ஞாயிறு, 3 நவம்பர், 2013

தலை இல்லா முண்டம் - பாகம் 2


முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...


முன் குறிப்பு: இப்பதிவில்  வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.


ப்படி, ஊரே தலையில்லா முண்டத்தின் பொருட்டு அல்லோகலல்லோகப் பட்டுக் கொண்டிருக்கையில், “கரடி” மணி மட்டும் மிகுந்த களிப்பில் இருந்தான்.
 

கரடிமணி, அந்தக் காலத்தில், சிறு மலையை ஒட்டிய பட்டி தொட்டிகளிலெல்லாம் அட்டகாசம் செய்துகொண்டிருந்த பிரசித்தி பெற்ற திருடன். புல்லுக் கட்டைப் படுக்கப் போட்டது போன்ற முரட்டு மீசை, அரிவாளைத் தொங்க விட்டது போன்ற கிருதாக்கள், கடைந்தெடுத்த கருந்தேக்குக் கட்டைபோல் தேகம், உலக்கை போன்ற கை கால்கள் என்று பெருந் திருடனுக்கேற்ற சகல லட்சனங்களும் பொருந்திய முரட்டு ஆசாமி.


நினைவு தெரிந்த நாளிலிருந்து திருட்டுதான் அவனுக்குத் தொழில். ஆடு, மாடு, கோழி, பம்ப்பு செட் முதற்கொண்டு பஞ்சாரம் களவாடுதல் வரை சில்லறைத் திருட்டுக்களில் அவன் கில்லாடி. ஒண்டிக் கட்டை. யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை. கையிருப்பு இருக்கும்வரை மனம்போன போக்கில் ஊதாரியாகத் திரிவான். நாட்டின் நிதி மந்திரிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், இவனிடம் பிச்சை வாங்கவேண்டும். அந்த அளவிற்கு, பொருளாதாரப் பற்றாக்குறை இல்லாமல் பிழைப்பு நடத்தும் விசயத்தில் மிகவும் கெட்டிக்காரன்.
 

பெரும்பாலும், கிராமப் புறங்களிலேயே அவனது கைவரிசை பலமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட கட்டுக்காவலையும் மீறித் திருடுவதில் கைதேர்ந்தவன். ஆனால், அசிரத்தையின் காரணமாகத் தப்பிச் செல்லும் தொழில்நுட்பத்தில்தான் சிறு கோளாறு அவனிடமிருந்தது. சில பல திருட்டுகளில் மாட்டிக்கொண்டு சிறைத் தண்டனையும் பெற்றிருக்கின்றான். சிலகாலச் சிறை வாழ்க்கையின் பயனாக, பாம்பின் கால் பாம்பறிவதுபோல், காவல்துறையின் நேக்குப் போக்குகளை அவன் நன்றாக அறிந்து கொண்டான். அதுமுதல், அவனுடைய தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க முனேற்றம் காணப்பட்டது. லாவகமாதத் திருடுவதிலும், அதைவிட லாவகமாதத் தப்பிச் செல்வதிலும் தன்னிகரற்று விளங்கலானான்.

காலப்போக்கில், எலெக்சனில் செயித்த எட்டாங்கிளாஸ் எம்.எல்.ஏ, திடீரென்று எம்.ஏ பட்டதாரியாவதைப் போல, சிறு சிறு சில்லறைத் திருட்டுக்களுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, திடீரெனப் பெருங்கொண்ட திருட்டுகளை நிகழ்த்திவிட்டு, காவல் துறையிடம் அகப்படாமல் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனைப் பிடிக்க, காவல்துறை விரித்த வலை விரித்தபடி கிடக்க, அதுவரை, ஒரு சுண்டெலி கூட அதில் அகப்படாமல் இருந்தது.

ஊரில் அனைவரும் தலையில்லா முண்டத்தின் பீதியில் முடங்கிக் கிடக்க, அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட கரடிமணி, ஒரு கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு, தனது கைவரிசையின் நீள அகலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான்.

அங்ஙனம் ஒருநாள், அகால நேரத்தில், கோழி திருடலாமென்று ஒரு வீட்டின் கொல்லைப்பக்கம் அவன் போக, அந்த நேரம் பார்த்து, கொல்லைக்கு ஒதுங்க வந்த அவ்வீட்டுப் பெண், தலையில்லா முண்டம் வந்துவிட்டதென்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓட, வந்த வேலையை மறந்து திகைத்து நின்றுவிட்டான் கரடிமணி.

