சனி, 9 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 3

முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...
முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

னவிலும் நினைவிலும் காதலியை நினைத்துக் கசிந்துருகும் காதலன் போல, அல்லும் பகலும் ஓயாமல் தலையில்லா முண்டம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார் ஏட்டு எசக்கி. யாரைப் பார்த்தாலும் அவருக்குத் தலையில்லா முண்டம் போலவே தோன்றியது. முக்காடு போட்ட பெண்மணிகள் முதற்கொண்டு, வெயிலுக்குத் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு போவோர் வரை எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க ஆரம்பித்துவிட்டார். சமயத்தில், அவருடைய நிழலும் அவரது சந்தேகப் பார்வைக்குத் தப்பவில்லை.


இங்ஙனம், வீடு மனைவி மக்கள் அனைவரையும் மறந்து, தலையில்லா முண்டப் பைத்தியம் பிடித்து அலையும் ஏட்டையாவைப் பார்த்து, அவரின் மனைவிக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. “தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கிற கதையா... இவ்ளோ நாள் ஒன்னையும் பண்ணிக் கிழிக்காம... இப்ப... ரிட்டையர் ஆவப் போற நேரத்துல, அதப் புடிக்கப் போறேன்... இதப் புடிக்கப் போறேன்னு... வித்தை காட்டிக்கிட்டு இருக்கீங்க...? ஒழுங்கு மரியாதையா மிச்ச இருக்கிற காலத்தை செவனேன்னு ஓட்டிட்டு, உருப்புடுற வழியப் பாருங்க...” என்று, ஏற்கனவே தடிமனான அந்த அம்மாள், தன்னைவிடத் தடிமனான வார்த்தைகளால் எட்டையாவைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

இது எதையும் காதில் வாங்காத ஏட்டு, பணி நேரம் போக, வீட்டிலிருக்கும் மிச்ச மீதி நேரங்களில், விட்டத்தை வெறித்து நோக்கியபடி, தலையில்லா முண்டம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். வீட்டில் மனைவி, குழந்தைகளை நோக்கும் பொது கூட, ஒரு வேளை இவர்கள்தான் தலையில்லா முண்டமாக இருப்பார்களோ என்று கூட யோசிக்கத் தொடங்கிவிட்டார். இவையனைத்திற்கும் உச்சக்கட்டமாக, கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் தலையில்லா முண்டம் தான் அவர் கண்களுக்குத் தெரிந்தது.   நிலைமை இப்படியே போய்க் கொண்டிருந்தால், விரைவில் மனநல மருத்துவமனையில் தான் அவரைச் சேர்க்க நேரிடுமென்று தோன்றியது.

அன்றைக்கு, பணி முடிந்து வீட்டிற்குக் கூடச் செல்லாமல், வழியில் கிடைத்த மாமூல் சிற்றுண்டியோடு, காவலர் கந்தசாமி சகிதம் ரோந்துக்குப் புறப்பட்டுவிட்டார் ஏட்டு. தேய்பிறை இரவில் செருப்புகள் தேயப் பலமணி நேரம் சுற்றியும் ஒரு பலனுமில்லை. ஆனால், அன்றைய ரோந்தில், வழக்கத்திற்கு மாறாக ஒரு வினோத அனுபவம் அவருக்கு ஏற்பட்டது. யாரோ அவரைப் பின்தொடருவது போல் அவருக்கு அடிக்கடி  தோன்றியது. எவ்வளவு முன்னெச்சரிக்கையாய் இருந்தும் அவரால் அதை உறுதி செய்ய இயலவில்லை. முடிவில், மிகுந்த ஏமாற்றத்தோடும் களைப்போடும் அவர் வீட்டிற்குச் செல்லும்போது நடுநிசிக்கும் மேலாகிவிட்டது.

தற்போது உழவர் சந்தையாக இருக்கும் இடத்தில், அந்தக் காலத்தில், அரசாங்க ஊழியர் குடியிருப்பு ஒன்று இருந்தது. அதில் ஒரு வீட்டில் ஏட்டு குடியிருந்தார். வேலிக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனால், முதலில் ஒரு தாழ்வாரமும், அதற்கடுத்து, ஒரு சமையலறையும், படுக்கையறையும் இருக்கும். இரவு அதிக நேரமானதாலும், களைப்பின் மிகுதியாலும், கதைவைத் தட்டி மனைவியைத் தொந்திரவு செய்ய எண்ணமில்லாமல், வெளித் தாழ்வாரத்திலிருந்த  கட்டிலிலேயே கட்டையைச் சாய்த்து விட்டார் ஏட்டையா.

