“ஏ... பயலே... நீ ஊத்துற ஊத்துல... அந்த எழவெடுத்த பய, எலக்சன் முடியவரைக்கும்
எந்திரிக்கப்புடாதுலே... என்னலே... நாஞ் சொல்லுறத கேட்டுக்கிடுதியாலே...?” என்று,
விளக்கு மண்டையில் தாடையை வைத்த சிகப்பு மூஞ்சி வில்லன் போல, சட்டை போடாத மைக்
செட் மாரியிடம், தன் சதித் திட்டத்தை விளக்கிக் கொண்டிருந்தார் வட்டமூஞ்சி
அண்ணாச்சி.
சோத்துப் பேட்டை தொகுதியில் இதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த தனது அரசியல்
வாழ்க்கையில், புயலென நுழைந்த உசார் பக்கிரியை, "ஒழித்துக் கட்டிவிட்டுத்தான்
மறுவேலை" என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. நாடாளுமன்றத் தேர்தல்
நெருங்கிய வேளையில் இந்த நாசகார வேலை அவசியமாகப்பட்டது அவருக்கு.
தமிழக அரசியலைப் பொருத்தவரை, பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மத்தியில்,
அந்தக் கோட்டையைக் கூடக் கீழே போடாமல், அதையும், கரமுறவென்று மென்று முழுங்கி,
ஏப்பம் விட்டவர் அண்ணாச்சி.
அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி ஒரே வரியில்
கூறவேண்டுமென்றால், “அவரிடம் எல்லா வண்ணத் துண்டுகளும் அதற்குத் தகுந்த கரை
வேட்டிகளும் உண்டு...” என்று சொன்னால் போதுமானது. தற்போது அவர் வெள்ளை வேட்டி
வெள்ளைத் துண்டில் உலா வந்துகொண்டிருக்கிறார். அப்படியென்றால், அவர் இப்போது
குரங்குக் கட்சியில் உள்ளார் என்றும், எந்த நேரத்திலும் எந்தக் கட்சிக்கும் தாவத்
தயாராக உள்ளார் என்றும் பொருள்.
எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், கண்டிப்பாக, அதில் ஒரு அங்கமாக அண்ணாச்சி இருப்பார். இங்ஙனம், எந்தவொரு எதிர்ப்புமின்றி, வெற்றிமேல் வெற்றி பெற்று,
தனது தொழிலில் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்து வந்தார் அண்ணாச்சி. ஆனால், இந்த
தடவை, தனது செல்வாக்கு சரிந்து, பக்கிரியின் பவிசு கூடிக்கொண்டே வரவும், தோல்வி
பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.
இத்தனைக்கும் அவர், எல்லா அரசியல்வியாதிகளைப்
போலவும், “தானுண்டு தனது நன்மை மட்டுமே உண்டு” என்று தொகுதிவம்பிற்குப் போகாமல்தான்
இருந்தார். ஆனால் “ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி” என்று கூறிக்கொண்டு, மக்களைக்
குழப்பிவிட்டுக் கொண்டிருக்கும், கேசரி வாலாக் கட்சியினரின் தூண்டுதலால்,
பக்கிரியின் செல்வாக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.
"மானாவாரியாக எல்லாக் கட்சியினர் மேலும் மக்கள் வெறுப்பாக இருக்கிறார்கள்..."
என்பது நாடறிந்த உண்மை. எனவே, இந்தத் தடவை, கழகக் கட்சிகள் முதற்கொண்டு கடைசி
பெஞ்ச் கட்சிகள் வரை எதிலும் கூட்டணி வைக்காமல், புதிய வியுகம் ஒன்றை அமைத்துக்
கொண்டார் அண்ணாச்சி.
அதாகப்பட்டதாவது, இந்தத் தேர்தலில் “தான் போட்டியிடவில்லை என்று
அறிவித்துவிட்டு, பக்கிரிக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, வேட்புமனுத்
தாக்கலுக்கு முன், ஏதாவது ஒரு மேடையில் வைத்து, பக்கிரியின் முகத்தில் ஆசிட்
அடித்து, அவனை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவன் இடத்தில் அவனுக்குப் பதில்
தான் போட்டியிட்டால், அவனுக்காக வீசும் அனுதாப அலையின் துணை கொண்டு, அவனது
ஆதரவாளர்கள் மூலமே தான் வெற்றி பெற்றுவிடாலாம்” என்பதுதான் அண்ணாச்சியின்
இராசதந்திரக் கணக்கு.
