சனி, 22 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 3

லகீழா நின்னு தண்ணி குடிச்சுப் பாத்துட்டான் சின்னப்பாண்டி... ம்கூம்... ஒன்னும் வேலைக்கி ஆவலை... அவங்கிட்ட இருந்த பழைய புத்தகம் மொதக்கொண்டு, குப்பையில கெடந்த காயிதம் வரைக்கும் தேடிப் பாத்துட்டான்... ஒன்னும் அம்புடல. வேற வழியில்லாம, “சரி... நம்ப வாத்தியாரக் கேட்டுப் பாக்கலாம்...” னு அவனுக்குத் தோன்றதுக்கே ரெண்டு நாளு ஆயிப்போச்சு...


ஆனா... அதுக்கப்புறமாத்தான் அந்தப் பிரச்சனை வந்துருச்சு... “இதுநா வர, யாரும் அந்தமாறி சந்தேகம்னு ஒன்ன வாத்தியாருக்கிட்ட கேட்டதே இல்லயே... இப்ப நம்பமட்டும் போயி எப்புடிக் கேக்குறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு அவனுக்கு.  அந்தப் பயத்துலயே மேற்கொண்டு ரெண்டு நாளு ஓடிப்போச்சு. “சரி... சனியனத் தெரிஞ்சுக்காட்டித்தான் என்னா...?” ன்னும் லேசுல விட்டுற முடியல. தவியாத் தவிச்சுப் போயிட்டான் பய புள்ள.

கடசில, ஒருவழியா... தைரியத்த வரவச்சுக்கிட்டு, இப்புடி ஒரு வாரமா, தன்னோட நெஞ்சுல சொமந்த பாரத்த, பலவேசம் வாத்தியாருமேல எறக்கி வச்சுப்புட்டான் சின்னப்பாண்டி.

அவரு வாழ்நாள்ல இதுநாவர “அந்த வார்த்தைய” அவரு கேள்விப்பட்டதில்ல. அறிவுப் பசியில புறப்புட்ட அந்த ஆயுதத்தப் பாத்து அரண்டு போயிட்டாரு பலவேசம். காலங்காலமாக் கடைபுடிச்சுக்கிட்டு வந்த தன்னோட கல்விக் கொள்கைக்கி பங்கம் வந்ததக் கூட அவரால தாங்கிக்க முடியும், ஆனா, சின்னப்பாண்டி கேட்ட கேள்விக்கி, தனக்கு பதிலு தெரியலங்கிறதத்தான் அவரால தாங்கிக்க முடியல.

மொதப் பிரச்சனை என்னானாக்க, அவன் கேட்ட “அந்த வார்த்தை” தமிழா இல்ல ஆங்கிலமான்னு அவரால முடிவுகட்ட முடியல. ஆனா, உச்சரிப்ப வச்சுப் பாக்குறப்போ, அது ஏதோ ஒரு ஆங்கில வார்த்தைமாறிதான் இருந்துச்சு. “ஏ பார் ஆப்பிள்... பி பார் பால்...” ன்னு பழய பாடத்துலல்லாம் படிச்சுருக்காரு... ஆனா, இப்புடியாக்கொந்த ஒரு வார்த்தைய, அவரு எந்தப் புத்தகத்துலயும் படிச்சதா அவருக்கு ஞாவகம் இல்ல. “என்னாத்த சொல்றது...? எப்புடி சமாளிக்கிறது...” ன்னு யோசிச்சவரு, “ஒனக்கு எப்புர்றா தெரியும்...?” ன்னு ஆயுதத்த அவெம்மேலேயே லாவகமாத் திருப்பிவிட்டாரு.

“இல்ல சார்... எங்க சொந்தக்காரப் பையன்... டவுன்ல இங்கிலீசு மீடியம் படிக்கிறான் சார்... அவனோட பொதுஅறிவுக் களஞ்சியப் புத்தகத்துல போட்டுருந்துச்சு சார்... நம்ம சமூக அறிவியல் புத்தகத்துல கூட இருக்கும்னு சொன்னான் சார்... ஆனா, அப்புடி ஒன்னும் போடக் காணோமே...  அதான் சார் கேட்டேன்....”

“ஓகோ... அப்படியா...?” அடுத்து என்ன சொல்றதுன்னு அவருக்கு ஒன்னும் பொலப்படல. அங்கதான் அவரோட அனுபவ அறிவு அவருக்குக் கை குடுத்துச்சு. “அப்ப அதுக்குப் பக்கத்துலேயே அது என்னான்னு படம் போட்டுருக்குமேடா...?”  ன்னாரு.

“ம்ம்... ஆமா சார்... படம் போட்டுருந்துச்சு சார்... பாக்குறதுக்கு புசுவாணம் மாறி இருந்துச்சு சார்...” அவரோட அனுபவ அறிவுக்கும் ஆப்பு வக்கிறமாறி இருந்துச்சு அந்தப் பதிலு.

“புசுவாணம் மாதிரி இருந்துச்சா...? இதென்னாடா கொடுமை...? அதுக்கும் சமூக அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்...?” மண்டமூளை கொழம்பிப் போச்சு அவருக்கு.  இதுக்கு மேல என்னாத்த சொல்றதுன்னு தெரியாம அவரு மருகி நிக்கிறதுக்கும், மத்தியானச் சோத்துக்கு மணியடிக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு.

“அப்பாடா... ஒரு வழியாத் தப்பிச்சோம்...” ன்னு நெனச்சவரு, “சரி... சரி... எல்லாரும் சாப்புடப் போங்கடா… அப்புறமாப் பாத்துக்கலாம்...” ன்னு அதிவேகமா வகுப்பக் கலைச்சு விட்டுட்டு, "அந்த வார்த்தை" க்கும் புசு வாணத்துக்குமுண்டான தொடர்பு என்னான்னு அதி தீவிரமாச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரு.

