சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

ஜில்லா வீரன்


இரண்டாம் மைசூர் போரில் திண்டுக்கல் கோட்டை கும்பெனியாரின் கைகளில் வீழ்ந்து, திப்பு சுல்தானும் “சரிதான் போய்த் தொலைங்கடா...” என்று கோட்டையைக் கும்பெனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், கும்பெனிப் படைகள் பீரங்கிகளை நிறுவி, திண்டுக்கல் கோட்டையைப் பலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஜெனரல் ஸ்டேட்டன் துரை கும்பெனிப் படைக்குத் தலைமை தாங்கி திண்டுக்கல் கோட்டையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்தார்.

ஜெனரல் ஸ்டேட்டன் துரையாகப்பட்டவர், சிறந்த விளையாட்டுப் பிரியராக இருந்தார். ஜில்லாவில் உள்ள அனைத்து மற்போர் வீரர்களையும் போட்டிக்கு அழைத்து, அவர்களை வீழ்த்தி, வெற்றிக் கொடி நாட்டி, “ஜில்லா வீரன்” மற்றும் “ஜில்லா துரை” போன்ற பட்டப் பெயர்களுக்குச் சொந்தக்காரர் ஆகியிருந்தார். இருந்தும், மக்கள் அவரைச் “சாத்தான் துரை” என்றே அன்புடன் அழைத்து வந்தார்கள்.

ஜில்லா துரைக்கு வலது கையாக இருந்து சகல காரியங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார் துபாசி டப்பாக்காதனார். அவருக்கு காது கொஞ்சம் மந்தமே ஒழிய, மற்றபடி எல்லா வேலைகளிலும் கெட்டிக்காரராய் இருந்ததனால், துரையவர்களுக்கு துபாசியை மிகவும் பிடித்துப் போனது. எனவே, எங்கு சென்றாலும் நிழல் போல் துரையைத் தொடரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது.

அன்றொரு நாள், காலை உணவை முடித்துக் கொண்ட துரை, யானைத் தெப்பத்தில் கை கழுவிவிட்டு, மதிய உணவிற்கு மதுரைக்குச் சென்றுவிடும் நோக்கில், குதிரைமீதேறி மதுரை மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். அந்தக்கால கட்டத்தில், மதுரை ஜில்லா இன்னும் கும்பெனியார்களின் கைகளுக்கு எட்டாமேலே இருந்தது. “அதை எப்படியும் வளைத்துப் பிடித்துவிடவேண்டும்...” என்ற நோக்கில், துரை அடிக்கடி மதுரை மார்க்கமாக அரசாங்க விருந்தாளியாகக் கிளம்பிச் செல்வது வழக்கம்.

அங்ஙனம் அன்று சென்றுகொண்டிருக்கையில், வழிநெடுகிலும், பெரிய பெரிய துணிப் பாதாகைகள் வைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த துரை, “வாட் மேன் டப்பாசு (துரை, துபாசி டப்பாக்காதனாரை இவ்வாறுதான் அழைப்பது வழக்கம்), எங் பாத்தாலும், பேனர் வச்சுர்க்குது? வாட் இஸ் தி மேட்டர்?” என்று வினவினார்.

குதிரையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த துபாசியும் இந்தக் காட்சிகளைக் கவனிக்கத் தவறவில்லை. “எப்படியும் துரையிடமிருந்து இது பற்றிய கேள்வி ஒன்று நிச்சயம் வரும்...” என்று எதிர்பார்த்திருந்தவர், துரையின் கேள்வி தனக்குப் பாதி புரியாவிட்டாலும், அவர் அங்க அசைவுகளை வைத்து, இதைத்தான் கேட்கிறார் என்று யூகித்துக் கொண்டவராய், “மை லார்ட், பொங்கல் திருநாள் ஆதாலால், பொங்கல் விழா சம்பந்தமாக பதாகைகள் வைத்திருக்கிறார்கள்...” என்று பதிலுரைத்தார்.

“ஐ சீ...” என்று உள்வாங்கிக் கொண்ட துரை, ஒரு பாதகையைச் சுட்டிக் காட்டி, “ஹூ ஆர் தே டப்பாசு...?” என்று வினவ, “பிரபோ... அவர்கள்தான், மதுரை சொக்கனும் அவர் பிள்ளையும்... மதுரை ஜில்லாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்கள்... பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அழைக்கும் விதமாக அந்தப் பதாகைகளை அமைத்துள்ளனர்...” என்று விளக்கினார்.

“ஹோ... ஐ சீ...” என்ற துரை, காளை மாட்டிற்கு ஒருவன் வைக்கோல் வைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு பதாகையைக் காட்டி “ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்று வினவினார்.

துரை சுட்டிக்காட்டிய பதாகையைக் கண்டதும் துபாசியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது... “பிரபோ... அதுதான் நம்ப விநாயகம்.. இந்த ஜில்லாவிலேயே யாருக்கும் அடங்காத வீரன்...” என்றார்.

“இதுவரை, தன்னை மிஞ்சிய மல்லன் இந்த ஜில்லாவிலேயே இல்லை...” என்று இறுமாந்திருந்த துரைக்கு, இது பெரிய ஏமாற்றமாகப் பட்டது. “உடனே இவனுடன் மோதி... இவனை வீழ்த்தினால் ஒழிய நமக்கு நிம்மதியில்லை...” என்ற முடிவிற்கு வந்தவர், “அது யாரடா அவன்... அவன் என்ன அவ்வளவு பெரிய வீரனா...? எப்படி இவன் நம் கண்ணில் இதுவரை அகப்படாமல் போனான்...?” என்றெண்ணி, “ஏய் மேன் டப்பாசு... இவன் கூட நான் பைட் பண்ணி... ஐ மஸ்ட் நாக் கிம் அவுட் மேன்... அரேஞ் தி பைட் இம்மீடியட்லி...” என்று ஒரு திடீர் உத்திரவைப் பிறப்பித்தார்.

துரையின் பரபரப்பைக் கண்ட துபாசி, “பிரபோ... அது ஒன்றும் பிரமாதமில்லை... அவர்களின் இந்தப்  பொங்கல் விழாவிலேயே, ஏற்கனவே அவ்விதமான போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது... எனவே, கவலை வேண்டாம் மகா பிரபு... தாங்கள் அந்தப் போட்டியிலேயே கலந்து கொண்டால் போகிறது...” என்று மகிழ்ச்சியாகப் பதிலுரைத்தார்.

“நோ மேன்... ஐ வான்ட் டு பி த பர்ஸ்ட் பெர்சன் டு பைட் வித் கிம் இன் தி மேட்ச்... அண்டர்ஸ்டான்ட்...?” என்று கறாராகச் சொல்லிவிட்டார் துரை.

அதற்குமேல் சொல்லவா வேண்டும், உடனே மதுரை சொக்கன் வகையறாவைத் தொடர்பு கொண்ட துபாசி, மேற்படி, துரையின் ஆக்ஞையைக் கூறி, அதற்குத் தகுந்தாற்போல் ஏற்பாடு செய்துவிட்டார்.

தற்காலத்தில் “ரவுண்ட் ரோடு”  என்றழைக்கப்படும் இடம், அந்தக் காலத்தில் கும்பெனிப் படையினரின் குதிரையேற்றப் பயிற்சியிடமாக இருந்தது. தற்காலத்தில், பதிவுத்துறை அலுவலகம், மற்றும், பழைய மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலமாகச் செயல்பட்ட இடங்களே, மேற்படி ஜில்லா துரை மற்றும் அவருடைய பரிவாரங்கள் தங்கியிருந்த மாளிகைகளாக இருந்தன.

போட்டியில் கலந்துகொள்வதற்கு முன், ஜில்லா துரை, மேற்படி “ரேஸ் கோர்ஸ்” மைதானத்தில், அதி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். குதிரையேற்றம், உடற்பயிற்சிகளுக்கு மத்தியில், மல்யுத்தப் பயிற்சியையும் விடாமல் வெறித்தனமாகச் செய்து கொண்டிருந்தார். இதற்கெனவே நியமிக்கப்பட்டிருக்கும் பயிற்சி மல்லர்களையும், சுடுமணலில் வைத்துப் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தார் அவர். துரையின் இந்த ஆவேச மல்யுத்தப் பயிற்சியைக் கண்ட துபாசி சற்றே மிரண்டுதான் போய்விட்டார். “இந்தச் சாதாரணப் போட்டிக்கு துரை ஏன் இந்தளவிற்கு மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்...?” என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக்கொண்டார்.

