ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 1

முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

திண்டுக்கல் மாவட்டம் ஒன்றரை இலட்சம் குழந்தைகளுடன் தனிக் குடித்தனம் தொடங்கியிருந்த காலம். தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தை மறந்து, தலை இல்லா முண்டத்தை நினைத்து மாவட்டமே பீதியில் உறைந்து போய்க்கிடந்தது .

திடீர்த் திடீரென ஆங்காங்கே, தலையே இல்லாத உருவம் தோன்றி மறைவதாகப் பேச்சு அடிபட்டது.

“நமக்கு இருக்றா மாறியே கை காலெல்லாம் இருக்குமாம்... ஆனா... தலை மட்டும் இருக்காதாம்... சாயங்காலம் ஆனாத்தான் அது வெளில வருதாம்...”

“அரண்மனைக் குளத்துல குளிச்சுக்கிட்டு இருந்துச்சாம்...”

“வடமதுரை பஸ்லேருந்து எறங்கி, மலைக்கோட்டை வரை நடந்து போச்சாம்...”
இப்படி, ஆரம்பத்தில் ஒரு அதிசயச் செய்தியாக அறியப்பட்டு, போகப் போக, பீதியூட்டும் அளவிற்கு மக்களிடையே பரவியது தலையில்லா முண்டம். பயத்திற்கு வெளிச்சம் எதிரி; இருட்டு நண்பன். பகலெல்லாம் பயமின்றித் திரிந்த மக்கள் இரவு ஈரக்குலையைக் கையில் பிடித்துக் கொண்டு கிடந்தார்கள்.
“மொதல்ல ராத்திரியிலதான் வந்துக்கிட்டு இருந்துச்சாம்... இப்பல்லாம் பட்டப் பகல்லயே வருதாம்... நம்ம கூட நல்லாப் பேசிக்கிட்டே வருமாம்... திடீர்னு பாத்தாக்கத் தலை இருக்காதாம்...”

“சின்னாளபட்டி கடையில பூந்து, சில்லறைக் காசெல்லாம் அள்ளிக்கிட்டு போயிருச்சாம்...”

“எரியோட்டுல போயி, ரெண்டு எருமை மாட்டைத் தூக்கிக்கிட்டு போயிருச்சாம்...”
பட்டி தொட்டியெங்கும் டீக்கடைப் பெஞ்சுகளில், இப்படி, தலையில்லா முண்டம் பற்றியே விவாதித்துக் கொண்டிருந்தன தலையுள்ள முண்டங்கள். பால் பற்றாக்குறை ஆகுமளவிற்கு அங்கு வியாபாரம் சூடு பிடித்தது. முறுக்கு, வடை, மிக்ஸர், பொறை, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. அவைகளைத் தயாரித்துக் கொண்டிருந்த குடிசைத் தொழில்களெல்லாம் பெருந்தொழில்களாகத் தரம் உயர்ந்துகொண்டிருந்தன.
“நேத்து ராத்திரி, ஒத்தக் கண்ணு பாலத்துல  யாரையோ அடிச்சுப் போட்டுருச்சாம்...”

“மத்தியானம் கான்வண்ட் பள்ளிக்கூடத்துல பூந்து, வாட்ச்மேனை கழுத்துல கடிச்சு, ரத்தமெல்லாம் உறிஞ்சிப் புடுச்சாம்...”
ஆரம்பத்தில் வெறுமனே உலாவிக் கொண்டிருந்த தலையில்லா முண்டம், போகப் போக, ஆடு மாடுகளை அடித்துப் போட்டு, கடைசியில் மனிதர்களையே காவு வாங்க ஆரம்பித்திருந்தது.
“தாடிக்கொம்புக்கு போற பஸ்ஸை, தலையில்லா முண்டமே ஓட்டிக்கிட்டு போச்சாம்...”

“ஒத்தக்கையில ஓடுற ரயில நிறுத்திப் புடிச்சாம்...”

“நத்தம் ரோட்டுல நட்டக்குத்தலா ஒக்காந்தி பைக் ஓட்டிக்கிட்டு போச்சாம்...”
கொலைத் தொழில் போரடிக்கும் போதெல்லாம் இப்படி சாகசங்களும் பண்ணிக்கொண்டிருந்தது தலையில்லா முண்டம்.
 
