ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 2

சின்னப்பாண்டி அப்புடி என்னதான் கேட்டான்னு தெருஞ்சுக்கனும்னாக்க, நம்ப, போன நாயித்துக் கெழம என்ன நடந்துச்சுன்னு மொதல்ல தெருஞ்சுக்கணும்.

ஊரே கொல்லுன்னு போச்சு அன்னைக்கி...! எப்பயுமே தேர்தலப்பத்தான், ஓட்டுப் போடறதுக்காண்டி, கெழவன் கெழவிகள தூக்கிக்கிட்டுப் போவ பெளசரு வண்டி வரும். இப்ப என்னடானாக்க, ஒத்த வீட்டுக்கு முன்னாடி, பெளசரு வண்டி ஒன்னு வெரசா வந்து நிக்கிது. ஒத்த வீட்டுக் கெழவிய மட்டும் எந்தத் தேர்தலுக்குத் தூக்கிட்டு போவப் போறாகன்னு, ஊரு சனமே வாயப் பொளந்துக்கிட்டு பாக்குது.


வந்தது யாருனாக்க, கெழவியோட மகன் பொன்னுச்சாமி. கரட்டுப்பட்டியோட சரித்திரத்துலயே ரொம்பப் படிச்ச ஒரு ஆளு யாருன்னா... அது இந்தப் பொன்னுச்சாமி தான். எட்டாப்பு வர படிச்சுப்புட்டு, பட்டணத்துல பியூன் வேல பாக்குற ஆளு. பொண்டு புள்ளையோட கெழவியப் பாக்க வந்துருக்கான்.

பெருசுக வாயப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்க, பொடுசுக என்னடானாக்க, வாடக பெளசர வெரட்டிக் கொண்டுபோயி ஊரு எல்லயத் தாண்டி விட்டுட்டுத்தான் திரும்பி வந்தாய்ங்க. வந்தவிங்க, பொன்னுச்சாமி பெத்த புள்ளைகளப் பாத்து வாயப் பொளந்துட்டாய்ங்க.

சும்மா சவுளிக்கட பொம்ம கணக்கா ஒரு பாப்பா, அதுக்குப் பக்கத்துல, வெள்ளயுஞ்சொள்ளையுமா  பட்டணத்துப் பள்ளிக்கூடத்துல படிக்கிற அதோட அண்ணங்காரன்.  கையில ஒரு புத்தகத்த வச்சு பவிசு காட்டிக்கிட்டு இருக்கான்.

“மினுமினுக்குற அவனோட மேனியப் பாக்குறதா...? இல்ல, சுத்தபத்தமா இருக்க அவனோட துணிமணியப் பாக்குறதா...? இல்ல, பளபளன்னு அவங்கையில சொலிக்கிற அந்தப் புத்தகத்தைப் பாக்குறதா...?” ன்னு பாவம் பட்டிக்காட்டுப் பயகளுக்கு ஒன்னும் புரியல. ஆர்வமா அவனையும் அந்தப் பாப்பாவையும் கண்ணுக் கொட்டாம பாத்துக்கிட்டு இருக்காய்ங்க. ஏதோ காட்டுவாசிப் பய கூட்டத்துக்குள்ள சிக்கிக்கிட்டவனாட்டம் அந்தப் பய இவிங்கள பயந்து பயந்து பாத்துக்கிட்டு கெடக்கான்.

மத்தவிங்க என்னத்தப் பாத்தாய்ங்களோ என்னமோ... ஆனா, சின்னப்பாண்டி மட்டும் அந்தப் புத்தகத்தையே பாத்துக்கிட்டு இருந்தான். சின்னப்பாண்டிக்கி படிக்கிறதுனா உசுரு. அவுக வீட்டுல, அவனுக்கு மூத்த புள்ளைகளெல்லாம் ரெண்டாப்புக் கூடத் தாண்டல. அதுக்குள்ளார, அவுக அப்பா அம்மா கூட வேலைக்கிப் போயிட்டாக. இவன மட்டும், கடசிப் புள்ளைங்கிறதுனாலயோ என்னமோ, அஞ்சாப்பு வரை படிக்க விட்டுருக்காக.
 
