செவ்வாய், 19 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 4

முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...
முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

ங்ஙனம், கம்பளியை விலக்கி, குப்புறக் கிடந்த உருவத்தைப் பார்த்த ஏட்டையா அதிர்ச்சியடையக் காரணம், இவ்வளவு தூரம், தான் துவந்த யுத்தம் புரிந்து கீழே வீழ்த்திய உருவம், ஒரு பெண்  உருவமாக இருக்கக் கண்டதுதான்!


அவர் கண்களை அவராலேயே நம்ப இயலவில்லை. “ஆக... இவ்வளவு தூரம்... ஊரைக் கலக்கிக் கொண்டிருந்த தலையில்லா முண்டம்... ஒரு பெண்ணா...?” என்று நினைக்கையில் அதிர்ச்சியோடு ஆச்சரியமாகவும் இருந்தது அவருக்கு.

“எது எப்படியோ... கடைசியில்... தன்னந்தனியாகப் போராடி அதை வீழ்த்திவிட்டோம்... பதவி உயர்வு நமக்கு நிச்சயம் உண்டு... இவ்வளவு நாள் நாம் பட்ட சிரமத்திற்குக் கைமேல் பலன் கிடைத்துவிட்டது...” என்று அகமகிழ்ந்தார் ஏட்டு.

ஆனால்... அம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை.  காரணம், கம்பளியை முழுவதுமாக நீக்கி, குப்புறக் கிடந்த உருவத்தை புரட்டிப் பார்த்த ஏட்டு, முகமெல்லாம் இரத்த விளாராக, அங்ஙனம் அடிபட்டுக் கிடந்தது, அடிக்கடி தன் கண்ணில் படும், பேருந்து நிலையைக் குண்டுப் பிச்சைக்காரியாக இருக்கக் கண்டு, அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். “இவள் எப்படி இங்கு வந்தாள்...?” என்று மண்டை காய்ந்து போனார் ஏட்டையா.

அதே நேரம், நடந்த களேபரத்தில், உள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஏட்டையாவின் மனைவியும் மக்களும் விழித்துக் கொண்டு அலற, அந்த ஓசை கேட்ட அண்டை அயலார்கள், அவசர அவசரமாக அங்கே ஓடி வந்தார்கள். வந்தவர்கள், ஏட்டையா வீட்டுத் தாழ்வாரத்தில் யாரோ இரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடப்பதையும், பக்கத்திலேயே ஏட்டையா பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். ஏட்டையாவின் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. அவள் ஏட்டையாவை முறைத்த முறையில், “ரோந்து போறேன் ரோந்து போறேன்னு சொல்லிக்கிட்டு, யாரோ ஒருத்திகூட கூத்தடிச்சுக்கிட்டு இருக்கியா நீ...?” என்ற கேள்வி தொக்கி நின்றது.

அதன் பிறகு காரியங்கள் வெகு விரைவாக நடந்தேறின. ஒரு சிலர், மயங்கிக் கிடந்தவளுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ய, மற்றும் சிலர் விரைவாக ஒரு வாகனத்தைக் கொணர, அவளையும் ஏட்டையாவையும் அள்ளிப் போட்டுக் கொண்ட அந்த வாகனம் அரசு பொது மருத்துவமனை நோக்கி அதிவேகமாகப் பயணித்தது.

பேருந்து நிலையக் குண்டுப் பிச்சைக்காரி அந்த நேரம், அங்கே எப்படி வந்து சேர்ந்தாள் என்பதை அறிய, நாம் கதையைச் சற்று பின்னோக்கி நகர்த்தியாக வேண்டும்.

சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி, ஏட்டையாவை வறுத்தெடுத்த சிலதினங்கள் கழித்து, ஏட்டையாவின் நடவடிக்கைகள் குறித்து அறியும்பொருட்டு, அவரை விளித்து விசாரிக்கலானார். அங்ஙனம் நடத்திய விசாரணையில், தலையில்லா முண்டத்தைப் பிடிக்கும் முயற்சியில், அதுவரை எந்தவொரு முன்னேற்றமும் காணப்படாததைக் கண்டு வெகுண்டெழுந்தார். 