“இதெல்லாம் சும்மா வதந்திப்பா... யாரோ கெளப்பி விட்ருக்காங்க... நம்பாதிங்கப்பா...” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் கூட, ஒரு கட்டத்தில், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அச்சத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

நாளிதழ்களும் வானொலியும் தான் அக்காலத்து செய்தி ஊடகங்கள். அதுவும், எண்ணிக்கையில் குறைவானவர்களை எட்டுவதற்கு மட்டுமே அவை சாத்தியப்பட்டன. மற்றவர்களுக்கெல்லாம், வாயும் காதும் உண்டான காலத்திலிருந்து ஏற்பட்ட, செவி வழி வாய் வழிப் போக்குவரத்துதான். இப்படி நடைமுறையிலிருந்த எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் வாயு வேகம் மனோ வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது தலையில்லா முண்டம்.

பேருந்து நிலையமாகட்டும், பங்காளி மார்க்கெட்டாகட்டும், மலைக்கோட்டையாகட்டும், பட்டி தொட்டி ஊர்களாகட்டும், ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் தோன்றக் கூடிய மாயாவியாக இருந்து வந்தது தலையில்லா முண்டம். சாமி சிலை பால் குடிக்கின்றது, சிலையின் கண்ணில் இரத்தம் வடிகின்றது போன்ற வதந்திகள் வந்த வேகத்தில் மறைந்து கொண்டிருக்க, தலையில்லா முண்டம் மட்டும் மாதக் கணக்கில் உலா வந்து அனைவரையும் உலுக்கிக் கொண்டிருந்தது. வேகமாகப் பரவுவதைக் காட்டிலும் நீண்ட நாட்கள் நின்று நிலைப்பதில்தான் ஒரு வதந்தியின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில், தலையில்லா முண்டத்தின் வெற்றி, பொய்யிலிருந்து உண்மையாக உருமாறிக் கொண்டிருந்தது.

வீட்டை விட்டு வெளியில் செல்லப் பயந்து பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டார்கள் பள்ளிக்குழந்தைகள். அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்பில்லாத விடுமுறையை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள். சாதி மத பேதமின்றி, அனைத்து மக்களும் அவரவர் வீட்டு வாசல்களில் வேப்பிலை, எலுமிச்சம்பழம், வரமிளகாய், மஞ்சள் கிழங்கு போன்ற வஸ்துக்களுடன் மந்தரித்த தாயத்துகளையும் கொத்தாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். அது போக, கிலோ கணக்கில் தங்கள் உடம்பிலும் தாயத்துக்களைக் கட்டிக்கொண்டதன் பலனாக, பேருந்து நிலைய எடை பார்க்கும் இயந்திரங்கள் எல்லாம் திணறிக்கொண்டிருந்தன. காத்துக் கருப்பைக் கண்டு பயந்தவர்களைக் காட்டிலும், தலையில்லா முண்டத்தின் பொருட்டு பயந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. அங்ஙனம் பயந்தவர்களை, மந்தரித்து விடுவதற்கென்றே  திடீர்ப் பூசாரிகள் பலர் தோன்றி, செல்வச் செழிப்பில் திளைக்கலானார்கள். திங்கட்கிழமை வாரச் சந்தையில் வேப்பிலைக்கு அதிகக் கிராக்கி ஏற்பட்டு, பற்றாக்குறையைப் போக்க, ஒரு மரம் பாக்கியில்லாது அனைத்து வேப்ப மரங்களையும் மொட்டையடிக்கத் தொடங்கியிருந்தார்கள் மக்கள்.

போதாக் குறைக்கு, தனக்கு நன்மை செய்பவர்களுக்குத் தலையில்லா முண்டம் தீங்கிழைப்பதில்லை என்ற ஐதீகம் வேறு விசக் காய்ச்சல் வேகத்தில் பரவியது. அதுமுதல், அனைத்து வாகனங்களிலும் தலையில்லா முண்டத்திற்கென தனியாக ஓர் இடம்  ஒதுக்கப்பட்டது. குறிப்பாகப் பேருந்துகளில், ஊனமுற்றோர் இருக்கைக்குப் பக்கத்தில், “தலையில்லா முண்டத்திற்காக” என்று எழுதிப் போடப்பட்டது. மறந்தும் அதில் யாரும் உட்காருவதில்லை. பாதசாரிகள் கூட ஒரு பக்கத் தோளை தலையில்லா முண்டத்திற்கென ஒதுக்கி வைத்திருந்தார்கள்.  அதே போல், உணவகங்களில் நிரந்தரமாக ஒரு இருக்கை தயார் செய்து, அதில் ஒரு இலையைப் போட்டு, அதில், அந்த அந்த நேரத்திற்கான உணவு வகைகளைப் பரிமாறி, தலையில்லா முண்டத்தைக் கவனிக்கக் கையில் விசிறியுடன் ஒரு ஆளை வேறு நியமித்திருந்தார்கள்.

