சனி, 12 அக்டோபர், 2013

வருத்தமில்லா வாலிபர் சங்கம்...


ர்த் திடலின் தென்மேற்கு மூலையில் யாராலோ எதற்காகவோ எப்போதோ நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடம். குட்டிச்சுவர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்த இடம் எட்டுக்கு எட்டில் ஏறக்குறைய சதுரமாக கருங்கல் செங்கல் செம்மண் கொண்டு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, வடக்குப் பார்த்த ஒரு வாயில் மற்றும் கிழக்குப் பார்த்த ஒரு சன்னலுக்குமான திறப்புமாக, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிந்துச் சமவெளி வீடு போல இடுப்புயர அளவில் சிதிலமடைந்து கிடக்கும். திடலைப் பார்த்த வாயிலின் முன்புறம் சுமார் பதினைந்திற்குப் பதினைந்தில் ஒரு மண்மேடையின் சிதைந்த வாழ்வு தென்படும்.
 
பஞ்சாயத்துத் தொலைக்காட்சிப் பெட்டி பிறப்பதற்கு முந்தைய காலம். பொழுதுபோக்கிற்காக மக்கள் திண்ணைகளையே நம்பியிருந்த நேரம். மார்கழி மாதக் கடைசியில், நாய் கூட ஒதுங்க யோசிக்கும் புதர் மண்டிக் கிடக்கும் எங்கள் ஊர்க் குட்டிச்சுவருக்கு திடீரென்று மவுசு வந்துவிடும்.

அதுவரை அந்த வாலிபர்கள் எந்த சந்தில் இருந்தார்கள் என்றுகூடத் தெரியாது. கையில் ஒரு கால் குயர் நோட்டை எடுத்துக்கொண்டு வீடு வீடாக வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள். மக்களும், ஏதோ தங்கள் அன்றாட வாழ்வில் அதுவும் ஒரு கடமை என்பது போல் முகம் சுளிக்காமல் கையில் கண்டதை அன்பளிப்பாக எழுதிவிட்டு, ஆவலோடு வரப்போகும் அந்த  விழா நாளுக்காகக் காத்திருப்பார்கள்.

வசூல் முடிந்த கையோடு, வாலிபர்கள் தங்களின்  முதல் காரியமாகத் திடலில் விளயாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கொண்டு புதர் ஒழிப்புப் போராட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்வார்கள். போராட்டத்தின்  முடிவில், சவரம் பண்ணின வசூல் ராஜா ஆனந்த் சார் போல் ஒரு புதுப் பொலிவுடன் குட்டிச்சுவர் காணக் கிடைக்கும்.

பிறகு, மளமளவெனக் காரியங்கள் நடந்தேறும்.  குட்டிச்சுவரும் மண்மேடையும் தற்காலிகமாக மராமத்து  பார்க்கப்படும். மண்மேடையை உத்தேசமாக வைத்து பச்சைத் தென்னை ஓலைகளைக் கொண்டு ஒரு திடீர்ப் பந்தல் போடப்பட்டு, மாவிலை வேப்பிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்படும். பந்தக் கால்களில் பசுமையான கரும்புத் தட்டைகளும் வாழை இலைகளும் கட்டப்படும்.
 
அதுவரை சீக்காளிக் கிழவன் போல் படுத்துக்கிடந்த ஊர் ஒருவிதக்கிளர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடும்.

குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் மாலை, மைக் செட் மாடசாமி தனது சகாக்களுடன் மாட்டு வண்டியில் வந்து சேருவார். ஊர்க்கொடிமரம் உயரமான மொட்டை மாடி சாலையோரப் புளியமரம் என்று ஒன்று விடாமல் கொண்டை வைத்த ஒலிப்பெருக்கிக் குழாய்களை அவற்றின்மேல் கட்டுவார்.  பந்தலில் குத்துவிளக்கு சீரியல் செட் ட்யுப் லைட் எல்லாம் போடுவார்.