தூக்கம் பிடிக்காமல் அசதியில் உழன்று கொண்டிருந்தவருக்கு, மிகவும் வெறுப்பாக இருந்தது. “இந்தப் பாழாப் போன தலையில்லா முண்டத்தால நம்ம பொழப்பு இப்புடி ஆகிப் போச்சே... அது மட்டும் என் கையில கெடைக்கட்டும்... அப்புறம் இருக்கு வேடிக்கை... அடிக்கிற அடியில அந்து போயிரனும் அந்து...” என்று மனதுக்குள்ளே கருவிக்கொண்டு கிடந்தவர், இறுதியில் லேசாகக் கண்ணயர்ந்தார்.

அங்ஙனம் கண்ணயர்ந்ததுதான் தாமதம், திடீரென்று, அந்த வினோதமான கிரீச்சிடும் ஓசை அவருக்குக் கேட்டது. யாரோ, வேலியின் கதவை மிக மெதுவாகத் திறப்பது போலிருந்தது. ஒரு கணம் திகிலடைந்த ஏட்டையாவை, அவரது காவல்துறை மூளை விரைந்து எச்சரிக்கை செய்தது. அசையாமல், கண்களை மூடிப் படுத்துக்கொண்டே ஓசை வந்த திசையில் கூர்ந்து செவிமடுத்தார் ஏட்டு. க்ரீச்... க்ரீச்... என்ற இரவு நேரப் பூச்சிகளின் ஒலிகளினூடே, யாரோ மெல்ல நுழைந்து வருவது போலிருந்தது. “ஒரு வேளை, ரோந்தில் தன்னைப் பின்தொடர்ந்த ஆசாமி தன்னைத் தேடி இங்கும் வந்துவிட்டானோ...” என்று நினைக்கும் போது, அவரை அறியாமலே அவருடைய தேகம் லேசாக அதிர்ந்தது. அந்த அசைவைக் கவனித்தோ என்னவோ, அதுவரை நடந்து வந்த அந்த உருவம் திடீரென்று நின்றுவிட்டது போலிருந்தது.

சிறிது நேரம் அங்கே கணத்த மௌனம் நிலவியது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்துக்கிடந்தார் ஏட்டு. அவரையே அந்த உருவம் கவனித்துக் கொண்டிருப்பதாக அவரது உள்ளுணர்வு சொல்லியது. அவரது இருதயம் நொடிக்கு நூற்றைம்பது தடவை துடிக்க, அதைவிட வேகமாக அவரது நாடி துடித்துக் கொண்டிருந்தது. இப்படிச் சில நொடிகள் கழிந்தபின், மீண்டும் அந்த உருவம் அசைந்தது. இம்முறை, அது அவரை நோக்கி வருவதாகப்பட்டது. அவ்வளவுதான், அதுவரை அவருக்குள் தைரியமாக இயங்கிக் கொண்டிருந்த காவல்துறை மனது கதி கலங்கிப் போனது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உள் மனது எச்சரிக்க, இனித் தாமதித்தால் ஆபத்து என்று, கண்களைத் திறந்து பார்க்க முயன்றார் அவர். எவ்வளவு தூரம் முயன்றும் அவரால் கண்களைத் திறக்க இயலவில்லை. அதே நேரேம், அவருடைய கால்மாட்டில் அந்த உருவம் அசைவதாக உணர்ந்தவர், கை கால்களை உதறி எழுந்திரிக்க முயன்றார். ஆனால், அவரது கை கால்களை அவரால் அசைக்கக் கூட முடியவில்லை. அவர்மேல் ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்து அமுக்கியது போல் இருந்தது. திமிறிக்கொண்டு எழ முயன்றார். ஒன்றும் பயனில்லை.

