந்தவள், அவர் அருகில் செல்வதற்கு முன்பு, இடையில், சிறிது நேரம் நின்று, நிதானமாக அவருடைய அசைவுகளைக் கவனித்தாள். எந்தவொரு சலனமும் தென்படாமல் போகவே, அவருடைய கால்மாட்டின் அருகில் சென்றவள், அவருடைய கால் சட்டைப் பைகளில் உள்ள பணத்தை எடுப்பது, அவ்வளவு சுலபமில்லை என்பதைத் தன் அனுபவ அறிவின் மூலம் உணர்ந்து கொண்டாள். எனவே, அங்ஙனம் முயற்சிப்பதைக் காட்டிலும், அவருடைய மேல் சட்டைப் பைகளில் உள்ள பணத்தை எடுப்பது மிகவும் சுலபம் என்று தீர்மானித்து, குனிந்த வாக்கில், கைகளை நீட்டி முன்னேறினாள். அங்ஙனம், அவள் முன்னேறிக் கொண்டிருக்கும் போதுதான், தலையில்லா முண்டம் தன்னைக் கொல்ல வருவதாகக் கனவு கண்டுகொண்டிருந்த ஏட்டு, கண்விழித்து, தலையில்லா முண்டத்தை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, தவறுதலாக அந்தப் பிச்சைக்காரியைப் போட்டு அடித்து நொறுக்கிவிட்டார்.

ஏற்கனவே, ஏட்டையாவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டிருந்த அவரின் மனைவி, நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏட்டையாவின் மேல் அதீதக் கோபத்தில் இருந்தாள். ஏட்டையாவோ மித மிஞ்சிய குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். தலையில்லா முண்டத்தின் பொருட்டு, பிச்சைக்காரி ரூபத்தில், தனது குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு குழப்பம் வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒருவழியாக, அடுத்தநாள் மதியம், மருத்துவமனையில், பிச்சைக்காரி கண் திறக்கவும், அதற்காகவே காத்துக் கிடந்த ஏட்டையா, அவளின் வாயிலாக மேற்படி வரலாற்றை அறிந்து கொண்டார். அதன்பிறகு, அவ்வரலாற்றைத் தன் மனைவியிடம் கூறி, அவளைச் சமாதானப் படுத்துவதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

இங்ஙனம், நடந்து போன சம்பவங்களை நினைத்து மிகவும் மனம் நொந்து போனார் ஏட்டு. தலையில்லா முண்டத்தின் பேரில் அவருக்கிருந்த கோபம் முன்னைவிடப் பன்மடங்காக அதிகரித்தது. அதே சமயம், அதைப் பிடித்து லாடம் கட்டவேண்டும் என்ற உறுதியும் அதைவிடப் பன்மடங்கு அதிகரித்தது. அதன் காரணமாகத் தனது வேட்டையை மேலும் தீவிரப் படுத்தினார் அவர்.

அதன்பொருட்டு, மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ஒரு அந்தி மாலையில் ரோந்து கிளம்பத் தயாரானார். அப்போதுதான், எதிர்பாரா அந்த சம்பவம் நிகழ்ந்தது. மேற்படி ரோந்திற்கு  காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு அவர் வீதியில் இறங்கியதுதான் தாமதம், அவர்களுக்கு எதிரே, அளவுகடந்த பீதியில், அலங்கோலமாக  ஒருவன் ஓடி வருவதை அவர் கண்டார்.

அங்ஙனம், தலைதெறிக்க ஓடி வந்தவனை மறித்து, “ஏய்... என்னடா ஆச்சு ஒனக்கு... ஏன்டா இப்புடி பேய் பிசாசக் கண்டவன் மாதிரி ஓடிவார்ற...?” என்று வினவினார் ஏட்டு.

ஏட்டையாவைக் கண்டவுடன், முன்னைவிட அதிகக் கலவரமடைந்த அவன், “த்...த்...த...லை.... த்...த்...த...லை.... ம்...ம்...மு...ண்...ட...ம்.... ம்...ம்...மு...ண்...ட...ம்....” என்று பிதற்ற ஆரம்பித்தான்.