“என்னடா இது... புள்ளையார் புடிக்கப் போய் கொரங்கப் புடிச்ச கதையால்ல இருக்கு... கோழி புடிக்கலாம்னு வந்தாக்க... நம்பளப் பாத்து, தலையில்லா முண்டம்னு நெனச்சுல்ல பயந்து ஓடுறாய்ங்க... அடடே... இது கூட நல்லாத்தான் இருக்கு...” என்று மிகவும் உற்சாகமானான் கரடிமணி.

அதுமுதல், தலையில்லா முண்டத்தின் பெயரைச் சொல்லி திருடுவதைக் காட்டிலும், அதை வைத்து, மக்களைப் பயமுறுத்தும் செயல்களில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினான் அவன். ஒரு கட்டத்தில், அதுவே, அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காகி விட்டது.

அப்படித்தான் அன்றொருநாள், சிறுமலைச் சாரலில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு கும்பலை, கதிகலங்கடித்து விட்டான் கரடிமணி. அந்தி சாய்ந்த வேளையில், கம்பளியைப் போர்த்திக் கொண்டு, அவர்களின் அருகாமையிலிருந்த புதர்களில் மறைந்து கொண்டு,  திடீரென ஊளையிட்டுக் கொண்டு வெளிப்படுவதும், பின், மறைந்து கொள்வதுமாய்ப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தான். எப்பொழுதும் அரைப் போதையில் இருக்கும் அக்கும்பல், அவனைப் பார்த்து, தலையில்லா முண்டமென நினைத்து, பீதியில் போட்டது போட்டபடி கிடக்க சிதறி ஓடிப் போனது. அன்றைக்கு,  வயிறுமுட்ட சுடச்சுடச் சாராயத்தைக் குடித்துவிட்டு உருண்டு கொண்டே மலையிறங்கினான் கரடிமணி.சிறுமலை அடிவாரக் கிராமங்கள், திராட்சை மற்றும் பலவிதமான மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயத்திற்கு மிகவும் பெயர் பெற்றவை. குறிப்பாக, மல்லிகை, ரோசா, கனகாம்பரம், காக்கரட்டான், அரளிப்பூ, சாதிப்பூ போன்ற மலர்களின் உற்பத்திதான், அவர்களின் பொருளாதாரத்திற்கு அடிப்படை ஆதாரம். பொதுவாக, அதிகாலை முதலே மங்கலான வெளிச்சத்தில், வயல்களிலுள்ள பூச்செடிகளிலிருந்து,  பூக்கள் எடுக்கும் பணியைத் துவக்கிவிடுவார்கள் அப்பக்கத்து விவசாயிகள்.

அங்ஙனம் ஒருநாள், வெள்ளோடு கிராமத்திற்கும் சிறுமலைக்கும் இடைப்பட்ட தோட்டங்களில், வழக்கம்போல, மும்மரமாகப் பூக்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள் விவசாயிகள். திடீரென்று, விநோதமாக ஊளையிட்டுக்கொண்டு தலையில்லா முண்டம் அவர்களிடையே தோன்றவும், ஏற்கனவே, தலையில்லா முண்டம் பற்றிய அச்சத்தில் இருந்தவர்கள், அதை நேரில் பார்த்ததும், பீதியில் அலறியபடியே ஓட்டம் பிடித்தார்கள். அவர்களுக்கு முன்னே அதிவிரைவாக ஓடிய அந்தச் செய்தியானது, மேற்கே சின்னாளபட்டி முதல், கிழக்கே அஞ்சுகுழிப்பட்டி வரை, சிறுமலை அடிவார விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டுபண்ணியது.

அதுமுதல், சாமத்தில் வேலைக்குச் செல்ல பயந்துகொண்டு, நன்கு விடிந்ததும் பூக்கள் எடுக்கத் தலைப்பட்டார்கள் விவசாயிகள். ஆனால், சூரியன் வருமுன் பூக்களை எடுத்து, ஓலைக் கூடைகளில் நிரப்பி, முதல் பேருந்தைப் பிடித்தோ அல்லது மிதிவண்டியில் வைத்தோ, நேரத்தில் திண்டுக்கல்லுக்கு எடுத்துச் சென்றால்தான், பூச்சந்தையில் ஏலம் விட்டு அவற்றை விற்பனை செய்ய முடியும். கரடிமணியின் கைங்கரியத்தினால், அங்ஙனம் செய்யமுடியாமல் திணறிப்போனார்கள் விவசாயிகள். தாமதமாகச் சந்தைக்கு எடுத்துச் சென்றால், வாடிய பூக்களை வாங்க மறுத்து விட்டார்கள் வியாபாரிகள். விளைவு, மாவட்டத்தின் தேவை போக, பிற ஊர்களுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த பூ வியாபாரம் படுத்துவிட்டது.