அலிபாபா திருடர்களின் பொக்கிச பெட்டி போல் ஒரு பெரிய மரப்பெட்டி வைத்திருப்பார். கூடவே லேகியம் விற்பவன் பெட்டிபோல் வெல்வெட் அலங்காரத்தில் ஒரு சின்ன பெட்டியும் இருக்கும். பெரிய பெட்டியில் திரைப்படப் பெயர் மற்றும் படங்கள் போட்ட கெட்டிக் காகித உறைகளில் கருமுறுக்குக் கோடுகள் பதிந்த வட்டவடிவ இசைத்தட்டுக்கள் இருக்கும். ஒவ்வொரு இசைத் தட்டிலும் 33, 45, 78 என்று நிமிடத்திற்கு இத்தனை சுற்று சுற்ற வேண்டும் என்ற குறியீட்டு எண்கள் இருக்கும். லேகியப் பெட்டியில் அதே எண்களைக் குறிக்கும் சிறிய வட்டவடிவிலான திருகு குமிழ் ஒன்றும், இசைத்தட்டுக்களை வைக்க ஒரு வட்டமான மேடையும், அதைச் சுற்றி விட ஒரு கைப்பிடி விசையும் இருக்கும். இசைத்தட்டை அதில் வைத்துச் சுற்றிவிட்டு, முனையில் ஊசி கொண்ட ஒரு தண்டை எடுத்துத் தட்டின் மையப் பகுதியில் ஆரம்பிக்கும் முறுக்குக் கோட்டின் மேல் வைத்தாரானால், டி.எம்.எஸ்சும் சுசிலாவும் கொண்டை வைத்த குழாய் வழியாக எம்.எஸ்.வி பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்துவார்கள்.

முதலில் சாங்கியத்திற்கு ஒரு சாமி பாட்டு போடும் மாடசாமி, அதன்பின் அன்றைய தேதியில் வெளியான திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவார். சுனங்கிவிடும் பாடகர்களை சுறுசுறுப்பாக்க அவ்வப்போது கைப்பிடி வைத்தியமும் செய்துகொண்டிருப்பார். நழுவும் கால் சட்டையும் ஒழுகும் மூக்குமாய்ச் சுற்றி நிற்கும் சிறுவர்கள், இந்த அதிசய விஞ்ஞானியையும் அவர் சாகசங்களையும் திறந்த வாய் மூடாமல் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுவார்கள்.

இதற்கிடையில், கழகக் கட்சிகளின் மாணவரணி இளைஞரணித் தாத்தாக்கள் போலல்லாது, சற்றே இளைஞராகவே தோற்றமளிக்கும் சங்கத்தின் தலைவராகப் பாவிக்கப்படும் ஒரு நபர் அன்பார்ந்த பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் எங்களது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...என்ற ரீதியில் நீட்டி முழக்கி ஏற்ற இறக்கங்களோடு அறிவிப்பார்.

அவ்வப்போது கல்யாணம் காதுகுத்து பூப்புனித நீராட்டுவிழா  தேர்த்திருவிழா போன்ற வைபவங்களுக்கு குறைந்த செலவில் நிறைவாக ஒலி அண்ட் ஒளி அமைத்துக் கொடுப்பது உங்கள் மாடசாமி சவுண்டு சர்வீஸ்... சவுண்டு சர்வீஸ்... சர்வீஸ்... ஸ்...என்று எக்கோ எப்பெக்ட்டில் மைக் செட் மாடசாமியின் விளம்பரமும் இருக்கும்.

இந்த மாதிரி நல்லது கெட்டது காரியங்களில் ஒலிப்பெருக்கி அமைப்பதென்பது கிராமத்து வழக்கங்களில் மிக மிக இன்றியமையாத ஒன்று. எங்கள் ஊரில் எங்கெல்லாம் ஒலிப்பெருக்கி வைக்கின்றார்களோ அங்கெல்லாம் இரண்டு பேர் தவறாமல் ஆஜராகி விடுவார்கள். ஒருவர் டேப் சொக்கன்மற்றொருவர் தொப்பைக் கிடா”.