வாய் விட்டு அலற முயன்றால் வாயிலிருந்து சத்தமே வரவில்லை. எவ்வளவு முயன்றும் அவரால் தமது கண்களைத் திறக்கவோ, வாய்விட்டு அலறவோ, அல்லது கை கால்களை அசைக்கவோ இயலவில்லை. பெரும் அவதியாக இருந்தது. இறுதியில், தமது முழு பலத்தையும் உபயோகித்து ஒரு திமிறு திமிறவும் அவரது கண்கள் திறந்துகொண்டன. அங்ஙனம் விழிப்பு வந்ததும், தனது வாயிலிருந்து வினோதமான ஒரு ஓசை வருவதையும், தனது கை கால்களைத் தாம் அசைக்க முயலுவதையும் கண்டார் அவர். பிறகுதான் தெரிந்தது, அவ்வளவு நேரம் தாம் கண்டது அத்தனையும் வெறும் கனவு என்று!

ஆனால், அங்ஙனம் அவர் கனவை உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதே நொடி, அவருக்கு முன்னால், மிக மிக அருகாமையில் உண்மையிலேயே கரிய பெரிய உருவம் ஒன்று அசைவது  புலப்பட்டது. மேலும், அது அவரை நோக்கிக் குனிந்த வண்ணம், அவரது கழுத்தைக் குறிவைத்து இரு கைகளையும் விரித்த வாக்கில் வருவதையும் உணர்ந்தார் அவர். அவ்வளவுதான், தன்னைக் கொல்லத் தலையில்லா முண்டம் உண்மையாகவே வந்து விட்டதைக் கண்டு, கனவில் தான் பயந்ததைக் காட்டிலும் அதிகமாகக் கலவரமடைந்தார் ஏட்டு.

இதே, வேறு யாராக இருந்தாலும், இந்நேரம் பயத்தில் உயிரை விட்டிருப்பார்கள். ஆனால், அஞ்சாநெஞ்சம் கொண்ட ஏட்டு, நிலைமையை ஒரு நொடியில் உணர்ந்தவராக, தன்னைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வரும் தலையில்லா முண்டத்தை நோக்கி, குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், தலையில்லா முண்டத்தின் மீது பாய்ந்த உடனே, அதன் கைகளில் கணத்த கம்பளி ஒன்று இருப்பதை நன்கு உணர்ந்தார் அவர். அவருடைய காவல்துறை மூளை அதிவேகமாக வேலை செய்தது. உடனே, அந்தக் கம்பளிப் போர்வையைத் தன் இருகைகளிலும் கெட்டியாகப் பிடித்து, கன நேரத்தில், அதைத் தலையில்லா முண்டத்தின்  மேலேயே போட்டு மூடி, கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்காக அமுக்கிவிட்டார் அவர். திருமலை நாயக்கர் மகால் தூண் போல இருந்த அந்தப் பெரிய உருவத்தை அவரால் முழுதும் வளைத்துப் பிடிக்க இயலவில்லை. எனினும், அது திமிறி ஓடாத வண்ணம் ஒருவிதமான கிடுக்கிப் பிடியாக இருந்தது அவருடைய உடும்புப் பிடி. இவை அனைத்தும் ஒரு இமைப்பொழுதிற்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

இங்ஙனம் தன்மேல் ஒரு தாக்குதல் வரும் என்று தலையில்லா முண்டம் எதிர்பார்க்கவில்லை போலும், அந்த அதிர்ச்சி அதன் உடல் முழுதும் பரவி இருந்ததை  நொடிப் பொழுதில் உணர்ந்தார் ஏட்டு. அடுத்த கணம், ஒரு கையால் அந்த உருவத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டே, மற்றொரு கையை நன்றாக மடக்கி, கோடையிடி குமுறுவது போல், குத்து குத்து என்று குத்திக் குதறிவிட்டார் அவர். அவரது இரும்பு உலக்கை கையிலிருந்து இடியென இறங்கிய அந்தக் குத்துக்களைத் தாங்க இயலாத தலையில்லா  முண்டம் விநோதமாக அலறியது. அவருடைய பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளப் போராடியது. ஆனால், ஏட்டையாவின் அந்த அதிரடித் தாக்குதல், அதுகாறும், தலையில்லா முண்டத்தின் பொருட்டு, அவர் அனுபவித்து வந்த துன்பங்களின் வெளிப்பாடாக இருந்தது. அந்த அசுரத் தாக்குதலிலிருந்து தலையில்லா முண்டத்தால் தப்ப இயலவில்லை.  ஒரு சில வினாடிகளே நீடித்த அந்தத் துவந்த யுத்தத்தின் இறுதியில், பெரிய கருங்குன்று போல இருந்த அந்தத் தலையில்லா முண்டம் செயலிழந்து கீழே விழுந்தது.

