சனி, 10 மே, 2014

ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!

“அல்லாம் இந்த துலுக்காணத்தால வந்ததுபா...”

“ஏலே... என்னலே... என்ன சொல்லுத...?” ன்னாரு நம்ப கடையாண்ட வந்த அண்ணாச்சி...

“பின்ன இன்னா அண்த்தே... நம்ப துலுக்காணம் கீறானே... அன்னிக்கி  நம்ப கடையாண்ட வந்து... இன்னா சொல்லிக்கினான் தெர்யுமா...?”

“என்னலே சொன்னான்...?”

வாத்யாரே... எலிக்சன் முட்ஞ்சி ரிசல்ட்டு வுடங்காட்டியும் ரெம்ப பேஜார் பண்ணிக்கிறான்பா கவுருமண்டுல... நீ காண்டி ரெம்ப உசாரா இர்ந்த்துக்கபா... ன்னான்.

இன்னாபா... இன்னா மேட்டரு...? ன்னு கேட்டுக்கினேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்...”

“இந்த மேரி வாத்யாரே... நம்ப பையனுக்காண்டி ஒரு பெர்த்து சட்டியேட்டு வாங்கின்லாம்ன்னு தாலுக்கா ஆபீசாண்ட போய்க்கினேம்பா... கசுமாலம் அவன் இன்னான்றான்... இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்... சர்தாம்பான்னு சொல்லிக்கினு... பத்தர ஆபீசாண்ட போயி... வூட்டுமேல பட்டா குடுடா பேமானின்னு கேட்டுக்கினா... அத்துக்கு அந்த பொறம்போக்கு இன்னான்றான்...  இந்த மேரி... இந்த மேரி... எலிக்சன் டைமு... இப்ப ஒன்னியும் கெடியாது... அப்பால வா... பாத்துக்லான்றான்...”

“இன்னாபா இத்து அநியாயமா கீதே...?”

“கேளு வாத்யாரே... நா காண்டி இல்ல... யாரு போய்க் கேட்டுக்கினாலும்... அல்லா ஆபீசுலயும்... இத்தேதான் சொல்லிக்கினுகீறாய்ங்கலாம்... ரெம்ப மெர்சலா கீதுபா...”

“அட சோமாரிங்களா... கஸ்டமருகாண்டி இல்லாதே... பின்ன யாருக்காண்டி கட வச்சுக்கினுகீறாய்ங்க...?”

“அட இத்து பர்வால்ல வாத்யாரே... நம்ப பக்கிரி கத கீதே... அத்து ரெம்ப பேஜாருபா...”

“இன்னாபா சொல்லிக்கிற...?”

“கேளு வாத்யாரே... எலிக்சனுக்கு மொத நா... நம்ப பக்கிரி நாஸ்தா துண்ணலாம்னு கெய்வி கடையாண்ட போய்னுறாம்பா... அந்தாண்ட வந்த எலிக்சன் ஆபீசரு... ஏய் கசுமாலம் எவ்ளோ துட்டு வச்சுனுகீற...? ன்னு கேட்டானாம்பா... அத்துக்கு இவன் சொல்லிக்கிறான்... இந்த மேரி ஆபீசர்... நாஸ்தா துண்ணுக்லாம்னு பாஞ்சி ரூவா கீதுன்னானாம்... அடிங்க... புரூப்பு இல்லாதே எப்புடி நீ துட்டு வச்சுக்லாம்...?
ன்னு சொல்லி... அந்த துட்ட இஸ்துக்கினு பூட்டானாம் அந்த ஆபீசரு...”

“அய்யே... இன்னாபா இத்து... கூத்தாக் கீது?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் பூத்தாண்ட போயி... ஏசன்ட்டு கைல ஓ...ன்னு அய்துக்கிறாம்பா... அத்துக்கு அந்த பொறம்போக்கு... நீ ஒன்னும் மெர்சலாவாத பக்கிரி... எலிக்சன் டைமுல அல்லாம் இப்புடிக்காதான் இர்க்கும்... நீ காண்டி இன்னா பண்ணு... எலிக்சன் அன்னிக்கி நம்ப கட்சிக்கி ஓட்டு போட்டுக்கினு... நேரா எலிக்சன் ஆபீசரண்ட போயி... தகுந்த ஆவணத்தோட துட்டக் கேளு... ஓங் கைல துட்டக் குட்த்துருவான்ன்னு சொல்லிக்கிறாம்பா...”

“ம்... அப்பால...”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி இன்னா பண்ணிக்கிறான்... எலிக்சன் அன்னிக்கி…  துட்டு வாங்கினதுக்கு ஒரு தபாவும்... ஏசன்ட்டு சொல்லிக்கினான்னு ஒரு தபாவுமா ரெண்டு தபா ஓட்டு போட்டுக்கினு... கொஞ்சம் மப்பையும் போட்டுக்கினு... நேரா... எலிக்சன் ஆபீசராண்ட போயி... தெனாவெட்டா ஒரு லுக்கு வுட்டு... இந்த ஆணவம் போதுமா...? இல்ல... இன்னுங்கொஞ்சம் வேணுமா...? ன்னு சொல்லி... எந் துட்டக் குடுறா பேமானின்னு கேட்டுனுக்றாம்பா... அவ்ளோதான்... அந்த ஆபீசரு காண்டாயி... கசுமாலம் யாராண்ட வந்து இன்னா கேட்டுக்கிற...? ன்னு... செவுள்ல ரெண்டு வுட்டு... டேசனாண்ட இட்டுக்கினு பூட்டானாம்பா...”

“அய்யே... இன்னாபா இத்து பேஜாராக் கீது...? அப்பால இன்னா ஆச்சி...?”

“கேளு வாத்யாரே... நம்ப பக்கிரி சம்சாரம் இல்ல...? அத்து... நம்ப கைல வந்து... ஓ... ன்னு அய்வுதுபா... சர்தாம்மே அய்வாத... நம்ப ஏசன்ட்டு கைல சொல்லி... வெளிய இட்டாந்துர்லாம்மேன்னு சொல்லி... அப்பால... ஏசன்ட்டு கைல மேட்டர அவுத்து வுட்டு... பக்கிரிய ரிலீசு பண்ணிக்றதுக்குள்ள ரெம்பப் பேஜாராப் பூடிச்சிபா...”

“மெய்யாலுமே பேஜாராத்தான் கீதுபா...”

“கேளு வாத்யாரே... நாட்டு நெலவரம் ரெம்ப டரியலாக்கீது... நீ காண்டி உசாரா கடிய மூடிக்லேன்னா... அப்பால அம்பேல்தாம்பா... எலிக்சன் முட்ஞ்சி... ரிசல்ட்டு வுடங்காட்டியும் கடிய தொர்க்காதே வாத்யாரே...
ன்னு கண்டிசனா சொல்லிக்கினான் அண்த்தே...”

“ஓகோ... பொறவு நீ என்னலே பண்ண...?”

“நானும்... சர்தாம்பா... நமக்கு இன்னாத்துக்கு வம்பு...? ன்னு கடிய மூடிக்கினு வூட்டாண்ட குந்திக்கினேன் அண்த்தே...”

“சர்தாம்லே... பொறவு என்னலே ஆச்சு...?”

“அப்பால… ரெண்டு நா மின்னாடி.... டகால்னு வந்துக்கின துலுக்காணம்... வாத்யாரே... வாத்யாரே... இந்தா மேரி ரிசல்ட்டு வுட்டுட்டான் வாத்யாரே... ன்னு குஜாலா சொல்லிக்கினான் அண்த்தே... நானும் அவனாண்ட... சர்தாம்பா... ஒம் மச்சான் இன்னா ஆனான்...? னு கேட்டுன்னேன் அண்த்தே... அத்துக்கு அவன் இன்னான்றான்... வாத்யாரே... நம்ப மச்சான் சோக்காக் கெலிச்சுக்கினான்... அல்லாம் தவுசண்டுக்கு மேல ஏகிறிடிச்சுபா... ன்னு சொல்லி ஜூட் வுட்டுக்கினான் அண்த்தே... நானும்... சர்தாம்பா... அத்தான் அல்லாம் முட்ஞ்சிபோச்சேன்னு சொல்லி... கடிய தொர்ந்க்கினேன் அண்த்தே...”

“அதாம் கடையத் தொறந்துட்டல்ல... பொறவு என்னலே... பெனாத்திட்டுக் கெடக்கே...?”

“கேளு அண்த்தே... கடியாண்ட குந்திக்கினுகீறேன்... நம்ப கபாலி இல்ல கபாலி...? அந்தக் கசுமாலம் இன்னாடானாக்க... நாலு பேர கூட இஸ்துக்கினு வந்து...
இன்னான்றான்... இன்னா வாத்யாரே... ரிசல்ட்டு போடங்காட்டியும் கடிய தொர்ந்து வச்சிக்கினுகீற... கடிய அட்ச்சி ஒடிக்க சொல்லி தலிவர் சொல்லிக்கினாரு... நீ இன்னான்ற...?

“இன்னாபா சொல்லிக்ற...? நேத்திக்கே ரிசல்ட் வுட்டானாமே...?”

“எந்த பேமானி சொல்லிக்கினான்...?”

“நம்ப துலுக்காணந்தான் சொல்லிக்கினான்... அவன் மச்சான் கூட கெலிச்சுக்கினானாமே...?”

“அட சோமாரி... அத்து எலிக்சன் ரிசல்ட்டு இல்லபா... பிளஸ் டூ ரிசல்ட்டுபா...”

“இன்னாபா... சொல்லிக்கிற...? அப்ப அவன் மச்சான் கெலிச்சது...?”

“அட கசுமாலம்... எலிக்சன்ல நின்னுக்கினது அவன் மூத்த சம்சார வகையில மச்சாம்பா... ன்னு சொல்லி... காதக் கொண்டா வாத்யாரே... ன்னு எங் காதாண்ட குசுகுசுன்னு... பிளஸ் டூ ல கெலிச்சிக்கினது... அவனோட கடிசி செட்டப்பு வகையில மச்சாம்பா...ன்னு சொல்லி... கடிசில இன்னான்றான்...

“சர்தாம்பா... நீ நம்பாளா போய்க்கின... நா ஒன்னு சொல்றேன் கேளு... நா... ஓங்கடிய அட்ச்சி ஒட்ச்சா... ஒன்க்கும் புரோசனமில்ல... என்க்கும் புரோசனமில்ல... அத்துனால... நீ இன்னா பண்ணு... நம்ப கைல கொஞ்சமா மாலு வெட்டு... நா ஒன்னிய அடிக்றா மேரி அடிக்றேன்... நீயும் அய்வுறாமேரி அய்வு... அல்லாம் சர்யாபூடும்... இன்னான்றே நீ...?ன்னு கேட்டுக்கினான் அண்த்தே...”

“அடப் படுக்காளிப் பயலுவலா... என்னலே சொல்லுத...?”

“கேளு அண்த்தே... நானும் ரோசன பண்ணிப் பாக்க சொல்லோ... சர்தாம்பா... கடிய லாசு பண்ணிக்காமே... கபாலி கைல மாலு வெட்டி எஸ்கேப்பு ஆய்க்லாம்னு நென்ச்சி... அவன் கைல கொஞ்சம் மாலு வெட்டி... கடிய காவுந்து பண்ணிக்கினேன் அண்த்தே...” ன்னு நா சொல்லி மிடிக்க...

நம்பளே ஏற எறங்க லுக்கு வுட்ட அண்ணாச்சி...

“அடக் கோட்டிக்காரப் பயலே... என்னாலே நீ இம்புட்டு லூசா இருக்கே...? எலக்சன் டைம்ல கவுர்மண்டு ஆபீசுலதாம்லே எல்லா சோலியையும் நிப்பாட்டி வைப்பாம்... ஏ... ஒனக்கென்னலே வந்திச்சு...? பதிவுகளப் போட்டு
ட்டு போய்ட்டே இருப்பியா... அத விட்டுட்டு... எலக்சன் முடியிற வர பதிவு போடாம இருப்பேம்னு... இப்புடி மோசம் போயிட்டியேலே...” ன்றாரு...!

“ஏலே மக்கா... நா இன்னாத்தச் சொல்ல...? இத்து ரெம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல கீது...?!”


ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஓட்டா...? துட்டா...? நோட்டா...?



ஓங் கட்ச்சில இன்னான்றான்...
“ஓட்டுக்கு நோட்டுடா பேமானி” ன்றான்...!

எங் கட்ச்சில இன்னான்றான்... 
“ஓட்டுக்கு துட்டுடா சோமாரி” ன்றான்...!

எலிக்சன் கமிசன் இன்னான்றான்...
“ஓட்டுக்கு துட்டா...? 

அல்லாம் கெடியாது...
ஒயுங்கா போடுநீ ஓட்ட”
ன்றான்...!


புச்சாக்கீற பார்ட்டி இன்னான்றான்...


“பாலிடிக்ஸ் பார்ட்டிலாம் வுட்றாம்பாரு பீலா
நம்பிட்டேன்னா அப்பாலநீ நொந்துருவ நூலா...
நல்லா நீயும் நென்ச்சுப்பார்றா மொள்ளமாறி
நோட்டுக்கு ஓட்டுமில்ல... ஓட்டுக்கு நோட்டுமில்ல...

ப்ரீயா வெட்டிருவான் பிச்சாத்து மாலு
நெரியா அட்ச்சுருவான் அப்பாலநீ பாரு...
ஒயுங்கா நீயும் ஒர்சிப்பார்றா முடிச்சுமாறி
ஓட்டுக்கு துட்டுமில்ல... துட்டுக்கு ஒட்டுமில்ல...

கடிசீல கேட்டுப் போடா கேப்மாறி
நோட்டாதான் ஓட்டு... ஓட்டுதான் நோட்டா
ன்றான்...!
 

விடிய விடிய கேட்டுக்கினு
உசார் பக்கிரி இன்னான்றான்...
நோட்டா காண்டி போடுன்றேநீ

நோட்டில்லாது எப்டீ...?” ன்றான்...!

மெய்யாலுமே அண்ணாத்தே
கிர்ர்ருங்கிது அல்லாமே...!


“கவுருமண்டு தண்ணி” மேறி
ஒன்னியும் இங்க பிர்ல மாமே...?!




செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 8

ல்கோனாவக் கண்டுபுடிச்ச சந்தோசத்துல நேரம் போனதே தெரியல. நாயித்துக்கெழம மத்தியானம் முடிஞ்சுபோச்சு. ஆட்டம்பாட்டம்லாம் முடிஞ்சு பேரப்புள்ள ஊருக்குக் கெளம்பத் தயாராய்ட்டான். மக வீட்டார அனுப்பிட்டு வரலாம்ன்னு பெரியபட்டிக்குக் கெளம்புனாரு பலவேசம்.


வழக்கம்போல, பேரனக் கொஞ்சி, புள்ள குட்டிகள அனுப்பி வச்சுட்டு, அவுக போன தெசயவே கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டு நின்னவரு, சரி... வீட்டுக்குக் கெளம்பலாம்னு திரும்புறாரு... மூட்ட முடிச்சத் தூக்கிக்கிட்டு எதுக்க வருதுகைய்யா சின்னப்பாண்டி குடும்பம்.