“யோவ் ஏட்டு... நீ ஒன்னுக்கும் லாயக்கு இல்லைய்யா... நடவடிக்கை எடுக்கச் சொல்லி மூனு நாளாவுது... ஒரு முன்னேற்றத்தையும் காணாமே...? என்னத்தையா பண்ணிக் கிழிச்சுக்கிட்டு இருக்க நீ...?” என்று சகட்டுமேனிக்கு விளாசினார்.

“அது... வந்துங்கையா... முயற்சி பண்ணிக்கிட்டுதான்... இருக்கேங்கையா...” என்று மென்று விழுங்கினார் ஏட்டு.

“என்னாத்த முயற்சி பண்ணியோ... என்னமோ... போ... எல்லாத்தையும் நானேதான் சொல்லிக் குடுக்கணும் போல...” என்று சலித்துக் கொண்டவர், “இந்தா பாருய்யா... பொது இடங்கள்ள... சந்தேகப் படும்படியா யாரப் பாத்தாலும்... ஒடனே புடிச்சு உள்ள போடுய்யா... என்ன புரியுதா...?” என்று கடுப்புடன் ஒரு ஆலோசனையையும் சொன்னார்.

“ஐயா... எனக்கு அந்த யோசனை முன்னமே தோனிச்சுய்யா... ஆனா... ஐயா உத்தரவு இல்லாம... நா... எப்புடி...” என்றவரை இடைமறித்த சீனிச்சாமி, “அதான்... உத்தரவு குடுத்தாச்சுல்ல... போ... போயி... ஒழுங்கா வேலையைப் பாரு... இன்னும் நாலு  நாள்ல நல்ல சேதி கொண்டாரணும்... என்ன... புரியுதா...?” என்று கறாரான உத்திரவைப் போட்டார்.

“ஆவட்டுங்கையா...” என்று விறைப்பாக அவருக்கு ஒரு சல்யூட்டைப் போட்ட ஏட்டு, அதே வேகத்தில், தன் கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு மேற்படி உத்தரவையும் போட்டார்.

அதுமுதல், நகரில் ஆங்காங்கே சந்தேகப்படும்படி உலவும் ஆட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார்கள். முக்கியமாகப் பிச்சைக்காரர்கள் தான் அதிகக் கெடுபிடிக்கு உள்ளானார்கள். நகரக் காவல் நிலையத்திற்கு எதிரே, இக் காலத்தில் அண்ணா பூ அங்காடியாக இருக்குமிடம், அந்தக் காலத்தில் பேருந்து நிலையமாக இருந்தது. அங்ஙனம், பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த பிச்சைக்கார்கள் தான் இதற்கு முதல் இலக்கானார்கள்.