இது இப்படியிருக்க, தலையில்லா முண்டத்தின் பொருட்டு எந்தத் தீங்கும் நேராவண்ணம் மக்களைக் காக்க, அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் விசேச வழிபாடுகள் வேறு நடத்தப்பட்டன. சேவல்களும் ஆட்டுக்கிடாய்களும் கணக்கு வழக்கில்லாமல்  நேர்ந்துவிடப்பட்டன. உயிர்பிழைத்தால் மொட்டை போட்டுக் கொள்ளுதல், அலகு குத்திக் கொள்ளுதல், தங்கத்தில் தலை செய்து காணிக்கை செலுத்துதல் போன்ற வேண்டுதல்களும் சாமிகளுக்கு லஞ்சமாக ஆசைகாட்டப்பட்டன. இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, தலையில்லா முண்டத்திற்கென தனியாக  ஒரு கோயில் கட்டுவதென்று ஒரு கும்பல் முயன்று கொண்டிருந்தது.

இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தாலும் அவற்றையெல்லாம் தலையில்லா முண்டம் மதித்ததாகத் தெரியவில்லை. அது தன் போக்கில், நாளுக்கு நாள் தொந்திரவுகளை அதிகரித்துக் கொண்டே வந்தது. எங்கு பார்த்தாலும் ஒருவித பீதியுடனே மக்கள் உலவிக் கொண்டிருந்தார்கள்.

ழக்கம் போலத் தாமதமாக விழித்துக் கொண்ட மாவட்ட நிர்வாகம், அசுர வேகத்தில் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டது. அதுகாறும் நோஞ்சான் குதிரை போல பராமரிப்பின்றிக் கிடந்த அரசு இயந்திரம், திடீரென்று தன்மீது விழுந்த சாட்டையடிக்குப் பயந்து ஆமை வேகத்தில் ஓடத் துவங்கியது.

அடுத்த வீட்டுப் புரணி பேசும் ஆயாமார்கள் போல் ஆங்காங்கே கூடிப் பேசிய அதிகாரிகள், “வதந்தியை நம்பாதீர்கள்...” என்று முதலில் நாளிதழ்களில் அறிக்கை விடுத்துப் பார்த்தார்கள்.

“நேத்து கலெக்டர் ஆபீசுக்கே தலையில்லாத முண்டம் போயிருச்சாம். கலெக்டரே நேரடியாப் பாத்து அரண்டு போயி, மயக்கம் போட்டு விழுந்துட்டாராம். இது வெளிய தெரிஞ்சா கேவலமாப் போயிரும்னுதான், வந்ததியை நம்பாதீர்கள்ன்னு பேப்பருல அறிக்கை குடுத்தாகளாம்...”

வட்டி மட்டும்தான் குட்டி போடுமா என்ன? வதந்தியும் வஞ்சகமில்லாமல் குட்டிகளைப் போட்டு அரசாங்கத்தின் அறிவிப்பையே ஆட்டம் காணச் செய்தது.

வேறு வழியின்றி, காவல்துறை வாகனங்களில் ஒலிபெருக்கியைக் கட்டி, ஊர் ஊராகச் சென்று, “வதந்தியை நம்பாதீர்கள்... வதந்தியைப் பரப்புபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள்...” என்று நயமாகவும் பயமாகவும், அறிக்கையும் எச்சரிக்கையும் ஒருசேரச் செய்து பார்த்தார்கள். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. நாளாக நாளாக அச்சமும் பீதியும் உச்ச கட்டத்திற்குத்தான் போய்க்கொண்டிருந்தன.

பள்ளிக்கூடப் பிள்ளைகளைப் பயமுறுத்துதல் முதற்கொண்டு பக்கத்துக்கு வீட்டில் பாவாடை காணமல் போனது வரை வகை வகையான புகார்கள். மொட்டை மாடியில் காயப் போட்டிருந்த வத்தலைக் காணவில்லை... சட்டைப்பையில் வைத்திருந்த எட்டணாவைக் காணவில்லை...  செத்துப் போன தாத்தாவைக் காணவில்லை... இப்படியாக, தடுக்கி விழுந்ததெற்கெல்லாம் தலையில்லா முண்டம் தான் காரணம் என்று ஏகப்பட்ட புகார்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

இதாண்டா சாக்கு என்று, இழுபறியில் உள்ள வழக்குகளையெல்லாம் தலையில்லா முண்டத்தின் மேலேயே போட்டு, இழுத்து மூடி விடலாமா என்று கூடத் தீவிரமாக யோசனை செய்து கொண்டிருந்தது காவல்துறை.