சின்னப்பாண்டியப் பாத்ததும், ஏதோ சேக்காளியப் பாக்குற சின்னப் பய மாறி சந்தோசமா ஓடுனாரு அவங்கிட்ட.

“எலே சின்னப்பாண்டி... வல்கோனான்னா என்னான்னு கேட்டீல... அப்புடின்னா என்னான்னு தெரியுமாடா...?” ன்னாரு சந்தோசமா...

வாத்தியாரப் பாத்ததும் சந்தோசப்படுறதுக்குப் பதிலா அழுக வந்துருச்சு சின்னப் பாண்டிக்கு. துக்கம் தொண்டைய அடைக்க, கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு நிக்கிது...

“மொதல்ல அது வல்கோனா இல்லடா... அதுக்கு பேரு வல்கனோடா... அப்புடீன்னா எரிமலைன்னு அர்த்தம்டா... அதாண்டா... நம்ப சமூக அறிவியல் பாடத்துல கூட இருக்குல்லடா... அதாண்டா அது...” ன்னு உற்சாகமா சொல்லி வர்றாரு.

நாயமாப் பாத்தாக்க, இதக் கேட்டதும் துள்ளிக் குதிக்க வேண்டிய பய கேவிக் கேவி அழுவுறான்...

பக்குன்னு போச்சு பலவேசத்துக்கு...

“எலே... என்னடா ஆச்சு... ஏண்டா அழுவுற...?” ங்கிறாரு பதட்டத்தோட...

“சார்...” ன்னு சொன்னவனுக்கு அதுக்கு மேல வார்த்த வர்ல... மனச உருக்குற பாரத்த வெளிய உருவிப் போட்டு அழுவுறான் பய.

பலவேசத்துக்கா ஒன்னும் புரியல... கொழப்பமா பாக்குறாரு அவுக அப்பா அம்மாவ... பய அழுவுறதப் பாத்து, தாம்பங்குக்கும் மூக்கச் சிந்துது அவுக அம்மா... இதென்னடா இம்சையா இருக்குன்னு சங்கட்டமா நெளியிறான் அப்பங்காரன்.

“என்னடா ஆச்சு... சொல்லிட்டு அழுவுடா...” ன்னு அதட்டாலாக் கேக்குறாரு பலவேசம்.

“சார்... அது வந்து சார்... ஊருக்குப் போறோம் சார்...” ன்னு தெணறித் தெணறிச் சொல்லுறான் பய...

“ஊருக்குத்தாண்டா போற.... அதுக்கு எதுக்குடா அழுவுற...?”

“இல்ல சார்... ஊர விட்டே போறோம் சார்...” ன்னு சொல்லிட்டு கேவிக் கேவி அழுவுறான்...

அதுந்து போயிட்டாரு பலவேசம்... “என்னது...? ஊர விட்டுப் போறீங்களா...?”

அதுக்கு மேல ஒன்னும் பேச முடியல சின்னப்பாண்டியால... அழுதுக்கிட்டே அம்மாக்காரியப் பாக்குறான்...

“என்னாத்த சொல்றது...” ன்னு புருசங்காரனைப் பாக்குறா அவ..

“யாராவது சொல்லித் தொலைங்களே...” ங்கிறாரு காட்டமான பலவேசம்...

“இல்லைய்யா... வேலை வெட்டி கெடைக்காம... காவயித்துக் கஞ்சிக்கு வழியில்லாம... இந்த ஊருல இருக்குறதக் காட்டியும்... பேசாம வெளியூருக்குப் போயி... எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்னு... இந்த மனுசன்... வம்படியாக் கூட்டிக்கிட்டு போவுதுங்க...” ன்னு பொத்தி வச்ச சோகத்த பொங்கிப்புட்டா ஆத்தாக் காரி...

இடி விழுந்த மாறி இருந்துச்சு அவருக்கு.... வாயடச்சுப் போனவரு ஏறெடுத்துப் பாக்குறாரு அப்பங்காரன...

“ஆமங்கைய்யா... ஒங்களுக்கே தெரியும்... சுத்து வட்டாரத்துல சேந்தாப்புடி வேலை கெடைக்க மாட்டேங்கிது... புள்ள குட்டிகள வச்சுக்கிட்டு ரொம்பச் செரமமா இருக்கு... அதான்... ஆந்துராவுல முறுக்குக் கம்பேனில வேலைக்குப் போலாம்னு போறோம்யா... என்ன பண்றது...?” ன்னு சொன்னான் ஆத்தமாட்டாம...

“அப்ப... சின்னப்பாண்டியோட படிப்பு...?” ன்னு மனசுக்குள்ள மின்னல் மாறி வெட்டுது கேள்வி...

வல்கோனா விசயத்த சந்தோசமா சொல்லலாம்னு வந்தவருக்கு... வாழ்க்கையோட வலிய சொல்லாமப் புரியவச்சுப்புட்டான் சின்னப்பாண்டி...

என்ன சொல்றதுன்னே தெரியாம... பரிதாபமா பாத்தாரு சின்னப்பாண்டிய...

“நானும் முறுக்குக் கம்பேனில வேலை செய்யணும்னு அப்பா சொல்றார் சார்... ஏன் சார்... அந்த வேலை ஈசியா இருக்குமா சார்...? அந்த ஊருல பள்ளிக்கூடம்லாம் இருக்குமா சார்...? நான் வேலை பாத்துக்கிட்டே படிக்க முடியுமா சார்...? எங்க வீட்டுல படிக்க அனுப்புவாகளா சார்...?” ன்னு ஏக்கத்தோட கேக்குறான் அடுக்கடுக்கா கேள்விகள...

நெஞ்சுக் கூடு வெந்து போச்சு பலவேசத்துக்கு... ஆயிரம் ஈட்டியக் கொண்டு ஈரக்கொலையில குத்துறமாறி இருக்கு... புத்தகப் பைய கைல இறுக்கிப் புடிச்சுக்கிட்டு, திக்கத்து நிக்கிறவனப் பாக்குறாரு... ஒரு கணம்... அவரோட பேரனைப் பாக்குறா மாறியே இருக்கு...

“ஏன் சார்... நான் அங்க போயிட்டா... யாருக்கிட்ட சார் சந்தேகம்லாம் கேப்பேன்... ஒங்கள மாறி சொல்லித்தர எனக்குன்னு அங்க யாரு சார் இருக்கா...?” ன்னு அவன் கேட்டதுதான் தாமசம்... “படீர்...” ன்னு ஒரு நரம்பு அந்துபோச்சு அவரு இருதயத்துல...

அப்புடியே மடங்கி விழுந்து... சின்னப்பாண்டியக் கட்டி அணைச்சுக்கிட்டாரு பலவேசம்...

பொழுசாய கூட்டுக்குத் திரும்புற காக்கா குருவில்லாம் இந்தக் கூத்தப் பாத்து கதறிக்கிட்டே போவுதுக...!

காப்பருச்சை விடுமுறை மாறி சுருக்கா கழிஞ்சு போச்சு ஆறு மாசம்... பலவேசம் வாழ்க்கைதான் எப்புடி மாறிப்போச்சு...? காலங்காலமா கடைபுடிச்சு வந்த கரட்டுப்பட்டி கல்விக் கொள்கையை தலையச் சுத்தித் தூக்கிப் போட்டுட்டு...  “எந்தெந்த வகையில எப்புடில்லாஞ் சொல்லிக் குடுக்கலாம்...” ன்னு எப்பயும் யோசிச்சுக்கிட்டே இருக்கு மனசு... இப்பல்லாம் அவரு, பசங்களுக்கு வெறும் பாடம் மட்டும் சொல்லிக்குடுக்குறது இல்ல, பொது அறிவையும் சேத்தே சொல்லிக்குடுக்குறாரு. பொது அறிவு சம்பந்தப் பட்ட விசயங்கள்லாம் தேடித் தேடி தானும் படிக்கிறாரு.

மனசு நெறஞ்சு கெடக்கு... இப்பத்தான் புதுசா வாத்தியாரு வேலைக்கு வந்தாமாறி இருக்கு. இன்னும் நெறைய வருசத்துக்கு பசங்களுக்கு சொல்லிக் குடுக்கனும்னு ஆசை ஆசையா இருக்கு.

அதுமட்டுமில்லாம, கரட்டுப்பட்டி பள்ளிக்கூடத்தையே தலைகீழா மாத்திப்புட்டாரு பலவேசம். ஊருல இருக்க எல்லாப் புள்ளைகளையும் கண்டிப்பா பள்ளிக்கூடத்துல சேக்கனும்னு, ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டி உத்திரவு போடவச்சிட்டாரு.

பெரிய உத்தியோகத்துல இருக்க மருமகப்புள்ளய வச்சு, பஞ்சுமில்லு நிர்வாகத்துல பேசி, வேலைக்கிப் போன சின்னப் புள்ளைங்கள எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு வரவச்சிட்டாரு. சுத்துவட்டாரத்துல இருக்க தொழிற்சாலைகள்ல பேசி, கரட்டுப்பட்டி ஆளுகளுக்கு வேலைவாங்கிக் குடுத்துட்டாரு. மகளிர் சுயஉதவிக் குழு மூலமா ஊருல இருந்த பெண்டுகளுக்கு சுயதொழில் கத்துக்க ஏற்பாடு பண்ணிட்டாரு. இதுக்கப்புறமா, எந்த ஒரு குடும்பமும், கொத்தடிமையா வெளியூருக்கு வேலைக்குப் போகாத அளவுக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. ஏற்கனவே, கொந்தடிமையா போனவுகள, மீட்டுக் கொண்டுவர மாவட்ட ஆட்சியரு மூலமா ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.

“ஒரு சாதாரண பள்ளிக்கூட வாத்தியாரான நம்பளால இவ்ளோ தூரம் செய்ய முடியுதா...?” ன்னு அவருக்கே ஆச்சிரியமா இருக்கு. எங்கருந்து தனக்கு இவ்ளோ பலம் வந்துச்சுன்னு இன்னைய வரைக்கும் அவருக்கு புடிபடல. சத்தமில்லாம ஒரு பெரிய புரட்சி பண்ணினவர, சமுதாயமும் இப்பத் திருப்பிப் பாக்குது. தடங்கலாயிப் போன “தேசிய நல்லாசிரியர் விருது” தானா வந்துருச்சு அவரத் தேடி...!

இவ்ளோக்கும் காரணம்...?

“சின்னப்பாண்டி கேட்ட கேள்வியும்... அவரோட தேடலுந்தான்...” னும் சொன்னா அது நெசமில்லாம வேறெயா இருக்குமா என்ன?

அப்ப... சின்னப்பாண்டி....?

அவங்கேட்ட அந்த ஒரு கேள்விதான்... அவன் வாழ்க்கைய எப்புடி தலைகீழா திருப்பிப் போட்டுருச்சு..?!!!

புது எடம்... முன்ன இருந்ததுக்கும் இப்பைக்கும் எவ்ளோ வித்தியாசம்...?!!!

இருக்க ஒரு நல்ல எடம்... நல்ல சோறு... நல்ல துணிமணிக... இத்தனைக்கும் மேல... இந்தா... பலவேசம் வாத்தியாரு கூடவே பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வர்ற பாக்கியம்...! புதுப்புது புத்தகங்க...! பலவேசம் வாத்தியாரு பேரப்புள்ளகூட சிநேகிதம்...!

“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...? இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம் போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு முன்ன நெனச்சுப் பாத்துருக்கானே... அதே மாறில்ல இப்ப ஒன்னொன்னா நடந்துக்கிட்டு இருக்கு...?!!!

“எங்கயோ ஆந்துராவுல... ஒரு முறுக்குக் கம்பேனில... படிக்கணுங்கிற ஏக்கத்த மனசுல சொமந்துக்கிட்டு... அடுப்புல வெந்து... அடிபட்டு... மிதிபட்ட ரணத்த ஒடம்புல சொமந்துக்கிட்டு... ஒரு நடபொணமா இருந்துருக்க வேண்டிய பய... இப்புடி பவுசா இருக்கமே...? இது கனாவா... இல்ல நெசமா...?” ஒன்னும் புடிபடல சின்னப்பாண்டிக்கு...!

இந்தா... அவுக அம்மா...

ஆசுமாவுக்கு சிகிச்சை எடுத்துக்கிது நல்ல மருத்துவமனையில...

“மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்...” ன்னு எம்புட்டு ஆசப்பட்டுச்சு... இப்ப... அதுக்குத்தான் எம்புட்டு சந்தோசம்...!!!

இந்தா... அவுக அப்பா...

“இக்கரைக்கு அக்கரை பச்சை ங்கிற கணக்கா...  இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்...” ன்னு தவதாயப் பட்ட மனுசன்...

இப்ப... இந்தா... “மாடென்ன கண்ணென்ன... தொட்டமென்ன தொரவென்ன... வெள்ளாமயென்ன வெளச்சலென்னா...” ன்னு மூத்தபுள்ளைய கூட வச்சுக்கிட்டு... எம்புட்டு உற்சாகமா... வேல பாத்துக்கிட்டு இருக்காரு...!!!

ஆமா... பின்ன... பெரியபட்டியில... பண்ணையாளு பெரியசாமிக்குப் பதிலா... இப்ப பலவேசத்தோட பண்ணையத்தப் பாத்துக்குறது இவுகதான...?!!!

இந்தா... ஆடிமாசக் காத்துல அடிச்சுக்கிட்டுப் போற தூசிக மாறி... அடுத்த அஞ்சு வருசமும் ஓடிப்போச்சு...!

நடந்து முடிஞ்ச பத்தாப்புப் பரிச்சையில... “மாநிலத்துலையே மொத மதிப்பெண் வாங்கி... பெரியபட்டி பள்ளிக்கூடத்துக்கே பெருமை சேத்துருக்கான்...” ன்னு எல்லாரும் பாராட்டிக்கிட்டு இருக்காகளே... அது யாருன்னு நெனைக்கிறீக...? வேற யாரு...? நம்ப... சின்னப்பாண்டி தான்...!!!


குடைச்சல் முற்றும்...


சனி, 22 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 7

விடிய்ய... பேரப்புள்ள சகிதமா மக வீட்டுலேர்ந்து வந்துட்டாக. அவுகளப் பாத்ததும் தன்னோட பிரச்சனைகள மறந்து அவுகளோட அளாவளாவி குதுகலாமா இருந்தாரு பலவேசம்.

கொஞ்ச நேரந்தான்... அதுக்கு மேல அவரால முடியல... அடிக்கடி “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார வந்து கொடைஞ்சுக்கிட்டே இருந்துச்சு.


அன்னைக்கிப் பூராம் இப்புடித்தான் மந்திரிச்சு விட்ட கோழி கணக்கா இருந்தாரு பலவேசம்.

“என்னம்மா ஆச்சு அப்பாவுக்கு... ஒரு மாதிரியாவே இருக்காரு... ஒடம்பு கிடம்பு சரியில்லையா என்ன...?” ன்னு அவரு மக விசாரிக்கிற அளவுக்கு ஆயிப்போச்சு.