 
மத்தியானச் சோறு ஒழுங்கா எறங்கல அவருக்கு.

அவரைச் சொல்லிக் குத்தமில்லை. அவரு வயசும் சூழலும் அப்புடி. அவரு காலத்துப் படிப்பு முறையும் அனுபவமும் அவருக்குக் கை குடுத்தது அம்புட்டுத்தான். பத்தாததுக்கு, மொத்தப் பள்ளியோட சிலுவயையும் ஒத்தையாளாத் தூக்கிச் சொமக்க வச்சுருச்சு அரசாங்கம். பாவம், பட்டிக்காட்டு வாத்தியாரு, அவரும் என்னதான் பண்ணுவாரு...? இன்னுங் கொஞ்சக் காலத்துக்கு ஒப்பேத்திட்டா போதும்னு இருந்துட்டாரு. அதான், அவர இந்த இக்கட்டுல கொண்டாந்து மாட்டி வுட்டுருச்சு.

மத்தியானச் சோத்துக்கப்புறமா, நெறைய வேலை இருக்காமாறிக் காட்டிக்கிட்டு, பாதிப் பசங்கள வெளாடச் சொல்லிப்புட்டு, மீதிப் பசங்கள, கரும்பலகைக்கெல்லாம் கரி பூசச் சொன்னாரு. ஊமத்த எலைகளயும் அடுப்புப் கரியையும் தண்ணி சேத்து, வண்டிமைய்யிப் பதத்துக்கு அரச்சு, கரும்பலகைக்கெல்லாம் பூசுனது போவ, மீதிய, அவிங்கவிங்க சிலேட்டுகளுக்கு, பசங்க அங்க பூசிக்கிட்டுருக்க, இங்க என்னாடானாக்க, ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்புக்குள்ள அம்புட்டுப் புத்தகங்களையும் அக்கு வேற ஆணி வேறயா அலசிக்கிட்டுருந்தாரு பலவேசம்.

ஒரு துப்பும் கெடைக்கல.  அதுக்குமேல ஆராச்சியத் தொடர்ற வசதி அவரு மனசுலயும் இல்ல, கரட்டுப்பட்டிப் பள்ளிக்கூடத்துலயும் இல்ல. இப்புடி இருக்கப்ப, பள்ளிக்கூட சம்பந்தப்பட்ட வாரக்கடைசி வேலைக வேற, நெசமாவே பூதாகரமா அவரு முன்னாடி நிக்கவும், ஆராய்ச்சிய அந்தரத்துல விட்டுப்புட்டு, அந்த வேலைகள்ல முங்கிப் போனதுனால, மேற்படி “அந்த வார்த்தை” ய வகையா மறந்து போயிட்டாரு பலவேசம்.


பொழுசாய பள்ளிக்கூடத்த மூடிப்புட்டு, வீட்டுக்குக் கெளம்பவும் “அந்த வார்த்தை” திரும்பியும் வந்து மண்டைக்குள்ள பூந்துக்கிச்சு. மண்டமூளையைக் கசக்கிப் புழிஞ்சு பாத்ததுல, மேற்படி வார்த்தையப் பத்துன எந்தக் குறிப்பும் ஞாபகத்துக்கு வரல, ஆனா, வண்டிக்கி பெட்ரோல் போடணும்னு மட்டுந்தான் ஞாபகம் வந்துச்சு.
  
நேரா வீட்டுக்குப் போவாம, பெரியபட்டி பிரிவுல இருக்க பெட்ரோல் பங்க நோக்கிக் கெளம்புனாரு பலவேசம். அக்கம் பக்கத்து ஊருகளுக்கு பெரியபட்டி பிரிவுதான் பேருந்து நிறுத்தம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரெண்டு மூணு டீ கடை,  ஒரு பலசரக்குக் கடை, ரெண்டு பெட்டிக் கடை, ஒரு நெல் அரவை மில்லுன்னு வரிசை கட்டி நிக்க, இந்தப் பக்கமா, ஒரு ஓட்டல் கடை, ரெண்டு சைக்கிள் கடை, ஒரு பெட்ரோலு பங்கு, ஒரு ஆட்டோ ஒர்க்சாப்புன்னு ஒரு குட்டி யாவார ஒலகமே அங்கனக்குள்ள இருந்துச்சு.

வெரசா வர்ற வண்டிக, கேரளாவுக்குக் கொண்டுபோவ அடச்சு வச்ச அடிமாடுக கணக்கா, கொண்டாந்து தள்ளுதுகைய்யா குட்டியும் குளுமானா இருக்க புள்ளைகள. பாவம், பள்ளிக்கூடம் போற வயசுல, பஞ்சு மில்லுக்கு வேலைக்குப் போயிட்டு வருதுக அம்புட்டும். 

அதுல, கரட்டுப்பட்டிப் புள்ளைக அஞ்சாறு, பலவேசம் வாத்தியாரு எதுக்க வர்றதப் பாத்துப்புட்டு, மொகமலந்து போயி, “வணக்கம் சார்...” ன்னு சல்யூட் வக்கிதுக. வழக்கமா சிரிச்சுக்கிட்டே பதிலு வணக்கம் வக்கிறவரு, அன்னைக்கி இருந்த நெலமையில, வணக்கத்துக்கு அறிகுறியா, மண்டைய மட்டும் ஆட்டிப்புட்டு, நேரா பெட்ரோலு பங்குக்குள்ள வண்டிய விட்டாரு.