சம்பவம் நடந்த அன்றைக்கு, ஏட்டையாவின் தலைமையில், பிச்சைக்காரர்களை விரட்டிக் கொண்டிருந்த காவலர்கள், அவர்களை விரட்டியடித்ததோடல்லாமல், அவர்களிடமிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டார்கள்.  அங்ஙனம், தனது பணத்தைப் பறிகொடுத்தவர்களில் குண்டுப் பிச்சைக்காரியும் ஒருத்தி. ஒரு காலத்தில் திருடியாக இருந்து, சில காலம் சிறைத் தண்டனையும் பெற்றிருக்கும் அவள், வயது மூப்பின் காரணமாகத் திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, வயிற்றுப் பிழைப்பிற்காகப்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். பணத்தைப் பறிகொடுத்தவர்கள், காவலர்களுக்குப் பயந்து ஓடி விட்ட நிலையில், இவள் மட்டும், தான் பறிகொடுத்த பணத்தைத் திரும்பத் தரக் கோரி, தைரியமாகக் காவலர்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், அவளைக் கண்டுகொள்ளாத காவலர்கள் அவளை அடித்து விரட்டினார்கள். அங்ஙனம் விரட்டப்பட்டவள், காவலர்கள் கண்ணில் படாமல் பேருந்து நிலையத் தூண் மறைவில் நின்றுகொண்டு அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அனைத்துப் பிச்சைக்காரர்களையும் விரட்டிய பிறகு, அன்றைய வசூலைக் காவலர்கள்  எண்ணிக் கொண்டிருந்தபோது, கையும் பணமுமாக ஏட்டையாவிடம் மாட்டிக்கொண்டார்கள். விளைவு, காவலர்கள் கைகளிலிருந்த அந்தப் பணம் முழுவதும், ஏட்டையாவின் சட்டைப் பைகளில் பத்திரமாகத் தஞ்சம் புகுந்தது. “பிச்சை எடுக்குமாம் பெருமாளு,,, அதைப் புடுங்குமாம் அனுமாரு... இந்தாளு... தானும் திங்கமாட்டான்... தள்ளியும் படுக்க மாட்டான்...” என்று முனுமுனுத்துக் கொண்டே கலைந்துபோனார்கள் காவலர்கள்.

கடமையில் எப்போதும் நேர்மையாக இருக்கும் ஏட்டையாவிற்கு, இதெல்லாம் பிடிக்காது. அவரின் பணி அனுபவத்தில், எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் அவர் கையேந்தியதில்லை. அப்படி அவர் இலவசமாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொண்டாரென்றால், அது, காவல் நிலையத்திற்கு எதிரே, பேருந்து நிலையத்தில் இருக்கும் அலிபாய் “டீ” கடையின், வடைகளும் “டீ”களும் தான். அதுவும், அவர், அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெற்றுக்கொண்டவனவைகள் அல்ல. மாறாக, கடைக்காரர், ஏட்டையாவின் மீது வைத்திருக்கும் மரியாதை நிமித்தம், அவருக்காக வற்புறுத்தித் தரப்படுபவைகளே ஆகும். ஆரம்பத்தில் அதை மறுத்துப் பார்த்த ஏட்டையா, கடைக்காரர் தன்மேல்  வைத்திருக்கும் அபிமானத்தின் பொருட்டு அவைகளை ஏற்றுக் கொண்டார்.

எனவே, அங்ஙனம் கைப்பற்றிய பணத்தை, “மீண்டும் அந்தப் பிச்சைக்காரர்களிடமே பகிர்ந்தளித்து விடலாம் அல்லது அதைத் தன் மேலதிகாரியிடம் ஒப்படைத்து விடலாம்” என்று எண்ணியே அவற்றைத் தன் சட்டைப்பைகளில் வைத்துக் கொண்டார் ஏட்டையா. இவை அனைத்தையும் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருத்த அந்தக் குண்டுப் பிச்சைக்காரி, இதுகாறும் தான் சேமித்து வைத்திருந்த தனது பணத்தைப் பறிகொடுக்க மனமில்லாமல், எப்படியும் அதைக் கைப்பற்றி விடவேண்டுமென்று முடிவு கட்டினாள்.

அன்றைக்கு பணி முடிந்து, அலிபாய் கடையின் வடை “டீ” யைச் சாப்பிட்டு விட்டு, வீட்டிற்குப் போகாமல், காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு நேராக ரோந்திற்குக் கிளம்பிவிட்டார் ஏட்டையா. அங்ஙனம் கிளம்பிய ஏட்டையாவை, அந்தக் குண்டுப் பிச்சைக்காரி, தனது நைந்துபோன கம்பளியைப் போர்த்திக் கொண்டு, அவர் அறியா வண்ணம் பின் தொடரலானாள். ரோந்தின் நடுவில், தன்னை யாரோ பின்தொடர்வதாக ஏட்டு உணர்ந்தாலும், எவ்வளவு முயன்றும் அவரால் அதை உறுதிப்படுத்த இயலவில்லை.