அந்தப் புத்தகத்தப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தவதாயப்பட்டுப் போயிட்டான் சின்னப்பாண்டி. என்ன இருந்தாலும் நமக்கு இவன் சொந்தக்காரப் பயதானன்னு நெனச்சுக்கிட்டு, தைரியமா வாய விட்டுக் கேட்டுப்புட்டான்...

“டேய்... இது என்ன புத்தகம்டா... இம்புட்டு பளபளப்பா இருக்குது...?”

அதுவரைக்கும், இவிங்களப் பாத்து மெரண்டு போயிக் கெடந்தவன், சினேகமா ஒருத்தன் பேச்சுக் குடுத்ததப் பாத்து சந்தோசப் பட்டுப்போயி, திண்ணையில போயி ஒக்காந்தி, லேசா இவிங்க கூடப் பேச்சுக் குடுத்தான்.

“டேய்... இது... என்சைக்ளோப்பீடியாடா...”

“என்னடா இது புத்தகத்தப் பத்திக் கேட்டாக்க... சைக்கிள்ங்கிறான் பீடிங்கிறான்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “அப்புடீன்னா என்னடா...?” ன்னு வெள்ளந்தியாக் கேட்டான் சின்னப்பாண்டி.

“அடடே ஒனக்கு அதுகூடத் தெரியாதா...?   என்சைக்ளோப்பீடியான்னா... ம்...ம்... என்ன சொல்லறது...?” ன்னு யோசிச்சவன், “அதாண்டா... பொது அறிவுக் களஞ்சியப் புத்தகம்...”

“உள்ள அறிவுக்கே இங்க வழியக் காணாம், இதுல பொது அறிவுக்கு எங்க போறது...?” ன்னு மெரண்டு போன சின்னப்பாண்டி, அவன் சொன்னது பாதி புரிஞ்சும் புரியாமயும் இருக்கவும், “சரி இதுக்கு மேல அதப் பத்திக் கேட்டா நம்ம மானம் போயிரும்...” ன்னு சுதாரிச்சுக்கிட்டு, “அடடே அப்புடியாடா... எங்க எனக்கும் கொஞ்சம் காட்டுரா... பாக்கலாம்...” ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான்.

சின்னப் புள்ளகள்ட்ட இருக்க ஒரு கொணம் என்னானாக்க, தனக்கிட்ட இருக்கிறத பாத்து அடுத்தவுக ஆச்சிரியப் படனும்னு ரொம்ப ஆசப்படுவாக... அதுமாறித்தான் அவனும் தன்னோட புத்தகத்த இந்தப் பசங்க கிட்ட காட்டி பெருமைப் பட்டுக்கனும்னு நெனச்சான்... அதுனால, தனக்கு மட்டும் தெரியிற மாதிரி புத்தகத்த தொறந்து வச்சு ஒவ்வொரு பக்கமாப் பொரட்டிக் காட்டிக்கிட்டு இருந்தான்.

கரட்டுப்பட்டி பயலுகளும் அத முண்டியடிச்சுக்கிட்டு எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாய்ங்க... “டேய் இங்க பார்றா... இந்தப் படம்மாறியே நம்ம புத்தகத்துலயும் இருக்குதுல்லாடா...”

“டேய் இது என்னடா இப்புடி இருக்கு...?”

“அய்யே... இது தெரியாதாடா ஒனக்கு... இதாண்டா... டிவிப் பொட்டி...” ன்னு ஒருத்தன் சொல்லவும், பட்டணத்துக்காரன் கெக்கபெக்கன்னு சிரிக்கிறான்... இவிங்களுக்கா ஒன்னும் புரியல...

“டேய்... அது டிவி பொட்டி இல்லடா... அதுக்கு பேரு வாசிங் மெசின்...”

“வாசிங்கி மெசினா... அப்புடீன்னா என்னாடா...?”

“அடப் பாவிகளா... இது கூடத் தெரியாதா? இது தாண்டா துணி தொவைக்கிற மெசினு... எங்க வீட்டுல இருக்கு... ஒங்க வீட்டுலலாம் இல்லையடா...” ன்னு கேக்கவும்...

எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சுப்புட்டாய்ங்க... ஒடனே சின்னப்பாண்டி... “எங்க ஊருலல்லாம் அதெல்லாம் கெடையாதுடா... நீ அடுத்த பக்கத்துக்குப் போடா...” ன்னு சொன்னான் ஆர்வந் தாங்கமாட்டாம...