பெட்ரோலு போட்டுட்டு திரும்பையில, பக்கத்து ஒர்க்சாப்பு பேர்ப்பலகை, அவரு கவனத்த சுண்டியிழுத்து, அவரு மூளைக்குள்ள மின்சாரத்தப் பாய்ச்சுது. “எதைத் தின்னா பித்தம் தெளியும்...” ன்னு இருந்தவருக்கு, “இங்கு ****** செய்து தரப்படும்...” ங்கிற வாசகம் ஏதோ ஒன்ன சூசகமா மின்னலடுச்சுக் காட்டுது.

ஒர்க்சாப்பை உத்துப் பாத்தாரு பலவேசம். நூலுல நெஞ்சதா... இல்ல குருடாயில்ல செஞ்சதான்னு தெரியாத அளவுல, சட்டை போட்டுருந்த மெக்கானிக்கு ஆளுக, புசுவாணத்துலருந்து செதர்ற மத்தாப்பு கணக்கா, தீயும் பொகையும் சீறிப் பாயுற கொழாயக் கைல புடுச்சுக்கிட்டு, பெருசு பெருசான டயருகளக் கீழ போட்டு, ஏதோ வேல செஞ்சுக்கிட்டு இருந்தாக. 
  
வேட்டைக் கண்ணியில ஏதோ சிக்கிறவும், அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க தவதாயப் படுற வேட்டக்காரன் மாறி பரபரத்தாரு பலவேசம். பலகைல பாத்த அந்த வார்த்தையும் தான் பாத்த காட்சியும், “ஏன் நம்பளுக்குள்ள இவ்ளோ கெளர்ச்சிய உண்டுபண்ணுச்சு...” ங்கிறத, சீக்கிரமே அவரு மண்டமூளை தெரிஞ்சுக்கிச்சு.

புசுவாணம் – மத்தாப்பு – “அந்த வார்த்தை” எல்லாத்தையும் அதிவேகமாக் கோத்துப் பாத்து, “ஆகா... நம்ப தேடிக்கிட்டுருக்க அந்த வார்த்தைக்கும், இங்க பாத்த இந்த வார்த்தைக்கும் எதுனா ஒட்டுறவு இருக்குமோ...? இருந்தாலும் இருக்கலாம்... யார் கண்டது...?” ன்னு ஒருகணம் சந்தோசப் பட்ட அவரு மனசு, “ச்சேச்சே... இது என்ன முட்டாள்த்தனம்...? ஏன் இப்புடீலாம் யோசிக்கத் தோணுது...?” ன்னு அவரு மண்டையிலே கொட்டுச்சு.

அவருக்கே ஒன்னும் புரியல. கொஞ்சம் வெக்கமாக் கூட இருந்துச்சு. இருந்தாலும், என்ன ஏதுன்னு தெருஞ்சுக்கிற ஆவல் அவரப் புடிச்சுத் தள்ள, “இருக்கட்டும்... இருக்கட்டும்... அதையுந்தான் பாத்துறலாம்...” ன்னு நேரா ஒர்க்சாப்புக்குள்ள வண்டிய விட்டாரு பலவேசம்.குடைச்சல் தொடரும்...ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 2

சின்னப்பாண்டி அப்புடி என்னதான் கேட்டான்னு தெருஞ்சுக்கனும்னாக்க, நம்ப, போன நாயித்துக் கெழம என்ன நடந்துச்சுன்னு மொதல்ல தெருஞ்சுக்கணும்.

ஊரே கொல்லுன்னு போச்சு அன்னைக்கி...! எப்பயுமே தேர்தலப்பத்தான், ஓட்டுப் போடறதுக்காண்டி, கெழவன் கெழவிகள தூக்கிக்கிட்டுப் போவ பெளசரு வண்டி வரும். இப்ப என்னடானாக்க, ஒத்த வீட்டுக்கு முன்னாடி, பெளசரு வண்டி ஒன்னு வெரசா வந்து நிக்கிது. ஒத்த வீட்டுக் கெழவிய மட்டும் எந்தத் தேர்தலுக்குத் தூக்கிட்டு போவப் போறாகன்னு, ஊரு சனமே வாயப் பொளந்துக்கிட்டு பாக்குது.


வந்தது யாருனாக்க, கெழவியோட மகன் பொன்னுச்சாமி. கரட்டுப்பட்டியோட சரித்திரத்துலயே ரொம்பப் படிச்ச ஒரு ஆளு யாருன்னா... அது இந்தப் பொன்னுச்சாமி தான். எட்டாப்பு வர படிச்சுப்புட்டு, பட்டணத்துல பியூன் வேல பாக்குற ஆளு. பொண்டு புள்ளையோட கெழவியப் பாக்க வந்துருக்கான்.

பெருசுக வாயப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்க, பொடுசுக என்னடானாக்க, வாடக பெளசர வெரட்டிக் கொண்டுபோயி ஊரு எல்லயத் தாண்டி விட்டுட்டுத்தான் திரும்பி வந்தாய்ங்க. வந்தவிங்க, பொன்னுச்சாமி பெத்த புள்ளைகளப் பாத்து வாயப் பொளந்துட்டாய்ங்க.

சும்மா சவுளிக்கட பொம்ம கணக்கா ஒரு பாப்பா, அதுக்குப் பக்கத்துல, வெள்ளயுஞ்சொள்ளையுமா  பட்டணத்துப் பள்ளிக்கூடத்துல படிக்கிற அதோட அண்ணங்காரன்.  கையில ஒரு புத்தகத்த வச்சு பவிசு காட்டிக்கிட்டு இருக்கான்.

