முந்தைய பாகங்களைப் படிக்க அந்தந்தத் தலைப்பைச் சொடுக்கவும்...
முன் குறிப்பு: இப்பதிவில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
இங்ஙனம், தலையில்லா
முண்டத்தின் தாக்குதலுக்குப் பயந்து, ஒரே தாவலில், அம்மாளிகையின் வேலிச்
சுவரைத் தாண்டி வெளியே குதித்தான் கரடிமணி. ஆனால்... அவன் போதாத நேரம்... அங்கே... மீண்டும்... தலையில்லா முண்டத்தின் மேலேயே விழுந்தான் அவன்...
அடுத்த நொடி, குலைநடுங்க வைக்கும் கொடூரமான அலறல் அவன் காதுகளுக்கு மிக அருகாமையில் ஒலித்தது. பலமானதொரு இரும்புக் கரத்தின் பிடியில், பொறியில் அகப்பட்ட எலிபோல் தாம் சிக்குண்டு கிடப்பதை உணர்ந்தான் அவன். இருட்டில் எதுவும் புலப்படவில்லை.
ஒன்றுமே புரியவில்லை அவனுக்கு. “என்ன எழவுடா இது...? தொரத்திக்கிட்டு வர்ற தலையில்லா முண்டத்துக்கிட்டேர்ந்து தப்புச்சுட்டோம்னு பாத்தா... திருப்பியும் அதுமேலேயே எப்புடி வந்து விழுந்தோம்...?" என்று மிகவும் குழம்பிப் போனான் அவன்.
எப்பேர்ப்பட்ட இக்கட்டிலிருந்தும் தப்பித்துவிடும் திறமையுள்ளவன், இந்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான். பலமாக அடிபட்டதன் விளைவாகத் தனது உடலையும் அவனால் அசைக்க இயலவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் செயலிழந்து கிடந்தவன்... தன் பலம் முழுவதையும் திரட்டி... எழ முயன்ற அதே வேளை... சற்றும் எதிர்பாரா அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கோடி சூரியன்கள் ஒரே நேரத்தில் அவன் கண் முன்னே வெடித்துச் சிதறின. அண்ட சராசரங்களே அதிரும்படியான இடி முழக்கத்துடன், மேலும் ஒரு தலையில்லா முண்டம் அவன்மேல் பாய்ந்தது. எதிர்பாரா அந்தத் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்து போனான் கரடிமணி.
திண்டுக்கல் மலைக்கோட்டையே உருண்டு வந்து தன் மேல் விழுந்ததாகப்பட்டது அவனுக்கு. சாவு பயம் தன்னைத் தொற்றிக்கொள்ள “அவ்வளவுதான்... செ...த்...தோ...ம்...” என்ற நினைப்பு மேலோங்குவதற்கு முன்... அடியற்ற மரம் போல், மூர்ச்சையாகிக் கீழே விழுந்தான் அவன்.
கரடிமணி கண் விழித்துப் பார்த்த போது, அவனுக்கு முன்னால் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட வஸ்து ஒன்று ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. எங்கு நோக்கினும் ஒரே வெண்புகை மண்டலமாக இருந்தது. அதனூடே, தான் மிதந்து கொண்டிருப்பது போல் உணர்ந்தான் அவன். மேலும், அவனைச் சுற்றி, வெள்ளை உருவங்கள் பலவும் மிதந்து கொண்டிருப்பது மங்கலாகப் புலப்பட்டது.
சிறிது நேரத்திற்கெல்லாம், வெண்புகை மண்டலம் தெளிவடைவதைப் போல உணர்ந்தவன், தனது தலையிலும் உடம்பிலும் வெண்பட்டுத் துணியால் கட்டுகள் போடப்பட்டிருப்பதையும், உடம்பெல்லாம் ஏதோ ஒரு இனம்புரியாத வேதனை பரவியிருப்பதையும் உணர்ந்தான்.
சிறிதுநேர வலி ஆராய்ச்சிக்குப் பின், அங்ஙனம் தனக்கு முன்னால், ஊஞ்சலாடிக் கொண்டிருப்பது தன்னுடைய வலது கால்தான் என்று அறிந்து கொண்டான் அவன். மேலும், வெள்ளை உடை தரித்த நரசம்மாக்களின் நடமாட்டத்தை வைத்து, தான் படுத்திருப்பது பெரியாஸ்பத்திரி என்றும் கண்டுகொண்டான் கரடிமணி.