திண்டு மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மலர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. தலையில்லா முண்டத்தின் நிமித்தம், பெண்களெல்லாம், பூவில்லாத நார்களைத் தலையில் சூடிக்கொண்டு திரிந்தார்கள். மலர்களை நம்பியிருந்த மாலை கட்டும் தொழில் பெரும் இழப்பைச் சந்தித்தது. அதுமுதல், கோவில் குளம், விசேசம் என, எங்கும், மாலைக்குத் தட்டுப்பாடாகி,  அதற்கு மாற்றாக, சந்தன மாலையும் எலுமிச்சம் பழமும் உபயோகத்திற்கு வந்தன. அதற்கும் வழியில்லாதவர்கள், நாலு முழம் துண்டு, வாழை மட்டை நார், இலைதழைக் கொடிகள் என்று தரைமட்டத்திற்கும் கீழே தாழ்ந்து போனார்கள்.

இங்ஙனம், தலையில்லா முண்டத்தின் பேரில், கரடிமணியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆட்டுக்கிடை மறிப்பவர்கள், அயலூர்க்கார்கள், இரவில் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளானார்கள். ஒத்தையடிப் பாதையில் போவோர் வருவோர் முதற்கொண்டு, எப்போதாவது அவரசத் தந்தி கொணரும் தபால்காரர் வரை ஒருவரையும் விட்டுவைக்கவில்லை அவன். கிராமங்களில் பாதிப்பேர் நடுக்கு சுரம் வந்து படுத்த படுக்கையாகிப் போனார்கள். அதற்குமேல் அங்கே பயமுறுத்த ஆட்கள் இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

ஒரு கட்டத்தில், அடுத்து பயமுறுத்த ஆள் இல்லாத நிலையில், அவனுக்கே இந்த விளையாட்டு சலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, அடுத்தகட்டமாக, என்ன செய்யலாமென்று, அஞ்சுகுழிப்பட்டி பூசாரியிடம் ஆலோசனை கேட்கப்போனான் கரடிமணி.

“மகனே, பட்டி தொட்டியலாம் ஒனக்கு இனிமே சரிப்பட்டு வராது, பட்டணத்துப்பக்கம் போகச்சொல்றான் கருப்பன்... நெறைஞ்ச அமாவசை அன்னைக்கி... வடக்குவாச வழியா பட்டணப்பிரவேசம் வச்சுக்க... நெனச்ச காரியம் கைகூடும்..."
என்று குறி சொன்ன பூசாரி, "ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு மகனே...”  என்று இடையில் ஒரு இக்கன்னா வைக்கவும், பதறிப் போய் விட்டான் கரடிமணி.

"சிக்கல் தீர எதுனா பரிகாரம் இருக்கா சாமி...?" என்று தன் எண் சான் உடம்பை ஒரு சானாகக் குறுக்கிக் கொண்டு பவ்யமாகக் கேட்டான் கரடிமணி.

அவனை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்த பூசாரி, "ஆமா... அதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு மகனே... நல்லா கேட்டுக்க... தொழில்ல வர்ற மொதல் லாபத்துல, கருப்பனுக்கும் ஒரு பங்கு குடுத்துரனும்... தெரிஞ்சுதா...?" என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

தலையில்லா முண்டத்தில் பெயரால், நகர மக்களையும் அச்சமூட்டத்தான் முதலில் ஆசைப்பட்டான் கரடிமணி, ஆனால், பூசாரியின் கட்டளையால், தனது திட்டத்தில் சிறு மாறுதலைச் செய்ய உத்தேசித்தான் அவன். "டவுனுக்குள்ள போனதும் மொதல்ல ஒரு திருட்ட நடத்திப்புடனும்... அப்பத்தான்... பூசாரி சொன்னாமாரி... மொத லாபத்துல பங்கு குடுக்க முடியும்... என்ன ஆனாலும் சரி, சாமி குத்தத்துக்கு மட்டும் ஆளாயிரக் கூடாது..." என்று மனதிற்குள் உறுதிபூண்டான் அவன். 


எனவே, எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று மல்லாந்து படுத்து யோசித்தவன், “திண்டுக்கல் டவுனுக்குள்ள ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்... வடக்க, திருச்சிரோடு மார்க்கமா போனா, காட்டஸ்பத்திரி வரும்... ஆனா... அது எப்பப்பாத்தாலும்  சலசலப்பா இருக்கும்... அதுக்கும் மேல வடக்க போனாக்க... என்.ஜி.ஓ காலனி வரும்... ஆமா... அதான் சரியான எடம்... டவுனுக்கு டவுனு மாரியும் இருக்கும்... ஒதுக்குப்பொறமாவும் இருக்கும்... பலே... பலே... இதான் சரியா வரும்...” என்று ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.

