ஞாயிறு, 2 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 4

“என்ன சார் வண்டில எதுனா கோளாறா?”  ன்னு கேட்டுக்கிட்டே, கையில ஸ்பானரோட, அவருக்கிட்ட  வந்தான் “அழுக்குல புடிச்ச கொழுக்கட்டை” கணக்கா இருந்த ஒரு வருங்கால மெக்கானிக்கு.


“இல்லைப்பா...” ன்னு தடுமாறி நின்ன பலவேசம்,  அப்பறமா எதையோ நெனச்சவரு மாறி, “ஆமாம்பா... ஸ்டார்ட்டிங்  ட்ரபுள் குடுக்குதுப்பா... அதக் கொஞ்சம் என்னான்னு பாக்கணும்... ஓனர் இருக்காராப்பா...?” ன்னு விசாருச்சுக்கிட்டே, ஏக்கத்தோட கடை பேர்ப்பலகையை ஒருவாட்டி பாத்துக்கிட்டாரு.

“ஓனர் வெளில போயிருக்கார் சார்... இதுக்கெல்லாம் அவரு எதுக்கு சார்... நானே பாத்துருவேன் சார்... நீங்க இப்புடி ஒக்காருங்க சார்...” ன்னு படக்குன்னு உள்ளருந்து ஒரு இருக்கையை எடுத்துப்போட்டான் பையன்.


மந்திருச்சு விட்ட கோழி மாறி, தயங்கித் தயங்கி அதுல ஒக்காந்த பலவேசம், சுறுசுறுப்பா வேலை செய்யிற  பையனையே கொஞ்சநேரம் பாத்துக்கிட்டுருந்தாரு.


வண்டிக்கிட்ட குத்தவச்சு ஒக்காந்தவன், நேரா “ஸ்பார்க் பிளக்” இருக்க பக்கம் கையைவிட்டு, அத வெடுக்குன்னு புடுங்கி, உத்துப் பாத்துட்டு, “அடச்சுருக்கு சார்... தொடச்சுப்புட்டு கொஞ்சம் சொரண்டிப் போட்டா போதும் சார்...” ன்னு சொன்னவன், அவரோட பதிலுக்கு காத்திருக்காம, “ப்பூ... ப்பூ...” ன்னு அத ரெண்டு  ஊது ஊதி... ரெண்டு சொட்டு சீமெண்ணெய்ய அது மண்டையில விட்டு, திருப்புளிய வச்சு சரக் சரக்குன்னு தேச்சு... கந்தத் துணியில நல்லாத் தொடச்சு, “அவ்ளோதான் சார்... இனிமே ஒழுங்கா ஸ்டார்ட் ஆவும் சார்...” ன்னு பெருமையோட சொன்னான். அப்புடிச் சொன்னதோட நிக்காம, அத திரும்பவும் மாட்டிவிட்டு, ஒரே மிதியில வண்டிய ஸ்டார்ட் பண்ணியும் காட்டினான்.


“பையன் பரவாயில்லையே...” ன்னு நெனச்சுக்கிட்ட பலவேசம், “எவ்ளோப்பா ஆச்சு...?” ன்னாரு.


“நீங்க பாத்து குடுக்குறதக் குடுங்க சார்...”


ஒரு இருவது ரூவாய எடுத்து நீட்டுனாரு. அதப் பாத்து அரண்டு போன பொடியன், “இதுக்கு எதுக்கு சார் இவ்ளோ காசு...? அஞ்சு ரூவா போதும் சார்...” ன்னான் பவ்யமா.


“பரவால்ல வச்சுக்கப்பா...” ன்னு அவன் கையில அழுத்தித் திணிச்சுப்புட்டு...  ஒரு நொடி தயங்கி நின்னாரு பலவேசம்.


ரொம்ப நன்றியுணர்ச்சியோட “என்ன சார்...?” ன்னான் பையன்.


“கேக்கலாமா...? இல்ல... வேண்டாமா...?” ன்னு ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்துக்கிட்டு இருந்துச்சு அவரு மனசுல. “சரி இவ்ளோ தூரம் வந்துட்டோம்... கேட்டுத்தான் பாப்பமே...” ன்னு ஒரு பக்கம் தோனுது, “ச்சே... ச்சே... இதப் போயி.... இந்தச் சின்னப் பையங்கிட்ட கேக்குறதா...?” ன்னு இன்னோரு பக்கம் தோனுது. பாவம்... தவதாயப்பட்டுப் போயிட்டாரு பலவேசம்.