போட்டிக்கான நாளும் வந்தது. “ஜில்லா துரையும் போட்டியில் கலந்து கொள்கிறார்...” என்று கேள்விப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக, மக்கள் கூட்டம் மைதானத்தைக் கடல்போல் சூழ்ந்திருந்தது. மதுரை சொக்கனும், அவன் வாரிசும் உயர்ந்த மேடையில் அமர்ந்திருக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள், துரையின் வருகைக்காக, மைதானத்தில் காத்திருந்தார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில், தனது பரிவாரங்களுடன் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார் ஜில்லா துரை. துரையுடன் சேர்ந்து மோதப் போவதை நினைத்து, நடுங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் மத்தியில், பதாகையில் காணப்பட்ட மேற்படி வீரன் மட்டும், மிகவும் தெனாவெட்டாக நின்றுகொண்டிருந்தான். அங்ஙனம் நின்றுகொண்டிருந்தவனை இறுமாப்பாகப் பார்த்த துரை, “மவனே... இவ்வளவு தெனாவெட்டா உனக்கு...? பொறு... பொறு... இன்றைக்கு சுடு மணலில் வைத்து உன்னை பிரை பண்ணிவிடுகிறேன் பார்...” என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தார்.

போட்டியை ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக, மதுரை சொக்கன், துண்டை எடுத்து விசிறிக் காட்ட, கட்டியம் கூறுவோன் “பெரியோர்களே... தாய்மார்களே... ஜில்லாவிலுள்ள மல்லர்களையெல்லாம் மண்ணைக் கவ்வ வைத்து, ஜில்லா வீரன் என்ற பட்டம் வென்ற நமது ஜில்லா துரை, இப்போது, இந்த ஜில்லாவிலேயே, யாருக்கும் அடங்காத நமது கட்டிளங் காளை விநாயகத்தை, அடக்கியாளப்போகிறார் பராக்... பராக்...” என்று இடிமுழக்கக் குரலில் முழங்கினான்.

கிடைக்கப் போகும் வெற்றியை நினைத்துக் கொண்டு, குரோதம் கொப்பளிக்கும் பார்வையால், மேற்படி வீரனை ஜில்லா துரை நோக்க, அவனோ, துரையைக் கவனிக்காமல், பக்கத்திலிருந்த சந்தை, ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தான். இதைக் கண்ட துரைக்கு “என்னடா இது...? நம்மிடம் மோதப் போவதை நினைத்து சற்றும் பயமில்லாமல், வேறெங்கோ நோக்கிக் கொண்டிருக்கிறானே...?” என்று ஒரே வியப்பாகப் போய்விட்டது.

இங்ஙனம் துரை வியந்துகொண்டிருந்த அதே வேளை, அவர் எதிர்பாரா அந்தச் சம்பவம் நடந்தேறியது. மேற்படி சந்திலிருந்து, துரையைக் குறிவைத்து சீறிப் பாய்ந்து வந்தது ஒரு காளை. இதைச் சற்றும் எதிர்பார்க்காத துரை, மிகவும் மிரண்டு போனார். மின்னலென தன் முன்னே வந்த அந்தக் காளையை, எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது அவருக்கு. நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தத் தாக்குதலைக் கண்டு செயலிழந்து போனார் துரை. இவ்வகையான தாக்குதலை எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் துரை மருகி நின்ற அதே வேளை, புயலெனச் சீறி வந்த அந்தக் காளை, ஒரே குத்தாக அவரைக் குத்திவிடும் நோக்கில், தலையைக் குனிந்து வர, “இனி ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் தமதில்லை...” என்று உணர்ந்த துரை, புறமுதுகிட்டு ஓட எத்தனிக்க, அதற்குச் சற்றும் அவகாசம் கொடுக்காத அந்தக் காளை, துரையின் “பின்” பக்கம் ஒரே குத்தாகக் குத்தி அவரைத் தூக்கியெறிந்தது. “என்ன நடக்கிறது...?” என்றே தெரியாமல் ஆகாயத்தில் பறந்த ஜில்லா துரை, அப்படியே மூர்ச்சையாகிப் போனார்.

நடந்து போன விபரீதத்தை சற்றும் எதிர்பார்க்காத மதுரை சொக்கன் வகையறாக்கள் மிகவும் அதிர்ந்து போனார்கள். உடனடியாக, ஒரு வைத்தியரை வரவழைத்து, காயம்பட்ட துரையைக் குப்புறப் படுக்கப்போட்டு,  பச்சிலை வைத்துக் கட்டி, கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய் துரையின் மாளிகையில்  சேர்த்தார்கள். “நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போட்டிக்குப் போன துரை, இப்படி, குப்புறக் கவிழ்ந்து வருவார்...” என துரைசாணி அம்மாள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மனம் நொந்து போன அவர், மேலதிகாரிகளுக்குத் தகவல் தர, உடனே ஆங்கில மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆங்கில வைத்தியரின் அறுவைச் சிகிச்சை முடிந்தும், அபாயக் கட்டத்தைத் தாண்டாமல், குப்புறக் கிடந்த துரையை, உடனே இங்கிலாந்திற்கு அப்புறப்படுத்த உத்தரவிட்டது கும்பெனி நிர்வாகம். தீவிர சிகிச்சை முடிந்து, ஜில்லா துரை திண்டுக்கல்லுக்குத் திரும்பிவர, ஒன்றரை ஆண்டு காலம் பிடித்தது. அதுவரை, மிகுந்த குழப்பத்திலிருந்த துரையவர்கள், துபாசி டப்பாக்காதனாரைத் தலைகீழாகக் தொங்கவிட்டு விசாரித்ததில், பின்வரும் வரலாறைத் தெரிந்துகொண்டார்.

“ஹூ இஸ் தட் பெல்லோ...?” என்ற துரையின் கேள்வியைச் சரியாகப் புரிந்து கொள்ளாத துபாசி, “பெல்லோ” என்பது “புல்” என்ற காளை மாட்டைத்தான் குறிக்கின்றதென்று கருதி, மேற்படி, “விநாயகம் என்ற பிரசித்தி பெற்ற ஜல்லிக் கட்டுக் காளையைத்தான் துரையவர்கள் அடக்க விரும்புகிறார்...” என்றெண்ணி, மேற்படி மதுரை சொக்கன் வகையறா ஏற்பாடு செய்திருந்த, பொங்கல் விழா ஜல்லிக் கட்டில் கொண்டுபோய் ஜில்லா துரையை வகையாகச் சிக்கவைத்துவிட்டார். இந்த விபரம் தெரியாத ஜில்லா துரை, மேற்படி பதாகையில், “காளை மாட்டிற்குப் புல்லுப் போட்டுக் கொண்டிருந்த பொடியனைத்தான், மற்போர் செய்து வீழ்த்தப் போகிறோம்...” என்று கருதிப் பொருதப் போய், பெருத்த “பின்” விளைவைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

நடந்து போன இந்த சம்பவங்களினால், “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது...” போல, டப்பாக்காதனாருக்கு உயிர் போகாமல் துபாசி வேலை மட்டும் போயிற்று. பாவம், ஜில்லா துரை வாழ்வில்தான் பெருத்த சோகம் நிகழ்ந்துவிட்டது. “பின்னுக்கு வந்தது பின்னாலே தொடர்ந்து வந்தது...”  போல, இங்கிலாந்திலுள்ள அவரது வாரிசுகளுக்கு, மேற்படி “பின்” விளைவால் ஏற்பட்ட தழும்போடுதான், இன்றளவும், குழந்தைகள் பிறந்துகொண்டிருக்கின்றன!



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!



ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பிரியாணி...


“ஏ... பயலே... நீ ஊத்துற ஊத்துல... அந்த எழவெடுத்த பய, எலக்சன் முடியவரைக்கும் எந்திரிக்கப்புடாதுலே... என்னலே... நாஞ் சொல்லுறத கேட்டுக்கிடுதியாலே...?” என்று, விளக்கு மண்டையில் தாடையை வைத்த சிகப்பு மூஞ்சி வில்லன் போல, சட்டை போடாத மைக் செட் மாரியிடம், தன் சதித் திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார் வட்டமூஞ்சி அண்ணாச்சி.