“அடி.. அத ஏண்டி கேக்குற...? நேத்து பொழுசாய பள்ளிக்கூடத்துலருந்து வந்ததுலருந்தே இப்புடித்தான் இருக்காரு... நம்ப பண்ணையாளு பெரியசாமி விட்டுட்டுப் போறத நெனச்சு மருகிக்கிட்டு கெடக்குறாரு போல... பாவம்... ரொம்பக் காலமா நம்ப காலடிய நத்திக்கிட்டு இருந்த மனுசன், இப்பத் திடீர்னு போறேன்னு சொல்லவும் ரொம்ப மனசொடஞ்சு போயிட்டாருன்னு நெனைக்கிறேன்... நீ ஏதும் கேட்டுக் கீட்டு வச்சுராத... என்ன...?” ன்னு பதிலச் சொல்லிப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு அந்தம்மா.

“அடுத்து என்ன செய்யிறது...” ன்னு ஒரே யோசனையில இருந்தாரு பலவேசம். எப்பயும் அக்கா வீட்டோட வர்ற அவரோட மகங்காரன், அன்னைக்கின்னு பாத்து, ஏதோ வேற வேல இருக்குன்னு மட்டம் போட்டுட்டான். ஒரு வேளை அவன் வந்திருந்தா, அவங்கிட்ட கம்ப்யூட்டர் கிளாசு பத்திப் பேச்சுக் குடுத்து, எப்புடியாவது இந்த விசயத்த நாசூக்காக் கேட்டுப் பாக்கலாம்னு நெனச்சு வச்சுருந்தாரு. அதுக்கும் வழியில்லாமப் போச்சு.

தீராத மனக் கொழப்பத்துல இருந்தவரு, சனிக்கெழமை ராவும், மொட்ட மாடில படுத்து இருட்டப் பாத்து மொறச்சுக்கிட்டுருந்தாரு.

அவரோட மனக்குமுறல எட்டிப்பாத்துக்கிட்டுருந்த நட்சத்திரங்க சொன்ன வாக்குமூலத்த பரிசீலிச்சோ என்னமோ, நாயித்துக்கெழமப் பொழுது அவரோட பிரச்சனைக்குண்டான ஒரு தீர்வோடையே விடிஞ்சிச்சு, அவரு பேரன் வடிவுல.

மத்தியானச் சாப்பாட்டுக்கு அப்பறமா, வீட்டுக்கு முன்னாடி இருக்க வேப்பமரத்தடில, ஊஞ்சல் கட்டி, பேரப் புள்ளையோட வெளாடிக்கிட்டு இருக்கப்ப, திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ளார பொகைய ஆரம்பிச்சுருச்சு.

“சரி... பேசாம... பேரங்கிட்ட கேட்டுப் பாத்துரலாமா...? ஆமா... அதாஞ்சரி... இதுல ஒன்னும் பெரிய மானக்கேடு வந்துராது... அப்புடியே வந்தாலுந்தான் என்ன...? எல்லாம் நம்ப பேரந்தான...” ன்னு ஒரு துணிவு வந்துச்சு. இந்தவாட்டி ரொம்ப நேர்த்தியா காயை நவத்துனாரு பலவேசம். அவரோட அனுபவ அறிவ மட்டும் தொணைக்கி வச்சுக்கிட்டு அஞ்சாப்பு படிக்கிற பேரன மடக்குனாரு.

ஊஞ்சல்ல பேரன ஆட்டிவிட்டுக்கிட்டே... “தாத்தா ஒரு கேள்வி கேப்பனாம்... நீ அதுக்குப் பதில் சொல்லுவியாம்...”

“சரி... கேளுங்க தாத்தா...”

“நீ இங்கிலீஷ் மீடியம்லாம் படிக்கிறல்ல...? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு பாப்பம்...?”

“என்ன கேள்வி?”

வல்கோனான்னா என்ன?”

“வல்கோனாவா? அப்புடீன்னு ஒன்னு இருக்கா என்ன...?”

“ஏய்... நல்லா யோசிச்சுப் பார்றா... ஒன்னோட பாடப் புத்தகத்துல கூட வருமே...?”

“ம்ம்ம்...” பலமா யோசிச்சான் பய. பலவேசத்துக்கு நெருப்பு மேல நிக்கிற மாறி இருந்துச்சு. “தெரியாதுன்னு சொல்லிருவானோ...? அப்புடிச் சொல்லிட்டா என்ன செய்யிறது...? எப்புடியாவுது சரியான பதிலச் சொல்லிட்டான்னாக்க நல்லாருக்கும்...” ன்னு அடிச்சுக்கிச்சு மனசு.

“ம்... தாத்தா... வல்கனோன்னு  தான் நான் படிச்சிருக்கேன்... நீங்க கேக்கிற மாதிரி வல்கோனான்னு ஒன்னும் இல்லையே... ஒரு வேளை... நீங்க வல்கனோவைத்தான் அப்புடிக் கேக்குறீங்களோ...?” வெவரமா ஒரு பதிலு கேள்வியப் போட்டான் பய.

“ஆகா... ஒரு வேளை வல்கனோவைத்தான் சின்னப்பாண்டி வல்கோனான்னு கேட்ருப்பானோ...?” கொழம்பிப் போயிட்டாரு பலவேசம்.

“பேரஞ் சொல்றத வச்சுப் பாக்குறப்போ... புத்தகத்துல போட்ருக்றது சரியாத்தான் இருக்கும்... பையந்தான் தப்பாக் கேட்ருக்கணும்...” ங்கிற அனுமானத்துக்கு வந்தாரு.

இம்புட்டுத் தூரம் தான் தேடிக்கிட்ருந்த அந்த வார்த்தையும் புத்தகத்துல இருக்க இந்த வார்த்தையும் ஒன்னாத்தான் இருக்கணும்ன்னு அவரோட உள்மனசு சொல்லுச்சு.

“எப்புடியோ புத்தகத்துல அந்த வல்கோனா இருக்குங்கிற வரைக்கும் கண்டு புடிச்சாச்சு...இனிமே வல்கனோன்னா என்னான்னு கண்டுபிடிச்சாவனும்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “ம்... ஆமாடா... அதத்தான் கேட்டேன்...” னாரு ரொம்ப ஆவலா...

“என்ன தாத்தா... கேள்வியே ஒழுங்காக் கேக்கத் தெரியலை உங்களுக்கு...?” ன்னு எளக்காரமா சிரிச்சான் பேரன்.

“எல்லாம் எனக்குத் தெரியும்டா... ஒனக்குத் தெரியுமான்னு தான் கேட்டேன்...” விடாக்கண்டன் மாறி வெனயமாக் கேட்டாரு தத்தா.

“அதான் ஒங்களுக்குத் தெரியும்ல...? அப்பறம் ஏன் எங்கிட்டே கேக்குறீங்க...?”  கொடாக்கண்டன் மாறி கொக்கியப் போட்டான் பேரன்.

“அடடா...மொதலுக்கே மோசமாயிருச்சே...? என்னடா இது...? இவ்ளோ தூரம் வந்தாச்சு... இப்ப வந்து மொரண்டு புடிக்கிறானே...?” ன்னு பதறிப்போனாரு பலவேசம்.

தன்னோட முயற்சியில கிஞ்சித்தும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாறி, “பரவால்லடா. நீ எப்புடிப் படிக்கிறேன்னு தாத்தா தெரிஞ்சிக்க வேணாமா...? அதான் கேட்டேன்... எங்கே சொல்லு பாப்போம்...?” ன்னு  பக்குவமாத் தூண்டியப் போட்டாரு...

“வல்கனோன்னா... எரிமலை... தாத்தா...” ன்னு பெருமிதமா சொன்ன பேரன், அந்த வார்த்தையைப் பத்துன ஒரு சிறு குறிப்பையே அவருக்கிட்ட வரைஞ்சுபுட்டான்.

கடசீல மீனு சிக்கிருச்சுனே நம்பிட்டாரு பலவேசம். தமிழ்வழி சமூக அறிவியல்ல எரிமலையப் பத்துன பாடம் இருக்கிறதையும், பேரப் புள்ள சொன்ன பதிலோட அது ஒத்துப் போறதையும் வச்சு, தன்னோட கேள்விக்கி பதிலு இதாத்தான் இருக்குங்கிற முடிவுக்கு வந்து, “ப்பூ... இம்புட்டுத்தானா விசயம்...? இது தெரியாமத்தான் நாம இவ்ளோ சிரமப்பட்டமா...?” ன்னு தன்னத்தானே நொந்துக்கிட்டாரு.

உண்மைலேயே, “வல்கனோ” (எரிமலை) ங்கிறதத்தான் சின்னப்பாண்டி அவருக்கிட்ட கேள்வியாக் கேட்டுருக்கான். பாவம், அவன் அறிவோட நீள அகலம்லாம் “கல்கோனா” முட்டாயி வரைக்குந்தான் பரந்து விரிஞ்சுருக்கு. அதுனாலதான் “வல்கனோ” ங்கிற வார்த்தை அவனுக்கு “வல்கோனா” வாத் திரிஞ்சுபோச்சு.

இந்த வெவகாரம் தெரியாத பலவேசம், மேற்படி “வல்கோனா” வத் தேடி வலைய வீசியிருக்காரு பாவம். “எரிமலை” ங்கிற தமிழ்ப்பதம் அவருக்குத் தெரியும். ஆனா, அதுகுக்குண்டான ஆங்கிலப் பதந்தான் அவருக்குத் தெரிஞ்சிருக்கல. அதுனாலதான் இத்தனை கூத்தும் கொழப்பமும்.

“காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்ச...” ங்கிற மாறி, ஆட்டோ ஒர்க்சாப்பு பேர்ப்பலகையில “இங்கு வல்கனைசிங் செய்து தரப்படும்...” ன்னு போட்ருக்கிறதப் பாத்து அங்கலாம்  போயி விசரிச்சுருக்காரு.

“ச்சே... இதக் கண்டு பிடிக்கவா இவ்ளோ மெனக்கெட்டோம்? கேவலம் ஆட்டோ ஒர்க்சாப்புல போய்த்  தேடிப் பாத்துருக்கோமே...?” ன்னு நெனைக்கிறப்ப அவரோட அறியாமைய நெனச்சு வெக்கமா இருந்துச்சு அவருக்கு... அதே நேரம் அந்த வார்த்தைக்கி  “புசுவாண” த்தை ஒப்பாச் சொன்ன சின்னப்பாண்டிய நெனச்சா சிரிப்பாவும் இருந்துச்சு.

“ஏதோ இந்தளவுக்குப் பரவால்ல... பொண்டாடிக்கிட்டயோ... மகங்கிட்டயோ... இல்ல ஆட்டோ ஒர்க்சாப்புக்  காரங்கிட்டயோ... போவ இருந்த மானத்தை... நம்ம பேரப்புள்ள காப்பாத்திப்புட்டான்...” ன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டாரு.

மனச அரிச்சுக்கிட்டுருந்த கேள்விக்கு வெடை கெடைச்ச சந்தோசத்துல அப்புடியே பேரனைத் தூக்கி, உச்சிமோந்து, ஆனந்தக் கூத்தாடுனாரு பலவேசம்.

“நம்ப சரியாப் பதிலு சொன்னதுனாலதான் தாத்தா நம்பளக் கொண்டாடுறாரு...” ன்னு நெனச்சு பூரிச்சுப் போயிட்டான் பேரன்.

தன்னோட தன்மானத்துக்கு இழுக்கு வராம, விசயத்தக் கண்டுபுடிச்ச தன்னோட தெறமைய நெனச்சுத் தனக்குதானே ஒரு பக்கம் மெச்சிக்கிட்டாலும், “ஏதோ பேரனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறதுனால அவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சு இருக்கு... அந்த மாறி ஒரு வசதி வாய்ப்பு, பாவம் பட்டிக்காட்டுப் பசங்களுக்கு இல்லையே...? அவிங்களோட அறிவுப் பசியை எப்புடித் தீத்து வைக்கப்போறோமோ...?” ன்னு  நெனைக்கையில அவருக்கு நெஞ்சு கணத்துப்போச்சு.

எது எப்புடியோ... ஒருவழியா... வல்கோனாவை கண்டுபுடிச்ச சந்தோசம் அவரு மனசுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா எறங்கிக்கிட்டு இருக்க, “மொதல்ல இத சின்னப்பாண்டிக்கிட்ட சொல்லிரணும்...” ன்னு அவரு நெனச்ச அதே நேரம்...


இந்த வல்கோனாவை உண்மையிலேயே தெரிஞ்சிக்க ஆசைப்பட்ட சின்னப்பாண்டியோ... அவுக அப்பா அம்மா தலையில சொமக்குற பாரத்த... தன்னோட நெஞ்சுல சொமந்துக்கிட்டு... கொத்தடிம வேலை செய்ய... குடும்பத்தோட ஆந்திராவுக்கு வண்டி ஏறுறதுக்காண்டி... பெரியபட்டி பிரிவைப் பாத்து போய்க்கிட்டு இருக்கான்...!



பின் குறிப்பு:- "குடைச்சல் முற்றும்..." ன்னு இந்தச் சோக முடிவோட முடிச்சுக்கலாம்ன்னுதான் நான் ஏற்கனவே முடிவு பண்ணிருந்தேன்... ஆனா... இதையே தொடர்ந்து... "சின்னப்பாண்டியின்  கதி என்ன ஆனது...?" ங்கிறத,  ஒரு மகிழ்வான முடிவோட அடுத்த பதிவுல முடிக்கலாமான்னு யோசிக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...?


சனி, 15 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 6

ரும்பலகைகளுக்குக் கரி பூசச் சொன்ன வாத்தியாரு, எதோ புத்தகத்த பாத்துக்கிட்டு இருக்காரு. “நம்ம கேட்ட கேள்விக்கு பதிலு சொல்லுவாரா...? மாட்டாரா...?” ன்னு மருகிக் கெடந்தான் சின்னப்பாண்டி.

நேரம் ஆக ஆக அவனுக்கு இருப்புக் கொள்ளல. “பேசாம வாத்தியாருக்கிட்ட போயி திரும்பியும் கேக்கலாமா...?” ன்னு கூடத் தோனிச்சு. இருந்தாலும், பயமா இருக்குறதுனால கேக்காமயே விட்டுட்டான். பொழுசாய பள்ளிக்கூடமும் முடிஞ்சு போச்சு... வாத்தியாரும் ஒன்னுமே சொல்லாமப் போயிட்டாரு... இப்ப என்ன பண்றதுன்னே அவனுக்குத் தெரியல. ஒரு வேளை திங்கக்கெழம சொன்னாலும் சொல்லிருவாருன்னு மசனத் தேத்திக்கிட்டான் பய.