திட்டமிட்டபடியே எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. நாளை நடக்கும்
பொதுக்கூட்டத்தில் ஆசிட் அடிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த விவரங்கள் எதுவுமே
தெரியாமல், அண்ணாச்சியின் வலையில் வசமாக வீழ்ந்து கிடந்தான் பக்கிரி.
சமீபத்தில் வெளிவந்திருந்த திரைப்படங்களின், விண்ணை முட்டும் விளம்பரப்
பலகைகளின் பின்னணியில், சோத்துப் பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில்
அன்றைக்கு மேடை போடப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கியைக் கையில் பிடித்தபடி, உள்ளூர் அரசியல் முதற்கொண்டு உலக அரசியல்
வரை, பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.
“ஏலே... அமெரிக்காக்காரன்னா... நீ என்ன பெரிய இவன்னாலே...? ஏ... நாங்க
வேலக்காரிக்கி சம்பளம் குடுப்போம் இல்ல நாசமத்துப் போவோம்... ஒமக்கென்னலே
வந்திட்டு...? ஒஞ்சோலி *யித்தப் பாத்துட்டுப் போவெண்டியதாம்லே...” என்றவர், கூட்டத்தில்
கரகோசமும் சீழ்க்கை ஒலியும் எழும்பி அடங்கும் வரை, ஒரு சிறு இடைவெளி விட்டு,
தொண்டையைக் கணைத்துக் கொண்டே...
“ஏ... சவத்த மூதி... நீ (மத்திய அரசு) என்னலே நொட்டி வச்சுருக்க...?
அமெரிக்காக்காரனுக்கு *** கழுவிட்டுக் கெடக்கே... அவன் வேட்டிய உருவி கோமணத்தோட
நிக்க வைலே பாப்பம்...” என்று சீறி முழங்கவும், கூட்டம் ஆர்ப்பரிக்க, அதைத் தன் சைகையால்
அடக்கிவிட்டு...
“நீ (மாநில அரசு) என்னலே இங்கே புடிங்கிட்டு கெடக்கே...? ஏ... குடிக்கத் தண்ணி
கேட்டா... நீ... சாராயக் கடையல்லே தொறந்து வக்கே... ஏ... வெக்கமால்லே ஒமக்கு...?
அவனவன் இங்கே கரண்டு இல்லாம சிங்கியடிக்கான்... ஏ... ஒம்மை ஆருலே அம்புட்டு
பேட்டரி போட்டு செவ்வாக் கெரகத்துக்கு ராக்கட்டு விடச் சொன்னாம்....(?!!!) ஏ... சுத்தப்
படுக்காளிப்பய கவருமண்ட்டால இருக்கு...”
மக்களின் கரகோசம் விண்ணைப் பிளக்க, அந்த இடைவேளையில், தனக்குத் தரப்பட்ட
சோடாவை ஒரு மடக்குக் குடித்து விட்டு...
“ஏ... நீ (இது உள்ளூர் அரசியல்) வந்து... ஒன்னு இருக்குன்னு சொல்லு... இல்ல...
இல்லேன்னு சொல்லு... ஏ... கூட்டணி இருக்கா... இல்லையா.... அத மட்டும்
சொல்லுலே... ஏ... அத விட்டுட்டு... அவன் போன வாட்டி நல்லா வச்சுக்கிட்டாம்...
இந்த வாட்டி தொரோகம் பண்ணிட்டாம்ன்னு ஏம்ல பிலிம் காட்டுத...?”
மீண்டும் கூட்டத்தின் ஆரவாரம் குடுக்கிட, சற்று இடைவெளி விட்டு...
“ஏ... நீ (இது சினமாக்காரன் அரசியல்) நாலு படம் நடிச்சிட்டா... நீ என்ன
பெரிய இவனாலே... “ஏ... அந்த ஈரோயினுக்கு ஏம்லே... பைய்நெட்டு வயசுக்கு மேலே ஆக
மாட்டிங்கு...? ஏ... நமக்கு ஏம்லே... மண்டை சொட்டையாப் போயிட்டு...?” ஏ... இந்தச்
சோலியமட்டும் நீ ஒழுங்காப் பாருலே... ஒமக்கு அரசியல்லே என்னலே சோலி...? ஏ... **ராண்டி...
நீ நாலு பேரை சினிமால அடிச்சிப் போட்டுட்டா... ஒமக்கு நாக்காலி கேக்காலே...
நாக்காலி...” என்று ஒருத்தர்
பாக்கியில்லாமல் காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சி எடுத்துவிட்டு... இறுதியாக...