சோத்துப் பேட்டை தொகுதியில் இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த தனது அரசியல் வாழ்க்கையில், புயலென நுழைந்த உசார் பக்கிரியை, "ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை" என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் இந்த நாசகார வேலை அவசியமாகப்பட்டது அவருக்கு.

தமிழக அரசியலைப் பொருத்தவரை, பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மத்தியில், அந்தக் கோட்டையைக் கூடக் கீழே போடாமல், அதையும், கரமுறவென்று மென்று முழுங்கி, ஏப்பம் விட்டவர் அண்ணாச்சி. 

அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி ஒரே வரியில் கூறவேண்டுமென்றால், “அவரிடம் எல்லா வண்ணத் துண்டுகளும் அதற்குத் தகுந்த கரை வேட்டிகளும் உண்டு...” என்று சொன்னால் போதுமானது. தற்போது அவர் வெள்ளை வேட்டி வெள்ளைத் துண்டில் உலா வந்துகொண்டிருக்கிறார். அப்படியென்றால், அவர் இப்போது குரங்குக் கட்சியில் உள்ளார் என்றும், எந்த நேரத்திலும் எந்தக் கட்சிக்கும் தாவத் தயாராக உள்ளார் என்றும் பொருள்.

எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், கண்டிப்பாக, அதில் ஒரு அங்கமாக அண்ணாச்சி இருப்பார். இங்ஙனம், எந்தவொரு எதிர்ப்புமின்றி, வெற்றிமேல் வெற்றி பெற்று, தனது தொழிலில் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்து வந்தார் அண்ணாச்சி. ஆனால், இந்த தடவை, தனது செல்வாக்கு சரிந்து, பக்கிரியின் பவிசு கூடிக்கொண்டே வரவும், தோல்வி பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.

இத்தனைக்கும் அவர், எல்லா அரசியல்வியாதிகளைப் போலவும், “தானுண்டு தனது நன்மை மட்டுமே உண்டு” என்று தொகுதிவம்பிற்குப் போகாமல்தான் இருந்தார். ஆனால் “ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி” என்று கூறிக்கொண்டு, மக்களைக் குழப்பிவிட்டுக் கொண்டிருக்கும், கேசரி வாலாக் கட்சியினரின் தூண்டுதலால், பக்கிரியின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.

"மானாவாரியாக எல்லாக் கட்சியினர் மேலும் மக்கள் வெறுப்பாக இருக்கிறார்கள்..." என்பது நாடறிந்த உண்மை. எனவே, இந்தத் தடவை, கழகக் கட்சிகள் முதற்கொண்டு கடைசி பெஞ்ச் கட்சிகள் வரை எதிலும் கூட்டணி வைக்காமல், புதிய வியுகம் ஒன்றை அமைத்துக் கொண்டார் அண்ணாச்சி.

அதாகப்பட்டதாவது, இந்தத் தேர்தலில் “தான் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டு, பக்கிரிக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, வேட்புமனுத் தாக்கலுக்கு முன், ஏதாவது ஒரு மேடையில் வைத்து, பக்கிரியின் முகத்தில் ஆசிட் அடித்து, அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவன் இடத்தில் அவனுக்குப் பதில் தான் போட்டியிட்டால், அவனுக்காக வீசும் அனுதாப அலையின் துணை கொண்டு, அவனது ஆதரவாளர்கள் மூலமே தான் வெற்றி பெற்றுவிடாலாம்” என்பதுதான் அண்ணாச்சியின் இராசதந்திரக் கணக்கு.

திட்டமிட்டபடியே எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில் ஆசிட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த விவரங்கள் எதுவுமே தெரியாமல், அண்ணாச்சியின் வலையில் வசமாக வீழ்ந்து கிடந்தான் பக்கிரி.

சமீபத்தில் வெளிவந்திருந்த திரைப்படங்களின், விண்ணை முட்டும் விளம்பரப் பலகைகளின் பின்னணியில், சோத்துப் பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் அன்றைக்கு மேடை போடப்பட்டிருந்தது.

ஒலிபெருக்கியைக் கையில் பிடித்தபடி, உள்ளூர் அரசியல் முதற்கொண்டு உலக அரசியல் வரை, பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.

“ஏலே... அமெரிக்காக்காரன்னா... நீ என்ன பெரிய இவன்னாலே...? ஏ... நாங்க வேலக்காரிக்கி சம்பளம் குடுப்போம் இல்ல நாசமத்துப் போவோம்... ஒமக்கென்னலே வந்திட்டு...? ஒஞ்சோலி *யித்தப் பாத்துட்டுப் போவெண்டியதாம்லே...” என்றவர், கூட்டத்தில் கரகோசமும் சீழ்க்கை ஒலியும் எழும்பி அடங்கும் வரை, ஒரு சிறு இடைவெளி விட்டு, தொண்டையைக் கணைத்துக் கொண்டே...

“ஏ... சவத்த மூதி... நீ (மத்திய அரசு) என்னலே நொட்டி வச்சுருக்க...? அமெரிக்காக்காரனுக்கு *** கழுவிட்டுக் கெடக்கே... அவன் வேட்டிய உருவி கோமணத்தோட நிக்க வைலே பாப்பம்...” என்று சீறி முழங்கவும், கூட்டம் ஆர்ப்பரிக்க, அதைத் தன் சைகையால் அடக்கிவிட்டு...

“நீ (மாநில அரசு) என்னலே இங்கே புடிங்கிட்டு கெடக்கே...? ஏ... குடிக்கத் தண்ணி கேட்டா... நீ... சாராயக் கடையல்லே தொறந்து வக்கே... ஏ... வெக்கமால்லே ஒமக்கு...? அவனவன் இங்கே கரண்டு இல்லாம சிங்கியடிக்கான்... ஏ... ஒம்மை ஆருலே அம்புட்டு பேட்டரி போட்டு செவ்வாக் கெரகத்துக்கு ராக்கட்டு விடச் சொன்னாம்....(?!!!) ஏ... சுத்தப் படுக்காளிப்பய கவருமண்ட்டால இருக்கு...”

மக்களின் கரகோசம் விண்ணைப் பிளக்க, அந்த இடைவேளையில், தனக்குத் தரப்பட்ட சோடாவை ஒரு மடக்குக் குடித்து விட்டு...

“ஏ... நீ (இது உள்ளூர் அரசியல்) வந்து... ஒன்னு இருக்குன்னு சொல்லு... இல்ல... இல்லேன்னு சொல்லு... ஏ... கூட்டணி இருக்கா... இல்லையா.... அத மட்டும் சொல்லுலே... ஏ... அத விட்டுட்டு... அவன் போன வாட்டி நல்லா வச்சுக்கிட்டாம்... இந்த வாட்டி தொரோகம் பண்ணிட்டாம்ன்னு ஏம்ல பிலிம் காட்டுத...?”

மீண்டும் கூட்டத்தின் ஆரவாரம் குடுக்கிட, சற்று இடைவெளி விட்டு...

“ஏ... நீ (இது சினமாக்காரன் அரசியல்) நாலு படம் நடிச்சிட்டா... நீ என்ன பெரிய இவனாலே... “ஏ... அந்த ஈரோயினுக்கு ஏம்லே... பைய்நெட்டு வயசுக்கு மேலே ஆக மாட்டிங்கு...? ஏ... நமக்கு ஏம்லே... மண்டை சொட்டையாப் போயிட்டு...?” ஏ... இந்தச் சோலியமட்டும் நீ ஒழுங்காப் பாருலே... ஒமக்கு அரசியல்லே என்னலே சோலி...? ஏ... **ராண்டி... நீ நாலு பேரை சினிமால அடிச்சிப் போட்டுட்டா... ஒமக்கு நாக்காலி கேக்காலே... நாக்காலி...”  என்று ஒருத்தர் பாக்கியில்லாமல் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி எடுத்துவிட்டு... இறுதியாக...