“மினுமினுக்குற அவனோட மேனியப் பாக்குறதா...? இல்ல, சுத்தபத்தமா இருக்க அவனோட துணிமணியப் பாக்குறதா...? இல்ல, பளபளன்னு அவங்கையில சொலிக்கிற அந்தப் புத்தகத்தைப் பாக்குறதா...?” ன்னு பாவம் பட்டிக்காட்டுப் பயகளுக்கு ஒன்னும் புரியல. ஆர்வமா அவனையும் அந்தப் பாப்பாவையும் கண்ணுக் கொட்டாம பாத்துக்கிட்டு இருக்காய்ங்க. ஏதோ காட்டுவாசிப் பய கூட்டத்துக்குள்ள சிக்கிக்கிட்டவனாட்டம் அந்தப் பய இவிங்கள பயந்து பயந்து பாத்துக்கிட்டு கெடக்கான்.

மத்தவிங்க என்னத்தப் பாத்தாய்ங்களோ என்னமோ... ஆனா, சின்னப்பாண்டி மட்டும் அந்தப் புத்தகத்தையே பாத்துக்கிட்டு இருந்தான். சின்னப்பாண்டிக்கி படிக்கிறதுனா உசுரு. அவுக வீட்டுல, அவனுக்கு மூத்த புள்ளைகளெல்லாம் ரெண்டாப்புக் கூடத் தாண்டல. அதுக்குள்ளார, அவுக அப்பா அம்மா கூட வேலைக்கிப் போயிட்டாக. இவன மட்டும், கடசிப் புள்ளைங்கிறதுனாலயோ என்னமோ, அஞ்சாப்பு வரை படிக்க விட்டுருக்காக.
 
அந்தப் புத்தகத்தப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தவதாயப்பட்டுப் போயிட்டான் சின்னப்பாண்டி. என்ன இருந்தாலும் நமக்கு இவன் சொந்தக்காரப் பயதானன்னு நெனச்சுக்கிட்டு, தைரியமா வாய விட்டுக் கேட்டுப்புட்டான்...

“டேய்... இது என்ன புத்தகம்டா... இம்புட்டு பளபளப்பா இருக்குது...?”

அதுவரைக்கும், இவிங்களப் பாத்து மெரண்டு போயிக் கெடந்தவன், சினேகமா ஒருத்தன் பேச்சுக் குடுத்ததப் பாத்து சந்தோசப் பட்டுப்போயி, திண்ணையில போயி ஒக்காந்தி, லேசா இவிங்க கூடப் பேச்சுக் குடுத்தான்.

“டேய்... இது... என்சைக்ளோப்பீடியாடா...”

“என்னடா இது புத்தகத்தப் பத்திக் கேட்டாக்க... சைக்கிள்ங்கிறான் பீடிங்கிறான்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “அப்புடீன்னா என்னடா...?” ன்னு வெள்ளந்தியாக் கேட்டான் சின்னப்பாண்டி.

“அடடே ஒனக்கு அதுகூடத் தெரியாதா...?   என்சைக்ளோப்பீடியான்னா... ம்...ம்... என்ன சொல்லறது...?” ன்னு யோசிச்சவன், “அதாண்டா... பொது அறிவுக் களஞ்சியப் புத்தகம்...”

“உள்ள அறிவுக்கே இங்க வழியக் காணாம், இதுல பொது அறிவுக்கு எங்க போறது...?” ன்னு மெரண்டு போன சின்னப்பாண்டி, அவன் சொன்னது பாதி புரிஞ்சும் புரியாமயும் இருக்கவும், “சரி இதுக்கு மேல அதப் பத்திக் கேட்டா நம்ம மானம் போயிரும்...” ன்னு சுதாரிச்சுக்கிட்டு, “அடடே அப்புடியாடா... எங்க எனக்கும் கொஞ்சம் காட்டுரா... பாக்கலாம்...” ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான்.

சின்னப் புள்ளகள்ட்ட இருக்க ஒரு கொணம் என்னானாக்க, தனக்கிட்ட இருக்கிறத பாத்து அடுத்தவுக ஆச்சிரியப் படனும்னு ரொம்ப ஆசப்படுவாக... அதுமாறித்தான் அவனும் தன்னோட புத்தகத்த இந்தப் பசங்க கிட்ட காட்டி பெருமைப் பட்டுக்கனும்னு நெனச்சான்... அதுனால, தனக்கு மட்டும் தெரியிற மாதிரி புத்தகத்த தொறந்து வச்சு ஒவ்வொரு பக்கமாப் பொரட்டிக் காட்டிக்கிட்டு இருந்தான்.

கரட்டுப்பட்டி பயலுகளும் அத முண்டியடிச்சுக்கிட்டு எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாய்ங்க... “டேய் இங்க பார்றா... இந்தப் படம்மாறியே நம்ம புத்தகத்துலயும் இருக்குதுல்லாடா...”

“டேய் இது என்னடா இப்புடி இருக்கு...?”

“அய்யே... இது தெரியாதாடா ஒனக்கு... இதாண்டா... டிவிப் பொட்டி...” ன்னு ஒருத்தன் சொல்லவும், பட்டணத்துக்காரன் கெக்கபெக்கன்னு சிரிக்கிறான்... இவிங்களுக்கா ஒன்னும் புரியல...

“டேய்... அது டிவி பொட்டி இல்லடா... அதுக்கு பேரு வாசிங் மெசின்...”

“வாசிங்கி மெசினா... அப்புடீன்னா என்னாடா...?”

“அடப் பாவிகளா... இது கூடத் தெரியாதா? இது தாண்டா துணி தொவைக்கிற மெசினு... எங்க வீட்டுல இருக்கு... ஒங்க வீட்டுலலாம் இல்லையடா...” ன்னு கேக்கவும்...

எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சுப்புட்டாய்ங்க... ஒடனே சின்னப்பாண்டி... “எங்க ஊருலல்லாம் அதெல்லாம் கெடையாதுடா... நீ அடுத்த பக்கத்துக்குப் போடா...” ன்னு சொன்னான் ஆர்வந் தாங்கமாட்டாம...

