செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 1

“திருவாளர் பலவேசம், தலைமை ஆசிரியர், ஊ.ஓ. தொடக்கப் பள்ளி, கரட்டுப்பட்டி” – அன்னைக்கி ரொம்ப மன உளச்சல்ல இருந்தாரு. இன்னுங் கொஞ்ச வருசத்துல ஓய்வாகப் போற நேரத்துல, “தனக்கு இப்புடி ஒரு சோதனை வரும்...” ன்னு அவரு கனவுல கூட நெனச்சுப் பாக்கல. அவரோட இத்தன வருச வாத்தியாரு தொழில் அனுபவத்துல, என்னைக்கும் இப்புடி ஒரு இக்கட்டான நெலைக்கு அவரு ஆளானதே இல்ல. 


கடவூர் சமீனுக்குக் கடங்குடுத்தது போக, சிறுமலையோட சுருக்குப் பையில, சிறுவாடு கணக்கா குந்தியிருக்க ஒரு கரட்டுலதான், இந்தக் கரட்டுப்பட்டி சம்மணம் போட்டு குந்தியிருக்கு. பருவந்தப்பி வர்ற “மழை” வாத்தியாருக்கொசரம் ஏங்கிப்போயிக் கெடக்குற வானம் பாத்த பூமி. அதையும் நம்பி கல்லைப் புழிஞ்சு கஞ்சி குடிக்கிற பாவப்பட்ட சனங்க.

இந்தக் கரட்டுப்பட்டி நாகரிகத்தோட உச்சந்தான், இந்தூரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. ஊருக்கும் சர்க்காருக்கும் எடையில இருக்க ஒரே போக்குவரத்து. “செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்” ன்னு பெரியவுக சொல்லி வச்சுருக்காகளாம். “வயித்துக்கே இங்கே சோறு இல்லாதப்ப செவிக்கு எங்க போயி ஈயறது...?”


இந்தப் பள்ளிக்கூடத்தப் பொருத்த மட்டுல, “மதிய உணவு” திட்டத்துக்கு முந்துன, அதோட வரலாற்றுக் குறிப்புக எதுவும் காணக் கெடைக்கல. “அறிவுப் பசிய வயித்துப் பசி வென்ற” வரலாற்ற, மாணாக்கர்களோட வருகப்பதிவேட்ட வச்சே அறிஞ்சுக்கமுடியுது. 

ஒன்றே குலம்; ஒருவனே தேவன் ன்னு சொல்லுவாகள்ல, அது மாதிரி, ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் ஒரே வகுப்புத்தான்; அதுக்கு ஒரே ஒரு வாத்தியாருதான்; அவருதான் தலைமை ஆசிரியருங்கூட. “ஒரே ஒரு மாணவன்... அவனுக்கு ஒரு வாத்தியாரு...” ன்னு  இன்னைக்கும் பள்ளிக்கூடம்லாம் இருக்குதாம் இந்த நாட்டுல.  அப்புடியில்லாம,  “இப்புடி ஒரு பள்ளிக்கூடம் இருக்குறது எவ்வளவோ மேல்...” ன்னு பெருமப்பட்டுக்குதாம் கல்வித் துறை. 

25 வருசமா, பலவேசம் வாத்தியாருதான் இந்தப் பள்ளிக்கூடத்தக் கட்டிக்காத்துக்கிட்டு வர்றாரு. தன்னோட தெறமையாலும் ஒழைப்பாலும், ஒத்தப் படையில இருந்த மாணாக்கர்களோட வருகப்பதிவ, கால் நூத்துக்கும் மேலாக்கியது, இவரோட அரிய பெரிய சாதன. எடையில அவருக்கு வந்த எடமாத்தல் உத்தரவு, ஊரு மக்களோட எதிர்ப்பால ரத்தாயிப்போனது வரலாறு. அவுக வீட்டுல ஒருத்தரு மாறி, அவரத் தலையில தூக்கிவச்சு கொண்டாடுறாக கரட்டுப்பட்டி சனங்க. அவரு கையில பூந்துக்க நேரம் பாத்து, பள்ளிகூடத்து எல்லயில பதுங்கிக்கெடக்குது தேசிய நல்லாசிரியர் விருது.