“ஏலே மக்கா.... ஒங்களத் தாம்லே கேட்டுக்கிடுதேன்... இந்த வாட்டி அவிங்களத் தூக்கித் தூரப் போடுங்கலே... நம்ப பக்கிரிக்கு ஓட்டுப் போட்டு செயிக்க வைங்கலே... என்ன... கேட்டியளா...? ஏ... அம்புட்டுத்தாம்லே...”  என்று தனது அனல் கக்கும் உரையை முடித்துக் கொண்டு, அடுத்து பக்கிரியைப் பேசுமாறு சைகையில் அழைக்க... மிடுக்காக எழுந்து வந்த பக்கிரி...

“அல்லாருக்கும் வணக்கம்பா... நம்ப அண்ணாத்தே சொன்னா மாறி... சென்ட்ட்ரலும் சரி கெடியாது... இஸ்டேட்டும் சரி கெடியாது... இஸ்டெடியாக்கீரது நம்ப கட்ச்சி ஒண்டிதான்... அதுக்காண்டி... நீங்க அல்லாரும்... பொட்டலம் சின்னத்து மேலே ஓட்டுப் போட்டு... இந்தப் பக்கிரியக் கெலிக்கவச்சுக்கனும்னு கேட்டுக்கிறேம்பா... அப்பால...” என்று அவன் அடுத்து பேசும் முன், அண்ணாச்சியின் கண்ணசைவைப் புரிந்து கொண்ட மைக் செட் மாரி, கையில் சோடா பாட்டில் சகிதம் மேடை ஏறி வந்தான்...

வந்தவன், பக்கிரியின் பால் நெருங்க... அவனைக் கண்ட பக்கிரி... பேச்சை நிறுத்தி விட்டு... பல்லைக் காட்டிக் கொண்டே... அந்த சோடா பாட்டிலை வாங்கத் தன் கையை நீட்ட... கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த அசம்பாவிதம் நடந்தேறி விட்டது...

நேராக வந்த மாரி... சோடா பாட்டிலைப் பக்கிரியின் கையில் கொடுக்காமல்... அவன் முகத்தில்... அதிலிருந்த திராவகத்தை விசிறியடிக்க...

இதைச் சற்றும் எதிர்பார்க்காத பக்கிரி... “ஆஆஆ....ஆ...” என்று அலறி... முகத்தில் பரவும் ஒரு வித எரிச்சலை உணர்ந்து... வாயில் ஏதோ கழுநீர்த்தண்ணீரின் சுவை தெரிய... கண்களை மறைத்த அந்தத் திராவகப் படலத்தை வழித்தெறிந்து விட்டு... உருட்டு விழியுடன் விழித்துப் பார்க்க...

“பேமானி... கசுமாலம்... முக்காத் துட்டு புரோசனம் கீதாயா ஒன்னால... இப்புடிக்காத் துன்னுட்டு... துன்னுட்டு... திண்ணையாண்ட பட்த்துகினுகீறியே... சோமாரி... அந்தாண்ட கட்ச்சிக்காரன் மீட்டிங்கு போட்டுக்கினு... பிரியாணி பார்சல் குடுக்கானாமே... போயி ரெண்டு இஸ்துக்கினு வந்தா இன்னா...” என்று, அவன் முகத்தில், பாத்திரம் கழுவிய நீரை ஊற்றிவிட்டு... பத்ரகாளி போல... பொரிந்து தள்ளிக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அவனுடைய பிள்ளைத்தாச்சி மனைவி.

வேலை வெட்டி எதற்கும் போகாமல், தண்டச் சோறு தின்றுகொண்டு, எப்படியும், ஒரு முழு நேர அரசியல்வியாதி ஆகிவிட வேண்டுமென்று, கனவு கண்டுகொண்டிருந்த பக்கிரியின் முகத்தில்... அவன் மனைவி அடித்த கழுநீரானது, சற்றுத் தெளிவைக் கொடுக்க...

“நம்ப கெலிச்சு ஆச்சிக்கி வரச் சொல்லோ... இந்தா மாறி... பிரியாணிப் பார்சல... மீட்டிங் காண்டி குடுக்காமே... அல்லார் வூட்டுக்கும்... டோர் டெலிவரி பண்ணிக்கணும்பா...” என்று, தொலைநோக்காகச் சிந்தித்துக்கொண்டே, கூட்டம் நடக்கும் திக்கை நோக்கி அதி வேகமாக நடையைக் கட்டினான் பக்கிரி.
 


சனி, 7 டிசம்பர், 2013

பல்லு பிச்சை...

இத்து காண்டி முட்டா நைனா எய்தி கீச்சதை அல்லாம் பட்சி ரசுச்சுகின அல்லாருக்கும் வணக்கம்பா...!


மொத தபா எய்த சொல்லோ... இம்மா ரெச்பான்சூ இர்க்கும்னு முட்டா நைனா மெய்யாலுமே நென்ச்சுப் பாக்கலேபா...  அல்லாரையும் லைன்லே வந்து பட்சிக்க சொல்லி, கண்ட்ரோலு பண்ணி... கண்ட்ரோலு பண்ணி... முட்டா நைனா படா டயர்டு ஆய்க்கினாம்பா... ஸ்ஸ்ஸ்ஸப்பா... மிடிலபா...

பர்ஸ்ட் ஆளா வந்துகினு, நம்ப இடுகைலாம் பட்சி பாத்து கர்த்து சொல்லி, அப்பால டமில்மணம் மொய்யி வச்சி, இப்புடிக்கா படா சோக்கா நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா நம்ப டிண்டிகல்  தன்பாலு... அவர்காண்டி முட்டா நைனா பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்பளே மாறி அப்ரசண்டுக்லாம்... டமில்மணம் மொய்யி வக்கிற சனநாயகக் கடமே பத்தி... சோக்கா கிளாஸ் எட்த்து... அத்தே டெமான்ஸ்ரேசன்  பண்ணிக் காட்டிக்கினார்பா நம்ப நம்பள்கி வாத்யார்... நம்ப டிண்டிகல் தன்பாலு மாறியே, அல்லா  இடுகையும் பட்சி பாத்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகீறார்பா... அவர்காண்டியும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிறான்பா...

நம்ப எய்த்த பட்சி பாத்து கர்த்து சொல்லிக்கினு, அப்பால... சோக்கான டிப்ப்சுலாம் சொல்லிக்கினார்பா நம்ப பால் கணேசு... அவர்காண்டியும் நம்ப டேங்க்ஸ்பா...

கண்டிணீவா வந்துகினு கர்த்து சொல்லிகிறார்பா நம்ப ரூபன் அண்ணாத்தே... ரெம்ப டேங்க்ஸ் அண்ணாத்தே...

அப்பால, நம்ப எயித்தாளர் கோவை ஆவி... நம்பளே ரெஸ்பீட்டு பண்ணி... மிஸ் பண்ணாம வந்து கர்த்து சொல்லிகிறார்பா... அவர்காண்டியும் ரெம்ப டேங்க்ஸ்பா...

நெக்ஸ்ட்டு, நம்ப  தொள்சிதரன் அண்டு கீதா கீறாங்கப்பா... "ஏய் முட்டா நைனா... நீ சோக்கா டமில் பேசுது... படா சோக்கா ஸ்டோரி சொல்லுது..." அப்புடிக்கான்னு சொல்லி நம்பளே படா குஷி பட்துறாங்கபா... அவ்ங்கலுக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பாலிக்கா, நம்ப வூட்டாண்ட வந்து, கர்த்து சொல்லி நம்பளே என்கரேசூ பண்ணிகிற, நம்ப சுரேசு, வி.பி. திரு, மூங்கி காத்து மொர்ளி, நிசாமுதீன், பகவான்சீ (சோக்காளி), கவியாழி கண்ணதாசன் அல்லாருக்கும் ரெம்ப  டேங்க்ஸ்பா...

ரெண்டு பெசல் வி.ஐ.பி  கீறாங்கபா... நம்ப கலாகுமரன் அண்டு பால் கணேசு... வலைச்சரத்துல, "இந்தா மாறி... இந்தா மாறி.. முட்டா நைனா... முட்டா நைனான்னு ஒரு எலக்கியவாதி, படா சோக்கா... ரெம்ப டமாசா எய்தி கீச்சுகினுகீறார்பா... அல்லாரும் போயி பட்சி பாத்து கர்த்து சொல்லுங்கபா" ன்னு இன்றோடசன்  குட்த்துக்கினாங்கபா... ரெம்ப டேங்க்ஸ்பா...