முன்னவர், கையில் ஒரு தப்பை வைத்துத் தாளம் போட்டுக் கொண்டே பழைய காலத்துப் பாகவதர் முதல் அந்தக் காலத்து டி.எம்.எஸ் பாடல்கள் வரை எல்லாவற்றையும் மைக் முன்னால் பாட வந்துவிடுவார். இவரை யாரும் தடுப்பதுமில்லை விடுப்பதுமில்லை. இவருடைய கலைத்தாகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் இவருக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். விசேச வீடுகளில் மகிழ்ச்சிகரமான பாடல்களையும் துக்க நிகழ்வுகளில் சோகப் பாடல்களையும் பாடுவார்.

பின்னவர், ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தம் இருக்காது. ஒட்டிய வயிறும் உலர்ந்த வாயுமாய் எந்நேரமும் போதையில் இருப்பார். எம்.ஜி.ஆர் பாட்டு போடச் சொல்லி தகராறு பண்ணுவார். சந்தோசமோ துக்கமோ நிகழ்வு முக்கியமில்லை, ஆனால், எம்.ஜி.ஆர் பாடல் அவருக்குக் கண்டிப்பாகப் போட வேண்டும். கல்யாணம் காது குத்து வீடுகளில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சில சமயம் துக்க வீடுகளில் இவருடைய அளும்பு தாளாமல் கைகலப்பு வரை சென்றுவிடும். அடி பட்டாலும் உதை பட்டாலும் அவர் எதையும் பொருட்படுத்துவதுமில்லை, கலகலப்பான அந்த சேவையை அளிக்க என்றும் தவறுவதுமில்லை.

விடிய விடிய இவர்களின் கொட்டம்தான். அன்றிரவு ஊரில் யாரும் தூங்க முடியாது. டூப் தொப்புளைப் பார்த்த நஸ்ரியா நசீம் போல ஓயாது ஒலிப்பெருக்கி அலறிக் கொண்டே இருக்கும்.

அடுத்த நாள் அதிகாலை முதலே வருத்தமில்லா வாலிபர்கள் பரபரப்பாகி, அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பேட்ஜை அணிந்துகொண்டு வேலைகளைத் துவக்கி விடுவார்கள். தெற்குத் தெரு வாத்தியார் வீட்டு முற்றத்தில் அடுப்புக் கூட்டி, நெல் வேக வைக்கும் பெரிய அண்டாவை அதன்மேல் வைத்து, தெருப் பெண்மணிகள் உதவியுடன் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள். பக்கத்திலேயே கரும்புகள் கட்டுக் கட்டாய்க் குவிந்து கிடக்கும்.  நாலு பேர் சுற்றி உட்கார்ந்து அரை அடி நீளத்தில் அவைகளை நறுக்கி பெரிய பெரிய கோணிச் சாக்குகளில் நிரப்பிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பக்கம் வாழை இலைகளைக் கையகலத்திற்குக் கிழித்து சிலர் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். பூப்பந்துப் போட்டிப் பார்வையாளர்கள் போல் சிறுவர்கள் சுற்றி நின்று இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சுமார் பத்துப் பதினோரு மணிக்கெல்லாம் சிறுவர்கள் புடைசூழ பொங்கலும் கரும்பும் குட்டிச் சுவர் பந்தலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கத் தயாராக இருக்கும். வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைவராகப் பட்டவர் மீண்டும் மைக்கைப் பிடித்து பேரன்பு மிக்க பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் மீண்டும் எங்களது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்... இந்த நன்னாளிலே எங்களது சங்கத்தின் சார்பாக இப்பொழுது பொங்கலும் கரும்பும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை மிகவும்  மகிழ்வுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்... எனவே அனைவரும் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்... என்று அழைப்பு விடுப்பார்.