“ஆகா... தலையிலா முண்டம்தான் எங்கயோ வந்துருக்கு போல...” என்று பரபரப்படைந்த ஏட்டு, “ஏய்... என்னடா சொல்லற... எங்கடா பாத்த... சொல்றா...” என்று அவனை அதட்டினார்.

அவர்கள் நின்ற இடத்திற்கு வடக்கு திசையில் கையைக் காட்டிக் கொண்டே, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தெற்குத் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான் அவன்.

அவ்வளவுதான், அதற்குமேல் ஒரு நொடி கூடத் தாமதிக்காத ஏட்டு, காவலர் கந்தசாமியை இழுத்துக் கொண்டு, அவன் காட்டிய வடக்கு திசை மார்க்கமாக ஓடலானார். “இன்றைக்கு எப்படியும் தலையில்லா முண்டம் தன்னிடம் சிக்கிவிடும்...” என்று அவர் உள்மனது சொல்லியது. 

அங்ஙனம் இருவரும் அதி விரைவாக ஓடி... சில பல தெருக்களைத் தாண்டி... புதர்மண்டிய காட்டுப் பகுதிக்கு வந்து... அங்கே... தங்கள் பார்வையைச் செலுத்தியவர்கள்... பீதியில்... அப்படியே உறைந்து போனார்கள்...!


வேட்டை தொடரும்...


சனி, 9 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 3

முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...
முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

னவிலும் நினைவிலும் காதலியை நினைத்துக் கசிந்துருகும் காதலன் போல, அல்லும் பகலும் ஓயாமல் தலையில்லா முண்டம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார் ஏட்டு எசக்கி. யாரைப் பார்த்தாலும் அவருக்குத் தலையில்லா முண்டம் போலவே தோன்றியது. முக்காடு போட்ட பெண்மணிகள் முதற்கொண்டு, வெயிலுக்குத் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போவோர் வரை எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார். சமயத்தில், அவருடைய நிழலும் அவரது சந்தேகப் பார்வைக்குத் தப்பவில்லை.


இங்ஙனம், வீடு மனைவி மக்கள் அனைவரையும் மறந்து, தலையில்லா முண்டப் பைத்தியம் பிடித்து அலையும் ஏட்டையாவைப் பார்த்து, அவரின் மனைவிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. “தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கிற கதையா... இவ்ளோ நாள் ஒன்னையும் பண்ணிக் கிழிக்காம... இப்ப... ரிட்டையர் ஆவப் போற நேரத்துல, அதப் புடிக்கப் போறேன்... இதப் புடிக்கப் போறேன்னு... வித்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க...? ஒழுங்கு மரியாதையா மிச்ச இருக்கிற காலத்தை செவனேன்னு ஓட்டிட்டு, உருப்புடுற வழியப் பாருங்க...” என்று, ஏற்கனவே தடிமனான அந்த அம்மாள், தன்னைவிடத் தடிமனான வார்த்தைகளால் எட்டையாவைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

இது எதையும் காதில் வாங்காத ஏட்டு, பணி நேரம் போக, வீட்டிலிருக்கும் மிச்ச மீதி நேரங்களில், விட்டத்தை வெறித்து நோக்கியபடி, தலையில்லா முண்டம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மனைவி, குழந்தைகளை நோக்கும் பொது கூட, ஒரு வேளை இவர்கள்தான் தலையில்லா முண்டமாக இருப்பார்களோ என்று கூட யோசிக்கத் தொடங்கிவிட்டார். இவையனைத்திற்கும் உச்சக்கட்டமாக, கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் தலையில்லா முண்டம் தான் அவர் கண்களுக்குத் தெரிந்தது.   நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால், விரைவில் மனநல மருத்துவமனையில் தான் அவரைச் சேர்க்க நேரிடுமென்று தோன்றியது.