ரோந்து முடிந்து வீட்டிற்குச் சென்ற ஏட்டையா, வெளித்தாழ்வாரத்தில் படுத்த சிறிது நேரத்தில், அங்கு சென்ற பிச்சைக்காரி, அவர் தூங்கும் வரை காத்திருந்தாள். சற்று நேரம் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஏட்டு கண்ணயர்ந்ததற்கு அறிகுறியாக, கட்டிலில் எவ்வித அசைவும் ஏற்படாததை உணர்ந்த அவள், மெதுவாக, வேலிக் கதவைத் திறந்து கொண்டு, பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தாள். அங்ஙனம் நுழைந்தவள், அவர் அருகில் செல்வதற்கு முன்பு, இடையில், சிறிது நேரம் நின்று, நிதானமாக அவருடைய அசைவுகளைக் கவனித்தாள். எந்தவொரு சலனமும் தென்படாமல் போகவே, அவருடைய கால்மாட்டின் அருகில் சென்றவள், அவருடைய கால் சட்டைப் பைகளில் உள்ள பணத்தை எடுப்பது, அவ்வளவு சுலபமில்லை என்பதைத் தன் அனுபவ அறிவின் மூலம் உணர்ந்து கொண்டாள். எனவே, அங்ஙனம் முயற்சிப்பதைக் காட்டிலும், அவருடைய மேல் சட்டைப் பைகளில் உள்ள பணத்தை எடுப்பது மிகவும் சுலபம் என்று தீர்மானித்து, குனிந்த வாக்கில், கைகளை நீட்டி முன்னேறினாள். அங்ஙனம், அவள் முன்னேறிக் கொண்டிருக்கும் போதுதான், தலையில்லா முண்டம் தன்னைக் கொல்ல வருவதாகக் கனவு கண்டுகொண்டிருந்த ஏட்டு, கண்விழித்து, தலையில்லா முண்டத்தை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, தவறுதலாக அந்தப் பிச்சைக்காரியைப் போட்டு அடித்து நொறுக்கிவிட்டார்.

ஏற்கனவே, ஏட்டையாவின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டிருந்த அவரின் மனைவி, நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏட்டையாவின் மேல் அதீதக் கோபத்தில் இருந்தாள். ஏட்டையாவோ மித மிஞ்சிய குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். தலையில்லா முண்டத்தின் பொருட்டு, பிச்சைக்காரி ரூபத்தில், தனது குடும்ப வாழ்க்கையில் இப்படி ஒரு குழப்பம் வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒருவழியாக, அடுத்தநாள் மதியம், மருத்துவமனையில், பிச்சைக்காரி கண் திறக்கவும், அதற்காகவே காத்துக் கிடந்த ஏட்டையா, அவளின் வாயிலாக மேற்படி வரலாற்றை அறிந்து கொண்டார். அதன்பிறகு, அவ்வரலாற்றைத் தன் மனைவியிடம் கூறி, அவளைச் சமாதானப் படுத்துவதற்குள் அவருக்குப் போதும் போதுமென்றாகி விட்டது.

இங்ஙனம், நடந்து போன சம்பவங்களை நினைத்து மிகவும் மனம் நொந்து போனார் ஏட்டு. தலையில்லா முண்டத்தின் பேரில் அவருக்கிருந்த கோபம் முன்னைவிடப் பன்மடங்காக அதிகரித்தது. அதே சமயம், அதைப் பிடித்து லாடம் கட்டவேண்டும் என்ற உறுதியும் அதைவிடப் பன்மடங்கு அதிகரித்தது. அதன் காரணமாகத் தனது வேட்டையை மேலும் தீவிரப் படுத்தினார் அவர்.