அவனும் அடுத்த பக்கத்தத் திருப்புனதுதான் தாமசம்.... கும்பல்ல மூக்கு நோண்டிக்கிட்டே இதெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த ஒருத்தன்... ஆர்வக்கோளாறுல... “டேய் இங்க பார்றா... புசுவானம்...” ன்னு சொல்லிக்கிட்டே மூக்கு நோண்டுன வேரலாலேயே அந்தப் படத்தத் தொட்டுக்காட்டவும்...  அவன் வெரல்ல இருந்த மூக்குப்பீ அந்தப் படத்துமேல ஒட்டிக்கிச்சு... ஒடனே பட்டணத்துக் காரனுக்கு வந்துச்சு பாரு கோவம்... “அய்யே... போங்கடா... டர்ட்டி பசங்களா...” ன்னு சொல்லிக்கிட்டே புத்தகத்த மூடிக்கிட்டான்.

ரொம்ப ஏமாத்தமாப் போச்சு சின்னப்பாண்டிக்கி, “ச்சே... நல்ல நல்ல படமா காட்டிக்கிட்டு வந்தான்... இந்தப் பயலுக அதக் கெடுத்துப் புட்டாய்ங்களே...” ன்னு  ஆதங்கப் பட்டுப் போயி... “டேய் வெளக்கென்ன ஒன்னைய யாருடா அத தொட்டுக் காட்டச் சொன்னது...? இப்பப் பாரு அவன் காட்ட மாட்டிக்கிறான்ல...?” ன்னு கோவமாக் கத்துனான்.

“ஆமா... பெரிய பொல்லாத புத்தகம்... போடா... நீயும் ஒன் புத்தகமும்... டேய் வாங்கடா நாம வெளாடப் போலாம்...” ன்னு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டான் அந்த ஆட்டையக் கலைச்சு விட்டவன்.

சின்னப்பாண்டிக்கி ஏனோ அங்கேர்ந்து போவ மனசு வர்ல... “டேய் அவிங்க போனாப் போறாய்ங்க... நீ எனக்குக் காட்டுரா...” ன்னு கேக்கவும்...

பட்டணத்துக் காரன் ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டான்... “போடா... ஒங்களுக்குக் காட்டப் போயி... எம்புத்தகத்துல அழுக்குப் பண்ணிட்டீங்கள்ல... இனிமே நா காட்ட மாட்டேண்டா போடா...” ன்னு ரொம்பத் திமுராச் சொல்லிப்புட்டான்...

ரொம்பவும் மனசொடஞ்சு போயிட்டான் சின்னப்பாண்டி... “டேய்... அந்தப் படத்துல இருந்தது என்னான்னு மட்டுனாவுது சொல்லுடா...” ன்னு அழாத கொறையாக் கேக்குறான்...

“அதுக்கு பேரு, **** டா...” ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு எந்துருச்சுட்டான் அவன்.

அவன் இங்லீசுல சொன்ன அந்த வார்த்தை ஏதோ ஒரு “முட்டாயி” பேரு மாறி தெரிஞ்சது இவனுக்கு... “டேய் அத இன்னொரு வாட்டி காட்டுரா பாத்துக்குறேன்...” ன்னு கேக்கவும்...

“அதெல்லாம் முடியாது... போடா... இதே மாறி ஒன்னோட சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்... போயிப் பாத்துக்கடா..” ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான் அவன்.

சின்னப்பாண்டிக்கு ஒரே அழுகையா வந்துருச்சு... பட்டணத்துக்காரன் மேல வந்த கோவம் அப்புடியே அந்த மூக்குப்பீ நோண்டுனவன் மேல திரும்பிருச்சு... “அநியாயமா இப்புடி ஆட்டையக் கலைச்சு விட்டுட்டானே...” ன்னு அவன்மேல வந்த ஆத்தரத்துக்கு, அவன் மட்டும் இவன் கைல கெடச்சுருந்தான்... அன்னைக்கி என்னென்னமோ ஆயிருக்கும்.

“சரி போயித் தொலையுறான்...” ன்னு சட்டுன்னு இத விட்டுற முடியலை சின்னப்பாண்டிக்கு, மண்டைக்குள்ளாற ஏதோ புழுவு கொடையுறா மாறி இருந்துச்சு... “ஏதோ புசுவானம் மாறி இருந்துச்சு... சரியாக்கூடப் பாக்கலை... அதுக்குள்ளே மூடிக்கிட்டானே... ஆமா... அதுக்கு என்னமோ, **** ன்னு சொன்னானே... அதக் கண்டுபிடிக்கனும் மொதல்ல...” ன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துருச்சு அவனுக்கு...

“ஆகா... நம்ப சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்ன்னு சொன்னானே...” ன்னு நெனப்பு வரவும்... நழுவுற கால் சட்டைய ஒத்தக் கைல புடிச்சுக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடுறான்யா பய புள்ள வீட்டுக்கு...

அங்க போனாக்க, அவுக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்ட நடந்துக்கிட்டு இருந்துச்சு... இது அவுக வீட்டுல வழக்கமா நடக்குறதுதான்... “இந்த ஊருல இருந்துக்கிட்டு என்னா பண்றது... பேசாம வெளியூருக்குப் போயி எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்...” ன்னு அவுக அப்பா கூப்புடுறதும்... அதுக்கு அவுக அம்மா முடியாதுங்கிறதும்... அவுகளுக்குள்ள வழக்கமா நடக்குற சண்ட...