அன்றைக்கு, பணி முடிந்து வீட்டிற்குக் கூடச் செல்லாமல், வழியில் கிடைத்த மாமூல் சிற்றுண்டியோடு, காவலர் கந்தசாமி சகிதம் ரோந்துக்குப் புறப்பட்டுவிட்டார் ஏட்டு. தேய்பிறை இரவில் செருப்புகள் தேயப் பலமணி நேரம் சுற்றியும் ஒரு பலனுமில்லை. ஆனால், அன்றைய ரோந்தில், வழக்கத்திற்கு மாறாக ஒரு வினோத அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. யாரோ அவரைப் பின்தொடருவது போல் அவருக்கு அடிக்கடி  தோன்றியது. எவ்வளவு முன்னெச்சரிக்கையாய் இருந்தும் அவரால் அதை உறுதி செய்ய இயலவில்லை. முடிவில், மிகுந்த ஏமாற்றத்தோடும் களைப்போடும் அவர் வீட்டிற்குச் செல்லும்போது நடுநிசிக்கும் மேலாகிவிட்டது.

தற்போது உழவர் சந்தையாக இருக்கும் இடத்தில், அந்தக் காலத்தில், அரசாங்க ஊழியர் குடியிருப்பு ஒன்று இருந்தது. அதில் ஒரு வீட்டில் ஏட்டு குடியிருந்தார். வேலிக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனால், முதலில் ஒரு தாழ்வாரமும், அதற்கடுத்து, ஒரு சமையலறையும், படுக்கையறையும் இருக்கும். இரவு அதிக நேரமானதாலும், களைப்பின் மிகுதியாலும், கதைவைத் தட்டி மனைவியைத் தொந்திரவு செய்ய எண்ணமில்லாமல், வெளித் தாழ்வாரத்திலிருந்த  கட்டிலிலேயே கட்டையைச் சாய்த்து விட்டார் ஏட்டையா.

தூக்கம் பிடிக்காமல் அசதியில் உழன்று கொண்டிருந்தவருக்கு, மிகவும் வெறுப்பாக இருந்தது. “இந்தப் பாழாப் போன தலையில்லா முண்டத்தால நம்ம பொழப்பு இப்புடி ஆகிப் போச்சே... அது மட்டும் என் கையில கெடைக்கட்டும்... அப்புறம் இருக்கு வேடிக்கை... அடிக்கிற அடியில அந்து போயிரனும் அந்து...” என்று மனதுக்குள்ளே கருவிக்கொண்டு கிடந்தவர், இறுதியில் லேசாகக் கண்ணயர்ந்தார்.

அங்ஙனம் கண்ணயர்ந்ததுதான் தாமதம், திடீரென்று, அந்த வினோதமான கிரீச்சிடும் ஓசை அவருக்குக் கேட்டது. யாரோ, வேலியின் கதவை மிக மெதுவாகத் திறப்பது போலிருந்தது. ஒரு கணம் திகிலடைந்த ஏட்டையாவை, அவரது காவல்துறை மூளை விரைந்து எச்சரிக்கை செய்தது. அசையாமல், கண்களை மூடிப் படுத்துக்கொண்டே ஓசை வந்த திசையில் கூர்ந்து செவிமடுத்தார் ஏட்டு. க்ரீச்... க்ரீச்... என்ற இரவு நேரப் பூச்சிகளின் ஒலிகளினூடே, யாரோ மெல்ல நுழைந்து வருவது போலிருந்தது. “ஒரு வேளை, ரோந்தில் தன்னைப் பின்தொடர்ந்த ஆசாமி தன்னைத் தேடி இங்கும் வந்துவிட்டானோ...” என்று நினைக்கும் போது, அவரை அறியாமலே அவருடைய தேகம் லேசாக அதிர்ந்தது. அந்த அசைவைக் கவனித்தோ என்னவோ, அதுவரை நடந்து வந்த அந்த உருவம் திடீரென்று நின்றுவிட்டது போலிருந்தது.

