சனி, 15 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 6

ரும்பலகைகளுக்குக் கரி பூசச் சொன்ன வாத்தியாரு, எதோ புத்தகத்த பாத்துக்கிட்டு இருக்காரு. “நம்ம கேட்ட கேள்விக்கு பதிலு சொல்லுவாரா...? மாட்டாரா...?” ன்னு மருகிக் கெடந்தான் சின்னப்பாண்டி.

நேரம் ஆக ஆக அவனுக்கு இருப்புக் கொள்ளல. “பேசாம வாத்தியாருக்கிட்ட போயி திரும்பியும் கேக்கலாமா...?” ன்னு கூடத் தோனிச்சு. இருந்தாலும், பயமா இருக்குறதுனால கேக்காமயே விட்டுட்டான். பொழுசாய பள்ளிக்கூடமும் முடிஞ்சு போச்சு... வாத்தியாரும் ஒன்னுமே சொல்லாமப் போயிட்டாரு... இப்ப என்ன பண்றதுன்னே அவனுக்குத் தெரியல. ஒரு வேளை திங்கக்கெழம சொன்னாலும் சொல்லிருவாருன்னு மசனத் தேத்திக்கிட்டான் பய.


“நம்பளும் நமக்குத் தெரிஞ்ச வழியிலல்லாம் தேடிப் பாத்துட்டோம்... ம்ம்ம்... இப்ப என்ன பண்றது...?” ன்னு ஓடுது மண்டைக்குள்ளாற... அப்பத்தான்... அவனுக்கு ஒரு புது யோசனை தோனுச்சு. “நம்பளும் பேசாம அந்த பொது அறிவுக் களஞ்சியப் புத்தகத்த வாங்கிட்டா என்ன...? ஆமா... அதாஞ் சரி... வீட்டுக்குப் போனதும் மொத வேலையா... அப்பாகிட்ட சொல்லி அந்த புத்தகத்த வாங்கித் தரச்சொல்லிற வேண்டியதுதான்...” ன்னு வேகமா நடையக் கட்டினான் வீட்டப் பாத்து.

வீட்டு நெலவரம் வேறமாறி இருந்துச்சு. போன தடவ ஆரம்பிச்ச சண்ட, வேற வேற வடிவத்துல தெனந்தெனம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவுக அப்பா குடிச்சுட்டு வந்து அவுக அம்மா கூட சண்ட இழுத்து அடிக்கிறதும், அவுக அம்மா மூக்கைச் சிந்திக்கிட்டு அழுவுறதும் வாடிக்கையாப் போச்சு.

அவுக அப்பா அம்மா ரொம்ப நல்லவுகதான். அவுங்க அம்மாவுக்கு, மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்ன்னு கொள்ள ஆச. சின்னப்பாண்டியோட பெரிய அக்காவக் கட்டிக் குடுத்துடுட்டாக. அண்ணங்காரன் அவுக அப்பாகூட வெவசாயக் கூலி வேலைக்கு போறான். அவுக அம்மா சின்ன வயசுல பஞ்சாலைக்கு வேலைக்குப் போனதுனால ஆசுமா வந்துருச்சு. அதுக்கு  அடிக்கடி ஒடம்பு சரியில்லாமப் போவும். அவுக அப்பாவும் அண்ணனும் சம்பாரிக்கிறத வச்சுத்தான் குடும்பம் ஓடுது.

முன்னமாறி மழை தண்ணி பேயாமப் போனதால, சுத்து வட்டாரத்துல வேவசாயமெல்லாம் ரொம்பக் கொறஞ்சு போச்சு. ஏதோ ஒன்னு ரெண்டு எடத்துல வேலை கெடைக்கும். சமயத்துல ஒன்னுமே கெடைக்காமக் கூடப் போயிரும்.  அந்த நேரத்துலதான் வீட்டுல சண்ட ரொம்ப வரும்.

“இக்கரைக்கு அக்கரை பச்சை...” ங்கிற கணக்கா, அவுக அப்பாவுக்கு, இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்ன்னு மனசுல விழுந்துருச்சு. ஆனா, அவுக அம்மாவுக்கோ, கட்டமோ நட்டமோ, சொந்த ஊருலயே இருந்து பொழச்சுக்காட்டணும்னு இருக்கு.