அதன்பொருட்டு, மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்து இரண்டொரு நாட்கள் கழித்து, ஒரு அந்தி மாலையில் ரோந்து கிளம்பத் தயாரானார். அப்போதுதான், எதிர்பாரா அந்த சம்பவம் நிகழ்ந்தது. மேற்படி ரோந்திற்கு  காவலர் கந்தசாமியை அழைத்துக் கொண்டு அவர் வீதியில் இறங்கியதுதான் தாமதம், அவர்களுக்கு எதிரே, அளவுகடந்த பீதியில், அலங்கோலமாக  ஒருவன் ஓடி வருவதை அவர் கண்டார்.

அங்ஙனம், தலைதெறிக்க ஓடி வந்தவனை மறித்து, “ஏய்... என்னடா ஆச்சு ஒனக்கு... ஏன்டா இப்புடி பேய் பிசாசக் கண்டவன் மாதிரி ஓடிவார்ற...?” என்று வினவினார் ஏட்டு.

ஏட்டையாவைக் கண்டவுடன், முன்னைவிட அதிகக் கலவரமடைந்த அவன், “த்...த்...த...லை.... த்...த்...த...லை.... ம்...ம்...மு...ண்...ட...ம்.... ம்...ம்...மு...ண்...ட...ம்....” என்று பிதற்ற ஆரம்பித்தான்.

“ஆகா... தலையிலா முண்டம்தான் எங்கயோ வந்துருக்கு போல...” என்று பரபரப்படைந்த ஏட்டு, “ஏய்... என்னடா சொல்லற... எங்கடா பாத்த... சொல்றா...” என்று அவனை அதட்டினார்.

அவர்கள் நின்ற இடத்திற்கு வடக்கு திசையில் கையைக் காட்டிக் கொண்டே, பின்னங்கால் பிடரியில் அடிக்க, தெற்குத் திசை நோக்கி ஓட ஆரம்பித்தான் அவன்.

அவ்வளவுதான், அதற்குமேல் ஒரு நொடி கூடத் தாமதிக்காத ஏட்டு, காவலர் கந்தசாமியை இழுத்துக் கொண்டு, அவன் காட்டிய வடக்கு திசை மார்க்கமாக ஓடலானார். “இன்றைக்கு எப்படியும் தலையில்லா முண்டம் தன்னிடம் சிக்கிவிடும்...” என்று அவர் உள்மனது சொல்லியது. 

அங்ஙனம் இருவரும் அதி விரைவாக ஓடி... சில பல தெருக்களைத் தாண்டி... புதர்மண்டிய காட்டுப் பகுதிக்கு வந்து... அங்கே... தங்கள் பார்வையைச் செலுத்தியவர்கள்... பீதியில்... அப்படியே உறைந்து போனார்கள்...!


வேட்டை தொடரும்...


7 கருத்துகள்:

 1. ஆஹா... நான் ஏட்டின் மனைவிதான் தர்ம அடி வாங்கிவிட்டு திருப்பிக் கொடுப்பாங்கன்னு கற்பனிச்சிருந்தேன். நல்ல ட்விஸ்ட்! பிச்சைக்காரி வந்த வரலாறும், அடி வாங்கிய விதமும் ரசனை! இப்ப... எந்த முண்டத்தைப் பார்த்து அவங்க இப்படி மிரண்டு போனாங்கன்னு இந்த முண்டத்தை முழிக்க வெச்சுட்டியே நைனா...! ஞாயமாப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ப கடையாண்ட வந்து கர்த்து சொல்லிகினதுக்கு ரெம்ப டேங்ஸ்பா... நெக்ஸ்ட் பாகம் குவிக்கா வலை மேலே ஏத்திட்ரேம்பா...

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்கள் ஊக்கமும் ஆதரவும் அளப்பரியது... அடுத்த இடுகை விரைவில்...

   நீக்கு
 3. உங்கள் இடுகையில் வரும் படங்கள்---சூப்பர்!
  தொடருங்கள்...
  இந்த இடுகைக்கு போ..!
  போ! என்றால்?
  போ! என்றால் வோட்டு + 1 போட்டாச்சு என்று அர்த்தம்!
  ஓகே!
  வர்ட்டா!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...