சிறிது நேரம் அங்கே கணத்த மௌனம் நிலவியது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்துக்கிடந்தார் ஏட்டு. அவரையே அந்த உருவம் கவனித்துக் கொண்டிருப்பதாக அவரது உள்ளுணர்வு சொல்லியது. அவரது இருதயம் நொடிக்கு நூற்றைம்பது தடவை துடிக்க, அதைவிட வேகமாக அவரது நாடி துடித்துக் கொண்டிருந்தது. இப்படிச் சில நொடிகள் கழிந்தபின், மீண்டும் அந்த உருவம் அசைந்தது. இம்முறை, அது அவரை நோக்கி வருவதாகப்பட்டது. அவ்வளவுதான், அதுவரை அவருக்குள் தைரியமாக இயங்கிக் கொண்டிருந்த காவல்துறை மனது கதி கலங்கிப் போனது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உள் மனது எச்சரிக்க, இனித் தாமதித்தால் ஆபத்து என்று, கண்களைத் திறந்து பார்க்க முயன்றார் அவர். எவ்வளவு தூரம் முயன்றும் அவரால் கண்களைத் திறக்க இயலவில்லை. அதே நேரேம், அவருடைய கால்மாட்டில் அந்த உருவம் அசைவதாக உணர்ந்தவர், கை கால்களை உதறி எழுந்திரிக்க முயன்றார். ஆனால், அவரது கை கால்களை அவரால் அசைக்கக் கூட முடியவில்லை. அவர்மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து அமுக்கியது போல் இருந்தது. திமிறிக்கொண்டு எழ முயன்றார். ஒன்றும் பயனில்லை.

வாய் விட்டு அலற முயன்றால் வாயிலிருந்து சத்தமே வரவில்லை. எவ்வளவு முயன்றும் அவரால் தமது கண்களைத் திறக்கவோ, வாய்விட்டு அலறவோ, அல்லது கை கால்களை அசைக்கவோ இயலவில்லை. பெரும் அவதியாக இருந்தது. இறுதியில், தமது முழு பலத்தையும் உபயோகித்து ஒரு திமிறு திமிறவும் அவரது கண்கள் திறந்துகொண்டன. அங்ஙனம் விழிப்பு வந்ததும், தனது வாயிலிருந்து வினோதமான ஒரு ஓசை வருவதையும், தனது கை கால்களைத் தாம் அசைக்க முயலுவதையும் கண்டார் அவர். பிறகுதான் தெரிந்தது, அவ்வளவு நேரம் தாம் கண்டது அத்தனையும் வெறும் கனவு என்று!

ஆனால், அங்ஙனம் அவர் கனவை உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதே நொடி, அவருக்கு முன்னால், மிக மிக அருகாமையில் உண்மையிலேயே கரிய பெரிய உருவம் ஒன்று அசைவது  புலப்பட்டது. மேலும், அது அவரை நோக்கிக் குனிந்த வண்ணம், அவரது கழுத்தைக் குறிவைத்து இரு கைகளையும் விரித்த வாக்கில் வருவதையும் உணர்ந்தார் அவர். அவ்வளவுதான், தன்னைக் கொல்லத் தலையில்லா முண்டம் உண்மையாகவே வந்து விட்டதைக் கண்டு, கனவில் தான் பயந்ததைக் காட்டிலும் அதிகமாகக் கலவரமடைந்தார் ஏட்டு.

இதே, வேறு யாராக இருந்தாலும், இந்நேரம் பயத்தில் உயிரை விட்டிருப்பார்கள். ஆனால், அஞ்சாநெஞ்சம் கொண்ட ஏட்டு, நிலைமையை ஒரு நொடியில் உணர்ந்தவராக, தன்னைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வரும் தலையில்லா முண்டத்தை நோக்கி, குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், தலையில்லா முண்டத்தின் மீது பாய்ந்த உடனே, அதன் கைகளில் கணத்த கம்பளி ஒன்று இருப்பதை நன்கு உணர்ந்தார் அவர். அவருடைய காவல்துறை மூளை அதிவேகமாக வேலை செய்தது. உடனே, அந்தக் கம்பளிப் போர்வையைத் தன் இருகைகளிலும் கெட்டியாகப் பிடித்து, கன நேரத்தில், அதைத் தலையில்லா முண்டத்தின்  மேலேயே போட்டு மூடி, கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார் அவர். திருமலை நாயக்கர் மகால் தூண் போல இருந்த அந்தப் பெரிய உருவத்தை அவரால் முழுதும் வளைத்துப் பிடிக்க இயலவில்லை. எனினும், அது திமிறி ஓடாத வண்ணம் ஒருவிதமான கிடுக்கிப் பிடியாக இருந்தது அவருடைய உடும்புப் பிடி. இவை அனைத்தும் ஒரு இமைப்பொழுதிற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