முதலில் சிறுவர்களுக்கு பொங்கலும் கரும்பும் விநியோகிக்கப்படும். வாழை இலையில் ஒரு கரண்டி பொங்கல் வைத்து அதன் மேல் ஒரு கரும்புத் துண்டை வைத்து மடித்த வாக்கில் கொடுப்பார்கள். மிகவும் சூடாக இருக்கும். சிறுவர்களின் ஆர்வமிகுதியால் ஆப்கானிஸ்தான் அகதி முகாமின் உணவு விநியோகம்  போல் அங்கே தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரே களேபரமாகிவிடும். ஒலிபெருக்கியில், அனைவரும் வரிசையாக வந்து அமைதியாக இருந்து வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்... என்று திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருப்பார்கள். சிறுது நேரத்தில், அமராவதி ஆறு காவிரி ஆற்றோடு கலப்பது போல் சிறுவர்களுடன் பெரியவர்கள் கூட்டமும் சேர்ந்துகொள்ள, ஒரு கட்டத்தில், நிலைமையை சமாளிக்க முடியாமல் வாலிபர்கள் திணறிப் போவார்கள்.

இந்த நேரத்தில் திடீரென்று ஆல் இன் ஆல் அழகுராசா தோன்றி நிலைமையின் தலைமையை ஏற்றுக்கொள்வார். ஆல் இன் ஆல் அழகுராசா நல்ல ஆகிருதியுடன் இருப்பார். பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும் பழகுதற்கு இனிமையான மனிதர். ஊரில் எந்தவொரு பொதுக்காரியமும் அவரில்லாமல் நடைபெறாது. மிகவும் ரசனையான மனிதர். பல தொழில்களை விரும்பி செய்வார். கொத்தனார், வயர்மேன், பிளம்பர் என்று அவர் பார்க்காத வேலை இல்லை. திடீரென்று சைக்கிள் கடை வைத்து பங்க்சர் ஒட்ட ஆரம்பித்து விடுவார். மழை நாட்களில் கிணறுகளில் மூழ்கிவிடும் பம்ப்பு செட்டுகளை மீட்க பிளம்பர் அவதாரம் எடுத்துவிடுவார். எல்லா வேலைகளுக்கும் தேவையான கருவிகளை அவர் வீட்டில் வைத்திருப்பார். ஓய்வு நேரத்தில் தன் வீட்டு டேப் ரெக்கார்டர் ரேடியோ பெட்டிகளுக்கு வெல்வெட் துணியில் கைகளாலேயே சட்டை தைத்துப் போட்டு விடுவார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஆனால் ஊரில் எல்லோருக்கும் பொதுவானவர். விநாயகர் சதூர்த்தி விழாவில் சுண்டல் விநியோகம் செய்வது முதல் பொங்கல் விழாவில் பொங்கல் கரும்பு விநியோகிப்பது வரை இவர் இருந்தால்தான் எல்லாம் சாத்தியமாகும். பஞ்சாயத்துத் தொலைக்காட்சி  எங்கள் ஊரில் அறிமுகமான போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஊர் மக்கள் இவரிடம்தான் விரும்பி ஒப்படைத்தனர்.

ஆல் இன் ஆல் அழகுராசா அரங்கத்திற்கு வந்தவுடன், ஏட்டையாவைப் பார்த்த எருமைத் திருடன் போல்  கூட்டம் ஒரு கட்டுக்குள் வந்துவிடும். மளமளவென பொங்கலும் கரும்பும் காலியாகிவிடும். சிறுவர்கள் இரண்டாவது மூன்றாவது முறை கூட வந்து வாங்கிச் செல்வார்கள். இப்படியாக பொங்கல் கரும்பு விநியோகம் முடிந்தபின் மதியம் ஒரு சிறிய இடைவேளை விடுவார்கள். பிறகு ஒரு மூன்று மணி சுமாருக்கு விழாவின் அடுத்த கட்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