அவனும் அடுத்த பக்கத்தத் திருப்புனதுதான் தாமசம்.... கும்பல்ல மூக்கு நோண்டிக்கிட்டே இதெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த ஒருத்தன்... ஆர்வக்கோளாறுல... “டேய் இங்க பார்றா... புசுவானம்...” ன்னு சொல்லிக்கிட்டே மூக்கு நோண்டுன வேரலாலேயே அந்தப் படத்தத் தொட்டுக்காட்டவும்...  அவன் வெரல்ல இருந்த மூக்குப்பீ அந்தப் படத்துமேல ஒட்டிக்கிச்சு... ஒடனே பட்டணத்துக் காரனுக்கு வந்துச்சு பாரு கோவம்... “அய்யே... போங்கடா... டர்ட்டி பசங்களா...” ன்னு சொல்லிக்கிட்டே புத்தகத்த மூடிக்கிட்டான்.

ரொம்ப ஏமாத்தமாப் போச்சு சின்னப்பாண்டிக்கி, “ச்சே... நல்ல நல்ல படமா காட்டிக்கிட்டு வந்தான்... இந்தப் பயலுக அதக் கெடுத்துப் புட்டாய்ங்களே...” ன்னு  ஆதங்கப் பட்டுப் போயி... “டேய் வெளக்கென்ன ஒன்னைய யாருடா அத தொட்டுக் காட்டச் சொன்னது...? இப்பப் பாரு அவன் காட்ட மாட்டிக்கிறான்ல...?” ன்னு கோவமாக் கத்துனான்.

“ஆமா... பெரிய பொல்லாத புத்தகம்... போடா... நீயும் ஒன் புத்தகமும்... டேய் வாங்கடா நாம வெளாடப் போலாம்...” ன்னு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டான் அந்த ஆட்டையக் கலைச்சு விட்டவன்.

சின்னப்பாண்டிக்கி ஏனோ அங்கேர்ந்து போவ மனசு வர்ல... “டேய் அவிங்க போனாப் போறாய்ங்க... நீ எனக்குக் காட்டுரா...” ன்னு கேக்கவும்...

பட்டணத்துக் காரன் ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டான்... “போடா... ஒங்களுக்குக் காட்டப் போயி... எம்புத்தகத்துல அழுக்குப் பண்ணிட்டீங்கள்ல... இனிமே நா காட்ட மாட்டேண்டா போடா...” ன்னு ரொம்பத் திமுராச் சொல்லிப்புட்டான்...

ரொம்பவும் மனசொடஞ்சு போயிட்டான் சின்னப்பாண்டி... “டேய்... அந்தப் படத்துல இருந்தது என்னான்னு மட்டுனாவுது சொல்லுடா...” ன்னு அழாத கொறையாக் கேக்குறான்...

“அதுக்கு பேரு, **** டா...” ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு எந்துருச்சுட்டான் அவன்.

அவன் இங்லீசுல சொன்ன அந்த வார்த்தை ஏதோ ஒரு “முட்டாயி” பேரு மாறி தெரிஞ்சது இவனுக்கு... “டேய் அத இன்னொரு வாட்டி காட்டுரா பாத்துக்குறேன்...” ன்னு கேக்கவும்...

“அதெல்லாம் முடியாது... போடா... இதே மாறி ஒன்னோட சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்... போயிப் பாத்துக்கடா..” ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான் அவன்.

சின்னப்பாண்டிக்கு ஒரே அழுகையா வந்துருச்சு... பட்டணத்துக்காரன் மேல வந்த கோவம் அப்புடியே அந்த மூக்குப்பீ நோண்டுனவன் மேல திரும்பிருச்சு... “அநியாயமா இப்புடி ஆட்டையக் கலைச்சு விட்டுட்டானே...” ன்னு அவன்மேல வந்த ஆத்தரத்துக்கு, அவன் மட்டும் இவன் கைல கெடச்சுருந்தான்... அன்னைக்கி என்னென்னமோ ஆயிருக்கும்.