இங்ஙனம் தன்மேல் ஒரு தாக்குதல் வரும் என்று தலையில்லா முண்டம் எதிர்பார்க்கவில்லை போலும், அந்த அதிர்ச்சி அதன் உடல் முழுதும் பரவி இருந்ததை  நொடிப் பொழுதில் உணர்ந்தார் ஏட்டு. அடுத்த கணம், ஒரு கையால் அந்த உருவத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டே, மற்றொரு கையை நன்றாக மடக்கி, கோடையிடி குமுறுவது போல், குத்து குத்து என்று குத்திக் குதறிவிட்டார் அவர். அவரது இரும்பு உலக்கை கையிலிருந்து இடியென இறங்கிய அந்தக் குத்துக்களைத் தாங்க இயலாத தலையில்லா  முண்டம் விநோதமாக அலறியது. அவருடைய பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளப் போராடியது. ஆனால், ஏட்டையாவின் அந்த அதிரடித் தாக்குதல், அதுகாறும், தலையில்லா முண்டத்தின் பொருட்டு, அவர் அனுபவித்து வந்த துன்பங்களின் வெளிப்பாடாக இருந்தது. அந்த அசுரத் தாக்குதலிலிருந்து தலையில்லா முண்டத்தால் தப்ப இயலவில்லை.  ஒரு சில வினாடிகளே நீடித்த அந்தத் துவந்த யுத்தத்தின் இறுதியில், பெரிய கருங்குன்று போல இருந்த அந்தத் தலையில்லா முண்டம் செயலிழந்து கீழே விழுந்தது.

இனிமேல் அது தன்னை எதிர்த்துத் தாக்காது என்று உறுதியாக உணர்ந்த ஏட்டு, தாவிச் சென்று மின்சார விளக்கைப் போட்டார். வெளிச்சத்தில் பார்த்தால், போரில் காயம்பட்டு வீழ்ந்த பெரிய யானை போல, கீழே விழுந்து கிடந்தது அந்த உருவம். மிகுந்த எச்சரிக்கையோடு அந்தக் கம்பளிக் குன்றின்பால் நெருங்கிய ஏட்டு, திடீரெனக் கம்பளிக்குள் லேசாக அசைவு தெரிவதைக் கண்டு மிரண்டு போனார். ஒரு கணம், அவரது இதயம் நின்று போனது. அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து மேலெழும்பி வந்து அவருடைய தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று அவரால் தீர்மானிக்க இயலவில்லை. யாரையாவது துணைக்கு அழைக்கலாமா என்றுகூட நினைத்தார். அனால், சிறிது நேரத்தில், அந்த அசைவு நின்று போனது. எனவே, சிறுது தைரியம் பெற்ற ஏட்டு, மெல்ல நெருங்கிச் சென்று... அந்த கம்பளிப் போர்வையை லேசாக விலக்கி... குப்புறக் கிடந்த அந்த உருவத்தைப் பார்த்தார்.... பார்த்தவர்... அப்படியே அதிர்ந்து போனார்...!வேட்டை தொடரும்...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 2


முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...


முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


ப்படி, ஊரே தலையில்லா முண்டத்தின் பொருட்டு அல்லோகலல்லோகப் பட்டுக் கொண்டிருக்கையில், “கரடி” மணி மட்டும் மிகுந்த களிப்பில் இருந்தான்.
 

கரடிமணி, அந்தக் காலத்தில், சிறு மலையை ஒட்டிய பட்டி தொட்டிகளிலெல்லாம் அட்டகாசம் செய்துகொண்டிருந்த பிரசித்தி பெற்ற திருடன். புல்லுக் கட்டைப் படுக்கப் போட்டது போன்ற முரட்டு மீசை, அரிவாளைத் தொங்க விட்டது போன்ற கிருதாக்கள், கடைந்தெடுத்த கருந்தேக்குக் கட்டைபோல் தேகம், உலக்கை போன்ற கை கால்கள் என்று பெருந் திருடனுக்கேற்ற சகல லட்சனங்களும் பொருந்திய முரட்டு ஆசாமி.