இங்ஙனம், என்.ஜி.ஓ. காலனிக்குள் நுழைவதென்று தீர்மானித்தபின், அடுத்து வரப்போகும் அமாவாசைக்காக, ஆவலோடு, கம்பளியும் கையுமாகக் காத்துக்கிடந்தான்  கரடிமணி.வேட்டை தொடரும்...


10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...! தொடருகிறேன்... தங்கள் ஆதரவிற்கு மீண்டும் நன்றி...

   நீக்கு
 2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... ஆனால் தளம் .in என்று முடிவதால் ஓட்டு அளிக்க முடியவில்லை...

  dindiguldhanabalan@yahoo.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பிரச்சனை குறித்து தங்களுக்கு ஒரு மினஞ்சல் அனுப்பியுள்ளேன்... தங்கள் ஆலோசனை கிடைத்தால் மிக்க மகிழ்வேன்... நன்றி!

   நீக்கு
  2. url ல் மாற்றம் செய்துள்ளேன், தற்பொழுது ஓட்டளிக்க முயற்சி செய்து பார்க்கவும். இன்னும் குறை நிவர்த்தியாகாமல் இருந்தால் தயை கூர்ந்து தெரியப்படுத்தவும். நன்றி!

   நீக்கு
 3. தமிழ் மனம் வோட்டு பிளஸ் +1 போட்டுட்டன்!
  மன்னிக்கவேண்டும்! இனி தான் உங்கள் பதிவை படிக்கவேண்டும்!
  __________________________
  இனி படிச்சு உங்கள் இடுகையை பற்றி கருத்து சொல்கிறேறேன். ஏன் இப்படி எல்லோருக்கும் மொய் வைக்கிறேன் என்றால், மக்களுக்கு உண்மையை புரிய வைக்க. படியுங்கள் மேலே...

  இன்றும் என்னால் 25 duplicate ID வைத்து, என் இடுகையை வெளியீட்ட உடனே மகுடம் ஏற்ற முடியும். அது தேவை இல்லை. உண்மையை புரிய வைக்கவே இப்படி மொய் வைத்தேன். தெரியட்டும் எல்லோருக்கும் என்ற எண்ணமே.

  என் இடுகைகள் எல்லாம்"குப்பைகள்'" என்று எனக்கு நன்றாக தெரியும். எனக்கு வோட்டு போடாதினால் வந்த கோபம் அல்ல; அல்லவே அல்ல! பின் ஏன் நான் இப்படி செய்யணும்.

  காரணம்---நான் மதிக்கும் நல்ல பதிவர்கள் மிக மிக நல்லா எழுதும் பதிவர்கள் முறையே, சார்வாகன், ஜெயதேவ் தாஸ், துளசி கோபால், இக்பால் செல்வன், அமுதவன், மற்றும் பலர் எழுதும் இடுகைகள் தமிழமணம் மகுடம் ஏறாததில் எனக்கு கோபம்,

  அவர்கள் பல இடுகைகள் கட்டாயம் தமிழ்மணம் ஏறி இருக்க வேண்டும்.! ஆனால் எனக்கு தெரிந்து இவர்கள் பதிவு மகுடம் ஏறவில்லை---Shame on Tamilmanam

  முழு பதிவு என் வலையில் வரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நம்பள்கி அவர்களே!
   தமிழ்மணத்திற்கு நான் புதியவன், இப்படியெல்லாம் மோசம் நடக்கின்றது என்பதை அறிகையில் அதிர்ச்சியாய் இருக்கிறது. தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... தங்கள் கோபம் மிக ஞாயமானதே... தங்கள் தரப்பை நான் ஆதரிக்கின்றேன்...
   தங்களைத் தொடர்கின்றேன்... தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 4. வதந்திகள் பரவும் வேகத்தையும், அதனால் பலர் குளிர் காய்ந்து லாபமடைவதையும் படிக்கும்போது ஜனங்களின் மனநிலையை எண்ணி சிரிப்புத்தான் வருது. கரடி மணியின் கதை சுவாரஸ்யமாவே இருக்கு. தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பால கணேஷ் அவர்களே...!

   நீக்கு
 5. தொடரில் நானும் பயணிக்கிறேன். வாழ்த்துக்கள் நைனா...

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...