“ஏலே மக்கா.... ஒங்களத் தாம்லே கேட்டுக்கிடுதேன்... இந்த வாட்டி அவிங்களத் தூக்கித்
தூரப் போடுங்கலே... நம்ப பக்கிரிக்கு ஓட்டுப் போட்டு செயிக்க வைங்கலே... என்ன... கேட்டியளா...?
ஏ... அம்புட்டுத்தாம்லே...” என்று தனது
அனல் கக்கும் உரையை முடித்துக் கொண்டு, அடுத்து பக்கிரியைப் பேசுமாறு சைகையில் அழைக்க... மிடுக்காக எழுந்து
வந்த பக்கிரி...
“அல்லாருக்கும் வணக்கம்பா... நம்ப அண்ணாத்தே சொன்னா மாறி... சென்ட்ட்ரலும் சரி
கெடியாது... இஸ்டேட்டும் சரி கெடியாது... இஸ்டெடியாக்கீரது நம்ப கட்ச்சி
ஒண்டிதான்... அதுக்காண்டி... நீங்க அல்லாரும்... பொட்டலம் சின்னத்து மேலே ஓட்டுப்
போட்டு... இந்தப் பக்கிரியக் கெலிக்கவச்சுக்கனும்னு கேட்டுக்கிறேம்பா...
அப்பால...” என்று அவன் அடுத்து பேசும் முன், அண்ணாச்சியின் கண்ணசைவைப் புரிந்து
கொண்ட மைக் செட் மாரி, கையில் சோடா பாட்டில் சகிதம் மேடை ஏறி வந்தான்...
வந்தவன், பக்கிரியின் பால் நெருங்க... அவனைக் கண்ட பக்கிரி... பேச்சை நிறுத்தி விட்டு... பல்லைக் காட்டிக்
கொண்டே... அந்த சோடா பாட்டிலை வாங்கத் தன் கையை நீட்ட... கண்ணிமைக்கும்
நேரத்திற்குள் அந்த அசம்பாவிதம் நடந்தேறி விட்டது...
நேராக வந்த மாரி... சோடா பாட்டிலைப் பக்கிரியின் கையில் கொடுக்காமல்... அவன்
முகத்தில்... அதிலிருந்த திராவகத்தை விசிறியடிக்க...
இதைச் சற்றும் எதிர்பார்க்காத
பக்கிரி... “ஆஆஆ....ஆ...” என்று அலறி... முகத்தில் பரவும் ஒரு வித எரிச்சலை
உணர்ந்து... வாயில் ஏதோ கழுநீர்த்தண்ணீரின் சுவை தெரிய... கண்களை மறைத்த அந்தத்
திராவகப் படலத்தை வழித்தெறிந்து விட்டு... உருட்டு விழியுடன் விழித்துப்
பார்க்க...
“பேமானி... கசுமாலம்... முக்காத் துட்டு புரோசனம் கீதாயா ஒன்னால... இப்புடிக்காத்
துன்னுட்டு... துன்னுட்டு... திண்ணையாண்ட பட்த்துகினுகீறியே... சோமாரி... அந்தாண்ட
கட்ச்சிக்காரன் மீட்டிங்கு போட்டுக்கினு... பிரியாணி பார்சல் குடுக்கானாமே... போயி
ரெண்டு இஸ்துக்கினு வந்தா இன்னா...” என்று, அவன் முகத்தில், பாத்திரம் கழுவிய நீரை
ஊற்றிவிட்டு... பத்ரகாளி போல... பொரிந்து தள்ளிக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அவனுடைய
பிள்ளைத்தாச்சி மனைவி.
வேலை வெட்டி எதற்கும் போகாமல், தண்டச் சோறு தின்றுகொண்டு, எப்படியும், ஒரு முழு
நேர அரசியல்வியாதி ஆகிவிட வேண்டுமென்று, கனவு கண்டுகொண்டிருந்த பக்கிரியின் முகத்தில்...
அவன் மனைவி அடித்த கழுநீரானது, சற்றுத் தெளிவைக் கொடுக்க...
“நம்ப கெலிச்சு ஆச்சிக்கி வரச் சொல்லோ... இந்தா மாறி... பிரியாணிப் பார்சல...
மீட்டிங் காண்டி குடுக்காமே... அல்லார் வூட்டுக்கும்... டோர் டெலிவரி
பண்ணிக்கணும்பா...” என்று, தொலைநோக்காகச் சிந்தித்துக்கொண்டே, கூட்டம் நடக்கும்
திக்கை நோக்கி அதி வேகமாக நடையைக் கட்டினான் பக்கிரி.