“சரி போயித் தொலையுறான்...” ன்னு சட்டுன்னு இத விட்டுற முடியலை சின்னப்பாண்டிக்கு, மண்டைக்குள்ளாற ஏதோ புழுவு கொடையுறா மாறி இருந்துச்சு... “ஏதோ புசுவானம் மாறி இருந்துச்சு... சரியாக்கூடப் பாக்கலை... அதுக்குள்ளே மூடிக்கிட்டானே... ஆமா... அதுக்கு என்னமோ, **** ன்னு சொன்னானே... அதக் கண்டுபிடிக்கனும் மொதல்ல...” ன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துருச்சு அவனுக்கு...

“ஆகா... நம்ப சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்ன்னு சொன்னானே...” ன்னு நெனப்பு வரவும்... நழுவுற கால் சட்டைய ஒத்தக் கைல புடிச்சுக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடுறான்யா பய புள்ள வீட்டுக்கு...

அங்க போனாக்க, அவுக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்ட நடந்துக்கிட்டு இருந்துச்சு... இது அவுக வீட்டுல வழக்கமா நடக்குறதுதான்... “இந்த ஊருல இருந்துக்கிட்டு என்னா பண்றது... பேசாம வெளியூருக்குப் போயி எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்...” ன்னு அவுக அப்பா கூப்புடுறதும்... அதுக்கு அவுக அம்மா முடியாதுங்கிறதும்... அவுகளுக்குள்ள வழக்கமா நடக்குற சண்ட...

இயற்கையப் பாத்துதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டானாம் மனுசப்பய. அதுக்குப் பதிலா, அவன் இயற்கைக்கி கத்துக் குடுத்தானம் “குசும்பு
ங்கிற கொணத்த. அதுவும் சந்தோசமா கத்துக்கிட்டு, காலங்காலமா அது கடபுடிச்சுக்கிட்டு வந்த சமத்துவங்கிற கொணத்துல, அதோட குசும்பக் காட்ட ஆரம்பிச்சுச்சாம். வேணாங்க வேணாங்க, வெள்ளக்காரன் நாட்டுல மழயப் பேஞ்சுபுட்டு, வெறுங்கையோட வேகமா ஒடியாந்து, இவிங்க இங்க செத்தாய்ங்களா இல்ல பொழச்சாய்ங்களான்னு பாத்துட்டுப் போயிடுமாம்.

அது மாறி, போற போக்குல, மூத்திரம் பேஞ்சமாறி அது பேஞ்சத வச்சு, இந்த சனங்க எதுனா செஞ்சு பொழச்சுக்க வேண்டியதான். அதுவும் கொஞ்ச நாளக்கித்தான். வாழ்க்க அவுக வயித்துல ஏறி மிதிக்கிறப்ப, வஞ்சகமில்லாம அத ஏத்துக்கிட்டு, வேற வேலைத் தேடி பொறப்புட்டுருவாக. குடும்பத்தோட கொத்தடிமயா ஆந்துராவுக்குப் போறது, இங்க இருந்து கொலபட்டிணியா சாவுறதுக்கு, பேசாம ரோடு போட தாரு பூசிக்கிறதுன்னு, அடிக்கடி கொத்துக் கொத்தா குடும்பங்க அங்க காணாப்போறது ரொம்பச் சகசம்.

ஏதோ சின்னப்பாண்டி செஞ்ச புண்ணியம், எப்பயோ போயிருக்க வேண்டிய அவுக குடும்பம், இன்னமும் இழுத்துப் புடுச்சுக்கிட்டு இருக்குது. அன்னைக்கி என்னமோ அந்த சண்ட ரொம்ப முத்திருச்சு போல... அவுக அம்மாவுக்கு நாலு அடி விழவும்... மூக்கச் சிந்திக்கிட்டே இருந்தவ, வேக வேகமா வீட்டுக்கு ஓடியார சின்னப் பாண்டியப் பாத்ததும்... “எல்லாம் இந்தச் சனியங்களால வர்ற வென தான்...” ன்னு சொல்லிகிட்டே, அவ கடுப்ப சின்னப்பாண்டி முதுகுல காட்டிப்புட்டா...