“நம்பளும் நமக்குத் தெரிஞ்ச வழியிலல்லாம் தேடிப் பாத்துட்டோம்... ம்ம்ம்... இப்ப என்ன பண்றது...?” ன்னு ஓடுது மண்டைக்குள்ளாற... அப்பத்தான்... அவனுக்கு ஒரு புது யோசனை தோனுச்சு. “நம்பளும் பேசாம அந்த பொது அறிவுக் களஞ்சியப் புத்தகத்த வாங்கிட்டா என்ன...? ஆமா... அதாஞ் சரி... வீட்டுக்குப் போனதும் மொத வேலையா... அப்பாகிட்ட சொல்லி அந்த புத்தகத்த வாங்கித் தரச்சொல்லிற வேண்டியதுதான்...” ன்னு வேகமா நடையக் கட்டினான் வீட்டப் பாத்து.

வீட்டு நெலவரம் வேறமாறி இருந்துச்சு. போன தடவ ஆரம்பிச்ச சண்ட, வேற வேற வடிவத்துல தெனந்தெனம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அவுக அப்பா குடிச்சுட்டு வந்து அவுக அம்மா கூட சண்ட இழுத்து அடிக்கிறதும், அவுக அம்மா மூக்கைச் சிந்திக்கிட்டு அழுவுறதும் வாடிக்கையாப் போச்சு.

அவுக அப்பா அம்மா ரொம்ப நல்லவுகதான். அவுங்க அம்மாவுக்கு, மூத்த புள்ளைக ரெண்டுந்தான் படிக்காமப் போச்சு, சின்னப்பாண்டியவாவது நல்லா படிக்க வச்சு பெரிய வேலைக்கி அனுப்பிறணும்ன்னு கொள்ள ஆச. சின்னப்பாண்டியோட பெரிய அக்காவக் கட்டிக் குடுத்துடுட்டாக. அண்ணங்காரன் அவுக அப்பாகூட வெவசாயக் கூலி வேலைக்கு போறான். அவுக அம்மா சின்ன வயசுல பஞ்சாலைக்கு வேலைக்குப் போனதுனால ஆசுமா வந்துருச்சு. அதுக்கு  அடிக்கடி ஒடம்பு சரியில்லாமப் போவும். அவுக அப்பாவும் அண்ணனும் சம்பாரிக்கிறத வச்சுத்தான் குடும்பம் ஓடுது.

முன்னமாறி மழை தண்ணி பேயாமப் போனதால, சுத்து வட்டாரத்துல வேவசாயமெல்லாம் ரொம்பக் கொறஞ்சு போச்சு. ஏதோ ஒன்னு ரெண்டு எடத்துல வேலை கெடைக்கும். சமயத்துல ஒன்னுமே கெடைக்காமக் கூடப் போயிரும்.  அந்த நேரத்துலதான் வீட்டுல சண்ட ரொம்ப வரும்.

“இக்கரைக்கு அக்கரை பச்சை...” ங்கிற கணக்கா, அவுக அப்பாவுக்கு, இங்க இருந்து கருமாயப்படுறதக் காட்டியும், பேசாம வெளியூருப் பக்கம் போயி, வேற எதுனா வேலையைப் பாத்துப் பொழச்சுக்கலாம்ன்னு மனசுல விழுந்துருச்சு. ஆனா, அவுக அம்மாவுக்கோ, கட்டமோ நட்டமோ, சொந்த ஊருலயே இருந்து பொழச்சுக்காட்டணும்னு இருக்கு.

இதுல ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடியிற வழியக் காணாம். அவுக வீட்டுக் கூரையில விழுந்த ஓட்டை கணக்கா பெருசாயிக்கிட்டேதான் போவுது.

இந்த லட்சணத்துலதான் நம்பாளு புதுசா புத்தகம் வாங்க நோங்குறாரு.

நேரா வீட்டுக்குப் போனவன், அவுக அப்பா புது ஆளுக ரெண்டு பேத்தோட அவுக வீட்டுக்கு முன்னாடி நின்னு பேசிக்கிட்டு இருக்கிறதையும், வீட்டுக்குள்ளாற அவுக அம்மா அழுதுக்கிட்டு இருக்கிறதையும் பாத்தான். “ஏதேது... இன்னைக்கும் சண்டை வந்துருச்சு போல... இவுகளுக்கு வேற வேலையே இல்லையா...” ன்னு நெனச்சுக்கிட்டே தயங்கித்தயங்கி உள்ள போனான்.

அவுக அம்மாக்காரி அழுகையில லயிச்சு இருந்ததுனால, இவன அடிக்க மறந்துட்டா போல. நல்ல வேளை, பயபுள்ள அப்போதைக்கி அடிவாங்காமத் தப்புச்சுக்கிட்டான்.

இப்பப் போயி எதுனா கேட்டா... என்ன கெடைக்கும்னு அவன் அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதுனால, எப்புடியும் இவுக சண்ட ஓஞ்சுரும், அப்பப் பாத்து நம்ப விசயத்தக் கேட்டுப்புடணும்னு வெவரமா முடிவு பண்ணிட்டுத் திண்ணையில போயி ஒக்காந்தான்.

அவுக அப்பாவோட பேச்ச வச்சு, அது ஏதோ வெளியூரு வேலைக்கு ஆளு எடுக்கிற ஆளுககூட பேசிக்கிட்டு இருக்காருன்னு தெரிஞ்சது. அவனுக்கு ஒரு பக்கம் சந்தோசமா இருந்துச்சு. “ஒரு வேளை வெளியூருக்கு அப்பன் வேலைக்குப் போச்சுன்னா, வர்றப்ப நமக்கு புத்தகம் வாங்கியாரச் சொல்லலாம்...” ன்னு மனசு கணக்குப் போட்டுச்சு.

சின்னப்பாண்டிக்கி வெவரம் தெரிஞ்சு அவுக வீட்டுல அவனுக்கு புதுத் துணிமணியோ இல்ல நோட்டுப் புத்தகமோ வாங்கிக் குடுத்ததில்ல. எல்லாம் அரசாங்கம் குடுக்குற இலவச சீருடையும் புத்தகமுந்தான். மொத மொத, இப்பத்தான் இந்தப் புத்தகத்த அவன் புதுசா வாங்கியாரச் சொல்லப்போறான். அத நெனைக்கிறப்பவே அவனுக்கு உள்ளூர சந்தோசமா இருந்துச்சு. அந்த மப்புலையே வெளையாடப் போயிட்டான்.

ராத்திரி அவுக அம்மா வந்து அவனக் கஞ்சி குடிக்கக் கூப்புட்டுச்சு. இதாண்டா சமயம்னு, நம்பாளு கொக்கியப் போட்டான்.

“யம்மா... அப்பாக்கிட்ட சொல்லி எனக்கு ஒரு புதுப் புத்தகம் வாங்கியாரச் சொல்லும்மா...” ன்னு ஆரம்பிச்சது தான் தாமசம்... அவனுக்கு வழக்கமாக் கெடைக்க வேண்டியது கொஞ்சம் தாமதாமாக் கெடச்சது முதுகுல.

“இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு... ஒனக்கு புத்தகமா வேணும் புத்தகம்... எரும மாடே... இருக்கிற புத்தகத்த வச்சுக்கிட்டே இங்க படிக்கிற வழியக் காணோம்... இதுல ஒனக்கு எம்புட்டு ஏத்தமிருந்தா இப்புடிக் கேப்ப...” ன்னு பொரிஞ்சு தள்ளிட்டா ஆத்தாக்காரி.

“ஒங்கப்பங்காரன் என்னடானாக்க... இருக்க வீட்ட ஒத்திக்கி விட்டுட்டு... பரதேசம் போயிப் பொழைக்கலாம்னு கெடந்து குதிக்கிறான்... இதுல நீ வேறயா... ஒழுங்கு மரியாதையா ஊத்துறதக் குடுச்சுப்புட்டு படுத்துத் தூங்கு...” ன்னு வசைமாரி பொழுஞ்சுபுட்டா.

அடிய வாங்குனவனுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு... “அப்புடி என்ன பெருசா கேட்டுப்புட்டோம்... அதுக்கு இந்த சாத்து சாத்துராக...” ன்னு நெனச்சுக்கிட்டே... “எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேணாம்... புத்தகம் வாங்கிக் குடுத்தாத்தான் நா சாப்புடுவேன்...” ன்னு மொரண்டு புடிச்சான்.

எச்சா ரெண்டு அடியப் போட்டு... “சனியனே... எக்கேடோ கேட்டுப்போ...” ன்னு சொல்லிட்டு போயிட்டா அம்மாக்காரி. ரெண்டு வண்டிக் கல்லக் கொண்டாந்து முதுகுல கொட்டுனமாறி இருந்துச்சு... முதுகெல்லாம் எரியுது... மேவாக்குல ஒன்னு கீவாக்குல ஒன்னுன்னு, ரெண்டு கையையும் முதுகுப் பக்கமா வச்சுத் தேச்சுக்கிட்டு... ஓ...ன்னு... பெருங்கொரலெடுத்து அழுவ ஆரம்பிச்சுட்டான் பய...

எதிர்பாத்தது கெடைக்கலங்கிற ஏமாத்தம்... அடிபட்ட ரோசம்... அவமானம்... இயலாமை... கோவம்... ஆத்திரம்ன்னு... சினிமாப் படத்துல மாறுற கலரு கணக்கா அவனுக்குள்ள மாறி மாறி ஓடுது... அதுக்குத் தக்கன அழுவையும் ஏத்த ஏறக்கத்தோட ஒடியாறுது... கொஞ்ச நேரத்துல... வயிறெல்லாம் எக்கி... கேவிக் கேவி... அழுவ முத்திகிட்டு வருது... யாத்தாடி ஓங்கூட மாரடிக்க முடியாதுறா சாமின்னு... பொல பொலன்னு போட்டி போட்டுக்கிட்டு வெளியேறுதுக கண்ணுத்தண்ணியும் மூக்குச்சளியும்...
  
“நம்ப ஏண்டா இந்த வீட்டுல வந்து பொறந்தோம்...? பேசாம ஒரு பணக்கார வீடாப் பாத்து பொறந்து இருந்தா... எவ்ளோ நல்லா இருக்கும்...?” ன்னு ஊடால ஒரு நெனப்பு மின்னல் கணக்கா வந்து போவுது...

“இந்நேரம் இங்லீசு பள்ளிக்கூடத்துல படிச்சுக்கிட்டு இருக்கலாம்... நம்பளும் நல்ல துணிமணி, சூ, டைலாம்    போட்டுக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போவலாம்... அவனமாறியே பளபளன்னு புத்தகம் வாங்கிப் படிக்கலாம்... நல்ல சாப்பாடு கெடைக்கும்... அப்பா அம்மா நம்பள திட்டாம அடிக்காம இருப்பாக...” ன்னு நெனச்சுப் பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருந்துச்சு...

“ம்ம்... நம்ப வீடும்தான் இருக்கே... எப்பப் பாத்தாலும் பிரச்சனை... அப்பாவுக்கும்  அம்மாவுக்கும் ஒரே சண்ட... அவுக சண்ட போட்டுக்கிறதுமில்லாம நம்பளையும் போட்டு அடிக்கிறாக... ஒரு நல்ல துணிமணி இருக்கா...? ஒழுங்கான சாப்பாடு இருக்கா...? ஒன்னும் இல்ல... இதேது பணக்கார வீட்டுல பொறந்து இருந்தா... எல்லாமே கெடச்சுருக்குமே...” ன்னு ஆதங்கமா இருந்துச்சு...

“அய்யோ... ஒரு வேளை... அப்புடிப் போயிப் பொறந்திருந்தா... அப்பறம் நம்ப அப்பா அம்மா, அண்ணன் அக்காலாம்  நமக்குக்  கெடச்சுருக்க மாட்டாகள்ல...” ன்னு மறு நெனப்பு வரவும்... மொத நெனப்பு காத்துப் போன பலூனு கணக்கா பொசுக்குன்னு போயிருச்சு.

“என்ன இருந்தாலும்... நம்ம அப்பா அம்மா அண்ணன் அக்கா மாறி வருமா... எல்லாரும் நல்லவுகதான்... என்ன... நம்ப படிப்புன்னு வர்றப்பத்தான் எல்லாரும் நம்பள ஒன்னும் கண்டுக்கிற மாட்டிக்கிறாக... நா பெருசா ஒன்னும் கேக்கலையே... ஒரு புத்தகந்தான கேக்குறேன்... அதுக்குப் போயி இப்புடி வைய்யிறாக... அடிக்கிறாக...” ன்னு நெனைக்கிறப்ப கேவிக் கேவி அழுவ வரவும்... கண்ணுல பொல பொலன்னு கண்ணீரு ஊத்துது.

“எல்லாம்... அந்தப் பயலால வந்த வெனை... சும்மா கெடக்குற சங்க ஊதிக் கெடுத்த மாறி... நம்பகிட்ட அவம் புத்தகத்தக் காட்டி... வம்ப இழுத்து விட்டுட்டுப் போயிட்டான்...” ன்னு ஒரு பக்கம் அந்த பையன் மேல கோவங்கோவமா வந்துச்சு...

இப்புடி ஆதங்கமும் ஏக்கமும் அவன் மனசப் போட்டு பெசஞ்சுகிட்டு கெடக்க... முனுக்கு முனுக்குன்னு எரியிற வெளக்க மொறச்சுப் பாத்துக்கிட்டே... மூலையில ஒக்காந்தி கேவிக் கேவி அழுதுக்கிட்டு இருந்தான் சின்னப்பாண்டி...

இத்தனை சோதனையும் வேதனையும் அவனோட அந்தத் தேடலையும் ஆவலையும் கூட்டுச்சே ஓழிய... அவனோட முயற்சியில பின்வாங்கத் தூண்டல... என்ன ஆனாலும் சரி... அதக் கண்டு பிடிக்காம விடுறது இல்லைன்னு... முன்ன விட ரொம்ப வைராக்கியந்தான் வந்துச்சு அவனுக்குள்ள...
 
எவ்ளோ நேரம் அப்புடி அழுதுக்கிட்டு இருந்தானோ தெரியல... அப்புடியே மூலையில சுருண்டு படுத்துட்டான்...

பசி ஒரு பக்கம்... மனப் பாரம் ஒரு பக்கம்ன்னு அவனப் போட்டு அழுத்த... தவிச்சுப் போயிட்டான் பயபுள்ள... எப்புடியும் நமக்கு ஒரு நல்ல வழி பொறக்குங்கிற நப்பாசையோட விசும்பிக்கிட்டே கெடந்தவன்... பாவம்... இத விட பெரிய இடி ஒன்னு அவந்தலமேல எறங்கப் போறது தெரியாம... அப்புடியே தூங்கிப் போயிட்டான்...




குடைச்சல கண்டு புட்சுருவாருபா அடுத்த பதிவுல...!  :-)


செவ்வாய், 11 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 5

ழக்கமான தேநீர் பலகார உபசரிப்புக்கு இடையில, அவரோட மண்டைக்குள்ளார விடாமக் கொடஞ்சுக்கிட்டு இருந்துச்சு மேற்படி “வார்த்தை”. சாஞ்சநாற்காலில மல்லாந்து, மோட்டுவளையவே மொறச்சுப் பாத்துக்கிட்டுக் கெடந்தாரு பலவேசம்.
 