அவனுக்கு இருபுறமும் உள்ள படுக்கைகளில், ஏட்டு எசக்கியும், காவலர் கந்தசாமியும் படுத்துக் கிடந்தனர். அவர்களுடைய உடம்பிலும் ஆங்காங்கே கட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாம் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று தெரியாமல் மிகவும் குழம்பிக் கிடந்தான் அவன்.
சிறிது நேரத்தில், சிரித்த முகத்துடன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமி, காவலர் இருவர் புடை சூழ அங்கே வருகை புரிந்தார்.
வந்தவர், நேராக ஏட்டு எசக்கியிடம் சென்று, “கங்ராட்ஸ்லேசன் ஏட்டு, தலையில்லா முண்டத்தைப் புடிச்சியோ இல்லையோ, கடைசில, நம்ப கரடிமணியைப் புடிச்சிட்டு வந்துட்டியேய்யா...” என்று பாராட்டினார்.
மேலும், நடந்த விவரங்களை ஏட்டையாவிடம் விசாரித்து விட்டு, காவலர் கந்தசாமிக்கும் ஆறுதல் சொன்னார். கரடிமணியின் நிலமையை மருத்துவர் மூலம் விசாரித்து அறிந்தவர், மீண்டும் ஏட்டையாவிடம் வந்து, "மேலிடத்துல சொல்லி புரமொசனுக்கு ஏற்பாடு பன்றேய்யா... நீ ஒன்னும் கவலப் படாத... தைரியமா இரு..." என்று தைரியம் சொல்லிவிட்டு மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கச் சென்றார்.
"இவ்வளவு நாள் பட்ட துயரத்துக்கு கைமேல பலன் கிடைக்கப் போவுது..." என்று புளகாங்கிதப் பட்டுக் கொண்டார் ஏட்டையா. காவலர் கந்தசாமிக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது.
கரடிமணியின் நிலையோ கவலைக்கிடமாகவே இருந்தது. தான் இங்ஙனம் அடிபட்டு, பிடிபட்டுவிட்டதைக் கூட அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன நடந்தது என்று தெரியாமல் தான் இப்படிக் குழம்பிக் கிடப்பதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
நடந்த விசயம் இதுதான். நாட்டு நாய்களையே இதுவரை பார்த்து வந்திருந்த கரடிமணி, புசு புசுவென்ற மயிருடன் எருமைக் கன்றுக்குட்டி உயரத்தில், உயர் சாதி வீட்டு நாய்களை அவன் வாழ்நாளில் பார்த்ததில்லை. அன்றைக்குத் திருடப் போன மாளிகையில், அங்ஙனம் உள்ள ஒரு நாயைப் பார்த்துத்தான், தலையில்லா முண்டமென்று பயந்து ஓடிப்போய், வேலிச்சுவரைத் தாண்டிக் குதித்தான்.
அதே வேளையில், மேற்படி தலையில்லா முண்டத்தைப் பிடிக்க, தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு, ஏட்டு எசக்கியும் காவலர் கந்தசாமியும், அம்மாளிகையின் வேலிச்சுவரை ஒட்டிய வீதியில் ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஏட்டையாவின் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தார் காவலர் கந்தசாமி. அங்ஙனம், வேலி தாண்டிக் குதித்த கரடிமணி, காவலர் கந்தசாமி தள்ளிக்கொண்டு போன ஏட்டையாவின் மிதிவண்டியின் மேல் விழுந்து விட்டான்.
சற்றுத் தொலைவில் பின்னால் வந்து கொண்டிருந்த ஏட்டு எசக்கி, திடீரென்று தனக்கு முன்னால், நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட, அந்தத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியானார். அம்மாவாசை இருட்டில், அவருடைய கைவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், அவருக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை அவரால் சரியாக ஊகிக்க இயலவில்லை. காவலர் கந்தசாமி கீழே கிடக்க, அவர்மேல் ஏட்டையாவின் மிதிவண்டி கிடக்க, அதற்கும் மேலே கரிய பெரிய ஒருவம் ஒன்று அசைய, அதே நேரம், காவலர் கந்தசாமியின் அலறலும் கேட்க அதற்குமேல் ஒரு நொடியும் தாமதிக்காத ஏட்டு, அத்தாக்குதலைச் சமாளிக்கும் பொருட்டு, ஒரே பாய்ச்சலாகக் கரடிமணி மேல் பாய்ந்து, கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்காக அவனை அமுக்கிவிட்டார்.
