செவ்வாய், 5 ஜூன், 2007

அல்லாருக்கும் வணக்கம்பா...

நேற்று நடந்தது போல் இருக்கின்றது!

ஆறு வருடங்கள் போன வேகம் தெரியவில்லை. இந்த ஆறு வருட காலத்தில் எத்தனையெத்தனை படைப்புகள். கவிதை, கட்டுரை, சிறுகதை, அனுபவம், நகைச்சுவை என எத்தனை எத்தனை வகைகள். என்னையும் எனது படைப்புகளையும் வாஞ்சையோடு ஏற்றுக்கொண்டு, தனது விமர்சனங்களாலும் வழி காட்டுதல்களாளும் பிரமிக்க வைத்த தமிழ்ப்பதிவுலகின் ஆதரவை எண்ணும் போது நன்றி உணர்ச்சி மேலிடுகிறது. இதற்காக பதிவுலக அன்பர்களுக்கு மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகின்றேன். நிற்க.

சரி, இவ்வளவு தூரம் பிரபலமடைந்த இந்த பதிவர் யார்? அவர் படைப்புகள் எங்கே? இவ்வளவு நாள் அவர் எங்கே போனார்? மீண்டும் அவர் இங்கே வரக் காரணம் என்ன? தங்கள் மனதில் இவ்வாறான கேள்விகள் பல எழுவது இயல்பே. அக்கேள்விகளுக்கான விடையை இத்தருணத்தில் தெரிவிக்க நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.

முதன்முதலில் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க எண்ணிய போது மிகப் பெரும் சவாலாக அமைந்தது “பதிவிற்கு என்ன பெயர் வைப்பது?” என்பதே. பெரும்பாலும் பதிவர்கள் தங்கள் புனைப் பெயரில் எழுதுவது இயல்பு. அவ்வாறு புனைப்பெயர் இல்லாதவர்கள் பட்டப் பெயர் கொண்டு எழுதுவதும் உண்டு. புனைப் பெயர் வைத்துக் கொள்ளும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய இலக்கியவாதி இல்லையாகையால் பட்டப் பெயரில் ஆரம்பிக்கலாம் என்று முடிவாயிற்று. அதற்குப் பிறகுதான் எனக்கு ஒரு பட்டப் பெயர் வைக்கும்படி எனது நண்பர் குழாமில் வேண்டிக்கொண்டு இந்த “முட்டா நைனா” என்னும் பெயரில் வலைப்பதிவை ஆரம்பித்தேன். ஆரம்பித்து “அல்லாருக்கும் வணக்கம்பா...” என்ற தலைப்பில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து ஒரு இடுகையும் போட்டேன். அதற்கு மறுமொழி கூட வந்தது!

அந்த நிகழ்விற்குப் பிறகு நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்கும் எல்லையே இல்லை. எனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு மேற்கூறியபடி ஏகப்பட்ட படைப்புகளைப் படைக்க ஆரம்பித்தேன். அன்று ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கின்றது.

போனவாரம் ஒரு நண்பரிடம் இதுபற்றி நான் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த போது அவர் கேட்ட கேள்வியொன்று என்னை மிகவும் திகைப்பிற்குள்ளாக்கியது. அவர் கேட்ட கேள்வி இதுதான்...

“ஆமாம், இவ்வளவு தூரம் எழுதியுள்ளீர்கள், ஆனால் தங்களின் படைப்புகளை இதுவரை நான் எந்தவொரு தமிழ்த்திரட்டியிலும் பார்த்ததில்லையே?”

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்னவொரு கொடுமை? ஒரு பிரபல பதிவருக்கு இந்தக் கதியா? முதல் பதிவு போட்டது முதல் இன்றைக்குத் தமிழ்த்திரட்டிகளில் பிரபலமாகவுள்ள அனைத்து முன்னணிப் பதிவர்களும் நம்முடைய படைப்பைப் பாராட்டியும் விமர்சித்தும் பேராதரவு தந்துகொண்டிருக்கும் இந்த நிலையில், எனது படைப்புகளைத் தமிழ்த்திரட்டிகளில் இதுவரை பார்த்ததில்லை என்று அவர் ஏன் கூறுகிறார்? இது எங்கனம் நிகழ்ந்தது? தீர விசாரித்துப் பார்த்ததில் நான் தெரிந்து கொண்ட விவரங்கள் இதுதான்:

  1. பட்டப் பெயரில் வலைப்பதிவை ஆரம்பித்தால் மட்டும் போதாதாம். அதைத் தமிழ்த்திரட்டிகளில் இணைக்க வேண்டுமாம். எனக்கு இது புரியவேயில்லை. ஒரு படைப்பாளி தனது முதல் படைப்பைப்  பிரசவித்த மறுகணம் தமிழ் கூறும் நல்லுலகு தானே முன்வந்து அந்தப் படைப்பாளியை ஏற்றுக் கொண்டு அன்பும் ஆதரவும் கொடுக்கக் கூடாதா என்ன? இதுவரை இந்த பதிவுலகில் அனைவரும் இப்படித்தான் காலூன்றி இருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தது தவறாம். நாம் தான் தமிழ்த்திரட்டிகளில் இணைத்துக்கொள்ள வேண்டுமாம். என்ன வேடிக்கை?!
  2. முதல் இடுகை போடும் பொழுது ‘அல்லாருக்கும் வணக்கம்பா...” என்று மட்டும் தலைப்பு வைத்தால் மட்டும் போதாதாம். பிறகு? அதற்குக் கீழே ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமாம்! என்ன கொடுமை?!
  3. “அப்போ... மேற்கூறிய எண்ணற்ற படைப்புகள்?”  ஆம்... அது முழுக்க முழுக்க இந்த ஆறு வருட காலம் எனது கற்பனையில் நிகழ்ந்தவைதாம்... தலைப்பை மட்டுமே வைத்து நான் இட்ட இடுகைக்கு எண்ணற்ற மறுமொழிகள் (ஒன்னே ஒன்னு) வந்ததை அறிந்து அகமகிழ்ந்து இறுமாந்து அதிவேகமாக எனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டதன் விளைவுதான் இது!

“பெரிய படைப்பாளி என்று தானே கூறிக்கொள்ளும் நீர் இவ்வளவு பெரிய முட்டாளா?” என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது. என்ன செய்ய? மெய்யாலுமே இதான்பா நடந்தது. இவனுக்கு “முட்டா நைனா” ங்கிற பேரு பொருத்தமானதுதான் என்று என்னைப் போலவே நீங்களும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 
நடந்த சம்பவங்களை வைத்து எந்தவொரு முடிவிற்கும் வந்துவிடாதீர்கள் நண்பர்களே. எனக்கும் கொஞ்சம் கற்பனை வளம் உண்டு, என்னாலும் எழுதமுடியும் என்ற எனது நம்பிக்கையை நீங்கள் வீணாக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

எனவே,  என்பொருட்டு இனிமேல் இதுமாதிரி தவறுகள்  நடைபெறாவண்ணம் தடுத்தாட்கொள்வது தாங்கள் கையில்தான் உள்ளது என்பதைத் தாழ்மையுடன் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் தங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்...

முட்டா நைனா.

நன்றி!
வணக்கம்.

பின் குறிப்பு: வெறுமனே தலைப்பை மட்டுமே கொண்ட எனது முதல் இடுகையை இதன் மூலம் வெற்றிகரமாக ஒரு முழுமையடைந்த இடுகையாக்கி எனக்கு நேர்ந்த அவப்பெயரை நீக்கிவிட்டேன் மக்கா. :-)


1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...