“புத்தகத்தையும் தாண்டின பொது அறிவோட தேவை
அவரு மனசு உணர்ந்துச்சு.


பொது அறிவுங்கிறது எல்லாத்துக்கும் “பொது”, அதத் தானும் பங்கு போட்டுக்கிறது, தன்னோட கொள்கைக்கி விரோதம்னு நெனச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம். அடுத்தவிங்க பொருளுக்கு என்னைக்குமே ஆசப்பட்டதில்ல அவரு. அவருக்குண்டான பொது அறிவாகப்பட்டது, உள்ளூரு தேநீர்க் கடையோட பழய நாளிதழ்கள் அளவுலதான் இருந்துச்சு. பண்ணையாளோட சேந்து, தன்னோட தோட்டத்துல வெவசாயம் பாக்குறதுதான் அவரோட ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. மத்தபடி, எப்பயாச்சும் கருப்பு வெள்ள படங்களப் பாக்குறதுக்கு மட்டுந்தான் தொலைக்காட்சிப் பொட்டி பக்கம் போவாரு.  அந்தவகையில, அதுல வர்ற செய்திக பக்கம் தலை வச்சும் படுத்தது கெடையாது. ஏன்னாக்க, யாரவது பொய்யி சொன்னா அவருக்கு அறவே புடிக்காது...  துசுட்டனக் கண்டா தூர வெலகிப் போயிருவாரு.

ஆழ்ந்த சிந்தனையில கெடந்தவர, “ஏங்க... நாளைக்கு மக வீட்லேருந்து வர்றாங்க. கொஞ்சம் மளிகைச் சாமான்கள் வாங்கணும்...” ங்கிற வீட்டுக்காரம்மாவோட சத்தம் சுயநினைவுக்குக் கொண்டு வந்துச்சு.

“தேர்ச்சி மதிப்பெண்ணை எட்டிப்புடிச்ச மாணாக்கன்” மாறி பிரகாசமானாரு பலவேசம்.

“ஆகா... அறிய வாய்ப்பு... ஒருவேளை வொர்க் சாப்பு ஓனர் வந்துருந்தா... அவன்கிட்ட ஒருவாட்டி கேட்டுப் பாத்துறலாமே..” ன்ற நப்பாசையில “சரி... சரி... சீட்டையும் பையையும் கொண்டா பெரியபட்டி பிரிவுல போயி வாங்கிட்டு வந்துர்றேன்”  ன்னாரு பரபரப்போட.

“அதுக்கு எதுக்கு அம்புட்டு தூரம் போவணும்...? நம்மூர் நாடார் கடைலயே வாங்குறது தான...? கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு அலைஞ்ச கதையால்ல இருக்கு...” ன்னு அலுத்துக்கிட்டே, அவரோட  நப்பாசையில நாலுபடி மண்ணள்ளிப் போட்ருச்சு அந்தம்மா.

“பட்ட கால்லே படும்... கெட்ட குடியே கெடும்..” ங்கிற மாறி, “என்ன முயற்சி பண்ணாலும் எதுனா ஒரு தடங்கலு வந்துக்கிட்டே இருக்கே...” ன்னு நெனச்சவருக்கு,  ஒரு புது வழியக் காட்டுச்சு வீட்டம்மா சொன்ன சொலவட.  “கையில வெண்ணைய வச்சுக்கிட்டு நெய்யிக்கு ஏன் அலையனும்...? பேசாம அகராதி எடுத்துப் பாத்துரலாமே...?” ன்னு தோனவும், பரவசத்தோட துள்ளி எந்திருச்ச பலவேசம், பரபரன்னு ஓடுனாரு அலமாரியப் பாத்து.

“இப்ப நம்ம என்ன சொல்லிப்புட்டோம்னு இவரு இப்புடித் துள்ளிக் குதிச்சு ஓடுறாரு?” ன்னு மெரண்டு போயிருச்சு அந்தம்மா.

பல நிமிசப் போராட்டத்தோட முடிவுல, தூசி படிஞ்ச அகராதியும் கையுமாத் திண்ணையில போயி ஒக்காந்தாரு பலவேசம். அவரு படிக்கிற காலத்துல வாங்கினது அது. வந்த வேகத்துல “வாழாவெட்டியா”ப் போச்சு. பல வருசப் பிரிவுக்கப்புறம் இப்பத்தான் அதுக்கு “வாழ்க்கை” குடுக்கத் துணிஞ்சிருக்காரு.

“என்னாச்சு இந்த மனுசனுக்கு...?” ன்னு அவரப் பாத்த வீட்டுக்காரம்மாவுக்கு, கேணச் சிரிப்பு ஒன்ன பதிலாக் குடுத்துப்புட்டு, அகராதியோட ஒறவாடத் தயாரானாரு பலவேசம்.

“இப்ப கடைக்குப் போகப் போறீங்களா இல்லையா...?” ன்னு சத்தங் கொஞ்சந் தூக்கலா வந்துச்சு அங்கிட்டு இருந்து.

“என்ன அவசரம். மெதுவாப் போறேனே...?” ன்னு வீட்டுக்காரம்மாவக் கண்டுக்காம பதில் சொன்னாரு பலவேசம்.

தாஞ்சொன்ன வேலையச் செய்யாம, வேற என்னாத்தையோ செய்யத் துணிஞ்சவரோட அலட்சியத்த, கொஞ்சமும் எதிர்பாக்காத அந்தம்மா, “அவரோட மல்லுக்கட்ட நமக்கு நேரமில்ல...” ங்கிறத, அடுப்பங்கர ஞாவகப்படுத்த, “என்னமோ பண்ணித் தொலைங்க...” ன்னுட்டு, சண்டையத் தள்ளிவச்சுப்புட்டு அடுப்பப் பாக்கப் போயிருச்சு.

“முனைவர் பட்டம் பெற முனையும் மாணாக்கன்...” மாறி மளமளன்னு பக்கங்களைப் பிராண்டினாரு  பலவேசம். “அந்த வார்த்தை” யோட மொதல் எழுத்துல ஆரம்பிக்கிற வார்த்தைக இருக்க பக்கத்துக்கு  வந்தப்ப, விக்கலெடுத்துருச்சு அவரோட முயற்சிக்கு. “சரி இவ்ளோ தூரம் யோசிச்சோமே... அந்த வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங்ன்னு யோசிச்சோமா...?”

அடுத்த போராட்டத்துக்குத் தயாராயிட்டாரு அவரு.

தன்னோட “பட்டறிவு, பொது அறிவு, அனுபவ அறிவு, ஆறாவது அறிவு எழாவது அறிவு” ன்னு அம்புட்டையும் தொணைக்குச் சேத்துக்கிட்டு, ஒரு கைதேந்த சிற்பி கணக்கா, “அந்த வார்த்தை” க்குண்டான ஆங்கில எழுத்துக்களை யோசிச்சுக் கோர்த்தவரு, அது மறந்து போவாம இருக்க, பெஞ்சக் குச்சி எடுத்து ஒரு காயிதத்துல குறிச்சு வச்சுக்கிட்டாரு.

அடுத்தாப்புல, ஒவ்வொரு எழுத்தாக் கூட்டிக் கூட்டி, மொத மூனு எழுத்து வரை வார்த்தைக இருக்க பக்கத்துக்கு வந்துட்டாரு. அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக நெறைய இருந்துச்சு அகராதியில. வாயெல்லாம் பல்லா “ஆகா... இன்னும் கொஞ்சந்தான்...” ன்னு கூப்பாடு போட்டுச்சு மனசு.

நாலாவது எழுத்தயும் சேத்து அதுல ஆரம்பிக்கிற வார்த்தைக வரை வந்தவரு, சோதனைக்கு வந்த கல்வி அதிகாரியக் கண்டவரு மாறி அரண்டு போயிட்டாரு. “மாங்கு மாங்குன்னு படியேறிப் போனாக்க... அங்க... மாடியவே காணாமா...” ங்கிற கதையாப் போச்சு அவரு பொழப்பு. மிகச் சொற்பமே இருந்த அந்த வார்த்தைகள்ல, சரித்திரப் பிரசித்தி பெத்த “அந்த வார்த்தை” ய மட்டும் காணல. எதத் தேடுறதுன்னே தெரியாம... தேடு தேடுன்னு தேடுன்ன அவரோட தேடுதல் வேட்டை... கடைசில அவரப் பாத்தே பல்லிளிச்சுருச்சு.

ஏமாத்தத்தோட வலியத் தாங்க முடியல அவரால. துக்கம் தொண்டைய அடச்சுருச்சு.

தன்னோட பிரச்சனைய யாருக்கிட்ட சொல்றதுன்னே தெரியல. வீடுக்காரம்மாக்கிட்ட கேக்கலாம்னாக்க, அவளோ... படிக்காத பட்டிக்காடு. நமக்கே தெரியல, அவளுக்கு எங்க தெரியப் போவுது...? அப்புடியே கேட்டாலும், “இது கூடத் தெரியாமயா இவ்ளோ நாளா நீங்க வாத்தியார் வேல பாக்குறீங்க...?” ன்னு கேட்டுப்புட்டா பெருத்த அவமானமாப் போயிருமே...? சரி... கல்லூரியில படிக்கிற மகங்கிட்ட, கைபேசி வழியாக் கேக்கலாம்னா... அதுக்கு அவரோட தன்மானம் எடங்குடுக்கல. தேள் கொட்டுன திருடங்கணக்கா முழிச்சுக்கிட்டு இருந்தாரு பலவேசம்.

அதுக்கு மேலயும் வேலை செய்ய அவரு மூளை தயாரா இல்ல... ரொம்ப மனச்சோர்வா போச்சு... இருந்தாலும், “சரி... நம்ப பிரச்சனைய நம்மளேதான் தீத்துக்கணும்... இன்னோரு வாட்டி தேடிப்பாக்கலாமா...” ன்னு அவரு நெனச்சதுதான் தாம்சம்.

“அய்யா...” ன்னு கொரலு கேட்டுச்சு வெளில...

யார்றான்னு பாத்தாக்க... பண்ணையாளு பெரியசாமி வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.

“வாங்கையா... உள்ள வாங்க...” ன்னு கூப்புட்டு திண்ணையில ஒக்கார வச்சாரு பலவேசம்.

அந்த வட்டாரத்துலையே வத்தாத கேணிகள்ல பலவேசம் தோட்டத்து கேணியும் ஒன்னு. நெல்லு, வாழைன்னு வெள்ளாம நடக்கும். ரெண்டு மூணு தலமொறையா பெரியசாமி குடும்பந்தான் பலவேசம் தோட்டத்துல பண்ணையம் பாத்துக்கிட்டு இருக்கு. முப்பது நாப்பது வருச ஒழைப்பு பெரியசாமிய அசர வக்கில, ஆனா அவரு சம்சாரத்தோட சாவு அவர அசரவச்சுருச்சு. மக வீட்டுக்குப் போயி கடைசி காலத்த ஓட்டிரலம்னு முடிவு பண்ணிட்டாரு.

கூலிக்கு ஆளு கெடைக்காத இந்த நாள்ல, பெரியசாமி போனதுக்கப்புறமா என்ன பண்ணப் போறோம்ன்னு நெனைக்கிறப்ப வெசனமாத்தான் இருந்துச்சு பலவேசதுக்கு. இருந்தாலும், பெரியசாமிக்கு செய்யவேண்டியதெல்லாம் அவரு கொறையில்லாமத்தான் செஞ்சு குடுத்தாரு.

ஊருக்குப் போறதுக்கு முன்னாடி சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்துருக்காரு பெரியசாமி. அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதையச் செஞ்சு அவர நல்லபடியா அனுப்பி வச்சாரு பலவேசம். அன்னைக்கி இருந்த மன நெலமையில, அவருக்கு அழுவையே வந்துருச்சு. இவ்ளோ நாளா, வீட்டுல ஒரு ஆளா, ஒன்னு மண்ணா இருந்துட்டு, பெரியசாமி போறத நெனச்சா நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்துச்சு அவருக்கு.

ராச்சாப்பாட்டுக்கு அப்பறம், வழக்கத்துக்கு மாறா, மொட்ட மாடில பாயைப் போட்டு படுக்கப் போனாரு பலவேசம். “இவருக்கு நெசமாவே எதோ ஒன்னு ஆகிப்போச்சு...” ன்னு பயந்து போன வீட்டம்மா, “ஒரு வேளை... பெரியசாமி போறத நெனச்சு மனசொடஞ்சு போயிட்டாரு போல...” ன்னு நெனச்சு மனச தேத்திக்கிருச்சு.

தூக்கம் புடிக்காம வானத்த வெறிச்சுப் பாத்த்துக்கிட்டே, ரொம்ப நேரம் படுத்துக் கெடந்தாரு பலவேசம். அம்மாவாச ராத்திரி, கரும்பலகை வானத்துல ஓட்டைகளைப் போட்டு, அதுவழியா அவர எட்டிப் பாத்து, எகத்தாளமா சிரிச்சிக்கிட்டு இருதுச்சுக நட்சத்திரங்க. தனக்கு சொல்லிக்குடுத்த வாத்திமாரு மொதக்கொண்டு உள்ளூரு அரசியல்வாதிக வர, யார் யாரு மேலயோ கோவங்கோவமா வந்துச்சு அவருக்கு.

“நா என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்... எனக்கு சொல்லிக் குடுத்த படிப்பு அம்புட்டுத்தான்... அந்தக் காலத்துல அதுவே ரொம்ப அதிகம்... அப்புடி இருக்கப்ப... இப்ப பாடத்த இவ்ளோ மேம்பாடா வச்சது யாரு குத்தம்...? என்னோட தெறமை என்னான்னு தெரியாம யாரு இப்புடி வைக்க சொன்னது...?  சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்...? ஆப்பையில அறிவ அள்ளுறதுக்கு முன்னாடி அத சட்டிலல்ல போட்டுருக்கணும் இந்த சர்க்காரு...? இது சர்க்காரு குத்தமா...? இல்ல நம்ப குத்தமா...? வெள்ளைக்காரன் நம்பள விட்டுட்டுப் போனாலும் அவன் மொழி நம்மளப் புடிச்சு அமுக்கிக்கிட்டு கெடக்குதே...? தமிழ் நாட்டுல தமிழு மட்டும் தெரிஞ்சிக்கிட்டு இருக்கறது குத்தமா...?”

ஒன்னுமே புரியல அவருக்கு...

“ஆங்கில வழிக் கல்வியில “அந்த வார்த்தைய” வச்சவன்... ஏன் தமிழ்ல அத வைக்கல...?” சின்னப்பாண்டியோட கேள்வி ஞாயமாப் பட்டுச்சு அவருக்கு. “அவங் கேள்விக்கு பதில் சொல்ல எனக்குத்  தெரியலைன்னா... அப்ப நா என்ன முட்டாளா...? அப்புடி நா முட்டாளுன்னா... நா படிச்ச படிப்புக்கும்... இதுநா வர பாத்த வாத்தியார் வேலைக்கும் என்ன அர்த்தம்...? என்ன மருவாத...?”