சிறுவர் சிறுமியருக்கான ஓட்டம், காளையர் ஓட்டம், சைக்கிள் ஸ்லோ ரேஸ், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாளியில் பந்து போடுதல், மாறுவேடப் போட்டி, கோலப் போட்டி, மியூசிக்கல் சேர் என்று ஆரவாரமாக நடக்கும். ஆண்களும் பெண்களும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள். சர்க்கஸ் கோமாளி போல் ஆங்காங்கே தோன்றி “தொப்பை கிடா” தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருப்பார். மியூசிக்கல் சேர் நடைபெறும் பொழுது எம்.ஜி.ஆர் பாட்டுத்தான் போடவேண்டுமென்று ரகளை பண்ணுவார்.

சைக்கிள் ரேஸ் எங்கள் ஊரில் தொடங்கி பக்கத்து ஊர்கள் வழியாக சுற்றிக் கொண்டு சுமார் நான்கைந்து கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நடக்கும். அன்றைய தினம் பக்கத்து ஊர்களிலும் இதேபோல் பொங்கல் விழா நடைபெறும். அந்த ஊர்களிலும் சைக்கிள் ரேஸ் கண்டிப்பாக இருக்கும். எனவே, அவ்வப்போது அந்த ஊர்களிலிருந்து  புறப்படும் சைக்கிள் ரேஸ்காரர்கள் எங்கள் ஊர் வழியாக, எதிரிப் படைகளை ஊடுருவும் குதிரைப் படைகள் போல திடும் பிரவேசமாக புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவார்கள். பொங்கல் விழாவின் இலவச இணைப்பாக இந்தத் திடும் பிரவேச போட்டிகளையும் மக்கள் கண்டு களிப்பார்கள்.

மாலையில் இறுதியாக பானை உடைத்தல் போட்டி நடைபெறும். கண்களைக் கட்டி போட்டியாளர்களை ஒரு நான்கு சுற்று சுற்றிவிடுவார்கள். அதிலேயே அவர்களுக்கு நிதானம் தவறி வழி மாறிச்சென்று தரையையும் விளக்குக் கம்பத்தையும் சமயத்தில் ஆட்களைக் கூட அடித்து விடுவார்கள். இந்த ஒரு போட்டிதான் நீண்ட நேரம் நடக்கும். நேரம் ஆக ஆக போட்டியாளர்கள் இரண்டாவது மூன்றாவது சுற்று என்று அடிக்க முயன்று கொண்டிருப்பார்கள். எங்கள் ஊர் வழியாக பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் வழிப்போக்கர்கள் கூட பானை உடைத்தலில் கலந்து கொள்வார்கள். தரையில் அடையாளம் வைத்துக் கொள்வது, எத்தனை தப்படி நடக்கவேண்டும் என்று முன்னேற்பாடாக நடந்து அளந்து கொள்வது, சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எழுப்பும் ஒலிகளை வைத்து இலக்கை அறிவது என்று ஏகப்பட்ட உபாயங்களைக் கையாண்டு கடைசியில் யாரவது ஒருவர் பானையை உடைத்தே விடுவார்.

அத்துடன் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெறும். அதன்பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில்; பெரியவர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி, பிளாஸ்டிக் சோப்பு டப்பா, சீப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள் என பரிசுப் பொருட்கள் இருக்கும். விழாவின் இறுதியாக இரவு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளித்திரையில் திரைப்படம் காண்பிக்கப்படும்.