நினைவு தெரிந்த நாளிலிருந்து திருட்டுதான் அவனுக்குத் தொழில். ஆடு, மாடு, கோழி, பம்ப்பு செட் முதற்கொண்டு பஞ்சாரம் களவாடுதல் வரை சில்லறைத் திருட்டுக்களில் அவன் கில்லாடி. ஒண்டிக் கட்டை. யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை. கையிருப்பு இருக்கும்வரை மனம்போன போக்கில் ஊதாரியாகத் திரிவான். நாட்டின் நிதி மந்திரிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், இவனிடம் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவிற்கு, பொருளாதாரப் பற்றாக்குறை இல்லாமல் பிழைப்பு நடத்தும் விசயத்தில் மிகவும் கெட்டிக்காரன்.
 

பெரும்பாலும், கிராமப் புறங்களிலேயே அவனது கைவரிசை பலமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட கட்டுக்காவலையும் மீறித் திருடுவதில் கைதேர்ந்தவன். ஆனால், அசிரத்தையின் காரணமாகத் தப்பிச் செல்லும் தொழில்நுட்பத்தில்தான் சிறு கோளாறு அவனிடமிருந்தது. சில பல திருட்டுகளில் மாட்டிக்கொண்டு சிறைத் தண்டனையும் பெற்றிருக்கின்றான். சிலகாலச் சிறை வாழ்க்கையின் பயனாக, பாம்பின் கால் பாம்பறிவதுபோல், காவல்துறையின் நேக்குப் போக்குகளை அவன் நன்றாக அறிந்து கொண்டான். அதுமுதல், அவனுடைய தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க முனேற்றம் காணப்பட்டது. லாவகமாதத் திருடுவதிலும், அதைவிட லாவகமாதத் தப்பிச் செல்வதிலும் தன்னிகரற்று விளங்கலானான்.

காலப்போக்கில், எலெக்சனில் செயித்த எட்டாங்கிளாஸ் எம்.எல்.ஏ, திடீரென்று எம்.ஏ பட்டதாரியாவதைப் போல, சிறு சிறு சில்லறைத் திருட்டுக்களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, திடீரெனப் பெருங்கொண்ட திருட்டுகளை நிகழ்த்திவிட்டு, காவல் துறையிடம் அகப்படாமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனைப் பிடிக்க, காவல்துறை விரித்த வலை விரித்தபடி கிடக்க, அதுவரை, ஒரு சுண்டெலி கூட அதில் அகப்படாமல் இருந்தது.

ஊரில் அனைவரும் தலையில்லா முண்டத்தின் பீதியில் முடங்கிக் கிடக்க, அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட கரடிமணி, ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, தனது கைவரிசையின் நீள அகலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான்.

அங்ஙனம் ஒருநாள், அகால நேரத்தில், கோழி திருடலாமென்று ஒரு வீட்டின் கொல்லைப்பக்கம் அவன் போக, அந்த நேரம் பார்த்து, கொல்லைக்கு ஒதுங்க வந்த அவ்வீட்டுப் பெண், தலையில்லா முண்டம் வந்துவிட்டதென்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓட, வந்த வேலையை மறந்து திகைத்து நின்றுவிட்டான் கரடிமணி.

“என்னடா இது... புள்ளையார் புடிக்கப் போய் கொரங்கப் புடிச்ச கதையால்ல இருக்கு... கோழி புடிக்கலாம்னு வந்தாக்க... நம்பளப் பாத்து, தலையில்லா முண்டம்னு நெனச்சுல்ல பயந்து ஓடுறாய்ங்க... அடடே... இது கூட நல்லாத்தான் இருக்கு...” என்று மிகவும் உற்சாகமானான் கரடிமணி.

அதுமுதல், தலையில்லா முண்டத்தின் பெயரைச் சொல்லி திருடுவதைக் காட்டிலும், அதை வைத்து, மக்களைப் பயமுறுத்தும் செயல்களில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினான் அவன். ஒரு கட்டத்தில், அதுவே, அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காகி விட்டது.