நகரின் வடக்குக் காவல் நிலையத்தில்தான் இதுபோன்ற புகார்கள் அதிகப்படியாக வந்து குவிந்திருந்தன. குறிப்பாக, ஏட்டு எசக்கியப்பன் கண்ட்ரோலில் இருக்கும் என்.ஜி.ஓ காலனியில் இருந்துதான் ஏகப்பட்ட புகார்கள். ஏற்கனவே ஏகப்பட்ட டென்சனிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமிக்கு, பல்வலிக்காரனிடம் பாக்குக் கடிக்கச் சொல்வது போல் மேலிடத்திலிருந்து குடைச்சல் வர,  தனக்குக் கீழ் உள்ள காவலர்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

“ஏய்யா... என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும்... மேலே இருந்து சும்மா குச்சிய விட்டுக் கொடஞ்சுக்கிட்டு இருக்கான்... பதில் சொல்லி மாளல... யோவ் ஏட்டு... நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது... இன்னும் ஒரு வாரத்துல உங்க ஏரியாவுல பதட்டத்தைக் கொறைச்சாவனும்... இல்லைனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது...” என்று குமுறும் எரிமலையாகப் புகை கக்கினார் சீனிச்சாமி.

“எவனோ போய் எவன் தாலியையோ அறுக்க, எந்தலைல வந்து விடியுது...” என்று உள்ளுக்குள் நொந்துகொண்டே, “எஸ் சார்...” என்று விறைப்பாக ஓங்கி ஒரு சல்யுட் போட்டார் ஏட்டு.

ஏட்டு எசக்கியப்பனுக்கு ஐம்பது வயதைத் தாண்டியிருந்தாலும் நல்ல உறுதியான தேகம். நறுக்கிய முடி, முறுக்கிய மீசை, சீருடையோடு சேர்த்துத் தனக்கும் கஞ்சி போட்டதனால் வந்த விறைப்பு, என எல்லா அம்சமும் இருந்தாலும், அவரைப் பின் தள்ளி முன்னேறிய தொப்பையின் நிமித்தம், சமுதாயத்தின் பார்வையில் அவரும் ஒரு சராசரி போலிஸ்காரராகவே திகழ்ந்து வந்தார்.

நீண்ட நெடுங்காலம் ஏட்டையாவாகவே இருந்து சலித்துப் போன அவர், ஏதாவது சாதனை செய்து ஒரு பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே ஏங்கிக்கொண்டிருந்தார். அதன்பொருட்டு, பலவிதமான முயற்சிகளை அயராது மேற்கொண்டிருந்தார். அதில் மிக முக்கியமானது, நாட்டில் பெருத்து வரும் திருட்டுக் கும்பலை ஒழிப்பது என்பதே. நாட்டில் ஏற்கனவே இருக்கும் சாதா திருடர்கள் மத்தியில், மிகவும் பலம்பொருந்திய கொள்ளைக் கும்பல் ஒன்று பெருகி வருவதை அவர் முதலில் கண்டுபிடித்தார். கண்டுபிடித்து என்ன பிரயோசனம்? அவர்களை நெருங்குவதென்பது அவ்வளவு சுலபமென்று தோன்றவில்லை. காரணம், அவர் சம்பந்தப்பட்ட காவல்துறை இலாகாவே அவர்களது காலடியில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டூழியம் பார்த்துக் கொண்டிருந்ததுதான். கொடுமை என்னவென்றால், காவல்துறையின் பாதுகாப்போடுதான் அவர்கள் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அங்ஙனம், ஏட்டையாவின் பட்டியலில் இருந்தவர்கள் எல்லாம் சாட்சாத் அன்றைய அரசியல்வாதிகள் தான். அப்படிமட்டும் இல்லாமலிருந்திருந்தால், அவர்களை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளி, இந்நேரம், காவல்துறையில் ஒரு உயர்ந்த பதவியைப் பெற்று லட்சியத்தில் வெற்றி கண்டிருப்பார். பாவம், ஒரு சாதாரண ஏட்டையாவாக இருந்துகொண்டு எப்படி இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கூண்டிலேற்ற முடியும்?