இத்து அல்லாத்துக்கும் மேலே... நம்ப வூட்டாண்ட விசிட்டு குட்த்து... பட்சி பாத்துகினு... கர்த்து ஏதும் சொல்லிக்கிறாமே... சைலண்ட்டா ஜூட்டு வுட்டுகினுகீறாங்களே... அவ்ங்க அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பாலிக்கா, முட்டா நைனா வலை தளம் அண்டு கூகிள் பிளஸ்ல ரிஜிஸ்டரு பண்ணி... நம்பள பாலோ பண்ணிகிறவுங்கலுக்கும், மொகநூலு, டுவிட்டரு அண்டு ஈ-மெயிலு அல்லாத்துலயும் பாலோ பண்ணி(லைக்கு)கிற அல்லாத்துக்கும் முட்டா நைனா டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

நெக்ஸ்ட்டு... இன்ட்லி, டமில் 10 அண்டு ஆல் திரட்டிகள்லயும், முட்டா நைனா இடுகைக்லாம் ஓட்டு போட்ட அல்லாருக்கும் ரெம்ப ரெம்ப டேங்க்ஸ்பா... 

அப்பால... முட்டா நைனா லிஸ்ட்டுல யாருனா மிஸ் ஆய்க்கினா... மெர்சலாவாதீங்கபா... மிஸ்சான அல்லாத்துக்கும் முட்டா நைனாவோட "மிஸ்சுடு" டேங்க்ஸ்பா...  

ஆவட்டும்பா... இன்னாடா இத்து... இன்னாமோ ஒரு டைட்டிலு குட்த்துகினு... ஒரு லின்க்குமில்லாதே பினாத்திகினுகீரானேன்னு.... மெர்சலாவாதீங்கபா... 

இந்தா ஆச்சிபா... இப்போ... டைட்டில் மேட்டருக்கு வர்வோம்பா...

முட்டா நைனா பிளாக்குக்கு ஐடியா குட்த்து... டெக்கினிக்கல் சப்போர்ட்டு குட்த்து... ஒரு ஒரு தபாவும் இடுகை போட சொல்லோ... அட்டுவான்சா... புரூப்பு  ரீடிங் பண்ணி... எய்த்து பியை அண்டு கர்த்து பியை அல்லாத்தையும் கண்டுக்கினு... பட்டி பாக்க... டிங்கரிங் பாக்க... அல்லாத்துக்கும் எல்ப்பு பண்ணிகினுகீறார்பா...ஓர் பிரண்டு...

அத்து வேற ஆருமில்லபா...  அவுருதாம்பா... நம்ப... 


அவருகாண்டி முட்டா நைனா டபுள் பெசல் டேங்க்ஸ் சொல்லிக்கிரான்பா...

அப்பால இத்தே மாறி... அல்லாரும்... முட்டா நைனாக்கு... ஆல் டைம் அம்பும் ஆத்ரவும்  குட்துக்கனும்னு முட்டா நைனா ரெக்கொஸ்ட்  பண்ணிக்கிறாம்ம்பா...

ஆவட்டும்பா... முட்டா நைனா ஜகா வாங்கிக்கிரான்பா...
 
பின் குறிப்புபா: ஒரு ஒரு தபாவும்... முட்டா நைனா இடுகைக்கு... படம் போட சொல்லோ... எல்ப்பு பண்ணிகிற பெஞ்சக் குச்சி, பேப்பரு அண்டு அல்லி லப்பரு அல்லாத்துக்கும் ரெம்ப டேங்க்ஸ்பா...

அப்பால ஒரு பின் குறிப்புபா: நம்ப இடுகைல, பதிவர்கள் பேர் ஒண்டி சொல்லிக்கினேம்பா... இன்றோடூஸ் பண்ண "லிங்கு சாமி"லாம் குட்க்லபா... அத்து ஏன்னு... மல்லாக்கப் பட்த்து... நீங்களே ரோசனை பண்ணிப் பாத்துகினுங்கபா...

அப்பாலிக்கா இன்னோரு பின் குறிப்புபா: இத்தெல்லாம் இஸ்ட்ரில வந்து... ஆலிவுட்ல படமா எட்த்து... ஆஸுகாரு அவார்டுலாம் குட்ப்பாங்கனு... நம்ப  துல்க்கானம் சொல்லிக்கினாம்பா...   

சனி, 23 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்


மூக்கைப் பிடித்துக் கொண்டே கூவி அன்றைய விடியலை அறிவித்தது சேவல். கூவம் நதிக்கரை நாகரிகத்தில், சென்னை "நரக"வாசிகள் தூக்கம் கலைந்து அன்றைய விடியலைச் சுவாசித்தார்கள்.

முகத்தில் வெயிலடிக்கும் வரை தூங்கிய கொமாரு, அவசர அவசரமாக எழுந்து, ஜாபர்கான் பேட்டை நோக்கிக் கிளம்பினான். அங்கே, அவனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த துலுக்காணம், “இன்னா கொமாரு... இம்மாநேரம் கயிச்சு வந்துகின...?” என்று லேசாகக் கோவித்துக் கொண்டான்.

“கோச்சுக்காதபா... நைட்லாம் கொசுக்கடி பேஜாருபா... தூக்கம் கம்மிப்பா...”

“அப்புடிக்கா சொல்றியா... சர்தாம்பா...வுடு...”

பேசிக்கொண்டே வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடைப் பக்கம் நடையைக் கட்டினார்கள்.

காலை நேரப் பரபரப்பு எங்கும் தொற்றிக்கிடந்தது. பளபளவென்று புதுப்பட போஸ்டர்கள் வழியெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அழுக்குத் துணி மனிதர்கள் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். நேராகக் கடைக்குச் சென்றவர்கள், வழக்கம் போலத் தேநீர் பருகினார்கள்.

“இன்னா கொமாரு அல்லாப் பக்கமும் புச்சா போஸ்டர் ஒட்டிக்கிறான்.... எதுனா நியு மூவியாபா...?”

“இக்கும்பா... நேத்தி கூட நம்ப சேவரு சொல்லிகினாம்பா... அத்தாம்பா... ரெண்டாம் ஒயகமோ... இன்னாமோ...”

“சர்தாம்பா... அப்பக் கெயம்பிக்லாமா...?’

“ஆவட்டும்பா...”

காசைக் கல்லாவில் கட்டிவிட்டு காசித் தியேட்டர் நோக்கி நடையைக் கட்டினார்கள். நூறடிச் சாலை நாறிக்கொண்டிருந்தது. தியேட்டர் வாசலில் ஏகப் பரபரப்பு. டிக்கெட் வாங்கக் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல, சனக் கும்பலில் ஊடுருவி, சிறிய வாசல் வழியே இருட்டில் நுழைந்தார்கள். அங்கே, அவர்களை ஆரவாரமாக வரவேற்றது இரண்டாம் உலகம். பலவிதமான ஒலிகளுக்கிடையே அவசர நடமாட்டங்கள் தென்பட்டன. ஹாலிவுட் கிராபிக்ஸை விஞ்சியிருந்தது அதன் காட்சியமைப்பு.

“நம்ப ஆரிச்சாமி கீறானே... அவன் இஸ்டோரி பெரிய பேஜாராப் பூடிச்சிபா...”

“அப்புடியா... இன்னாபா ஆச்சி...”

“அத்தாம்ம்பா... நம்ப அர்க்காணிய டாவட்ச்சிகினு இர்ந்தானே... அந்த்த மேட்ட்ருபா... கடிசில புட்டுக்கிச்சிபா...”

“ஏம்பா... சோக்காத்தானே போய்க்கினு இர்ந்திச்சி...”

“ஆமாம்பா... அந்த்த அர்க்காணி திடும்னு காணாப் பூடிச்சிபா... அல்லா எடத்திலேயும் தேடிக்கினு... கடிசில எத்தோ வேற ஊராண்ட கண்டுக்கினானாம்பா...”

“ஓஹோ... அப்புடியாபா...”

“இக்கும்பா... கதையைக் கேளு... அங்கன போய் பாத்தாக்க... அந்த அர்க்காணி வேற மாறி கீதாம்பா... நம்பாள கண்டுக்கவே இல்லியாம்பா...”

“அய்யே...!”