அப்படித்தான் அன்றொருநாள், சிறுமலைச் சாரலில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கும்பலை, கதிகலங்கடித்து விட்டான் கரடிமணி. அந்தி சாய்ந்த வேளையில், கம்பளியைப் போர்த்திக் கொண்டு, அவர்களின் அருகாமையிலிருந்த புதர்களில் மறைந்து கொண்டு,  திடீரென ஊளையிட்டுக் கொண்டு வெளிப்படுவதும், பின், மறைந்து கொள்வதுமாய்ப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான். எப்பொழுதும் அரைப் போதையில் இருக்கும் அக்கும்பல், அவனைப் பார்த்து, தலையில்லா முண்டமென நினைத்து, பீதியில் போட்டது போட்டபடி கிடக்க சிதறி ஓடிப் போனது. அன்றைக்கு,  வயிறுமுட்ட சுடச்சுடச் சாராயத்தைக் குடித்துவிட்டு உருண்டு கொண்டே மலையிறங்கினான் கரடிமணி.சிறுமலை அடிவாரக் கிராமங்கள், திராட்சை மற்றும் பலவிதமான மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயத்திற்கு மிகவும் பெயர் பெற்றவை. குறிப்பாக, மல்லிகை, ரோசா, கனகாம்பரம், காக்கரட்டான், அரளிப்பூ, சாதிப்பூ போன்ற மலர்களின் உற்பத்திதான், அவர்களின் பொருளாதாரத்திற்கு அடிப்படை ஆதாரம். பொதுவாக, அதிகாலை முதலே மங்கலான வெளிச்சத்தில், வயல்களிலுள்ள பூச்செடிகளிலிருந்து,  பூக்கள் எடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள் அப்பக்கத்து விவசாயிகள்.

அங்ஙனம் ஒருநாள், வெள்ளோடு கிராமத்திற்கும் சிறுமலைக்கும் இடைப்பட்ட தோட்டங்களில், வழக்கம்போல, மும்மரமாகப் பூக்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள் விவசாயிகள். திடீரென்று, விநோதமாக ஊளையிட்டுக்கொண்டு தலையில்லா முண்டம் அவர்களிடையே தோன்றவும், ஏற்கனவே, தலையில்லா முண்டம் பற்றிய அச்சத்தில் இருந்தவர்கள், அதை நேரில் பார்த்ததும், பீதியில் அலறியபடியே ஓட்டம் பிடித்தார்கள். அவர்களுக்கு முன்னே அதிவிரைவாக ஓடிய அந்தச் செய்தியானது, மேற்கே சின்னாளபட்டி முதல், கிழக்கே அஞ்சுகுழிப்பட்டி வரை, சிறுமலை அடிவார விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியது.

அதுமுதல், சாமத்தில் வேலைக்குச் செல்ல பயந்துகொண்டு, நன்கு விடிந்ததும் பூக்கள் எடுக்கத் தலைப்பட்டார்கள் விவசாயிகள். ஆனால், சூரியன் வருமுன் பூக்களை எடுத்து, ஓலைக் கூடைகளில் நிரப்பி, முதல் பேருந்தைப் பிடித்தோ அல்லது மிதிவண்டியில் வைத்தோ, நேரத்தில் திண்டுக்கல்லுக்கு எடுத்துச் சென்றால்தான், பூச்சந்தையில் ஏலம் விட்டு அவற்றை விற்பனை செய்ய முடியும். கரடிமணியின் கைங்கரியத்தினால், அங்ஙனம் செய்யமுடியாமல் திணறிப்போனார்கள் விவசாயிகள். தாமதமாகச் சந்தைக்கு எடுத்துச் சென்றால், வாடிய பூக்களை வாங்க மறுத்து விட்டார்கள் வியாபாரிகள். விளைவு, மாவட்டத்தின் தேவை போக, பிற ஊர்களுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த பூ வியாபாரம் படுத்துவிட்டது.

திண்டு மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மலர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. தலையில்லா முண்டத்தின் நிமித்தம், பெண்களெல்லாம், பூவில்லாத நார்களைத் தலையில் சூடிக்கொண்டு திரிந்தார்கள். மலர்களை நம்பியிருந்த மாலை கட்டும் தொழில் பெரும் இழப்பைச் சந்தித்தது. அதுமுதல், கோவில் குளம், விசேசம் என, எங்கும், மாலைக்குத் தட்டுப்பாடாகி,  அதற்கு மாற்றாக, சந்தன மாலையும் எலுமிச்சம் பழமும் உபயோகத்திற்கு வந்தன. அதற்கும் வழியில்லாதவர்கள், நாலு முழம் துண்டு, வாழை மட்டை நார், இலைதழைக் கொடிகள் என்று தரைமட்டத்திற்கும் கீழே தாழ்ந்து போனார்கள்.