நடந்த இந்த சம்பவங்களில், ஏட்டையாவின் மிதிவண்டியின் மேல் விழுந்ததால், கரடி மணிக்கு ஒரு கால் உடைந்து போயிற்று. மற்ற இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
ஏட்டையாவின் இந்த என்கவுண்டருக்குப் பரிசாக, அவருக்கு சப்-இன்ஸ்பெக்டராகவும், காவலர் கந்தசாமிக்கு ஏட்டாகவும் பதவி உயர்வு கிடைத்தது. காலுடைந்த கரடிமணிக்கோ, அவனுடைய கைங்கர்யத்திற்குப் பரிசாகக் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.
ஏட்டையாவிற்குப் புது வாகனம் கிடைத்த காரணத்தால், கரடிமணியின் காலை உடைத்து அவனை வீழ்த்தி, ஓட்டையாகிப் போன அவரின் மிதிவண்டி, பழுதுநீக்கப்படாமல், அவருடைய வெற்றியின் நினைவுச் சின்னமாக, அவருடைய கொல்லைப் புறத்தில் இன்றும் பத்திரமாக அவரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதிக நாள் காவல்துறைக்குத் தண்ணி காட்டிக்கொண்டிருந்த கரடிமணியைப் பிடிக்க, தனிப்படை அமைத்து(!?), ஆக்கமும் ஊக்கமும் அளித்த(!?) (அப்படித்தான் போலிஸ் ரெக்கார்டில் பதிவாகியிருக்கிறது!) சப்-இன்ஸ்பெக்டர் சீனிச்சாமிக்கும் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு கிடைத்தது.
காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில், தலையில்லா முண்டம் பற்றிய வதந்தியும் மெல்ல மெல்ல அடங்கியது.
தன்னிகரில்லாத் தனது சேவையின் மூலம், பலருக்கு இழப்பையும் சிலருக்கு வளத்தையும் அளித்த தலையில்லா முண்டம், தனது அடுத்த இலக்கை நோக்கி அதி வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது.
முற்றும்.
Tweet | ||||
பார்ட்-டூ வரும் போல இருக்கே? ஹ்ஹஹா..
பதிலளிநீக்குசர்தாம்பா... பார்ட் 2 போட்றலாம்பா...
நீக்கு[[முன் குறிப்பு: இப்பதிவில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. முற்றிலும் கற்பனையே. இதில் யாருக்கேனும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல]]
பதிலளிநீக்குஇதை நீக்க வேண்டும் நைனா! இல்லாவிட்டால்?
எனக்கு தலை இருக்கு; ஆனால், மூளை இல்லை - இதை நான் சொல்லை: என் ஆத்துக்காரி சொல்றா!
இன்னாபா சொல்ல வர்றே நீ...? முட்டா நைனாக்கு கொஞ்சம் புளி போட்டு வெயக்குபா...
நீக்குபடங்கள் பெஸ்ட்!
பதிலளிநீக்குதமிழ்மணம் +1
பருவால்லபா... நம்ப கைலேயே போட்ட படங்கள ஒர்சில பேர்தாம்பா கண்டுகினு மெச்சிக்கினாங்க... அத்துல நீ பர்ஸ்ட்பா... முட்டா நைனா படா குஷியாய்ட்டாம்பா...
நீக்குமிஸ் ஆவாம மொய்யி போட்டதுக்கு ரெம்ப டேங்க்ஸ்பா...
அதற்குள் முடிந்து விட்டதே... அடுத்த தொடர் எப்போது...?
பதிலளிநீக்குவிரைவில்...!
நீக்குதங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி தனபாலன்...!
வணக்கம்
பதிலளிநீக்குஅருமை மேலும் தொட எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்...!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி...!
நீக்குசுவாரஸ்யம்...! தலையில்லா முண்டத்தின் கதை துவக்கத்திலிருந்து முடிவு வரை சுவாரஸ்யம்...! அசத்திட்டீங்க நைனா!
பதிலளிநீக்கு