“ஆமாம்பா... அப்பால... அந்தூரு பெர்சு கம்மினாட்டி ஒன்னு நம்ப ஆரிச்சாமி லைன்ல கிராஸ் ஆயிக்கினானாம்பா...”

“அய்யே... அப்பால...?”

“அப்பால இன்னா... படா பேஜாராப் பூடிச்சாம்பா...” என்றவனை இடைமறித்த துலுக்காணம்... வழக்கத்துக்கு மாறாக அதிக துர்நாற்றம் வீசுவதை அறிந்து,

“அய்யே... இன்னா கொமாரு... இன்னிக்கி இம்மாங் கலீஜா கீது...?”

“இக்கும்பா... இன்னான்னு தெர்லபா...”

விச வாயுவின் நெடி தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டே இருவரும் முன்னேறினார்கள். அங்கே... தொகுதியில் காணாமல் போன அரசியல் வியாதிகளெல்லாம் கூட்டம் கூட்டமாக அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்திய மழையின் காரணமாகப் பாதாள சாக்கடை படு மோசமான நிலையை அடைந்திருந்தது. வழக்கம் போல, அதைச் சுத்தம் செய்யும் பணியில், உயிரைப் பணயம் வைத்து உழைக்க ஆரம்பித்தார்கள் அவர்கள்.

அவர்கள் தலைக்கு மேலே, இவர்களைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, சென்னை "நகர"வாசிகள் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.


சனி, 12 அக்டோபர், 2013

வருத்தமில்லா வாலிபர் சங்கம்...


ஊர்த் திடலின் தென்மேற்கு மூலையில் யாராலோ எதற்காகவோ எப்போதோ நிர்மாணிக்கப்பட்ட ஒரு இடம். குட்டிச்சுவர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்த இடம் எட்டுக்கு எட்டில் ஏறக்குறைய சதுரமாக கருங்கல் செங்கல் செம்மண் கொண்டு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, வடக்குப் பார்த்த ஒரு வாயில் மற்றும் கிழக்குப் பார்த்த ஒரு சன்னலுக்குமான திறப்புமாக, மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிந்துச் சமவெளி வீடு போல இடுப்புயர அளவில் சிதிலமடைந்து கிடக்கும். திடலைப் பார்த்த வாயிலின் முன்புறம் சுமார் பதினைந்திற்குப் பதினைந்தில் ஒரு மண்மேடையின் சிதைந்த வாழ்வு தென்படும்.
 
பஞ்சாயத்துத் தொலைக்காட்சிப் பெட்டி பிறப்பதற்கு முந்தைய காலம். பொழுதுபோக்கிற்காக மக்கள் திண்ணைகளையே நம்பியிருந்த நேரம். மார்கழி மாதக் கடைசியில், நாய் கூட ஒதுங்க யோசிக்கும் புதர் மண்டிக் கிடக்கும் எங்கள் ஊர்க் குட்டிச்சுவருக்கு திடீரென்று மவுசு வந்துவிடும்.

அதுவரை அந்த வாலிபர்கள் எந்த சந்தில் இருந்தார்கள் என்றுகூடத் தெரியாது. கையில் ஒரு கால் குயர் நோட்டை எடுத்துக்கொண்டு வீடு வீடாக வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்கள். மக்களும், ஏதோ தங்கள் அன்றாட வாழ்வில் அதுவும் ஒரு கடமை என்பது போல் முகம் சுளிக்காமல் கையில் கண்டதை அன்பளிப்பாக எழுதிவிட்டு, ஆவலோடு வரப்போகும் அந்த  விழா நாளுக்காகக் காத்திருப்பார்கள்.

வசூல் முடிந்த கையோடு, வாலிபர்கள் தங்களின்  முதல் காரியமாகத் திடலில் விளயாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கொண்டு புதர் ஒழிப்புப் போராட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்வார்கள். போராட்டத்தின்  முடிவில், சவரம் பண்ணின வசூல் ராஜா ஆனந்த் சார் போல் ஒரு புதுப் பொலிவுடன் குட்டிச்சுவர் காணக் கிடைக்கும்.

பிறகு, மளமளவெனக் காரியங்கள் நடந்தேறும்.  குட்டிச்சுவரும் மண்மேடையும் தற்காலிகமாக மராமத்து  பார்க்கப்படும். மண்மேடையை உத்தேசமாக வைத்து பச்சைத் தென்னை ஓலைகளைக் கொண்டு ஒரு திடீர்ப் பந்தல் போடப்பட்டு, மாவிலை வேப்பிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்படும். பந்தக் கால்களில் பசுமையான கரும்புத் தட்டைகளும் வாழை இலைகளும் கட்டப்படும்.
 
அதுவரை சீக்காளிக் கிழவன் போல் படுத்துக்கிடந்த ஊர் ஒருவிதக்கிளர்ச்சியுடன் எழுந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடும்.

குறிப்பிட்ட தினத்திற்கு முதல் நாள் மாலை, மைக் செட் மாடசாமி தனது சகாக்களுடன் மாட்டு வண்டியில் வந்து சேருவார். ஊர்க்கொடிமரம் உயரமான மொட்டை மாடி சாலையோரப் புளியமரம் என்று ஒன்று விடாமல் கொண்டை வைத்த ஒலிப்பெருக்கிக் குழாய்களை அவற்றின்மேல் கட்டுவார்.  பந்தலில் குத்துவிளக்கு சீரியல் செட் ட்யுப் லைட் எல்லாம் போடுவார்.

அலிபாபா திருடர்களின் பொக்கிச பெட்டி போல் ஒரு பெரிய மரப்பெட்டி வைத்திருப்பார். கூடவே லேகியம் விற்பவன் பெட்டிபோல் வெல்வெட் அலங்காரத்தில் ஒரு சின்ன பெட்டியும் இருக்கும். பெரிய பெட்டியில் திரைப்படப் பெயர் மற்றும் படங்கள் போட்ட கெட்டிக் காகித உறைகளில் கருமுறுக்குக் கோடுகள் பதிந்த வட்டவடிவ இசைத்தட்டுக்கள் இருக்கும். ஒவ்வொரு இசைத் தட்டிலும் 33, 45, 78 என்று நிமிடத்திற்கு இத்தனை சுற்று சுற்ற வேண்டும் என்ற குறியீட்டு எண்கள் இருக்கும். லேகியப் பெட்டியில் அதே எண்களைக் குறிக்கும் சிறிய வட்டவடிவிலான திருகு குமிழ் ஒன்றும், இசைத்தட்டுக்களை வைக்க ஒரு வட்டமான மேடையும், அதைச் சுற்றி விட ஒரு கைப்பிடி விசையும் இருக்கும். இசைத்தட்டை அதில் வைத்துச் சுற்றிவிட்டு, முனையில் ஊசி கொண்ட ஒரு தண்டை எடுத்துத் தட்டின் மையப் பகுதியில் ஆரம்பிக்கும் முறுக்குக் கோட்டின் மேல் வைத்தாரானால், டி.எம்.எஸ்சும் சுசிலாவும் கொண்டை வைத்த குழாய் வழியாக எம்.எஸ்.வி பாடல்களைப் பாடிப் பரவசப்படுத்துவார்கள்.

முதலில் சாங்கியத்திற்கு ஒரு சாமி பாட்டு போடும் மாடசாமி, அதன்பின் அன்றைய தேதியில் வெளியான திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவார். சுனங்கிவிடும் பாடகர்களை சுறுசுறுப்பாக்க அவ்வப்போது கைப்பிடி வைத்தியமும் செய்துகொண்டிருப்பார். நழுவும் கால் சட்டையும் ஒழுகும் மூக்குமாய்ச் சுற்றி நிற்கும் சிறுவர்கள், இந்த அதிசய விஞ்ஞானியையும் அவர் சாகசங்களையும் திறந்த வாய் மூடாமல் பார்த்துப் பார்த்துப் பரவசப்படுவார்கள்.

இதற்கிடையில், கழகக் கட்சிகளின் மாணவரணி இளைஞரணித் தாத்தாக்கள் போலல்லாது, சற்றே இளைஞராகவே தோற்றமளிக்கும் சங்கத்தின் தலைவராகப் பாவிக்கப்படும் ஒரு நபர் “அன்பார்ந்த பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் எங்களது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...” என்ற ரீதியில் நீட்டி முழக்கி ஏற்ற இறக்கங்களோடு அறிவிப்பார்.