இதுல ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடியிற வழியக் காணாம். அவுக வீட்டுக் கூரையில விழுந்த ஓட்டை கணக்கா பெருசாயிக்கிட்டேதான் போவுது.

இந்த லட்சணத்துலதான் நம்பாளு புதுசா புத்தகம் வாங்க நோங்குறாரு.

நேரா வீட்டுக்குப் போனவன், அவுக அப்பா புது ஆளுக ரெண்டு பேத்தோட அவுக வீட்டுக்கு முன்னாடி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதையும், வீட்டுக்குள்ளாற அவுக அம்மா அழுதுக்கிட்டு இருக்கிறதையும் பாத்தான். “ஏதேது... இன்னைக்கும் சண்டை வந்துருச்சு போல... இவுகளுக்கு வேற வேலையே இல்லையா...” ன்னு நெனச்சுக்கிட்டே தயங்கித்தயங்கி உள்ள போனான்.

அவுக அம்மாக்காரி அழுகையில லயிச்சு இருந்ததுனால, இவன அடிக்க மறந்துட்டா போல. நல்ல வேளை, பயபுள்ள அப்போதைக்கி அடிவாங்காமத் தப்புச்சுக்கிட்டான்.

இப்பப் போயி எதுனா கேட்டா... என்ன கெடைக்கும்னு அவன் அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதுனால, எப்புடியும் இவுக சண்ட ஓஞ்சுரும், அப்பப் பாத்து நம்ப விசயத்தக் கேட்டுப்புடணும்னு வெவரமா முடிவு பண்ணிட்டுத் திண்ணையில போயி ஒக்காந்தான்.

அவுக அப்பாவோட பேச்ச வச்சு, அது ஏதோ வெளியூரு வேலைக்கு ஆளு எடுக்கிற ஆளுககூட பேசிக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சது. அவனுக்கு ஒரு பக்கம் சந்தோசமா இருந்துச்சு. “ஒரு வேளை வெளியூருக்கு அப்பன் வேலைக்குப் போச்சுன்னா, வர்றப்ப நமக்கு புத்தகம் வாங்கியாரச் சொல்லலாம்...” ன்னு மனசு கணக்குப் போட்டுச்சு.

சின்னப்பாண்டிக்கி வெவரம் தெரிஞ்சு அவுக வீட்டுல அவனுக்கு புதுத் துணிமணியோ இல்ல நோட்டுப் புத்தகமோ வாங்கிக் குடுத்ததில்ல. எல்லாம் அரசாங்கம் குடுக்குற இலவச சீருடையும் புத்தகமுந்தான். மொத மொத, இப்பத்தான் இந்தப் புத்தகத்த அவன் புதுசா வாங்கியாரச் சொல்லப்போறான். அத நெனைக்கிறப்பவே அவனுக்கு உள்ளூர சந்தோசமா இருந்துச்சு. அந்த மப்புலையே வெளையாடப் போயிட்டான்.

ராத்திரி அவுக அம்மா வந்து அவனக் கஞ்சி குடிக்கக் கூப்புட்டுச்சு. இதாண்டா சமயம்னு, நம்பாளு கொக்கியப் போட்டான்.

“யம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எனக்கு ஒரு புதுப் புத்தகம் வாங்கியாரச் சொல்லும்மா...” ன்னு ஆரம்பிச்சது தான் தாமசம்... அவனுக்கு வழக்கமாக் கெடைக்க வேண்டியது கொஞ்சம் தாமதாமாக் கெடச்சது முதுகுல.

“இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு... ஒனக்கு புத்தகமா வேணும் புத்தகம்... எரும மாடே... இருக்கிற புத்தகத்த வச்சுக்கிட்டே இங்க படிக்கிற வழியக் காணோம்... இதுல ஒனக்கு எம்புட்டு ஏத்தமிருந்தா இப்புடிக் கேப்ப...” ன்னு பொரிஞ்சு தள்ளிட்டா ஆத்தாக்காரி.

“ஒங்கப்பங்காரன் என்னடானாக்க... இருக்க வீட்ட ஒத்திக்கி விட்டுட்டு... பரதேசம் போயிப் பொழைக்கலாம்னு கெடந்து குதிக்கிறான்... இதுல நீ வேறயா... ஒழுங்கு மரியாதையா ஊத்துறதக் குடுச்சுப்புட்டு படுத்துத் தூங்கு...” ன்னு வசைமாரி பொழுஞ்சுபுட்டா.