இப்புடி பள்ளிக்கூட எல்லவரைக்கும் வந்த அந்த விருது, ஏன் அவருக்கு கெடைக்காம இருக்குன்னா, அதுக்கு அவரோட நேர்மைதாங் காரணம். இந்தமாதிரி விருதுக்கு அவரு பேரும் அடிபடுது...ன்னு அவருக்கு தகவல் வரவும், சம்பந்தப்பட்ட அலுவலகத்துல விசாரிக்கப் போனாரு பலவேசம். அவரத் தனியாக் கூட்டிக்கிட்டு மரத்தடிக்குப் போன சம்பந்தப்பட்ட பெரிய கணக்கன்,

“ஐயா பட்டியல்ல ஒங்க பேரும் இருக்கிறதென்னவோ உண்மதான்... ஆனா போட்டி அதிகமா இருக்கே... இப்ப என்னா பண்றது...?” ன்னு கேக்கவும்,

“அதுக்கென்னா பண்றது...?” ன்னாரு பலவேசம் பரிதாபமா.

“அதுகென்னவா... என்ன இப்புடி சாதாரணமா சொல்றீங்க...? மூணு நோட்டு வரைக்கும் போயிருச்சுங்க...” ன்னு பரபரப்பா சொன்னான் கணக்கன்.

“என்ன மூணு நோட்டு வரைக்கும் போயிருச்சு...? எனக்கு ஒன்னும் புரியலையே...?” ன்னு தலையச் சொரிஞ்சாறு பலவேசம்.

“ஆமாங்க... பட்டியல்ல ஒங்களுக்கு கீழ இருக்கிறவுங்க... மூணு நோட்டு வரைக்கும் குடுக்கத் தாயாரா இருக்காங்க... நீங்க அதுக்கு மேல ஒரு நோட்டு போட்டு குடுத்தீங்கன்னா... ஒங்களுக்கே முடிச்சு விட்டுர்றேன்... அதுவும் எனக்காகக் கேக்கல... நமக்கும் மேல நெறைய பேருக்கு பங்கு இருக்குல்ல... நீங்க என்னா பண்றீங்க... சீக்கிரமே நாலு நோட்ட ஏற்பாடு பண்ணிக்கிட்டு... என்னைய வந்து பாருங்க... நா சுமூகமா முடிச்சுத் தந்தூர்ரேன்...” ன்னு சொல்லவும் தல சுத்திப்போச்சு அவருக்கு.

“அடப்பாவிகளா... இதுலயும் ஒங்க வேலையக் காட்டிப்புட்டீகளா...?” ன்னு நொந்துக்கிட்டே... “போங்கடா நீங்களும் ஒங்க விருதுகளும்... காசு குடுத்துத்தான் இந்த விருத நா வாங்கனும்னா... அப்புடி ஒரு விருதே எனக்கு வேண்டாம்டா...” ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு வந்துட்டாரு.

பத்து மைல் தூரத்துல இருக்க  பெரியபட்டிதான் அவருக்குச் சொந்த ஊரு. அளவுலயும் வசதியிலயும் கரட்டுப்பட்டிக்கு அண்ணன் பெரியபட்டி. குண்டுங்குழியுமாக் கெடக்குற மாட்டுவண்டிப் பாததான் ரெண்டு ஊருக்குமான தொப்புளுக்கொடி ஒறவு. 

படிப்பு வாசன இல்லாத வீட்டுக்காரம்மா, கல்யாணமான ஒரு மக, கல்லூரியில கடைசிவருசம் படிக்கிற ஒரு மகன்னு  அளவான குடும்பம் அவருக்கு. பட்டிணத்துல ஒரு நல்ல உத்தியோகத்துல இருக்காரு மருமகன். அவுக வீட்டுல தங்கி கல்லூரிக்குப் போய்க்கிட்டிருக்கான் வாத்தியாரு மகன். வாரக் கடசியில பேரன் மொதக்கொண்டு அவுக எல்லாரும் பெரியபட்டிக்கு வர்றது வழக்கம். இப்புடி சகல சந்தோசத்தோட, எந்தக்கொறையும் இல்லாமக் காலத்த ஓட்டிக்கிட்டிருந்த அவரு வாழ்க்கையிலதான், அவரு  வெளியில சொல்றதுக்குக்கூட கூசுற மாறி இப்புடி ஒரு சோதன நடந்துபோச்சு.

அன்னைக்கி வெள்ளிக்கெழம. மத்தியானச் சோத்துக்கு மணியடிக்கிற நேரம். வெக்கையா இருக்குன்னு வேப்ப மரத்தடியில நாற்காலியப் போட்டு, அஞ்சாப்பு சமூக அறிவியல் பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு பலவேசம்.  