முடிவுல, அவரோட தன்மானம், அதிக ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெறவும், “சரி... இன்னங் கொஞ்சநேரம் இருந்து பாப்போம்... ஒரு வேளை ஓனரு வந்துட்டா... அவருகிட்டே கேட்டுப் பாத்துரலாம்...” ன்னு ஒரு முடிவு கட்டுனாரு... அது ஏன்னாக்க... அந்தக் கடையோட ஓனரு, ஒரு காலத்துல  இவருக்கிட்ட படிச்சவன். அதுனால, அவங்கிட்ட கொஞ்சம் தயக்கமில்லாம நைச்சியமாப் பேசித் தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு கணக்குத்தான்.


“சரி... அதுவர என்னா பண்றது...? பையன் வேற சீக்கிரமா வேலைய முடிச்சுப்புட்டான்... இப்ப என்னா செய்யலாம்...?” ன்னு தீவிரமா யோசிச்சவரு...


“ஏம்பா... வண்டி இப்ப ஸ்டார்ட் ஆவுது... ஆனா கொஞ்ச நேரத்துல நின்னு போயிரும்ப்பா... நீ என்னா பண்ற... ஒரு வாட்டி ஓட்டிப் பாத்துட்டு வந்துறேன்...” ன்னாரு.


“அப்புடியா சார்... ஒகே சார்... ஓட்டிப் பாத்துட்டு வந்துர்றேன் சார்... அதுவரைக்கும், டீ காப்பி எதுனா குடிக்கிறீங்களா சார்...” ன்னு மரியாதையாக் கேட்டான் பையன்.


“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா... நீ போயிட்டு வாப்பா... நா வெயிட் பண்றேன்...” ன்னு அவருசொல்லவும்... சுறு சுறுப்பா வண்டிய எடுத்துக்கிட்டு வெளில போனான் பையன்.


அவன் போறதையே வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்த பலவேசத்தோட மனசு, இப்போ... அவன் பின்னாடியே  போச்சு... “வண்டி ஒயரம் தான் இருக்கான் பையன்... படிச்சா இப்ப ஒரு ஏழாவது எட்டாவது படிக்கணும்... பாவம்... இந்த வயசுல இப்புடிச் சிரமப்படுறான்... இப்புடிப் பிஞ்சுகள வேலைக்கு அனுப்பித்தான் அவனப் பெத்தவுக வயிறு வளக்கணுமா என்ன...?” ன்னு ஒரு கணம் கொதிச்சுப் போச்சு.

“பாவம்... பெத்தவிங்களுக்கு என்ன பிரச்சனையோ...? என்ன சூழ்நிலையோ என்னமோ...? சோத்துக்கே வழியில்லாம இருக்கப்போ... புள்ளைகள எங்கிட்டு படிக்கவைக்கப் போறாக... என்னதான் இருந்தாலும்... படிக்கிற வயசுல புள்ளைகள வேலைக்கு அனுப்புறது தப்புத்தான்... இதுக்கு இந்த ஊரும் ஒலகமும்தான் காரணம்...” ன்னு நெனச்சவரோட ஆதங்கம், கோவமா மாறி இந்த சமுதாயத்துமேலயும்,   பாழாப்போன அரசியல்வாதிகமேலயும் அரசாங்கத்துமேலயும் திரும்புச்சு...

நல்லவேளை அவரோட அந்தக் கோவம் அவிங்களக் குத்திக் கொதறத்துக்குள்ள... அவரோட கவனம், ஒர்க்சாப்புக்குள்ள வேல செஞ்சிக்கிட்டு இருந்த ஆளுக மேல போச்சு... அவுகளையும் அவுக  கையில வச்சு வேலை பாத்துக்கிட்டு இருந்த மத்தாப்புக் கொழாயையும் பாக்கவும், திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ள பகுமானமா வந்து ஒக்காந்திக்கிச்சு.

“சரி... அவுககிட்டே கேட்டுத் தெருஞ்சுக்கலாமா...” ன்னு ஒரு யோசனை வந்துச்சு அவருக்கு. ஆனா அதுக்கு அவரோட தன்மானம் எடம் குடுக்கல. “என்னடா... இதுகூடத் தெரியாமையா இவரு வாத்தியாரு வேலை பாக்குறாருன்னு அவுக நெனச்சுப்புட்டா, நம்ம மானம் என்னா ஆவுறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு...