அடிய வாங்குனவனுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு... “அப்புடி என்ன பெருசா கேட்டுப்புட்டோம்... அதுக்கு இந்த சாத்து சாத்துராக...” ன்னு நெனச்சுக்கிட்டே... “எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேணாம்... புத்தகம் வாங்கிக் குடுத்தாத்தான் நா சாப்புடுவேன்...” ன்னு மொரண்டு புடிச்சான்.

எச்சா ரெண்டு அடியப் போட்டு... “சனியனே... எக்கேடோ கேட்டுப்போ...” ன்னு சொல்லிட்டு போயிட்டா அம்மாக்காரி. ரெண்டு வண்டிக் கல்லக் கொண்டாந்து முதுகுல கொட்டுனமாறி இருந்துச்சு... முதுகெல்லாம் எரியுது... மேவாக்குல ஒன்னு கீவாக்குல ஒன்னுன்னு, ரெண்டு கையையும் முதுகுப் பக்கமா வச்சுத் தேச்சுக்கிட்டு... ஓ...ன்னு... பெருங்கொரலெடுத்து அழுவ ஆரம்பிச்சுட்டான் பய...

எதிர்பாத்தது கெடைக்கலங்கிற ஏமாத்தம்... அடிபட்ட ரோசம்... அவமானம்... இயலாமை... கோவம்... ஆத்திரம்ன்னு... சினிமாப் படத்துல மாறுற கலரு கணக்கா அவனுக்குள்ள மாறி மாறி ஓடுது... அதுக்குத் தக்கன அழுவையும் ஏத்த ஏறக்கத்தோட ஒடியாறுது... கொஞ்ச நேரத்துல... வயிறெல்லாம் எக்கி... கேவிக் கேவி... அழுவ முத்திகிட்டு வருது... யாத்தாடி ஓங்கூட மாரடிக்க முடியாதுறா சாமின்னு... பொல பொலன்னு போட்டி போட்டுக்கிட்டு வெளியேறுதுக கண்ணுத்தண்ணியும் மூக்குச்சளியும்...
  
“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...?” ன்னு ஊடால ஒரு நெனப்பு மின்னல் கணக்கா வந்து போவுது...

“இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம்    போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... அவனமாறியே பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு நெனச்சுப் பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...

“ம்ம்... நம்ப வீடும்தான் இருக்கே... எப்பப் பாத்தாலும் பிரச்சனை... அப்பாவுக்கும்  அம்மாவுக்கும் ஒரே சண்ட... அவுக சண்ட போட்டுக்கிறதுமில்லாம நம்பளையும் போட்டு அடிக்கிறாக... ஒரு நல்ல துணிமணி இருக்கா...? ஒழுங்கான சாப்பாடு இருக்கா...? ஒன்னும் இல்ல... இதேது பணக்கார வீட்டுல பொறந்து இருந்தா... எல்லாமே கெடச்சுருக்குமே...” ன்னு ஆதங்கமா இருந்துச்சு...

“அய்யோ... ஒரு வேளை... அப்புடிப் போயிப் பொறந்திருந்தா... அப்பறம் நம்ப அப்பா அம்மா, அண்ணன் அக்காலாம்  நமக்குக்  கெடச்சுருக்க மாட்டாகள்ல...” ன்னு மறு நெனப்பு வரவும்... மொத நெனப்பு காத்துப் போன பலூனு கணக்கா பொசுக்குன்னு போயிருச்சு.

“என்ன இருந்தாலும்... நம்ம அப்பா அம்மா அண்ணன் அக்கா மாறி வருமா... எல்லாரும் நல்லவுகதான்... என்ன... நம்ப படிப்புன்னு வர்றப்பத்தான் எல்லாரும் நம்பள ஒன்னும் கண்டுக்கிற மாட்டிக்கிறாக... நா பெருசா ஒன்னும் கேக்கலையே... ஒரு புத்தகந்தான கேக்குறேன்... அதுக்குப் போயி இப்புடி வைய்யிறாக... அடிக்கிறாக...” ன்னு நெனைக்கிறப்ப கேவிக் கேவி அழுவ வரவும்... கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு ஊத்துது.