கோடையிடி மின்னல் மாறி கவட்டை கவட்டையா வேரோடிச்சு கெள்விக... தன்னோட பிரச்சனைக்கும் இந்த கேள்விகளுக்கும் எதுனா ஒட்டு இருக்கான்னு தெரியாமையே, அவரோட சிந்தனை “அந்த வார்த்தை” க்கொசரம் குமுறிக்கிட்டு கெடந்துச்சு.

கரி பூசிக்கிட்ட கரும்பலகை மாறி கவுந்து கெடந்துச்சு ராத்திரி... எதுக்குமே வசப்படாத அவரு சிந்தனை கடைசில தூக்கத்துக்கு வசப்பட்டுருச்சு...

பலவேசத்தோட ராத்திரி இங்க இப்புடி இருக்க...அங்க என்னடானாக்க... சின்னப்பாண்டியோட ராத்திரி ஒரே ரணகளமா இருந்துச்சு...!



குடைச்சல் தொடரும்...



ஞாயிறு, 2 மார்ச், 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 4

“என்ன சார் வண்டில எதுனா கோளாறா?”  ன்னு கேட்டுக்கிட்டே, கையில ஸ்பானரோட, அவருக்கிட்ட  வந்தான் “அழுக்குல புடிச்ச கொழுக்கட்டை” கணக்கா இருந்த ஒரு வருங்கால மெக்கானிக்கு.


“இல்லைப்பா...” ன்னு தடுமாறி நின்ன பலவேசம்,  அப்பறமா எதையோ நெனச்சவரு மாறி, “ஆமாம்பா... ஸ்டார்ட்டிங்  ட்ரபுள் குடுக்குதுப்பா... அதக் கொஞ்சம் என்னான்னு பாக்கணும்... ஓனர் இருக்காராப்பா...?” ன்னு விசாருச்சுக்கிட்டே, ஏக்கத்தோட கடை பேர்ப்பலகையை ஒருவாட்டி பாத்துக்கிட்டாரு.

“ஓனர் வெளில போயிருக்கார் சார்... இதுக்கெல்லாம் அவரு எதுக்கு சார்... நானே பாத்துருவேன் சார்... நீங்க இப்புடி ஒக்காருங்க சார்...” ன்னு படக்குன்னு உள்ளருந்து ஒரு இருக்கையை எடுத்துப்போட்டான் பையன்.


மந்திருச்சு விட்ட கோழி மாறி, தயங்கித் தயங்கி அதுல ஒக்காந்த பலவேசம், சுறுசுறுப்பா வேலை செய்யிற  பையனையே கொஞ்சநேரம் பாத்துக்கிட்டுருந்தாரு.


வண்டிக்கிட்ட குத்தவச்சு ஒக்காந்தவன், நேரா “ஸ்பார்க் பிளக்” இருக்க பக்கம் கையைவிட்டு, அத வெடுக்குன்னு புடுங்கி, உத்துப் பாத்துட்டு, “அடச்சுருக்கு சார்... தொடச்சுப்புட்டு கொஞ்சம் சொரண்டிப் போட்டா போதும் சார்...” ன்னு சொன்னவன், அவரோட பதிலுக்கு காத்திருக்காம, “ப்பூ... ப்பூ...” ன்னு அத ரெண்டு  ஊது ஊதி... ரெண்டு சொட்டு சீமெண்ணெய்ய அது மண்டையில விட்டு, திருப்புளிய வச்சு சரக் சரக்குன்னு தேச்சு... கந்தத் துணியில நல்லாத் தொடச்சு, “அவ்ளோதான் சார்... இனிமே ஒழுங்கா ஸ்டார்ட் ஆவும் சார்...” ன்னு பெருமையோட சொன்னான். அப்புடிச் சொன்னதோட நிக்காம, அத திரும்பவும் மாட்டிவிட்டு, ஒரே மிதியில வண்டிய ஸ்டார்ட் பண்ணியும் காட்டினான்.


“பையன் பரவாயில்லையே...” ன்னு நெனச்சுக்கிட்ட பலவேசம், “எவ்ளோப்பா ஆச்சு...?” ன்னாரு.


“நீங்க பாத்து குடுக்குறதக் குடுங்க சார்...”


ஒரு இருவது ரூவாய எடுத்து நீட்டுனாரு. அதப் பாத்து அரண்டு போன பொடியன், “இதுக்கு எதுக்கு சார் இவ்ளோ காசு...? அஞ்சு ரூவா போதும் சார்...” ன்னான் பவ்யமா.


“பரவால்ல வச்சுக்கப்பா...” ன்னு அவன் கையில அழுத்தித் திணிச்சுப்புட்டு...  ஒரு நொடி தயங்கி நின்னாரு பலவேசம்.


ரொம்ப நன்றியுணர்ச்சியோட “என்ன சார்...?” ன்னான் பையன்.


“கேக்கலாமா...? இல்ல... வேண்டாமா...?” ன்னு ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்துக்கிட்டு இருந்துச்சு அவரு மனசுல. “சரி இவ்ளோ தூரம் வந்துட்டோம்... கேட்டுத்தான் பாப்பமே...” ன்னு ஒரு பக்கம் தோனுது, “ச்சே... ச்சே... இதப் போயி.... இந்தச் சின்னப் பையங்கிட்ட கேக்குறதா...?” ன்னு இன்னோரு பக்கம் தோனுது. பாவம்... தவதாயப்பட்டுப் போயிட்டாரு பலவேசம்.


முடிவுல, அவரோட தன்மானம், அதிக ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெறவும், “சரி... இன்னங் கொஞ்சநேரம் இருந்து பாப்போம்... ஒரு வேளை ஓனரு வந்துட்டா... அவருகிட்டே கேட்டுப் பாத்துரலாம்...” ன்னு ஒரு முடிவு கட்டுனாரு... அது ஏன்னாக்க... அந்தக் கடையோட ஓனரு, ஒரு காலத்துல  இவருக்கிட்ட படிச்சவன். அதுனால, அவங்கிட்ட கொஞ்சம் தயக்கமில்லாம நைச்சியமாப் பேசித் தெரிஞ்சுக்கலாம்ன்னு ஒரு கணக்குத்தான்.


“சரி... அதுவர என்னா பண்றது...? பையன் வேற சீக்கிரமா வேலைய முடிச்சுப்புட்டான்... இப்ப என்னா செய்யலாம்...?” ன்னு தீவிரமா யோசிச்சவரு...


“ஏம்பா... வண்டி இப்ப ஸ்டார்ட் ஆவுது... ஆனா கொஞ்ச நேரத்துல நின்னு போயிரும்ப்பா... நீ என்னா பண்ற... ஒரு வாட்டி ஓட்டிப் பாத்துட்டு வந்துறேன்...” ன்னாரு.


“அப்புடியா சார்... ஒகே சார்... ஓட்டிப் பாத்துட்டு வந்துர்றேன் சார்... அதுவரைக்கும், டீ காப்பி எதுனா குடிக்கிறீங்களா சார்...” ன்னு மரியாதையாக் கேட்டான் பையன்.


“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா... நீ போயிட்டு வாப்பா... நா வெயிட் பண்றேன்...” ன்னு அவருசொல்லவும்... சுறு சுறுப்பா வண்டிய எடுத்துக்கிட்டு வெளில போனான் பையன்.


அவன் போறதையே வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்த பலவேசத்தோட மனசு, இப்போ... அவன் பின்னாடியே  போச்சு... “வண்டி ஒயரம் தான் இருக்கான் பையன்... படிச்சா இப்ப ஒரு ஏழாவது எட்டாவது படிக்கணும்... பாவம்... இந்த வயசுல இப்புடிச் சிரமப்படுறான்... இப்புடிப் பிஞ்சுகள வேலைக்கு அனுப்பித்தான் அவனப் பெத்தவுக வயிறு வளக்கணுமா என்ன...?” ன்னு ஒரு கணம் கொதிச்சுப் போச்சு.

“பாவம்... பெத்தவிங்களுக்கு என்ன பிரச்சனையோ...? என்ன சூழ்நிலையோ என்னமோ...? சோத்துக்கே வழியில்லாம இருக்கப்போ... புள்ளைகள எங்கிட்டு படிக்கவைக்கப் போறாக... என்னதான் இருந்தாலும்... படிக்கிற வயசுல புள்ளைகள வேலைக்கு அனுப்புறது தப்புத்தான்... இதுக்கு இந்த ஊரும் ஒலகமும்தான் காரணம்...” ன்னு நெனச்சவரோட ஆதங்கம், கோவமா மாறி இந்த சமுதாயத்துமேலயும்,   பாழாப்போன அரசியல்வாதிகமேலயும் அரசாங்கத்துமேலயும் திரும்புச்சு...

நல்லவேளை அவரோட அந்தக் கோவம் அவிங்களக் குத்திக் கொதறத்துக்குள்ள... அவரோட கவனம், ஒர்க்சாப்புக்குள்ள வேல செஞ்சிக்கிட்டு இருந்த ஆளுக மேல போச்சு... அவுகளையும் அவுக  கையில வச்சு வேலை பாத்துக்கிட்டு இருந்த மத்தாப்புக் கொழாயையும் பாக்கவும், திரும்பியும் “அந்த வார்த்தை” அவரு மண்டைக்குள்ள பகுமானமா வந்து ஒக்காந்திக்கிச்சு.

“சரி... அவுககிட்டே கேட்டுத் தெருஞ்சுக்கலாமா...” ன்னு ஒரு யோசனை வந்துச்சு அவருக்கு. ஆனா அதுக்கு அவரோட தன்மானம் எடம் குடுக்கல. “என்னடா... இதுகூடத் தெரியாமையா இவரு வாத்தியாரு வேலை பாக்குறாருன்னு அவுக நெனச்சுப்புட்டா, நம்ம மானம் என்னா ஆவுறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு...


“சரி... பாவம்... வேலை செய்யிரவுகளத் தொந்திரவு செய்ய வேண்டாம்... ஓனரு வந்துரட்டும்... அவருக்கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...” ன்னு அவரு முடிவு பண்ணறதுக்கும், சோதனை ஓட்டம் போட்டுட்டு பையன் திரும்பி வர்றதுக்கும் சரியா இருந்துச்சு.

அவரோட கெட்ட நேரமோ என்னமோ... கடையோட ஓனரு அதுவரைக்கும் வரவே இல்ல. ஏமாத்தமாப் போச்சு அவருக்கு.

“சார்... வண்டில ஒரு பிரச்சனையும் இல்ல சார்... ஒழுங்காத்தான் ஓடுது சார்... நீங்க தைரியமா எடுத்துக்கிட்டு போலாம் சார்...” ன்னான் பையன்.


வேற வழியில்லாம... “சரி... இதுக்கு மேல இங்க இருக்குறதுல அர்த்தமில்ல... பையன் கொஞ்சம் வெவரமாத்தான் இருக்கான்... பேசாம இந்தப் பையங்கிட்டயே கேட்டுப் பாத்துறலாமே..” ன்னு ஒரு நெனப்பு வர, கடசீல... வெக்கத்தை தூக்கி வெளியில வச்சுப்புட்டு... அவங்கிட்ட வாய விட்டு கேட்டேபுட்டார் பலவேசம்...

“ஏப்பா... இந்த போர்ட்ல போட்டுருக்கே... ******ன்னு... அப்புடீனா என்னப்பா அர்த்தம்...?”


எதிர்பாக்காத அந்தக் கேள்வில அரண்டுபோன பையன், ஏதோ போலிசு விசாரணைக்கி ஆளான கைதி மாறி...


“எனக்கு அதெல்லாம் தெரியாது சார்... பஞ்சர் ஓட்டுவேன்... சின்ன சின்ன ரிப்பேர் பாப்பேன்... அவ்ளோதான் சார் தெரியும் எனக்கு ... நா வேலைக்குப் புதுசு சார்... நீங்க வேணா ஓனர்கிட்ட கேட்டுக்கங்க சார்... இப்ப வந்துருவார் சார்...” ன்னு மூச்சுவிடாம ஒப்புச்சான்.

இதக் கொஞ்சமும் எதிர்பாக்காத பலவேசமும், கொஞ்சம் மெரண்டுதான் போயிட்டாரு.


“சரி... சரி... பரவால்லப்பா... நான் ஓனர்கிட்டேயே கேட்டுக்கிறேன்... நான் வர்றேம்ப்பா...” ன்னு சொல்லிட்டு ஏமாத்தத்தோட கெளம்புனவர... ஏற எறங்கப் பாத்து... சல்யூட் அடிச்சான் பையன்.


“வாத்தியாரா இருக்க நமக்கே தெரியலை... வறுமைக் கொடுமைல, சின்ன வயசுலேயே வேலைக்கு வந்த, அவனுக்கு எப்புடித் தெரிஞ்சிருக்கும்...? பாவம்... அவங்கிட்ட நம்ப எதிர்பாக்குறதுல என்ன ஞாயம் இருக்கு...?” ன்னு நொந்துக்கிட்டே வண்டிய எடுத்தாரு பலவேசம்.


ஏமாத்தமும், அனுதாபமும் கலந்த ஆற்றாமையோட தாக்கம், அவரு வண்டி ஓட்டத்துல தெரிஞ்சுச்சு.




குடைச்சல் தொடரும்...



சனி, 22 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 3

லகீழா நின்னு தண்ணி குடிச்சுப் பாத்துட்டான் சின்னப்பாண்டி... ம்கூம்... ஒன்னும் வேலைக்கி ஆவலை... அவங்கிட்ட இருந்த பழைய புத்தகம் மொதக்கொண்டு, குப்பையில கெடந்த காயிதம் வரைக்கும் தேடிப் பாத்துட்டான்... ஒன்னும் அம்புடல. வேற வழியில்லாம, “சரி... நம்ப வாத்தியாரக் கேட்டுப் பாக்கலாம்...” னு அவனுக்குத் தோன்றதுக்கே ரெண்டு நாளு ஆயிப்போச்சு...


ஆனா... அதுக்கப்புறமாத்தான் அந்தப் பிரச்சனை வந்துருச்சு... “இதுநா வர, யாரும் அந்தமாறி சந்தேகம்னு ஒன்ன வாத்தியாருக்கிட்ட கேட்டதே இல்லயே... இப்ப நம்பமட்டும் போயி எப்புடிக் கேக்குறது...?” ன்னு ஒரு பயம் வந்துருச்சு அவனுக்கு.  அந்தப் பயத்துலயே மேற்கொண்டு ரெண்டு நாளு ஓடிப்போச்சு. “சரி... சனியனத் தெரிஞ்சுக்காட்டித்தான் என்னா...?” ன்னும் லேசுல விட்டுற முடியல. தவியாத் தவிச்சுப் போயிட்டான் பய புள்ள.

கடசில, ஒருவழியா... தைரியத்த வரவச்சுக்கிட்டு, இப்புடி ஒரு வாரமா, தன்னோட நெஞ்சுல சொமந்த பாரத்த, பலவேசம் வாத்தியாருமேல எறக்கி வச்சுப்புட்டான் சின்னப்பாண்டி.