இயற்கையப் பாத்துதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டானாம் மனுசப்பய. அதுக்குப் பதிலா, அவன் இயற்கைக்கி கத்துக் குடுத்தானம் “குசும்பு
ங்கிற கொணத்த. அதுவும் சந்தோசமா கத்துக்கிட்டு, காலங்காலமா அது கடபுடிச்சுக்கிட்டு வந்த சமத்துவங்கிற கொணத்துல, அதோட குசும்பக் காட்ட ஆரம்பிச்சுச்சாம். வேணாங்க வேணாங்க, வெள்ளக்காரன் நாட்டுல மழயப் பேஞ்சுபுட்டு, வெறுங்கையோட வேகமா ஒடியாந்து, இவிங்க இங்க செத்தாய்ங்களா இல்ல பொழச்சாய்ங்களான்னு பாத்துட்டுப் போயிடுமாம்.

அது மாறி, போற போக்குல, மூத்திரம் பேஞ்சமாறி அது பேஞ்சத வச்சு, இந்த சனங்க எதுனா செஞ்சு பொழச்சுக்க வேண்டியதான். அதுவும் கொஞ்ச நாளக்கித்தான். வாழ்க்க அவுக வயித்துல ஏறி மிதிக்கிறப்ப, வஞ்சகமில்லாம அத ஏத்துக்கிட்டு, வேற வேலைத் தேடி பொறப்புட்டுருவாக. குடும்பத்தோட கொத்தடிமயா ஆந்துராவுக்குப் போறது, இங்க இருந்து கொலபட்டிணியா சாவுறதுக்கு, பேசாம ரோடு போட தாரு பூசிக்கிறதுன்னு, அடிக்கடி கொத்துக் கொத்தா குடும்பங்க அங்க காணாப்போறது ரொம்பச் சகசம்.

ஏதோ சின்னப்பாண்டி செஞ்ச புண்ணியம், எப்பயோ போயிருக்க வேண்டிய அவுக குடும்பம், இன்னமும் இழுத்துப் புடுச்சுக்கிட்டு இருக்குது. அன்னைக்கி என்னமோ அந்த சண்ட ரொம்ப முத்திருச்சு போல... அவுக அம்மாவுக்கு நாலு அடி விழவும்... மூக்கச் சிந்திக்கிட்டே இருந்தவ, வேக வேகமா வீட்டுக்கு ஓடியார சின்னப் பாண்டியப் பாத்ததும்... “எல்லாம் இந்தச் சனியங்களால வர்ற வென தான்...” ன்னு சொல்லிகிட்டே, அவ கடுப்ப சின்னப்பாண்டி முதுகுல காட்டிப்புட்டா...

இப்புடித் திடீர்னு ஒரு இடி அவன் எதிர்பாக்காத நேரத்துல அவன் முதுகுல விழுகவும், ஏற்கனவே அவனுக்குள்ள இருந்த ஆதங்கமெல்லாம் வெடிச்சு அழுவையா வெளிய வந்துருச்சு... நடந்துபோன கலாட்டாவுல, வந்த வேலைய மறந்து, என்ன பன்றதுன்னே தெரியம மருகி நிக்கிறான் புள்ள.

கேவிக் கேவி அழுதுக்கிட்டிருந்தவன் கொஞ்ச நேரத்துல  சுதாரிச்சுக்கிட்டு... பரபரப்பா ஓடிப் போயி... தன்னோட அஞ்சாப்பு சமூக அறிவியல் புத்தகத்த எடுத்து... ஆவலாத் தொறந்து... பக்கம் பக்கமாத் தேடிப்பாக்குறான்...

ஐயோ பாவம்...!

அவன் தேடி வந்த விசயம்... அந்தப் புத்தகத்துல இருக்கிறதுக்கான... அறிகுறியவே காணாம்...!


குடைச்சல் தொடரும்...


செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 1

“திருவாளர் பலவேசம், தலைமை ஆசிரியர், ஊ.ஓ. தொடக்கப் பள்ளி, கரட்டுப்பட்டி” – அன்னைக்கி ரொம்ப மன உளச்சல்ல இருந்தாரு. இன்னுங் கொஞ்ச வருசத்துல ஓய்வாகப் போற நேரத்துல, “தனக்கு இப்புடி ஒரு சோதனை வரும்...” ன்னு அவரு கனவுல கூட நெனச்சுப் பாக்கல. அவரோட இத்தன வருச வாத்தியாரு தொழில் அனுபவத்துல, என்னைக்கும் இப்புடி ஒரு இக்கட்டான நெலைக்கு அவரு ஆளானதே இல்ல. 


கடவூர் சமீனுக்குக் கடங்குடுத்தது போக, சிறுமலையோட சுருக்குப் பையில, சிறுவாடு கணக்கா குந்தியிருக்க ஒரு கரட்டுலதான், இந்தக் கரட்டுப்பட்டி சம்மணம் போட்டு குந்தியிருக்கு. பருவந்தப்பி வர்ற “மழை” வாத்தியாருக்கொசரம் ஏங்கிப்போயிக் கெடக்குற வானம் பாத்த பூமி. அதையும் நம்பி கல்லைப் புழிஞ்சு கஞ்சி குடிக்கிற பாவப்பட்ட சனங்க.

இந்தக் கரட்டுப்பட்டி நாகரிகத்தோட உச்சந்தான், இந்தூரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. ஊருக்கும் சர்க்காருக்கும் எடையில இருக்க ஒரே போக்குவரத்து. “செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்” ன்னு பெரியவுக சொல்லி வச்சுருக்காகளாம். “வயித்துக்கே இங்கே சோறு இல்லாதப்ப செவிக்கு எங்க போயி ஈயறது...?”