“எல்லாம்... அந்தப் பயலால வந்த வெனை... சும்மா கெடக்குற சங்க ஊதிக் கெடுத்த மாறி... நம்பகிட்ட அவம் புத்தகத்தக் காட்டி... வம்ப இழுத்து விட்டுட்டுப் போயிட்டான்...” ன்னு ஒரு பக்கம் அந்த பையன் மேல கோவங்கோவமா வந்துச்சு...

இப்புடி ஆதங்கமும் ஏக்கமும் அவன் மனசப் போட்டு பெசஞ்சுகிட்டு கெடக்க... முனுக்கு முனுக்குன்னு எரியிற வெளக்க மொறச்சுப் பாத்துக்கிட்டே... மூலையில ஒக்காந்தி கேவிக் கேவி அழுதுக்கிட்டு இருந்தான் சின்னப்பாண்டி...

இத்தனை சோதனையும் வேதனையும் அவனோட அந்தத் தேடலையும் ஆவலையும் கூட்டுச்சே ஓழிய... அவனோட முயற்சியில பின்வாங்கத் தூண்டல... என்ன ஆனாலும் சரி... அதக் கண்டு பிடிக்காம விடுறது இல்லைன்னு... முன்ன விட ரொம்ப வைராக்கியந்தான் வந்துச்சு அவனுக்குள்ள...
 
எவ்ளோ நேரம் அப்புடி அழுதுக்கிட்டு இருந்தானோ தெரியல... அப்புடியே மூலையில சுருண்டு படுத்துட்டான்...

பசி ஒரு பக்கம்... மனப் பாரம் ஒரு பக்கம்ன்னு அவனப் போட்டு அழுத்த... தவிச்சுப் போயிட்டான் பயபுள்ள... எப்புடியும் நமக்கு ஒரு நல்ல வழி பொறக்குங்கிற நப்பாசையோட விசும்பிக்கிட்டே கெடந்தவன்... பாவம்... இத விட பெரிய இடி ஒன்னு அவந்தலமேல எறங்கப் போறது தெரியாம... அப்புடியே தூங்கிப் போயிட்டான்...




குடைச்சல கண்டு புட்சுருவாருபா அடுத்த பதிவுல...!  :-)


23 கருத்துகள்:

  1. அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...!

    பதிலளிநீக்கு
  2. சின்னப் பாண்டியின் உள்ளக்கிடக்கையை அருமையாச் சொன்னீங்க ,சரி ..பாவம் பலவேசம் வாத்தியார் என்ன ஆனார்ன்னு தெரியலையே !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீவிர வேட்டையில கீறாருபா...
      ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  3. சின்னப்பாண்டி என்னதான் புலம்பினாலும், தனக்குள்ளே தைரியத்தை வரவழைத்து கொண்டிருக்கையில்... ஒரு பெரிய இடி வரப் போகுதா...?

    ஆவலுடன் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒயுங்கா கிளாசுக்கு வர்றதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. /நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...?” // மனது கனத்து விட்டது. இதைப் போன்று எத்தனை சிறுவர்கள் நம் நாட்டில்?!!

    “ம்ம்... நம்ப வீடும்தான் இருக்கே... எப்பப் பாத்தாலும் பிரச்சனை... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்ட... அவுக சண்ட போட்டுக்கிறதுமில்லாம நம்பளையும் போட்டு அடிக்கிறாக... ஒரு நல்ல துணிமணி இருக்கா...? ஒழுங்கான சாப்பாடு இருக்கா...? ஒன்னும் இல்ல... இதேது பணக்கார வீட்டுல பொறந்து இருந்தா... எல்லாமே கெடச்சுருக்குமே...” // இத நினைத்த சின்ன பாண்டி உடனேயே,


    “அய்யோ... ஒரு வேளை... அப்புடிப் போயிப் பொறந்திருந்தா... அப்பறம் நம்ப அப்பா அம்மா, அண்ணன் அக்காலாம் நமக்குக் கெடச்சுருக்க மாட்டாகள்ல...”// என்று அவன் நினைப்பது ஒரு சிறுவனின் மனதை அப்படியே வெட்ட வெளிச்சமாக, அவனது பாசம், இயலாமை, ஆற்றாமை, ஆர்வம் என்று கலந்து கட்டிய ஒரு அவியல் உணர்வுகளாகக் காட்டுகிறது! அழ்காக உணர்வுகளுடன், யதார்த்தத் தொடராக ஒரு ந்லைந்த வீட்டில் உள்ள பையனின் கனவுகள், ஒரு சராசரி அரசு பள்ளி ஆசிரியரிந் நிலைமை என்று சூப்பராக எழுத்கின்றீர்கள்!