அவ்வப்போது “கல்யாணம் காதுகுத்து பூப்புனித நீராட்டுவிழா  தேர்த்திருவிழா போன்ற வைபவங்களுக்கு குறைந்த செலவில் நிறைவாக ஒலி அண்ட் ஒளி அமைத்துக் கொடுப்பது உங்கள் மாடசாமி சவுண்டு சர்வீஸ்... சவுண்டு சர்வீஸ்... சர்வீஸ்... ஸ்...” என்று எக்கோ எப்பெக்ட்டில் மைக் செட் மாடசாமியின் விளம்பரமும் இருக்கும்.

இந்த மாதிரி நல்லது கெட்டது காரியங்களில் ஒலிப்பெருக்கி அமைப்பதென்பது கிராமத்து வழக்கங்களில் மிக மிக இன்றியமையாத ஒன்று. எங்கள் ஊரில் எங்கெல்லாம் ஒலிப்பெருக்கி வைக்கின்றார்களோ அங்கெல்லாம் இரண்டு பேர் தவறாமல் ஆஜராகி விடுவார்கள். ஒருவர் “டேப் சொக்கன்” மற்றொருவர் “தொப்பைக் கிடா”.

முன்னவர், கையில் ஒரு தப்பை வைத்துத் தாளம் போட்டுக் கொண்டே பழைய காலத்துப் பாகவதர் முதல் அந்தக் காலத்து டி.எம்.எஸ் பாடல்கள் வரை எல்லாவற்றையும் மைக் முன்னால் பாட வந்துவிடுவார். இவரை யாரும் தடுப்பதுமில்லை விடுப்பதுமில்லை. இவருடைய கலைத்தாகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் இவருக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். விசேச வீடுகளில் மகிழ்ச்சிகரமான பாடல்களையும் துக்க நிகழ்வுகளில் சோகப் பாடல்களையும் பாடுவார்.

பின்னவர், ஆளுக்கும் பேருக்கும் சம்பந்தம் இருக்காது. ஒட்டிய வயிறும் உலர்ந்த வாயுமாய் எந்நேரமும் போதையில் இருப்பார். எம்.ஜி.ஆர் பாட்டு போடச் சொல்லி தகராறு பண்ணுவார். சந்தோசமோ துக்கமோ நிகழ்வு முக்கியமில்லை, ஆனால், எம்.ஜி.ஆர் பாடல் அவருக்குக் கண்டிப்பாகப் போட வேண்டும். கல்யாணம் காது குத்து வீடுகளில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், சில சமயம் துக்க வீடுகளில் இவருடைய அளும்பு தாளாமல் கைகலப்பு வரை சென்றுவிடும். அடி பட்டாலும் உதை பட்டாலும் அவர் எதையும் பொருட்படுத்துவதுமில்லை, கலகலப்பான அந்த சேவையை அளிக்க என்றும் தவறுவதுமில்லை.

விடிய விடிய இவர்களின் கொட்டம்தான். அன்றிரவு ஊரில் யாரும் தூங்க முடியாது. டூப் தொப்புளைப் பார்த்த நஸ்ரியா நசீம் போல ஓயாது ஒலிப்பெருக்கி அலறிக் கொண்டே இருக்கும்.

அடுத்த நாள் அதிகாலை முதலே வருத்தமில்லா வாலிபர்கள் பரபரப்பாகி, அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பேட்ஜை அணிந்துகொண்டு வேலைகளைத் துவக்கி விடுவார்கள். தெற்குத் தெரு வாத்தியார் வீட்டு முற்றத்தில் அடுப்புக் கூட்டி, நெல் வேக வைக்கும் பெரிய அண்டாவை அதன்மேல் வைத்து, தெருப் பெண்மணிகள் உதவியுடன் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள். பக்கத்திலேயே கரும்புகள் கட்டுக் கட்டாய்க் குவிந்து கிடக்கும்.  நாலு பேர் சுற்றி உட்கார்ந்து அரை அடி நீளத்தில் அவைகளை நறுக்கி பெரிய பெரிய கோணிச் சாக்குகளில் நிரப்பிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பக்கம் வாழை இலைகளைக் கையகலத்திற்குக் கிழித்து சிலர் அடுக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். பூப்பந்துப் போட்டிப் பார்வையாளர்கள் போல் சிறுவர்கள் சுற்றி நின்று இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

சுமார் பத்துப் பதினோரு மணிக்கெல்லாம் சிறுவர்கள் புடைசூழ பொங்கலும் கரும்பும் குட்டிச் சுவர் பந்தலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கத் தயாராக இருக்கும். வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைவராகப் பட்டவர் மீண்டும் மைக்கைப் பிடித்து “பேரன்பு மிக்க பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் அனைவருக்கும் மீண்டும் எங்களது வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்... இந்த நன்னாளிலே எங்களது சங்கத்தின் சார்பாக இப்பொழுது பொங்கலும் கரும்பும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பதை மிகவும்  மகிழ்வுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்... எனவே அனைவரும் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்...” என்று அழைப்பு விடுப்பார்.

முதலில் சிறுவர்களுக்கு பொங்கலும் கரும்பும் விநியோகிக்கப்படும். வாழை இலையில் ஒரு கரண்டி பொங்கல் வைத்து அதன் மேல் ஒரு கரும்புத் துண்டை வைத்து மடித்த வாக்கில் கொடுப்பார்கள். மிகவும் சூடாக இருக்கும். சிறுவர்களின் ஆர்வமிகுதியால் ஆப்கானிஸ்தான் அகதி முகாமின் உணவு விநியோகம்  போல் அங்கே தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரே களேபரமாகிவிடும். ஒலிபெருக்கியில், “அனைவரும் வரிசையாக வந்து அமைதியாக இருந்து வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...” என்று திரும்பத் திரும்ப அறிவித்துக் கொண்டிருப்பார்கள். சிறுது நேரத்தில், அமராவதி ஆறு காவிரி ஆற்றோடு கலப்பது போல் சிறுவர்களுடன் பெரியவர்கள் கூட்டமும் சேர்ந்துகொள்ள, ஒரு கட்டத்தில், நிலைமையை சமாளிக்க முடியாமல் வாலிபர்கள் திணறிப் போவார்கள்.

இந்த நேரத்தில் திடீரென்று ஆல் இன் ஆல் அழகுராசா தோன்றி நிலைமையின் தலைமையை ஏற்றுக்கொள்வார். ஆல் இன் ஆல் அழகுராசா நல்ல ஆகிருதியுடன் இருப்பார். பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும் பழகுதற்கு இனிமையான மனிதர். ஊரில் எந்தவொரு பொதுக்காரியமும் அவரில்லாமல் நடைபெறாது. மிகவும் ரசனையான மனிதர். பல தொழில்களை விரும்பி செய்வார். கொத்தனார், வயர்மேன், பிளம்பர் என்று அவர் பார்க்காத வேலை இல்லை. திடீரென்று சைக்கிள் கடை வைத்து பங்க்சர் ஒட்ட ஆரம்பித்து விடுவார். மழை நாட்களில் கிணறுகளில் மூழ்கிவிடும் பம்ப்பு செட்டுகளை மீட்க பிளம்பர் அவதாரம் எடுத்துவிடுவார். எல்லா வேலைகளுக்கும் தேவையான கருவிகளை அவர் வீட்டில் வைத்திருப்பார். ஓய்வு நேரத்தில் தன் வீட்டு டேப் ரெக்கார்டர் ரேடியோ பெட்டிகளுக்கு வெல்வெட் துணியில் கைகளாலேயே சட்டை தைத்துப் போட்டு விடுவார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஆனால் ஊரில் எல்லோருக்கும் பொதுவானவர். விநாயகர் சதூர்த்தி விழாவில் சுண்டல் விநியோகம் செய்வது முதல் பொங்கல் விழாவில் பொங்கல் கரும்பு விநியோகிப்பது வரை இவர் இருந்தால்தான் எல்லாம் சாத்தியமாகும். பஞ்சாயத்துத் தொலைக்காட்சி  எங்கள் ஊரில் அறிமுகமான போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஊர் மக்கள் இவரிடம்தான் விரும்பி ஒப்படைத்தனர்.