இங்ஙனம், தனது லட்சிய வெற்றிக்கு அடிகோலும், அந்தவொரு அரிய சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமியின் சீண்டல் ஒரு உந்துகோலாக அமைந்தது. அடிபட்ட வேங்கையெனப் பொங்கி எழுந்த ஏட்டு, தன் மேல் விழுந்த களங்கத்தைத் துடைக்க என்ன வழி என்று தீவிரமாகச் சிந்திக்கலானார். சீருடையிலும் மப்டியிலும் மாறி மாறி, விடலைப் பிள்ளையைச் சுற்றும் வெட்டிப்பயல் போல், அல்லும் பகலும் ஏரியாவில் ரோந்து போவதென்று தீர்மானித்தார். அதன்படி, தனது சைக்கிள் மற்றும் கான்ஸ்டபிள் கந்தசாமியின் துணை கொண்டு, என்.ஜி.ஓ காலனியை ஒரு இன்ச் விடாமல் சலிக்கலானார்.

ஏட்டையாவின் இந்த அசுர வேட்டையை முன்கூட்டியே தெரிந்துகொண்டோ என்னவோ, எல்லோருக்கும் தரிசனம் கொடுக்கும் தலையில்லா முண்டம், இவர்களுக்கு மட்டும் டிமிக்கி கொடுத்துக் கொண்டேயிருந்தது.


வேட்டை தொடரும்...

பிந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...


தலை இல்லா முண்டம் – பாகம் 2

17 கருத்துகள்:

  1. வதந்தி மரித்துப் போகாமல் உயிர்ப்புடன் உலா வந்தால் உண்மையாகி விடுகிற விஷயத்தை சுவாரஸ்யமா அழகாச் சொல்லியிருக்கீங்க. ஆனால்... நீளம்தான் சற்றே அதிகம். இரண்டு பதிவாக பிரித்துப் போட்டிருக்கலாமோன்னு தோணிச்சு. பட்... மேட்டர் சுவாரஸ்யம். தொடர்வதற்காக ஆவலுடன் வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பால கணேஷ் அவர்களே... இனிவரும் இடுகைகளில் தங்களின் ஆலோசனையை செயல்படுத்தி விடுகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. அடடா...! இப்படியெல்லாம் நடந்துள்ளதா...? சுவாரஸ்யமாக உள்ளது... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. நடை அருமை, வேட்டையை தொடர்கிறேன்,.. இதே மாதிரி வதந்தி சென்னை எண்ணூர் அருகில் .. உலவுவதாக கேள்வி பட்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. @திண்டுக்கல் தனபாலன்... மிக்க நன்றி... ஆமாம், இப்படி ஒரு வதந்தி உலா வந்தது...

    பதிலளிநீக்கு
  6. @சுரேஷ்... மிக்க நன்றி... தொடருவதாகத்தான் உத்தேசம்... :-)

    பதிலளிநீக்கு
  7. @வி பி திரு... மிக்க நன்றி... அநேகமாக எல்லா ஊர்களிலும் அந்தக் காலகட்டத்தில், இதே போன்ற வதந்திகள் உலா வந்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  8. படம் சூப்பர்! உன்னை கண்டுன்ன பாஸ்!
    வோட்டு பிளஸ் +1

    பதிலளிநீக்கு
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  10. தலையில்லா முண்டம் பற்றிய கட்டுரை என்பதுபோல் ஆரம்பித்து தொடர்கதையாகவே ஆக்கிவிட்டீர்கள்.
    (முதல் பாகம் படித்ததும் இந்த கமெண்ட்.
    தொடரும் பாகங்களையும் படிக்கவுள்ளேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிஜாமுதீன்...
      அனைத்து பாகங்களையும் படித்து தங்கள் கருத்தைத் தெரிவித்தால் மகிழ்வேன்....

      நீக்கு
  11. நைனா! நல்ல்ல்ல்லாஆஆஆ கீதுப்பா! டமாஸாகீதுப்பா! இன்னாபா இப்புடி எய்தி கீச்சுர! மெய்யாலுமே ரெம்ப பேமஸ்பா! இன்னாத்தா சொல்ல!!! நல்லா கண்டுகினம்பா!!" முள்சா கத்துக்காமே முட்டாளாக் கீறேம்ப்பா"????!!!! டமில்ல சொம்மா வூடு கட்டி அட்சுக்ரயேபா!!!!!!!!

    அருமையான கற்பனைத்திறன்!!!! நல்ல நகைசுவையும் கலந்து அழகான நடை!!!! வாழ்த்துக்கள்!!! தொடர்கிறோம்! மற்றதற்கும் பின்னூட்டம் வருகிறது!! நாங்கள் இருவரும் படித்து முடிக்க வேண்டுமே!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...

      ஆவட்டும்பா... பட்சி பாத்து கர்த்து சொல்லுங்கபா...

      நீக்கு
  12. தொடரும் படமும் மிகவும் அருமை நைனா...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...