“சரி... பாவம்... வேலை செய்யிரவுகளத் தொந்திரவு செய்ய வேண்டாம்... ஓனரு வந்துரட்டும்... அவருக்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...” ன்னு அவரு முடிவு பண்ணறதுக்கும், சோதனை ஓட்டம் போட்டுட்டு பையன் திரும்பி வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.

அவரோட கெட்ட நேரமோ என்னமோ... கடையோட ஓனரு அதுவரைக்கும் வரவே இல்ல. ஏமாத்தமாப் போச்சு அவருக்கு.

“சார்... வண்டில ஒரு பிரச்சனையும் இல்ல சார்... ஒழுங்காத்தான் ஓடுது சார்... நீங்க தைரியமா எடுத்துக்கிட்டு போலாம் சார்...” ன்னான் பையன்.


வேற வழியில்லாம... “சரி... இதுக்கு மேல இங்க இருக்குறதுல அர்த்தமில்ல... பையன் கொஞ்சம் வெவரமாத்தான் இருக்கான்... பேசாம இந்தப் பையங்கிட்டயே கேட்டுப் பாத்துறலாமே..” ன்னு ஒரு நெனப்பு வர, கடசீல... வெக்கத்தை தூக்கி வெளியில வச்சுப்புட்டு... அவங்கிட்ட வாய விட்டு கேட்டேபுட்டார் பலவேசம்...

“ஏப்பா... இந்த போர்ட்ல போட்டுருக்கே... ******ன்னு... அப்புடீனா என்னப்பா அர்த்தம்...?”


எதிர்பாக்காத அந்தக் கேள்வில அரண்டுபோன பையன், ஏதோ போலிசு விசாரணைக்கி ஆளான கைதி மாறி...


“எனக்கு அதெல்லாம் தெரியாது சார்... பஞ்சர் ஓட்டுவேன்... சின்ன சின்ன ரிப்பேர் பாப்பேன்... அவ்ளோதான் சார் தெரியும் எனக்கு ... நா வேலைக்குப் புதுசு சார்... நீங்க வேணா ஓனர்கிட்ட கேட்டுக்கங்க சார்... இப்ப வந்துருவார் சார்...” ன்னு மூச்சுவிடாம ஒப்புச்சான்.

இதக் கொஞ்சமும் எதிர்பாக்காத பலவேசமும், கொஞ்சம் மெரண்டுதான் போயிட்டாரு.


“சரி... சரி... பரவால்லப்பா... நான் ஓனர்கிட்டேயே கேட்டுக்கிறேன்... நான் வர்றேம்ப்பா...” ன்னு சொல்லிட்டு ஏமாத்தத்தோட கெளம்புனவர... ஏற எறங்கப் பாத்து... சல்யூட் அடிச்சான் பையன்.


“வாத்தியாரா இருக்க நமக்கே தெரியலை... வறுமைக் கொடுமைல, சின்ன வயசுலேயே வேலைக்கு வந்த, அவனுக்கு எப்புடித் தெரிஞ்சிருக்கும்...? பாவம்... அவங்கிட்ட நம்ப எதிர்பாக்குறதுல என்ன ஞாயம் இருக்கு...?” ன்னு நொந்துக்கிட்டே வண்டிய எடுத்தாரு பலவேசம்.


ஏமாத்தமும், அனுதாபமும் கலந்த ஆற்றாமையோட தாக்கம், அவரு வண்டி ஓட்டத்துல தெரிஞ்சுச்சு.




குடைச்சல் தொடரும்...



25 கருத்துகள்:

  1. பலூனை ரொம்ப ஊதி ஊதி பெருக்க வெச்சுட்டே போனா... சில சமயம் வெடிக்கிறப்ப... ச்சீ! இவ்வளவுதானான்னு சலிப்புத் தோணிடும் நைனா! உஸாரு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவடும்பா... உசாரா இர்ந்துக்கிறேம்பா...! அட்டுவைசுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!

      நீக்கு
  2. என்னாலே இனிமேலும் தாங்க முடியாது ,பலவேசம் சார் எங்கே இருக்கார்ன்னு சொல்லுங்க ..அவரோட சந்தேகத்தை தனியொரு மனுசனா நானே தீர்த்து வச்சுடுறேன் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கும்பா... பாவம்பா... பட்டிக்காடு வாத்யாரு... நம்ப பெரியபட்டிலதாம்பா கீறாரு... அவருக்கு எதுனா எல்ப் பண்ணுபா...