அவரு வாழ்நாள்ல இதுநாவர “அந்த வார்த்தைய” அவரு கேள்விப்பட்டதில்ல. அறிவுப் பசியில புறப்புட்ட அந்த ஆயுதத்தப் பாத்து அரண்டு போயிட்டாரு பலவேசம். காலங்காலமாக் கடைபுடிச்சுக்கிட்டு வந்த தன்னோட கல்விக் கொள்கைக்கி பங்கம் வந்ததக் கூட அவரால தாங்கிக்க முடியும், ஆனா, சின்னப்பாண்டி கேட்ட கேள்விக்கி, தனக்கு பதிலு தெரியலங்கிறதத்தான் அவரால தாங்கிக்க முடியல.

மொதப் பிரச்சனை என்னானாக்க, அவன் கேட்ட “அந்த வார்த்தை” தமிழா இல்ல ஆங்கிலமான்னு அவரால முடிவுகட்ட முடியல. ஆனா, உச்சரிப்ப வச்சுப் பாக்குறப்போ, அது ஏதோ ஒரு ஆங்கில வார்த்தைமாறிதான் இருந்துச்சு. “ஏ பார் ஆப்பிள்... பி பார் பால்...” ன்னு பழய பாடத்துலல்லாம் படிச்சுருக்காரு... ஆனா, இப்புடியாக்கொந்த ஒரு வார்த்தைய, அவரு எந்தப் புத்தகத்துலயும் படிச்சதா அவருக்கு ஞாவகம் இல்ல. “என்னாத்த சொல்றது...? எப்புடி சமாளிக்கிறது...” ன்னு யோசிச்சவரு, “ஒனக்கு எப்புர்றா தெரியும்...?” ன்னு ஆயுதத்த அவெம்மேலேயே லாவகமாத் திருப்பிவிட்டாரு.

“இல்ல சார்... எங்க சொந்தக்காரப் பையன்... டவுன்ல இங்கிலீசு மீடியம் படிக்கிறான் சார்... அவனோட பொதுஅறிவுக் களஞ்சியப் புத்தகத்துல போட்டுருந்துச்சு சார்... நம்ம சமூக அறிவியல் புத்தகத்துல கூட இருக்கும்னு சொன்னான் சார்... ஆனா, அப்புடி ஒன்னும் போடக் காணோமே...  அதான் சார் கேட்டேன்....”

“ஓகோ... அப்படியா...?” அடுத்து என்ன சொல்றதுன்னு அவருக்கு ஒன்னும் பொலப்படல. அங்கதான் அவரோட அனுபவ அறிவு அவருக்குக் கை குடுத்துச்சு. “அப்ப அதுக்குப் பக்கத்துலேயே அது என்னான்னு படம் போட்டுருக்குமேடா...?”  ன்னாரு.

“ம்ம்... ஆமா சார்... படம் போட்டுருந்துச்சு சார்... பாக்குறதுக்கு புசுவாணம் மாறி இருந்துச்சு சார்...” அவரோட அனுபவ அறிவுக்கும் ஆப்பு வக்கிறமாறி இருந்துச்சு அந்தப் பதிலு.

“புசுவாணம் மாதிரி இருந்துச்சா...? இதென்னாடா கொடுமை...? அதுக்கும் சமூக அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்...?” மண்டமூளை கொழம்பிப் போச்சு அவருக்கு.  இதுக்கு மேல என்னாத்த சொல்றதுன்னு தெரியாம அவரு மருகி நிக்கிறதுக்கும், மத்தியானச் சோத்துக்கு மணியடிக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு.

“அப்பாடா... ஒரு வழியாத் தப்பிச்சோம்...” ன்னு நெனச்சவரு, “சரி... சரி... எல்லாரும் சாப்புடப் போங்கடா… அப்புறமாப் பாத்துக்கலாம்...” ன்னு அதிவேகமா வகுப்பக் கலைச்சு விட்டுட்டு, "அந்த வார்த்தை" க்கும் புசு வாணத்துக்குமுண்டான தொடர்பு என்னான்னு அதி தீவிரமாச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாரு.

 
மத்தியானச் சோறு ஒழுங்கா எறங்கல அவருக்கு.

அவரைச் சொல்லிக் குத்தமில்லை. அவரு வயசும் சூழலும் அப்புடி. அவரு காலத்துப் படிப்பு முறையும் அனுபவமும் அவருக்குக் கை குடுத்தது அம்புட்டுத்தான். பத்தாததுக்கு, மொத்தப் பள்ளியோட சிலுவயையும் ஒத்தையாளாத் தூக்கிச் சொமக்க வச்சுருச்சு அரசாங்கம். பாவம், பட்டிக்காட்டு வாத்தியாரு, அவரும் என்னதான் பண்ணுவாரு...? இன்னுங் கொஞ்சக் காலத்துக்கு ஒப்பேத்திட்டா போதும்னு இருந்துட்டாரு. அதான், அவர இந்த இக்கட்டுல கொண்டாந்து மாட்டி வுட்டுருச்சு.

மத்தியானச் சோத்துக்கப்புறமா, நெறைய வேலை இருக்காமாறிக் காட்டிக்கிட்டு, பாதிப் பசங்கள வெளாடச் சொல்லிப்புட்டு, மீதிப் பசங்கள, கரும்பலகைக்கெல்லாம் கரி பூசச் சொன்னாரு. ஊமத்த எலைகளயும் அடுப்புப் கரியையும் தண்ணி சேத்து, வண்டிமைய்யிப் பதத்துக்கு அரச்சு, கரும்பலகைக்கெல்லாம் பூசுனது போவ, மீதிய, அவிங்கவிங்க சிலேட்டுகளுக்கு, பசங்க அங்க பூசிக்கிட்டுருக்க, இங்க என்னாடானாக்க, ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்புக்குள்ள அம்புட்டுப் புத்தகங்களையும் அக்கு வேற ஆணி வேறயா அலசிக்கிட்டுருந்தாரு பலவேசம்.

ஒரு துப்பும் கெடைக்கல.  அதுக்குமேல ஆராச்சியத் தொடர்ற வசதி அவரு மனசுலயும் இல்ல, கரட்டுப்பட்டிப் பள்ளிக்கூடத்துலயும் இல்ல. இப்புடி இருக்கப்ப, பள்ளிக்கூட சம்பந்தப்பட்ட வாரக்கடைசி வேலைக வேற, நெசமாவே பூதாகரமா அவரு முன்னாடி நிக்கவும், ஆராய்ச்சிய அந்தரத்துல விட்டுப்புட்டு, அந்த வேலைகள்ல முங்கிப் போனதுனால, மேற்படி “அந்த வார்த்தை” ய வகையா மறந்து போயிட்டாரு பலவேசம்.


பொழுசாய பள்ளிக்கூடத்த மூடிப்புட்டு, வீட்டுக்குக் கெளம்பவும் “அந்த வார்த்தை” திரும்பியும் வந்து மண்டைக்குள்ள பூந்துக்கிச்சு. மண்டமூளையைக் கசக்கிப் புழிஞ்சு பாத்ததுல, மேற்படி வார்த்தையப் பத்துன எந்தக் குறிப்பும் ஞாபகத்துக்கு வரல, ஆனா, வண்டிக்கி பெட்ரோல் போடணும்னு மட்டுந்தான் ஞாபகம் வந்துச்சு.
  
நேரா வீட்டுக்குப் போவாம, பெரியபட்டி பிரிவுல இருக்க பெட்ரோல் பங்க நோக்கிக் கெளம்புனாரு பலவேசம். அக்கம் பக்கத்து ஊருகளுக்கு பெரியபட்டி பிரிவுதான் பேருந்து நிறுத்தம். ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரெண்டு மூணு டீ கடை,  ஒரு பலசரக்குக் கடை, ரெண்டு பெட்டிக் கடை, ஒரு நெல் அரவை மில்லுன்னு வரிசை கட்டி நிக்க, இந்தப் பக்கமா, ஒரு ஓட்டல் கடை, ரெண்டு சைக்கிள் கடை, ஒரு பெட்ரோலு பங்கு, ஒரு ஆட்டோ ஒர்க்சாப்புன்னு ஒரு குட்டி யாவார ஒலகமே அங்கனக்குள்ள இருந்துச்சு.

வெரசா வர்ற வண்டிக, கேரளாவுக்குக் கொண்டுபோவ அடச்சு வச்ச அடிமாடுக கணக்கா, கொண்டாந்து தள்ளுதுகைய்யா குட்டியும் குளுமானா இருக்க புள்ளைகள. பாவம், பள்ளிக்கூடம் போற வயசுல, பஞ்சு மில்லுக்கு வேலைக்குப் போயிட்டு வருதுக அம்புட்டும். 

அதுல, கரட்டுப்பட்டிப் புள்ளைக அஞ்சாறு, பலவேசம் வாத்தியாரு எதுக்க வர்றதப் பாத்துப்புட்டு, மொகமலந்து போயி, “வணக்கம் சார்...” ன்னு சல்யூட் வக்கிதுக. வழக்கமா சிரிச்சுக்கிட்டே பதிலு வணக்கம் வக்கிறவரு, அன்னைக்கி இருந்த நெலமையில, வணக்கத்துக்கு அறிகுறியா, மண்டைய மட்டும் ஆட்டிப்புட்டு, நேரா பெட்ரோலு பங்குக்குள்ள வண்டிய விட்டாரு.

பெட்ரோலு போட்டுட்டு திரும்பையில, பக்கத்து ஒர்க்சாப்பு பேர்ப்பலகை, அவரு கவனத்த சுண்டியிழுத்து, அவரு மூளைக்குள்ள மின்சாரத்தப் பாய்ச்சுது. “எதைத் தின்னா பித்தம் தெளியும்...” ன்னு இருந்தவருக்கு, “இங்கு ****** செய்து தரப்படும்...” ங்கிற வாசகம் ஏதோ ஒன்ன சூசகமா மின்னலடுச்சுக் காட்டுது.

ஒர்க்சாப்பை உத்துப் பாத்தாரு பலவேசம். நூலுல நெஞ்சதா... இல்ல குருடாயில்ல செஞ்சதான்னு தெரியாத அளவுல, சட்டை போட்டுருந்த மெக்கானிக்கு ஆளுக, புசுவாணத்துலருந்து செதர்ற மத்தாப்பு கணக்கா, தீயும் பொகையும் சீறிப் பாயுற கொழாயக் கைல புடுச்சுக்கிட்டு, பெருசு பெருசான டயருகளக் கீழ போட்டு, ஏதோ வேல செஞ்சுக்கிட்டு இருந்தாக. 
  
வேட்டைக் கண்ணியில ஏதோ சிக்கிறவும், அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்க தவதாயப் படுற வேட்டக்காரன் மாறி பரபரத்தாரு பலவேசம். பலகைல பாத்த அந்த வார்த்தையும் தான் பாத்த காட்சியும், “ஏன் நம்பளுக்குள்ள இவ்ளோ கெளர்ச்சிய உண்டுபண்ணுச்சு...” ங்கிறத, சீக்கிரமே அவரு மண்டமூளை தெரிஞ்சுக்கிச்சு.

புசுவாணம் – மத்தாப்பு – “அந்த வார்த்தை” எல்லாத்தையும் அதிவேகமாக் கோத்துப் பாத்து, “ஆகா... நம்ப தேடிக்கிட்டுருக்க அந்த வார்த்தைக்கும், இங்க பாத்த இந்த வார்த்தைக்கும் எதுனா ஒட்டுறவு இருக்குமோ...? இருந்தாலும் இருக்கலாம்... யார் கண்டது...?” ன்னு ஒருகணம் சந்தோசப் பட்ட அவரு மனசு, “ச்சேச்சே... இது என்ன முட்டாள்த்தனம்...? ஏன் இப்புடீலாம் யோசிக்கத் தோணுது...?” ன்னு அவரு மண்டையிலே கொட்டுச்சு.

அவருக்கே ஒன்னும் புரியல. கொஞ்சம் வெக்கமாக் கூட இருந்துச்சு. இருந்தாலும், என்ன ஏதுன்னு தெருஞ்சுக்கிற ஆவல் அவரப் புடிச்சுத் தள்ள, “இருக்கட்டும்... இருக்கட்டும்... அதையுந்தான் பாத்துறலாம்...” ன்னு நேரா ஒர்க்சாப்புக்குள்ள வண்டிய விட்டாரு பலவேசம்.



குடைச்சல் தொடரும்...



ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

கேட்டானே ஒரு கேள்வி...! - பாகம் 2

சின்னப்பாண்டி அப்புடி என்னதான் கேட்டான்னு தெருஞ்சுக்கனும்னாக்க, நம்ப, போன நாயித்துக் கெழம என்ன நடந்துச்சுன்னு மொதல்ல தெருஞ்சுக்கணும்.

ஊரே கொல்லுன்னு போச்சு அன்னைக்கி...! எப்பயுமே தேர்தலப்பத்தான், ஓட்டுப் போடறதுக்காண்டி, கெழவன் கெழவிகள தூக்கிக்கிட்டுப் போவ பெளசரு வண்டி வரும். இப்ப என்னடானாக்க, ஒத்த வீட்டுக்கு முன்னாடி, பெளசரு வண்டி ஒன்னு வெரசா வந்து நிக்கிது. ஒத்த வீட்டுக் கெழவிய மட்டும் எந்தத் தேர்தலுக்குத் தூக்கிட்டு போவப் போறாகன்னு, ஊரு சனமே வாயப் பொளந்துக்கிட்டு பாக்குது.


வந்தது யாருனாக்க, கெழவியோட மகன் பொன்னுச்சாமி. கரட்டுப்பட்டியோட சரித்திரத்துலயே ரொம்பப் படிச்ச ஒரு ஆளு யாருன்னா... அது இந்தப் பொன்னுச்சாமி தான். எட்டாப்பு வர படிச்சுப்புட்டு, பட்டணத்துல பியூன் வேல பாக்குற ஆளு. பொண்டு புள்ளையோட கெழவியப் பாக்க வந்துருக்கான்.

பெருசுக வாயப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்க, பொடுசுக என்னடானாக்க, வாடக பெளசர வெரட்டிக் கொண்டுபோயி ஊரு எல்லயத் தாண்டி விட்டுட்டுத்தான் திரும்பி வந்தாய்ங்க. வந்தவிங்க, பொன்னுச்சாமி பெத்த புள்ளைகளப் பாத்து வாயப் பொளந்துட்டாய்ங்க.

சும்மா சவுளிக்கட பொம்ம கணக்கா ஒரு பாப்பா, அதுக்குப் பக்கத்துல, வெள்ளயுஞ்சொள்ளையுமா  பட்டணத்துப் பள்ளிக்கூடத்துல படிக்கிற அதோட அண்ணங்காரன்.  கையில ஒரு புத்தகத்த வச்சு பவிசு காட்டிக்கிட்டு இருக்கான்.