இந்தப் பள்ளிக்கூடத்தப் பொருத்த மட்டுல, “மதிய உணவு” திட்டத்துக்கு முந்துன, அதோட வரலாற்றுக் குறிப்புக எதுவும் காணக் கெடைக்கல. “அறிவுப் பசிய வயித்துப் பசி வென்ற” வரலாற்ற, மாணாக்கர்களோட வருகப்பதிவேட்ட வச்சே அறிஞ்சுக்கமுடியுது. 

ஒன்றே குலம்; ஒருவனே தேவன் ன்னு சொல்லுவாகள்ல, அது மாதிரி, ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் ஒரே வகுப்புத்தான்; அதுக்கு ஒரே ஒரு வாத்தியாருதான்; அவருதான் தலைமை ஆசிரியருங்கூட. “ஒரே ஒரு மாணவன்... அவனுக்கு ஒரு வாத்தியாரு...” ன்னு  இன்னைக்கும் பள்ளிக்கூடம்லாம் இருக்குதாம் இந்த நாட்டுல.  அப்புடியில்லாம,  “இப்புடி ஒரு பள்ளிக்கூடம் இருக்குறது எவ்வளவோ மேல்...” ன்னு பெருமப்பட்டுக்குதாம் கல்வித் துறை. 

25 வருசமா, பலவேசம் வாத்தியாருதான் இந்தப் பள்ளிக்கூடத்தக் கட்டிக்காத்துக்கிட்டு வர்றாரு. தன்னோட தெறமையாலும் ஒழைப்பாலும், ஒத்தப் படையில இருந்த மாணாக்கர்களோட வருகப்பதிவ, கால் நூத்துக்கும் மேலாக்கியது, இவரோட அரிய பெரிய சாதன. எடையில அவருக்கு வந்த எடமாத்தல் உத்தரவு, ஊரு மக்களோட எதிர்ப்பால ரத்தாயிப்போனது வரலாறு. அவுக வீட்டுல ஒருத்தரு மாறி, அவரத் தலையில தூக்கிவச்சு கொண்டாடுறாக கரட்டுப்பட்டி சனங்க. அவரு கையில பூந்துக்க நேரம் பாத்து, பள்ளிகூடத்து எல்லயில பதுங்கிக்கெடக்குது தேசிய நல்லாசிரியர் விருது.

இப்புடி பள்ளிக்கூட எல்லவரைக்கும் வந்த அந்த விருது, ஏன் அவருக்கு கெடைக்காம இருக்குன்னா, அதுக்கு அவரோட நேர்மைதாங் காரணம். இந்தமாதிரி விருதுக்கு அவரு பேரும் அடிபடுது...ன்னு அவருக்கு தகவல் வரவும், சம்பந்தப்பட்ட அலுவலகத்துல விசாரிக்கப் போனாரு பலவேசம். அவரத் தனியாக் கூட்டிக்கிட்டு மரத்தடிக்குப் போன சம்பந்தப்பட்ட பெரிய கணக்கன்,

“ஐயா பட்டியல்ல ஒங்க பேரும் இருக்கிறதென்னவோ உண்மதான்... ஆனா போட்டி அதிகமா இருக்கே... இப்ப என்னா பண்றது...?” ன்னு கேக்கவும்,

“அதுக்கென்னா பண்றது...?” ன்னாரு பலவேசம் பரிதாபமா.

“அதுகென்னவா... என்ன இப்புடி சாதாரணமா சொல்றீங்க...? மூணு நோட்டு வரைக்கும் போயிருச்சுங்க...” ன்னு பரபரப்பா சொன்னான் கணக்கன்.

“என்ன மூணு நோட்டு வரைக்கும் போயிருச்சு...? எனக்கு ஒன்னும் புரியலையே...?” ன்னு தலையச் சொரிஞ்சாறு பலவேசம்.

“ஆமாங்க... பட்டியல்ல ஒங்களுக்கு கீழ இருக்கிறவுங்க... மூணு நோட்டு வரைக்கும் குடுக்கத் தாயாரா இருக்காங்க... நீங்க அதுக்கு மேல ஒரு நோட்டு போட்டு குடுத்தீங்கன்னா... ஒங்களுக்கே முடிச்சு விட்டுர்றேன்... அதுவும் எனக்காகக் கேக்கல... நமக்கும் மேல நெறைய பேருக்கு பங்கு இருக்குல்ல... நீங்க என்னா பண்றீங்க... சீக்கிரமே நாலு நோட்ட ஏற்பாடு பண்ணிக்கிட்டு... என்னைய வந்து பாருங்க... நா சுமூகமா முடிச்சுத் தந்தூர்ரேன்...” ன்னு சொல்லவும் தல சுத்திப்போச்சு அவருக்கு.

“அடப்பாவிகளா... இதுலயும் ஒங்க வேலையக் காட்டிப்புட்டீகளா...?” ன்னு நொந்துக்கிட்டே... “போங்கடா நீங்களும் ஒங்க விருதுகளும்... காசு குடுத்துத்தான் இந்த விருத நா வாங்கனும்னா... அப்புடி ஒரு விருதே எனக்கு வேண்டாம்டா...” ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு வந்துட்டாரு.

பத்து மைல் தூரத்துல இருக்க  பெரியபட்டிதான் அவருக்குச் சொந்த ஊரு. அளவுலயும் வசதியிலயும் கரட்டுப்பட்டிக்கு அண்ணன் பெரியபட்டி. குண்டுங்குழியுமாக் கெடக்குற மாட்டுவண்டிப் பாததான் ரெண்டு ஊருக்குமான தொப்புளுக்கொடி ஒறவு. 