ஆல் இன் ஆல் அழகுராசா அரங்கத்திற்கு வந்தவுடன், ஏட்டையாவைப் பார்த்த எருமைத் திருடன் போல்  கூட்டம் ஒரு கட்டுக்குள் வந்துவிடும். மளமளவென பொங்கலும் கரும்பும் காலியாகிவிடும். சிறுவர்கள் இரண்டாவது மூன்றாவது முறை கூட வந்து வாங்கிச் செல்வார்கள். இப்படியாக பொங்கல் கரும்பு விநியோகம் முடிந்தபின் மதியம் ஒரு சிறிய இடைவேளை விடுவார்கள். பிறகு ஒரு மூன்று மணி சுமாருக்கு விழாவின் அடுத்த கட்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

சிறுவர் சிறுமியருக்கான ஓட்டம், காளையர் ஓட்டம், சைக்கிள் ஸ்லோ ரேஸ், பாட்டிலில் நீர் நிரப்புதல், வாளியில் பந்து போடுதல், மாறுவேடப் போட்டி, கோலப் போட்டி, மியூசிக்கல் சேர் என்று ஆரவாரமாக நடக்கும். ஆண்களும் பெண்களும் உற்சாகமாகக் கலந்து கொள்வார்கள். சர்க்கஸ் கோமாளி போல் ஆங்காங்கே தோன்றி “தொப்பை கிடா” தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டிருப்பார். மியூசிக்கல் சேர் நடைபெறும் பொழுது எம்.ஜி.ஆர் பாட்டுத்தான் போடவேண்டுமென்று ரகளை பண்ணுவார்.

சைக்கிள் ரேஸ் எங்கள் ஊரில் தொடங்கி பக்கத்து ஊர்கள் வழியாக சுற்றிக் கொண்டு சுமார் நான்கைந்து கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நடக்கும். அன்றைய தினம் பக்கத்து ஊர்களிலும் இதேபோல் பொங்கல் விழா நடைபெறும். அந்த ஊர்களிலும் சைக்கிள் ரேஸ் கண்டிப்பாக இருக்கும். எனவே, அவ்வப்போது அந்த ஊர்களிலிருந்து  புறப்படும் சைக்கிள் ரேஸ்காரர்கள் எங்கள் ஊர் வழியாக, எதிரிப் படைகளை ஊடுருவும் குதிரைப் படைகள் போல திடும் பிரவேசமாக புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவார்கள். பொங்கல் விழாவின் இலவச இணைப்பாக இந்தத் திடும் பிரவேச போட்டிகளையும் மக்கள் கண்டு களிப்பார்கள்.

மாலையில் இறுதியாக பானை உடைத்தல் போட்டி நடைபெறும். கண்களைக் கட்டி போட்டியாளர்களை ஒரு நான்கு சுற்று சுற்றிவிடுவார்கள். அதிலேயே அவர்களுக்கு நிதானம் தவறி வழி மாறிச்சென்று தரையையும் விளக்குக் கம்பத்தையும் சமயத்தில் ஆட்களைக் கூட அடித்து விடுவார்கள். இந்த ஒரு போட்டிதான் நீண்ட நேரம் நடக்கும். நேரம் ஆக ஆக போட்டியாளர்கள் இரண்டாவது மூன்றாவது சுற்று என்று அடிக்க முயன்று கொண்டிருப்பார்கள். எங்கள் ஊர் வழியாக பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் வழிப்போக்கர்கள் கூட பானை உடைத்தலில் கலந்து கொள்வார்கள். தரையில் அடையாளம் வைத்துக் கொள்வது, எத்தனை தப்படி நடக்கவேண்டும் என்று முன்னேற்பாடாக நடந்து அளந்து கொள்வது, சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எழுப்பும் ஒலிகளை வைத்து இலக்கை அறிவது என்று ஏகப்பட்ட உபாயங்களைக் கையாண்டு கடைசியில் யாரவது ஒருவர் பானையை உடைத்தே விடுவார்.

அத்துடன் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெறும். அதன்பின் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். சிறுவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில்; பெரியவர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி, பிளாஸ்டிக் சோப்பு டப்பா, சீப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள் என பரிசுப் பொருட்கள் இருக்கும். விழாவின் இறுதியாக இரவு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வெள்ளித்திரையில் திரைப்படம் காண்பிக்கப்படும்.

அந்தக் காலத்தில் எந்த ஒரு விழாவும் திரைப்படம் திரையிடாமல் நிறைவு பெறாது. ஊர்த் திடலில் இரண்டு மரங்களை ஊன்றி திரையரங்குகளில் உள்ளது போல பெரிய அகலமான வெள்ளைத் திரையைக் கட்டி, அந்த மரங்களில் ஒலிப்பெருக்கிக் குழாய்களைக் கட்டி விடுவார்கள். திரைப்படம் திரையிடும் ப்ரொஜெக்டரை டாக்சியில் வைத்துக் கொண்டுவருவார்கள். திரையிலிருந்து ஒரு இருபது முப்பது அடி தூரத்தில் ஒரு மேசையைப் போட்டு அதில் அந்த ப்ரொஜெக்டரை வைத்து, பெரிய வளைய வளையமாக இருக்கும் பிலிம் ரீல்களை மாட்டித் திரையிடத் தயார் செய்வார்கள். இந்தக் காட்சிகளைக் காண்பதே ஒரு திரைப்படம் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சியைத் தரும்.

பெரும்பாலும் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள்தான் திரையிடுவார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படம் போட்டால் கண்டிப்பாக ஒரு சிவாஜி படம் போடவேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கும். மக்கள் இரவு உணவிற்குப் பிறகு முன்னதாகவே சென்று பாய் போர்வைகளை விரித்து இடம் பிடித்துக் கொள்வார்கள். சிலர் மண்ணைக் குவித்துத் தற்காலிக சொகுசு நாற்காலிகள் தயார் செய்து கொள்வார்கள். முன்னால் மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பவர்களின் சொகுசு நாற்காலியை பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மெள்ள மெள்ள சுரண்டி ஒரு கட்டத்தில் குழியாக மாற்றி விடுவார்கள். படம் பார்க்கும் ஆவலில், பள்ளத்தாக்கில் விழுந்தவர்கள் அதை உணராமல், திரையில் தடுக்கி விழுந்த நாகேசைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அது போக, இவ்விதச் சங்கடங்கள் இல்லாமல் பின் வரிசையில் நாற்காலி முக்காலி கயிற்றுக் கட்டில் என்று சொகுசாக அமர்ந்து படம் பார்ப்பவர்களும் உண்டு. பார்க்கிறவர்கள் பார்க்க தூங்குகிறவர்கள் அந்த அந்த இடத்திலேயே தூங்கிப் போக விடிய விடிய படம் நடக்கும்.

உழைத்துக் களைத்த மக்களுக்கு அன்று ஒரு நாள் மகிழ்ச்சியைக் கொடுத்த திருப்தியோடு வருத்தமில்லா வாலிபர் சங்கம் காணாமல் போய்விடும். புற்றீசல் போல வருடத்தில் ஒரே ஒரு விழா தான் அதன் ஆயுட்காலம். பொங்கல் விழாவிற்குத் திடீரென்று தோன்றி வந்த வேகத்திலேயே மறைந்து போகும். இதற்காக அவர்கள் எவ்வித வருத்தமும் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த ஒரே ஒரு செயல்பாட்டோடு இயங்கும் இந்தச் சங்கத்திற்கு அந்தக் காலத்தில் நிரந்தரத் தலைவரும் செயலாளரும் இருந்தனர்.

நாகரீக வளர்ச்சியில் சிக்குண்டு ஊடகப் பொழுதுபோக்கிற்கு இன்றையத் தமிழகக் கிராமங்கள் முற்றிலும் அடிமையாகிவிட்ட நிலையில், வயதானாலும் பழைய ஞாபகங்களில் “வருத்தமில்லா வாலிபர்களாகவே“ இன்றும் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால், இன்றைக்கு அவர்களுடைய வாரிசுகள் வளர்ந்து வாலிபர்களாகி விட்டதைக் காணும் நாம், ஏனோ அந்த “வருத்தமில்லா வாலிபர் சங்கத்தை” மட்டும் இன்று காண இயலவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...