எந்த வகுப்புப் பாடமுன்னாலும் எல்லாத்துக்கும் பொது ங்கிறது கரட்டுப்பட்டி  பள்ளிக்கூடத்தோட பொதுவுடம விதி. பாடம் நடத்துதுறது ங்கிறது அவரோட அகராதியில, “புத்தகத்துல இருக்கிறத அப்புடியே வாசிச்சுக் காட்டுறது...ங்கிறது தான். கரட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு இதுவே அதிகம்...ங்கிறது அவரு காலங்காலமாகக் கடைபிடிச்சுக்கிட்டு வர்ற கரட்டுப்பட்டிக் கல்விக் கொள்க...

சந்தேகம்ன்னு இதுவர யாரும் இவரக் கேட்டதுமில்லை, பாடத்தை வெளக்கிச் சொல்ற நெலமயும் இவருக்கு வந்ததுமில்ல. ரெண்டு தரப்புமே எல்லக்கோட்டத் தாண்டியறியாத ஒரு கபடி வெளையாட்டு இது. போருக்குத் தயாரா நிக்கிற சேனகளுக்கு எடையில, எல்ல தாண்டா சமாதான உடன்படிக்க மாறித்தான் இந்த “பாடம் நடத்துற படிக்கிற வேல. இதுல யாரு அத்து மீறினாலும் சேதாரம் ரெண்டு பேருக்குமே...ங்கிறது ரெண்டுதரப்புக்குமே தெரிஞ்ச உண்ம.

ஆரம்ப காலத்துல, பலவேசமும் ரொம்ப ஆர்வமாத்தான் சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சாரு. என்ன ஒன்னு, பாசை நரம்புல தமிழாகப்பட்டது பசை போட்டு ஒட்டிக்கிட்டதுனால, ஆங்கிலமும் பொது அறிவும் அவருக்கு எப்பயும் ஒவ்வாது. இருந்தாலும், தன்னோட அனுபவத்த வச்சு எந்தக் கொறையுமில்லாமத்தான் பாடஞ் சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாரு. ஆனா பாருங்க... பட்டிக்காட்டுப் பசங்க, மத்தியான சோத்துல காட்டுன அக்கறய மேற்படி படிப்புல காட்ட மாட்டேன்னுட்டாய்ங்க. பாவம் அவரும் என்ன பண்ணுவாரு, சரிதான்... இவிங்களுக்கு இதுக்குமேல என்னாத்த சொல்றது...? இவிங்க பள்ளிக்கூடம் வர்றதே பெரிய விசயம்... படிடா படிடான்னு நெம்புனா... போங்கடா நீங்களும் ஒங்க படிப்பும்ன்னு சொல்லி ஓடிப்போய்ட்டா என்னா பண்றது...? ன்னு பயந்துக்கிட்டு பேசாம விட்டுட்டாரு.

அவரச் சொல்லியும் குத்தமில்ல. ஒத்தை ஆளு மொத்தப் பள்ளிக்கூடத்தயும் முதுகுல வச்சுத் தாங்குறதால, மத்ததப் பத்தி யோசிக்க நேரமில்ல. தனியா ஒக்காந்தி ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதக் காட்டியும், தன்ன நம்பி வந்தவிங்கள தவிக்க விட்டுறக் கூடாதுங்கிறதுல குறியா இருந்துட்டாரு.  

சமச்சீர் கல்வி வந்ததுல இருந்து,  பாடப் புத்தகத்தோட சரக்கெல்லாம் முழுசா மாறிப்போயி, அதோட தரம், தன்னோட படிப்புக்கும் அனுபவத்துக்கும் சவால் விடுறது கணக்கா இருக்கிறத நெனச்சு, ஏற்கனவே ரொம்ப மனக்கிலேசப்பட்டுக் கெடந்தாரு பலவேசம். இருந்தாலும், கரட்டுப்பட்டிக் கல்விக் கொள்க மேல, தான் வச்சிருந்த அசைக்கமுடியாத நம்பிக்க, என்னைக்கும் வீணாப்போவாது...ன்னு இதுநாவர இறுமாந்து இருந்துட்டாரு. 

இப்புடி இருக்கப்பத்தான், வெள்ளிக்கெழம அதுவுமாப் பாத்து, வெள்ளக்கொடிக்கி வேலையில்லாமப் பண்ணிப்புட்டான் சின்னப் பாண்டி...! அவரு அசந்த நேரமாப் பாத்து... ஆர்வக் கோளாறுல... அப்புடி ஒரு கேள்வியக் கேட்டுப்புட்டான்...!   


குடைச்சல் தொடரும்...