இங்ஙனம், தலையில்லா முண்டத்தின் பேரில், கரடிமணியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆட்டுக்கிடை மறிப்பவர்கள், அயலூர்க்கார்கள், இரவில் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஒத்தையடிப் பாதையில் போவோர் வருவோர் முதற்கொண்டு, எப்போதாவது அவரசத் தந்தி கொணரும் தபால்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை அவன். கிராமங்களில் பாதிப்பேர் நடுக்கு சுரம் வந்து படுத்த படுக்கையாகிப் போனார்கள். அதற்குமேல் அங்கே பயமுறுத்த ஆட்கள் இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

ஒரு கட்டத்தில், அடுத்து பயமுறுத்த ஆள் இல்லாத நிலையில், அவனுக்கே இந்த விளையாட்டு சலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, அடுத்தகட்டமாக, என்ன செய்யலாமென்று, அஞ்சுகுழிப்பட்டி பூசாரியிடம் ஆலோசனை கேட்கப்போனான் கரடிமணி.

“மகனே, பட்டி தொட்டியலாம் ஒனக்கு இனிமே சரிப்பட்டு வராது, பட்டணத்துப்பக்கம் போகச்சொல்றான் கருப்பன்... நெறைஞ்ச அமாவசை அன்னைக்கி... வடக்குவாச வழியா பட்டணப்பிரவேசம் வச்சுக்க... நெனச்ச காரியம் கைகூடும்..."
என்று குறி சொன்ன பூசாரி, "ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு மகனே...”  என்று இடையில் ஒரு இக்கன்னா வைக்கவும், பதறிப் போய் விட்டான் கரடிமணி.

"சிக்கல் தீர எதுனா பரிகாரம் இருக்கா சாமி...?" என்று தன் எண் சான் உடம்பை ஒரு சானாகக் குறுக்கிக் கொண்டு பவ்யமாகக் கேட்டான் கரடிமணி.

அவனை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்த பூசாரி, "ஆமா... அதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு மகனே... நல்லா கேட்டுக்க... தொழில்ல வர்ற மொதல் லாபத்துல, கருப்பனுக்கும் ஒரு பங்கு குடுத்துரனும்... தெரிஞ்சுதா...?" என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

தலையில்லா முண்டத்தில் பெயரால், நகர மக்களையும் அச்சமூட்டத்தான் முதலில் ஆசைப்பட்டான் கரடிமணி, ஆனால், பூசாரியின் கட்டளையால், தனது திட்டத்தில் சிறு மாறுதலைச் செய்ய உத்தேசித்தான் அவன். "டவுனுக்குள்ள போனதும் மொதல்ல ஒரு திருட்ட நடத்திப்புடனும்... அப்பத்தான்... பூசாரி சொன்னாமாரி... மொத லாபத்துல பங்கு குடுக்க முடியும்... என்ன ஆனாலும் சரி, சாமி குத்தத்துக்கு மட்டும் ஆளாயிரக் கூடாது..." என்று மனதிற்குள் உறுதிபூண்டான் அவன். 


எனவே, எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று மல்லாந்து படுத்து யோசித்தவன், “திண்டுக்கல் டவுனுக்குள்ள ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்... வடக்க, திருச்சிரோடு மார்க்கமா போனா, காட்டஸ்பத்திரி வரும்... ஆனா... அது எப்பப்பாத்தாலும்  சலசலப்பா இருக்கும்... அதுக்கும் மேல வடக்க போனாக்க... என்.ஜி.ஓ காலனி வரும்... ஆமா... அதான் சரியான எடம்... டவுனுக்கு டவுனு மாரியும் இருக்கும்... ஒதுக்குப்பொறமாவும் இருக்கும்... பலே... பலே... இதான் சரியா வரும்...” என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

இங்ஙனம், என்.ஜி.ஓ. காலனிக்குள் நுழைவதென்று தீர்மானித்தபின், அடுத்து வரப்போகும் அமாவாசைக்காக, ஆவலோடு, கம்பளியும் கையுமாகக் காத்துக்கிடந்தான்  கரடிமணி.வேட்டை தொடரும்...


Related Posts Plugin for WordPress, Blogger...