      நீக்கு
  3. அடப் போங்கப்பா.... இது போங்கு ஆட்டம்... ஹா... ஹா... அடுத்தப் பதிவுக்கு வர்றேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரப்பட்டு ஆட்டத்த பாதியில விட்டுட்டுப் போயிராதிக அப்பு...! பாவம் வாத்தியாரு மனசொடஞ்சு போயிருவாரு...

      நீக்கு
  4. என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெர்சலாவாதபா... சின்னப்பாண்டி பத்துன கதை கொஞ்சம் சின்னப்புள்ளத்தனமாத்தாம்பா இர்க்கும்...

      நீக்கு
  5. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பலவேசம், கடைசியில ஓனரிடம் அதைக் கேட்டுவிட, ஒரு நிமிஷம் அவரை மேலும் கீழும் பார்த்த ஒனரு, கழட்டிப் போட்ட கார்புரேட்டர் மாதிரி கபகபவென சிரித்து, "இது கூடவா சார், உங்களுக்குத் தெரியல"ன்னு சொல்லி, சின்னப் பயல பார்த்து, "பெரியவங்க பேசும் போது என்ன வேடிக்க மயிரு வேண்டியிருக்கு, போ அந்தட்ட" என அவனை விரட்டி விட்டு, பலவேசத்திடம் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தெளிவாகச் சொன்னார்.
    சந்தேகம் தீர்ந்த பலவேசம், ஆர்கிமிடிஸ் கணக்காக (துணியோட தான்) குஷியுடன் வண்டியை உதைக்க ஒரே அடியில் ஸ்டார்ட் ஆனது..!!

    அவளோதான்பா கதை...!!
    போட்டாச்சு... போட்டாச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோக்கா முடிச்சு வச்சிக்கினபா...! இர்ந்தாலும் நம்ப வாத்தியார் பாணியிலேயே தேடிப் பாக்கலாம்பா...

      நீக்கு
  6. ஏமாத்தமும், அனுதாபமும் கலந்த ஆற்றாமையோட தாக்கம், எங்களுக்கும் வந்துருச்சு எப்போனு! கொஞ்சம் னாங்களும் ரீல் விடலாம்னு பாத்தோம்....அதுக்கு முத்திகிட்டாரு நம்ம மலர்......அழாக எழுதிருக்காருப்பா....அவரு இந்தக் கதைல பார்ட்னர் ஆயிடுவாரு போல!!!!!....நைனா....!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ ! இதையே தான் நானும் சொல்லனும்னு நினைச்சேன் சகோ!!!!!!

      நீக்கு
    2. நீங்களும் எடுத்து வுடுங்கபா... நல்லாதாம்பா இருக்கும்...! (மைதிலியக்கா உங்களுக்கும்தான்...)

      நம்ப வாத்தியாருக்கும் எல்ப்புல்லா இருக்கும்...!

      நீக்கு
  7. சஸ்பெண்ஸ் தாங்க முடியலை! சீக்கிரம் சொல்லிருங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னாபா பண்றது...? நம்ப வாத்தியாருக்கு அந்தளவுக்கு வெவரம் பத்தல... கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்...

      நீக்கு
  8. நீங்கள் வரையும் படம் பிராமாதம்! எதோ ஒன்னு அதில் இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப ரெம்ப டேங்க்ஸ்பா... நீங்க தரும் ஊக்கத்தை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்பா...

      நீக்கு
  9. என்னா நைனா நீ, உண்ணாண்ட பேஜாராகீது... இந்த வாட்டியாவது சொல்லுவன்னு பாத்தா, அடுத்த தபா, சொல்லலை, அப்புறங்காட்டியும் நடக்குறதே வேற ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெர்சலாவாதபா... கோச்சுக்கினு கிளாசுக்கு வராம இர்ந்துக்காதபா...! அப்பால பலவேசம் வாத்யார் பெயிலாக்கி வுட்ருவாரு...

      நீக்கு
  10. இன்னாபா ஒரே மெர்சலா போச்சு உங்கூட!

    இன்னாதான் சொன்னாரு! என்னாண்ட மட்டுமாது சொல்டேன்!

    எல்லாம் போட்டாச்சு.... போட்டாச்சு! அதுவும் ஏளாவது!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னாபா பண்றது...? அத்தத்தாம்பா தேடிக்கினு கீறோம்...!
      ஏழாவது ஓட்டுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...