அந்தக் காலத்தில் எந்த ஒரு விழாவும் திரைப்படம் திரையிடாமல் நிறைவு பெறாது. ஊர்த் திடலில் இரண்டு மரங்களை ஊன்றி திரையரங்குகளில் உள்ளது போல பெரிய அகலமான வெள்ளைத் திரையைக் கட்டி, அந்த மரங்களில் ஒலிப்பெருக்கிக் குழாய்களைக் கட்டி விடுவார்கள். திரைப்படம் திரையிடும் ப்ரொஜெக்டரை டாக்சியில் வைத்துக் கொண்டுவருவார்கள். திரையிலிருந்து ஒரு இருபது முப்பது அடி தூரத்தில் ஒரு மேசையைப் போட்டு அதில் அந்த ப்ரொஜெக்டரை வைத்து, பெரிய வளைய வளையமாக இருக்கும் பிலிம் ரீல்களை மாட்டித் திரையிடத் தயார் செய்வார்கள். இந்தக் காட்சிகளைக் காண்பதே ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சியைத் தரும்.

பெரும்பாலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள்தான் திரையிடுவார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படம் போட்டால் கண்டிப்பாக ஒரு சிவாஜி படம் போடவேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கும். மக்கள் இரவு உணவிற்குப் பிறகு முன்னதாகவே சென்று பாய் போர்வைகளை விரித்து இடம் பிடித்துக் கொள்வார்கள். சிலர் மண்ணைக் குவித்துத் தற்காலிக சொகுசு நாற்காலிகள் தயார் செய்து கொள்வார்கள். முன்னால் மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பவர்களின் சொகுசு நாற்காலியை பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மெள்ள மெள்ள சுரண்டி ஒரு கட்டத்தில் குழியாக மாற்றி விடுவார்கள். படம் பார்க்கும் ஆவலில், பள்ளத்தாக்கில் விழுந்தவர்கள் அதை உணராமல், திரையில் தடுக்கி விழுந்த நாகேசைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அது போக, இவ்விதச் சங்கடங்கள் இல்லாமல் பின் வரிசையில் நாற்காலி முக்காலி கயிற்றுக் கட்டில் என்று சொகுசாக அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. பார்க்கிறவர்கள் பார்க்க தூங்குகிறவர்கள் அந்த அந்த இடத்திலேயே தூங்கிப் போக விடிய விடிய படம் நடக்கும்.

உழைத்துக் களைத்த மக்களுக்கு அன்று ஒரு நாள் மகிழ்ச்சியைக் கொடுத்த திருப்தியோடு வருத்தமில்லா வாலிபர் சங்கம் காணாமல் போய்விடும். புற்றீசல் போல வருடத்தில் ஒரே ஒரு விழா தான் அதன் ஆயுட்காலம். பொங்கல் விழாவிற்குத் திடீரென்று தோன்றி வந்த வேகத்திலேயே மறைந்து போகும். இதற்காக அவர்கள் எவ்வித வருத்தமும் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த ஒரே ஒரு செயல்பாட்டோடு இயங்கும் இந்தச் சங்கத்திற்கு அந்தக் காலத்தில் நிரந்தரத் தலைவரும் செயலாளரும் இருந்தனர்.

நாகரீக வளர்ச்சியில் சிக்குண்டு ஊடகப் பொழுதுபோக்கிற்கு இன்றையத் தமிழகக் கிராமங்கள் முற்றிலும் அடிமையாகிவிட்ட நிலையில், வயதானாலும் பழைய ஞாபகங்களில் வருத்தமில்லா வாலிபர்களாகவேஇன்றும் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், இன்றைக்கு அவர்களுடைய வாரிசுகள் வளர்ந்து வாலிபர்களாகி விட்டதைக் காணும் நாம், ஏனோ அந்த வருத்தமில்லா வாலிபர் சங்கத்தைமட்டும் இன்று காண இயலவில்லை.

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    படத்தின் விமர்சனம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....

      நீக்கு
  2. வருத்தமில்லா வாலிபர் சங்கத்த பொங்கல் விழாவோடு கலந்து கட்டி அடித்ததற்கு வாழ்த்துக்கள் நைனா... எங்கள் தெருவில் என்னுடைய சின்ன வயதில் நடந்த பொங்கல் விழாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்...
    சூப்பர் நைனா...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...