23 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. விருதே எனக்கு வேண்டாம்... இப்படித் தான் இருக்கோணும்...

    என்ன கேள்வி என்று அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்...!

      நீக்கு
  3. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1 (உங்கள் பாணியில் எ. போ. எ. போ. ஹிஹி...)

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    நைனா

    கேட்டானே ஒரு கேள்வி...... என்ற தலைப்பே.. சூப்பர்.. மிக அருமையான கருத்தாடல் அடுத்த பகுதியை தொடருங்கள் காத்திருக்கேன்... இருக்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...!

      நீக்கு
  5. நானும் கொஞ்டம் தொடஙுகறேன்.

    அந்த ஸ்கூல்ல ஒரு பையன் சேந்தான். ரெண்டு பசங்க்ளும் போர்டுல இருக்கறத எளுதிக்கங்க அப்டீன்னாரு.

    அவங்கபாட்டு பேசிக்கிட்டே இருந்தாங்க. எதோ காதுல விளுதேன்னு கவனிச்சாரு. அவரு காதுல விளுந்தது என்ன :

    னேத்து நான் ஜில்லா பொய்ருந்தேன். எங்க அப்பா கூட்டிட்டு போய்ருந்தாரு. பிளாக்லதான் டிக்கெட் வாங்கினாரு.

    னானுந்தான் வீரன் பாத்தேன்.வீட்ட்ல காசு வாங்கிட்டுப் போனேன்.செமக் கூட்டம். பக்கத்து ஊரு பசங்க நெறயப் பேரு வந்ருந்தாங்க.

    தலேல கைய வச்சிக்கிட்டு ஒக்கந்தாறு ஆசிரியர்.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...!

      நீக்கு
  6. இது கதையல்ல.... ஆனால் சில உண்மைகள் சொல்லப்படும்போது எதையும் கண்டு கொள்ளாமல் செல்லும் நமக்கும் நங்குன்னு குட்டு வைப்பதைப் போல்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி எழில்...!

      நீக்கு
  7. நல்ல வாத்தியார்! விருதுக்கு தகுதி உடையவர்தான்! அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேசு...!

      நீக்கு
  8. ஒரு கிராமத்துப் பள்ளியின் நிலைமையை சொல்லியிருக்கின்றீர்கள்! பல பள்ளிகளில் பல வகுப்புகளுக்கு பல பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர்தான் என்பது கசப்பான உண்மை! இது போன்ற ஆசிரியர்களுக்கு சுமை கூடுதல்தான்! நிஜமும் கூட! அழகான விவரணம்!

    அல்லாம் போட்டச்சுபா!

    பதிலளிநீக்கு
  9. நம்ம பலவேசம் வாத்தியாருக்கு இந்த சின்னப்பாண்டிப் பய அப்படி என்னதான் ஆப்பு வச்சான் ?தெரிஞ்சுக்க ஆவல கீதுபா !
    த ம +1

    பதிலளிநீக்கு
  10. என்ன கேள்வி அப்படி கேட்டுப்புட்டான்..... தொடர்கிறேன்...

    எல்லாம் போட்டாச்சு நைனா!

    பதிலளிநீக்கு
  11. “எந்த வகுப்புப் பாடமுன்னாலும் எல்லாத்துக்கும் பொது” ங்கிறது கரட்டுப்பட்டி பள்ளிக்கூடத்தோட பொதுவுடம விதி. “பாடம் நடத்துதுறது” ங்கிறது அவரோட அகராதியில, “புத்தகத்துல இருக்கிறத அப்புடியே வாசிச்சுக் காட்டுறது...” ங்கிறது தான். “கரட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு இதுவே அதிகம்...” ங்கிறது அவரு காலங்காலமாகக் கடைபிடிச்சுக்கிட்டு வர்ற “கரட்டுப்பட்டிக் கல்விக் கொள்க...”.

    ...இப்புடி ஒரு வாத்தியாரை நான் என்னோட லைஃபுலயும் கண்டுக்கினேம்ப்பா... இன்னாத்தச் சொல்ல...? அவன் அப்புடி என்னதான் கேட்டான்னு தெரிஞ்சுக்கறதுக்குள்ளாற தொடரும்னு போட்டு சுத்தல்ல வுடுறியே... ஞாயமா? (நானும் போட்டாச்சு... ஹி....! ஹி...!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புடியாபா...! கண்டினுசா பட்ச்சிக்கினு வாபா... குவிக்கா கண்டுக்கலாம்...!
      ரெம்ப டேங்க்ஸ்பா...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...