    சரி பலவேசம் தேடலில் இருக்கிறாரோ?!!!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

      ஆமாம்... பலவேசம் தீவிர வேட்டையில் இருக்கிறார்...

      நீக்கு
  6. சூப்பர் நைனா. வித்தியாசமா சொல்லிக்கினு போற. படம் கலக்கல் யாரு வரஞ்சது.
    ஒன்னு ரெண்டுவுட்டுபோச்சு அதயும் படிச்சிட்டு வந்துடறேன்.
    எப்பவும் என் ஒட்டு உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...
      அல்லாம் நம்ப கைலே போட்டதுபா.... :-)

      நீக்கு
    2. இவ்வளோ திறமைய கைல வச்சுக்குனுகிறயே. படா கில்லாடிப்பா நீ.

      நீக்கு
  7. ஆறு பகுதியையும் ஒரே மூச்சாக படித்து விட்டேன். அற்புத எழுத்தாற்றல் உங்களுடையது. நான் இணையத்தில் படித்த சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.க்ரைம் தொடர்கள் கூட இவ்வளவு விறுவிறுப்பாக இருந்ததில்லை.அற்புதமான மனஉணர்வுகளை வெளிப்படுத்தும் கதையாக அமைந்துள்ளது. அடுத்த பகுதியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆசிரியராக இருப்பீர்கள் என்று கருதுகிறேன். அல்லது ஆசிரியரின் மகனாக இருப்பீர்கள் . அந்த வார்த்தையும் ஓரளவிற்கு கணித்து விட்டேன். அடுத்த பகுதியில் சரிபார்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொன்ன மாறியே அல்லா பாகத்தையும் பட்ச்சிட்டு வந்து கர்த்து சொல்லிக்கின பாரு... அத்துக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!
      //நீங்கள் ஆசிரியராக இருப்பீர்கள் என்று கருதுகிறேன். அல்லது ஆசிரியரின் மகனாக இருப்பீர்கள்// இல்லபா... எங்க தாத்தாதாம்பா வாத்தியாரு...
      //அந்த வார்த்தையும் ஓரளவிற்கு கணித்து விட்டேன். அடுத்த பகுதியில் சரிபார்த்துக் கொள்கிறேன்.// ஆவட்டும்பா... ஆனா அதுக்கு முன்னாடியே அவுத்து வுட்டுறாதபா...

      நீக்கு
    2. முரளிதரன் சார், இந்த முட்டா நைனா, அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன்னு ஒத்தக்கால்ல நிக்கிராரு, அதனால, நீங்க கொஞ்சம் அந்த வார்த்தை என்னன்னு சொல்லுங்களேன் பிளீஸ்...

      நீக்கு
    3. சொக்கன் சுப்பிரமணியன் சார்... அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

      நீக்கு
  8. ஓர் ஏழை குடிசை வாசிப் பையனின் மனதை அழகாக படம்பிடித்தது இந்த வாரப் பகுதி! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வருகை புரிந்து நீங்கள் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி...!

      நீக்கு
  9. ஆஹா ! கதையில ட்விஸ்ட் வருது போலவே!! நடத்துங்க ,நடத்துங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க டீச்சர்... மறக்காம கிளாசுக்கு வந்துருங்க...!

      நீக்கு
  10. படம் ரொம்ப தத்ரூபமா இருக்கு நைனா......

    அடுத்த பதிவுல கண்டுபிடிச்சுருவாரா பலவேசம் வாத்தியார்.....

    எல்லாம் போட்டாச்சுபா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்பா...!
      இக்கும்பா... மறக்காம அடுத்த கிளாசுக்கு வந்துருபா...

      நீக்கு
  11. அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாடோடி அவர்களே...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...