“மினுமினுக்குற அவனோட மேனியப் பாக்குறதா...? இல்ல, சுத்தபத்தமா இருக்க அவனோட துணிமணியப் பாக்குறதா...? இல்ல, பளபளன்னு அவங்கையில சொலிக்கிற அந்தப் புத்தகத்தைப் பாக்குறதா...?” ன்னு பாவம் பட்டிக்காட்டுப் பயகளுக்கு ஒன்னும் புரியல. ஆர்வமா அவனையும் அந்தப் பாப்பாவையும் கண்ணுக் கொட்டாம பாத்துக்கிட்டு இருக்காய்ங்க. ஏதோ காட்டுவாசிப் பய கூட்டத்துக்குள்ள சிக்கிக்கிட்டவனாட்டம் அந்தப் பய இவிங்கள பயந்து பயந்து பாத்துக்கிட்டு கெடக்கான்.

மத்தவிங்க என்னத்தப் பாத்தாய்ங்களோ என்னமோ... ஆனா, சின்னப்பாண்டி மட்டும் அந்தப் புத்தகத்தையே பாத்துக்கிட்டு இருந்தான். சின்னப்பாண்டிக்கி படிக்கிறதுனா உசுரு. அவுக வீட்டுல, அவனுக்கு மூத்த புள்ளைகளெல்லாம் ரெண்டாப்புக் கூடத் தாண்டல. அதுக்குள்ளார, அவுக அப்பா அம்மா கூட வேலைக்கிப் போயிட்டாக. இவன மட்டும், கடசிப் புள்ளைங்கிறதுனாலயோ என்னமோ, அஞ்சாப்பு வரை படிக்க விட்டுருக்காக.
 
அந்தப் புத்தகத்தப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தவதாயப்பட்டுப் போயிட்டான் சின்னப்பாண்டி. என்ன இருந்தாலும் நமக்கு இவன் சொந்தக்காரப் பயதானன்னு நெனச்சுக்கிட்டு, தைரியமா வாய விட்டுக் கேட்டுப்புட்டான்...

“டேய்... இது என்ன புத்தகம்டா... இம்புட்டு பளபளப்பா இருக்குது...?”

அதுவரைக்கும், இவிங்களப் பாத்து மெரண்டு போயிக் கெடந்தவன், சினேகமா ஒருத்தன் பேச்சுக் குடுத்ததப் பாத்து சந்தோசப் பட்டுப்போயி, திண்ணையில போயி ஒக்காந்தி, லேசா இவிங்க கூடப் பேச்சுக் குடுத்தான்.

“டேய்... இது... என்சைக்ளோப்பீடியாடா...”

“என்னடா இது புத்தகத்தப் பத்திக் கேட்டாக்க... சைக்கிள்ங்கிறான் பீடிங்கிறான்...” ன்னு நெனச்சுக்கிட்டே, “அப்புடீன்னா என்னடா...?” ன்னு வெள்ளந்தியாக் கேட்டான் சின்னப்பாண்டி.

“அடடே ஒனக்கு அதுகூடத் தெரியாதா...?   என்சைக்ளோப்பீடியான்னா... ம்...ம்... என்ன சொல்லறது...?” ன்னு யோசிச்சவன், “அதாண்டா... பொது அறிவுக் களஞ்சியப் புத்தகம்...”

“உள்ள அறிவுக்கே இங்க வழியக் காணாம், இதுல பொது அறிவுக்கு எங்க போறது...?” ன்னு மெரண்டு போன சின்னப்பாண்டி, அவன் சொன்னது பாதி புரிஞ்சும் புரியாமயும் இருக்கவும், “சரி இதுக்கு மேல அதப் பத்திக் கேட்டா நம்ம மானம் போயிரும்...” ன்னு சுதாரிச்சுக்கிட்டு, “அடடே அப்புடியாடா... எங்க எனக்கும் கொஞ்சம் காட்டுரா... பாக்கலாம்...” ன்னு ரொம்ப ஆர்வமாக் கேட்டான்.

சின்னப் புள்ளகள்ட்ட இருக்க ஒரு கொணம் என்னானாக்க, தனக்கிட்ட இருக்கிறத பாத்து அடுத்தவுக ஆச்சிரியப் படனும்னு ரொம்ப ஆசப்படுவாக... அதுமாறித்தான் அவனும் தன்னோட புத்தகத்த இந்தப் பசங்க கிட்ட காட்டி பெருமைப் பட்டுக்கனும்னு நெனச்சான்... அதுனால, தனக்கு மட்டும் தெரியிற மாதிரி புத்தகத்த தொறந்து வச்சு ஒவ்வொரு பக்கமாப் பொரட்டிக் காட்டிக்கிட்டு இருந்தான்.

கரட்டுப்பட்டி பயலுகளும் அத முண்டியடிச்சுக்கிட்டு எட்டி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாய்ங்க... “டேய் இங்க பார்றா... இந்தப் படம்மாறியே நம்ம புத்தகத்துலயும் இருக்குதுல்லாடா...”

“டேய் இது என்னடா இப்புடி இருக்கு...?”

“அய்யே... இது தெரியாதாடா ஒனக்கு... இதாண்டா... டிவிப் பொட்டி...” ன்னு ஒருத்தன் சொல்லவும், பட்டணத்துக்காரன் கெக்கபெக்கன்னு சிரிக்கிறான்... இவிங்களுக்கா ஒன்னும் புரியல...

“டேய்... அது டிவி பொட்டி இல்லடா... அதுக்கு பேரு வாசிங் மெசின்...”

“வாசிங்கி மெசினா... அப்புடீன்னா என்னாடா...?”

“அடப் பாவிகளா... இது கூடத் தெரியாதா? இது தாண்டா துணி தொவைக்கிற மெசினு... எங்க வீட்டுல இருக்கு... ஒங்க வீட்டுலலாம் இல்லையடா...” ன்னு கேக்கவும்...

எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சுப்புட்டாய்ங்க... ஒடனே சின்னப்பாண்டி... “எங்க ஊருலல்லாம் அதெல்லாம் கெடையாதுடா... நீ அடுத்த பக்கத்துக்குப் போடா...” ன்னு சொன்னான் ஆர்வந் தாங்கமாட்டாம...

அவனும் அடுத்த பக்கத்தத் திருப்புனதுதான் தாமசம்.... கும்பல்ல மூக்கு நோண்டிக்கிட்டே இதெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த ஒருத்தன்... ஆர்வக்கோளாறுல... “டேய் இங்க பார்றா... புசுவானம்...” ன்னு சொல்லிக்கிட்டே மூக்கு நோண்டுன வேரலாலேயே அந்தப் படத்தத் தொட்டுக்காட்டவும்...  அவன் வெரல்ல இருந்த மூக்குப்பீ அந்தப் படத்துமேல ஒட்டிக்கிச்சு... ஒடனே பட்டணத்துக் காரனுக்கு வந்துச்சு பாரு கோவம்... “அய்யே... போங்கடா... டர்ட்டி பசங்களா...” ன்னு சொல்லிக்கிட்டே புத்தகத்த மூடிக்கிட்டான்.

ரொம்ப ஏமாத்தமாப் போச்சு சின்னப்பாண்டிக்கி, “ச்சே... நல்ல நல்ல படமா காட்டிக்கிட்டு வந்தான்... இந்தப் பயலுக அதக் கெடுத்துப் புட்டாய்ங்களே...” ன்னு  ஆதங்கப் பட்டுப் போயி... “டேய் வெளக்கென்ன ஒன்னைய யாருடா அத தொட்டுக் காட்டச் சொன்னது...? இப்பப் பாரு அவன் காட்ட மாட்டிக்கிறான்ல...?” ன்னு கோவமாக் கத்துனான்.

“ஆமா... பெரிய பொல்லாத புத்தகம்... போடா... நீயும் ஒன் புத்தகமும்... டேய் வாங்கடா நாம வெளாடப் போலாம்...” ன்னு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டான் அந்த ஆட்டையக் கலைச்சு விட்டவன்.

சின்னப்பாண்டிக்கி ஏனோ அங்கேர்ந்து போவ மனசு வர்ல... “டேய் அவிங்க போனாப் போறாய்ங்க... நீ எனக்குக் காட்டுரா...” ன்னு கேக்கவும்...

பட்டணத்துக் காரன் ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டான்... “போடா... ஒங்களுக்குக் காட்டப் போயி... எம்புத்தகத்துல அழுக்குப் பண்ணிட்டீங்கள்ல... இனிமே நா காட்ட மாட்டேண்டா போடா...” ன்னு ரொம்பத் திமுராச் சொல்லிப்புட்டான்...

ரொம்பவும் மனசொடஞ்சு போயிட்டான் சின்னப்பாண்டி... “டேய்... அந்தப் படத்துல இருந்தது என்னான்னு மட்டுனாவுது சொல்லுடா...” ன்னு அழாத கொறையாக் கேக்குறான்...

“அதுக்கு பேரு, **** டா...” ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு எந்துருச்சுட்டான் அவன்.

அவன் இங்லீசுல சொன்ன அந்த வார்த்தை ஏதோ ஒரு “முட்டாயி” பேரு மாறி தெரிஞ்சது இவனுக்கு... “டேய் அத இன்னொரு வாட்டி காட்டுரா பாத்துக்குறேன்...” ன்னு கேக்கவும்...

“அதெல்லாம் முடியாது... போடா... இதே மாறி ஒன்னோட சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்... போயிப் பாத்துக்கடா..” ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிட்டான் அவன்.

சின்னப்பாண்டிக்கு ஒரே அழுகையா வந்துருச்சு... பட்டணத்துக்காரன் மேல வந்த கோவம் அப்புடியே அந்த மூக்குப்பீ நோண்டுனவன் மேல திரும்பிருச்சு... “அநியாயமா இப்புடி ஆட்டையக் கலைச்சு விட்டுட்டானே...” ன்னு அவன்மேல வந்த ஆத்தரத்துக்கு, அவன் மட்டும் இவன் கைல கெடச்சுருந்தான்... அன்னைக்கி என்னென்னமோ ஆயிருக்கும்.

“சரி போயித் தொலையுறான்...” ன்னு சட்டுன்னு இத விட்டுற முடியலை சின்னப்பாண்டிக்கு, மண்டைக்குள்ளாற ஏதோ புழுவு கொடையுறா மாறி இருந்துச்சு... “ஏதோ புசுவானம் மாறி இருந்துச்சு... சரியாக்கூடப் பாக்கலை... அதுக்குள்ளே மூடிக்கிட்டானே... ஆமா... அதுக்கு என்னமோ, **** ன்னு சொன்னானே... அதக் கண்டுபிடிக்கனும் மொதல்ல...” ன்னு மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துருச்சு அவனுக்கு...

“ஆகா... நம்ப சமூக அறிவியல் புத்தகத்துல இருக்கும்ன்னு சொன்னானே...” ன்னு நெனப்பு வரவும்... நழுவுற கால் சட்டைய ஒத்தக் கைல புடிச்சுக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடுறான்யா பய புள்ள வீட்டுக்கு...

அங்க போனாக்க, அவுக அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்ட நடந்துக்கிட்டு இருந்துச்சு... இது அவுக வீட்டுல வழக்கமா நடக்குறதுதான்... “இந்த ஊருல இருந்துக்கிட்டு என்னா பண்றது... பேசாம வெளியூருக்குப் போயி எதுனா வேல செஞ்சு பொழச்சுக்கலாம்...” ன்னு அவுக அப்பா கூப்புடுறதும்... அதுக்கு அவுக அம்மா முடியாதுங்கிறதும்... அவுகளுக்குள்ள வழக்கமா நடக்குற சண்ட...

இயற்கையப் பாத்துதான் எல்லாத்தையும் கத்துக்கிட்டானாம் மனுசப்பய. அதுக்குப் பதிலா, அவன் இயற்கைக்கி கத்துக் குடுத்தானம் “குசும்பு
ங்கிற கொணத்த. அதுவும் சந்தோசமா கத்துக்கிட்டு, காலங்காலமா அது கடபுடிச்சுக்கிட்டு வந்த சமத்துவங்கிற கொணத்துல, அதோட குசும்பக் காட்ட ஆரம்பிச்சுச்சாம். வேணாங்க வேணாங்க, வெள்ளக்காரன் நாட்டுல மழயப் பேஞ்சுபுட்டு, வெறுங்கையோட வேகமா ஒடியாந்து, இவிங்க இங்க செத்தாய்ங்களா இல்ல பொழச்சாய்ங்களான்னு பாத்துட்டுப் போயிடுமாம்.

அது மாறி, போற போக்குல, மூத்திரம் பேஞ்சமாறி அது பேஞ்சத வச்சு, இந்த சனங்க எதுனா செஞ்சு பொழச்சுக்க வேண்டியதான். அதுவும் கொஞ்ச நாளக்கித்தான். வாழ்க்க அவுக வயித்துல ஏறி மிதிக்கிறப்ப, வஞ்சகமில்லாம அத ஏத்துக்கிட்டு, வேற வேலைத் தேடி பொறப்புட்டுருவாக. குடும்பத்தோட கொத்தடிமயா ஆந்துராவுக்குப் போறது, இங்க இருந்து கொலபட்டிணியா சாவுறதுக்கு, பேசாம ரோடு போட தாரு பூசிக்கிறதுன்னு, அடிக்கடி கொத்துக் கொத்தா குடும்பங்க அங்க காணாப்போறது ரொம்பச் சகசம்.

ஏதோ சின்னப்பாண்டி செஞ்ச புண்ணியம், எப்பயோ போயிருக்க வேண்டிய அவுக குடும்பம், இன்னமும் இழுத்துப் புடுச்சுக்கிட்டு இருக்குது. அன்னைக்கி என்னமோ அந்த சண்ட ரொம்ப முத்திருச்சு போல... அவுக அம்மாவுக்கு நாலு அடி விழவும்... மூக்கச் சிந்திக்கிட்டே இருந்தவ, வேக வேகமா வீட்டுக்கு ஓடியார சின்னப் பாண்டியப் பாத்ததும்... “எல்லாம் இந்தச் சனியங்களால வர்ற வென தான்...” ன்னு சொல்லிகிட்டே, அவ கடுப்ப சின்னப்பாண்டி முதுகுல காட்டிப்புட்டா...

இப்புடித் திடீர்னு ஒரு இடி அவன் எதிர்பாக்காத நேரத்துல அவன் முதுகுல விழுகவும், ஏற்கனவே அவனுக்குள்ள இருந்த ஆதங்கமெல்லாம் வெடிச்சு அழுவையா வெளிய வந்துருச்சு... நடந்துபோன கலாட்டாவுல, வந்த வேலைய மறந்து, என்ன பன்றதுன்னே தெரியம மருகி நிக்கிறான் புள்ள.

கேவிக் கேவி அழுதுக்கிட்டிருந்தவன் கொஞ்ச நேரத்துல  சுதாரிச்சுக்கிட்டு... பரபரப்பா ஓடிப் போயி... தன்னோட அஞ்சாப்பு சமூக அறிவியல் புத்தகத்த எடுத்து... ஆவலாத் தொறந்து... பக்கம் பக்கமாத் தேடிப்பாக்குறான்...

ஐயோ பாவம்...!

அவன் தேடி வந்த விசயம்... அந்தப் புத்தகத்துல இருக்கிறதுக்கான... அறிகுறியவே காணாம்...!


குடைச்சல் தொடரும்...


Related Posts Plugin for WordPress, Blogger...