இப்புடித் திடீர்னு ஒரு இடி அவன் எதிர்பாக்காத நேரத்துல அவன் முதுகுல விழுகவும், ஏற்கனவே அவனுக்குள்ள இருந்த ஆதங்கமெல்லாம் வெடிச்சு அழுவையா வெளிய வந்துருச்சு... நடந்துபோன கலாட்டாவுல, வந்த வேலைய மறந்து, என்ன பன்றதுன்னே தெரியம மருகி நிக்கிறான் புள்ள.

கேவிக் கேவி அழுதுக்கிட்டிருந்தவன் கொஞ்ச நேரத்துல  சுதாரிச்சுக்கிட்டு... பரபரப்பா ஓடிப் போயி... தன்னோட அஞ்சாப்பு சமூக அறிவியல் புத்தகத்த எடுத்து... ஆவலாத் தொறந்து... பக்கம் பக்கமாத் தேடிப்பாக்குறான்...

ஐயோ பாவம்...!

அவன் தேடி வந்த விசயம்... அந்தப் புத்தகத்துல இருக்கிறதுக்கான... அறிகுறியவே காணாம்...!


குடைச்சல் தொடரும்...


18 கருத்துகள்:

  1. அலோ... மைக் டெஸ்டிங்... ஒன்... டூ... த்ரீ...!

    பதிலளிநீக்கு
  2. அவுக சண்டைக்கு இவன் தான் அடி வாங்கணுமா...? // இயற்கைக்கி கத்துக் குடுத்தானம் “குசும்பு” ங்கிற கொணத்த...// ம்... அது மட்டுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்...!

      நீக்கு
  3. போன வார முடிச்சை அவிழ்க்கலே ,இந்த வாரம் அடுத்த முடிச்சு .வெரி இன்ரெஸ்டிங்!
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமா இருக்கு! தொடர்கிறேன்! எனக்கும் விடை தெரியலை! என்ன அது? காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேசு...!

      நீக்கு
  5. நல்லாத்தான் போவுது.....சாதாரண மக்களின் வாழ்க்கை முறையும்....அவர்களது இன்னசென்ஸ் சின்னப்பாண்டி மூலம் வெளிப்படுகிறது....ஆனா...சின்னப்பாண்டியின் மண்டைக்குள்ள் குடையும் புழுதான் என்ன புழு என்பதும், அது என்ன என்பதும் அது வெளியில் வராததால், இப்போது எங்கள் மண்டையிலும் அந்தப் புழு நுழந்து கொடய ஆரம்பிச்சுருச்சு!! எப்ப வெளியில் வரும்?

    த.ம. அல்லாம் போட்டச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குவிக்கா வெளிய உட்டுரலாம்பா...
      ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  6. அப்போ அடுத்த நாயித்துக்கெழம வரைக்கும் மீண்டும் வெயிட் பண்ணனுமாபா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கும்பா... நீ ஒன்னும் மெர்சலாவாதபா... குவிக்கா கண்டுபுட்ச்சிர்லாம்பா...!

      நீக்கு
  7. அப்புடி என்னாத்தத் தான்யா அந்தப் பொய்த்தகத்துல கண்டுக்கினான்? கேய்விப் புயுவ மண்டைல நெளிய விட்டுட்டியேப்பா...! வரவர தொடரும் போடறதுல மன்னனாயிட்டீரு! (முககியமான அந்த 7... ஹி... ஹி... நான்தேங்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தத்தாம்பா கண்டுக்கிறப் போறோம்...!

      மகுடம் காண்டி எத்திவுட்டதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...

      நீக்கு
  8. இன்னா தான், ச்சே எனக்கும் உங்க ஸ்லாங் ஒட்டிகிச்சு!
    என்னதான் கேட்டான் அவன்!!
    கதை ஸ்பீட் எடுக்குது போல பரவால்ல நான் ஓடிவந்து பஸ் ஐ புடிச்சுட்டேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெம்ப டேங்க்ஸ்மே... கரீட்டான டைமுக்கு வந்து பஸ்ஸ புட்ச்சிக்கினமே...!

      நீக்கு
  9. இன்னாதான்பா அவன் கண்டுகினான் அந்தப் பொஸ்தகத்துல...... புயு கொடாயுதே இப்ப....

    எல்லாம் போட்டாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்ததாம்பா நம்பளும் தேடிக்கினுகீறோம்...

      நம்பளக் கண்டுகினதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...!

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...