இனிமேல் அது தன்னை எதிர்த்துத் தாக்காது என்று உறுதியாக உணர்ந்த ஏட்டு, தாவிச் சென்று மின்சார விளக்கைப் போட்டார். வெளிச்சத்தில் பார்த்தால், போரில் காயம்பட்டு வீழ்ந்த பெரிய யானை போல, கீழே விழுந்து கிடந்தது அந்த உருவம். மிகுந்த எச்சரிக்கையோடு அந்தக் கம்பளிக் குன்றின்பால் நெருங்கிய ஏட்டு, திடீரெனக் கம்பளிக்குள் லேசாக அசைவு தெரிவதைக் கண்டு மிரண்டு போனார். ஒரு கணம், அவரது இதயம் நின்று போனது. அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து மேலெழும்பி வந்து அவருடைய தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று அவரால் தீர்மானிக்க இயலவில்லை. யாரையாவது துணைக்கு அழைக்கலாமா என்றுகூட நினைத்தார். அனால், சிறிது நேரத்தில், அந்த அசைவு நின்று போனது. எனவே, சிறுது தைரியம் பெற்ற ஏட்டு, மெல்ல நெருங்கிச் சென்று... அந்த கம்பளிப் போர்வையை லேசாக விலக்கி... குப்புறக் கிடந்த அந்த உருவத்தைப் பார்த்தார்.... பார்த்தவர்... அப்படியே அதிர்ந்து போனார்...!



வேட்டை தொடரும்...

13 கருத்துகள்:

  1. தொடர்கிறேன்... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. கனவு கண்டு ஏட்டு அலறிய விதமும், அதைத் தொடர்ந்த போராட்டத்தையும் விளக்கிய விதம் நன்று. சுவாரஸ்யம்! ஆனா... இப்படி ஒரு கட்டத்துலபோய் சுவாரஸ்யமா போட்டுட்டீரே நைனா! போர்வைக்குள்ள இருந்தது அவரோட மனைவியா, உயரதிகாரியா, இல்ல... கரடிமணியான்னு ரோசிச்சு ரோசிச்சு ஒரே மெர்சலாப் பூடுச்சுப்பா! சீக்கிரம் சொல்லுங்க...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ப கடையாண்ட வந்து கர்த்து சொல்லிகினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...
      நீ ஒன்னும் மெர்சலாவாதபா... பதிவுக்கு மேட்ச்சா படம் போட்றதுக்கு கொஞ்சம் லேட்டாவுதுபா... நெக்ஸ்ட் பதிவ குவிக்கா வலைல ஏத்திட்றேம்பா...

      நீக்கு
  3. உங்க தலைப்பு: தலை இல்லா முண்டம்!
    தலை இல்லாட்டி தான் முண்டம்.
    இது நடு சென்டர் மாதிரி இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கும்பா... அப்புடிக்கா சொல்லிகினாத்தான் அல்லாருக்கும் பிரியும்பா... இல்லாங்காட்டி அல்லாரும் நம்பளே முட்டான்னு சொல்லிடும்பா...

      நீக்கு
  4. கலக்கலா இருக்கு பா!! தொடர்ந்து வர்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பளை மதிச்சி நம்ப கடையாண்ட வந்து கர்த்து சொல்லிகினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  5. பிராந்தி உள்ளே போனதால் மனப் பிராந்தியா இந்த தலை இல்லா முண்டம் ?
    த.ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்து பிராந்தி இல்லாபா... "வதந்தி"... இப்புடிக்கா ஒரு வதந்தி அந்தக் கால்த்துலே மெய்யாலுமே ரவுண்டு கட்டிகினு இர்ந்துச்சுபா...

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...