படிப்பு வாசன இல்லாத வீட்டுக்காரம்மா, கல்யாணமான ஒரு மக, கல்லூரியில கடைசிவருசம் படிக்கிற ஒரு மகன்னு  அளவான குடும்பம் அவருக்கு. பட்டிணத்துல ஒரு நல்ல உத்தியோகத்துல இருக்காரு மருமகன். அவுக வீட்டுல தங்கி கல்லூரிக்குப் போய்க்கிட்டிருக்கான் வாத்தியாரு மகன். வாரக் கடசியில பேரன் மொதக்கொண்டு அவுக எல்லாரும் பெரியபட்டிக்கு வர்றது வழக்கம். இப்புடி சகல சந்தோசத்தோட, எந்தக்கொறையும் இல்லாமக் காலத்த ஓட்டிக்கிட்டிருந்த அவரு வாழ்க்கையிலதான், அவரு  வெளியில சொல்றதுக்குக்கூட கூசுற மாறி இப்புடி ஒரு சோதன நடந்துபோச்சு.

அன்னைக்கி வெள்ளிக்கெழம. மத்தியானச் சோத்துக்கு மணியடிக்கிற நேரம். வெக்கையா இருக்குன்னு வேப்ப மரத்தடியில நாற்காலியப் போட்டு, அஞ்சாப்பு சமூக அறிவியல் பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு பலவேசம்.  

எந்த வகுப்புப் பாடமுன்னாலும் எல்லாத்துக்கும் பொது ங்கிறது கரட்டுப்பட்டி  பள்ளிக்கூடத்தோட பொதுவுடம விதி. பாடம் நடத்துதுறது ங்கிறது அவரோட அகராதியில, “புத்தகத்துல இருக்கிறத அப்புடியே வாசிச்சுக் காட்டுறது...ங்கிறது தான். கரட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு இதுவே அதிகம்...ங்கிறது அவரு காலங்காலமாகக் கடைபிடிச்சுக்கிட்டு வர்ற கரட்டுப்பட்டிக் கல்விக் கொள்க...

சந்தேகம்ன்னு இதுவர யாரும் இவரக் கேட்டதுமில்லை, பாடத்தை வெளக்கிச் சொல்ற நெலமயும் இவருக்கு வந்ததுமில்ல. ரெண்டு தரப்புமே எல்லக்கோட்டத் தாண்டியறியாத ஒரு கபடி வெளையாட்டு இது. போருக்குத் தயாரா நிக்கிற சேனகளுக்கு எடையில, எல்ல தாண்டா சமாதான உடன்படிக்க மாறித்தான் இந்த “பாடம் நடத்துற படிக்கிற வேல. இதுல யாரு அத்து மீறினாலும் சேதாரம் ரெண்டு பேருக்குமே...ங்கிறது ரெண்டுதரப்புக்குமே தெரிஞ்ச உண்ம.

ஆரம்ப காலத்துல, பலவேசமும் ரொம்ப ஆர்வமாத்தான் சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சாரு. என்ன ஒன்னு, பாசை நரம்புல தமிழாகப்பட்டது பசை போட்டு ஒட்டிக்கிட்டதுனால, ஆங்கிலமும் பொது அறிவும் அவருக்கு எப்பயும் ஒவ்வாது. இருந்தாலும், தன்னோட அனுபவத்த வச்சு எந்தக் கொறையுமில்லாமத்தான் பாடஞ் சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாரு. ஆனா பாருங்க... பட்டிக்காட்டுப் பசங்க, மத்தியான சோத்துல காட்டுன அக்கறய மேற்படி படிப்புல காட்ட மாட்டேன்னுட்டாய்ங்க. பாவம் அவரும் என்ன பண்ணுவாரு, சரிதான்... இவிங்களுக்கு இதுக்குமேல என்னாத்த சொல்றது...? இவிங்க பள்ளிக்கூடம் வர்றதே பெரிய விசயம்... படிடா படிடான்னு நெம்புனா... போங்கடா நீங்களும் ஒங்க படிப்பும்ன்னு சொல்லி ஓடிப்போய்ட்டா என்னா பண்றது...? ன்னு பயந்துக்கிட்டு பேசாம விட்டுட்டாரு.

அவரச் சொல்லியும் குத்தமில்ல. ஒத்தை ஆளு மொத்தப் பள்ளிக்கூடத்தயும் முதுகுல வச்சுத் தாங்குறதால, மத்ததப் பத்தி யோசிக்க நேரமில்ல. தனியா ஒக்காந்தி ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதக் காட்டியும், தன்ன நம்பி வந்தவிங்கள தவிக்க விட்டுறக் கூடாதுங்கிறதுல குறியா இருந்துட்டாரு.  

சமச்சீர் கல்வி வந்ததுல இருந்து,  பாடப் புத்தகத்தோட சரக்கெல்லாம் முழுசா மாறிப்போயி, அதோட தரம், தன்னோட படிப்புக்கும் அனுபவத்துக்கும் சவால் விடுறது கணக்கா இருக்கிறத நெனச்சு, ஏற்கனவே ரொம்ப மனக்கிலேசப்பட்டுக் கெடந்தாரு பலவேசம். இருந்தாலும், கரட்டுப்பட்டிக் கல்விக் கொள்க மேல, தான் வச்சிருந்த அசைக்கமுடியாத நம்பிக்க, என்னைக்கும் வீணாப்போவாது...ன்னு இதுநாவர இறுமாந்து இருந்துட்டாரு. 

இப்புடி இருக்கப்பத்தான், வெள்ளிக்கெழம அதுவுமாப் பாத்து, வெள்ளக்கொடிக்கி வேலையில்லாமப் பண்ணிப்புட்டான் சின்னப் பாண்டி...! அவரு அசந்த நேரமாப் பாத்து... ஆர்வக் கோளாறுல... அப்புடி ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டான்...!   


குடைச்சல் தொடரும்...

Related Posts Plugin for WordPress, Blogger...